எண்ணியதை ஈடேற்றும் அணணாமலையார்







‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்றார் ஔவையார். ‘நம்பினார் கெடுவதில்லை
& நான்கு மறை தீர்ப்பு,’ ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்பதெல்லாம் இறையருளை அனுபவித்து உணர்ந்த முன்னோர் வாக்கு. தான் படைத்த ஒவ்வொரு உயிருக்கும் அந்த இறைவன் பாதுகாவலனாக இருப்பதை ஒவ்வொருவரும் முன்னோர் கூறியது போல அனுபவித்துதான் உணர வேண்டும்.

இப்படிப் பாதுகாவலனாகத் திகழும் இறைவன், நாம் போய் தரிசிக்குமாறு பல கோயில்களில் பல உருவங்களில் கொலுவீற்றிருக்கிறார். அந்த வகையில் ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியே ஒரு மகத்துவம் உண்டு. கற்றது கைமண்ணளவு என்பதுபோல நாம் கண்டதும் ஒருசில காட்சிகளைத்தான். இப்படி கண்ட ஒருசில காட்சிகளிலிருந்து நாம் தெரிந்து கொண்டதும் மிகவும் சொற்பம்தான். கண்ணால் காண்பதை விட, காதால் கேட்பதை விட, தீர
விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் இந்தக் கோயில்களை பொறுத்தவரை
கணக்கிலடங்காததாக உள்ளன.

இப்போதைய நடைமுறை வாழ்க்கையில் இவ்வாறு கோயில் மகிமைகளை அறிந்து கொள்ள நமக்குப் போதிய நேரம் இருப்பதில்லை. தன்னையும் தன் குடும்பத்தையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்கவும் உரிய வசதிகளைப் பெறவும் ஒருநாளில் அதிகபட்ச நேரம் உழைக்க வேண்டியுள்ள நிர்ப்பந்தத்திற்கு நாம் ஆட்பட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நம் அவசரத்தை, நேரத்தை ஒதுக்க இயலாத இயந்திரத்தனத்தை உணர்ந்துதான், அந்நாளிலேயே சித்தர் பெருமக்கள் ஒவ்வொரு கோயிலின் மகத்துவம் பற்றியும் அந்தந்தக் கோயிலில் வழிபட வேண்டிய முறை பற்றியும் குறிப்பாகவும் சில இடங்களில் விரிவாகவும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

குறிப்பிட்ட ஒரு கோயிலுக்குப் போக நேரமோ, செலவழிக்கப் பணமோ இல்லாத சூழ்நிலையில் இப்படி சித்தர்கள் எழுதி வைத்திருக்கும் பாடல்கள் நமக்குக் கைமேல் பொக்கிஷமாக வந்து நிற்கிறது. குறிப்பிட்ட கோயிலின் புனிதத் தன்மை எத்தகையது, எந்தெந்த நேரத்தில் அங்கே இறைவனை வழிபட்டால் முழு பலனும் கிட்டும், கோயில் மூலவரின் வல்லமை என்ன, எந்தெந்த கோரிக்கைகள் எந்தெந்த கோயில்களில் நிறைவேறும் என்றெல்லாம் பலவாறாக பண்டைய ஓலைச் சுவடிகளில் சித்தர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அந்த ஓலை வாசகங்கள் வெறும் வார்த்தைகளல்ல என்பதைப் படிப்பதோடு மட்டுமல்லாமல், உள்ளே புகுந்து சித்தரின் உணர்வை ஒட்டியே அவற்றைப் புரிந்து கொள்ளும்போதுதான் தெளிவாகும். பிற்காலத்தில் இப்படி ஒரு கோயில் உருவாகும், அது பக்தர்களின் இன்ன பிரச்னைகளை தீர்க்கும், அந்தக் கோயிலுக்கு உரிய தெய்வத்தின் மீது எந்த மாதிரி பாடல்கள், யாரால் இயற்றப்படும் என்றெல்லாமும் தீர்க்கதரிசனமாகச் சொல்லி வைத்திருக்கும் சிறப்பு, பிரமிப்பை தரக் கூடியது.

நமது கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று திருவண்ணாமலையில் கொலுவீற்றிருக்கும் அண்ணாமலையார் கோயிலைக் குறிப்பிடுகிறார் அகத்தியர். உண்ணும் உணவு சமைக்க அக்னி வேண்டும். உயிர் வாழ அக்னி மிக முக்கியம். நமக்கு வெளிச்சமே அக்னியிலிருந்துதான் கிடைக்கிறது. அந்த அக்னியே இறையாக அமர்ந்து அருள்பாலிக்கும் தலம் திருவண்ணாமலை. இங்குள்ள மலை பெரிய ரகசியங்களை உட்கொண்டது. இன்றும் அத்ரி, ஜமதக்னி, வசிஷ்டர் உள்ளிட்ட ரிஷிகளும் குதம்பை சித்தர், போகர், மூலர் போன்ற சித்தர்களும் மலையின் உட்புறத்தில் தவம் செய்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பௌர்ணமி நாளில், அஸ்தமனத்துக்குப் பிறகு மலையை வலம் வந்து உண்ணாமுலை அம்மன் சமேதரான அண்ணாமலையாரை தொழுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஜோதி திருநாளில், தேவலோகத்திலிருந்து இந்திரன், வாயு, வருணன், பிரம்மன் போன்ற தேவர்களும் இந்த மலைக்கு வந்திறங்கி, தீபமேற்றி, அண்ணாமலையாரை வழிபாடு செய்கிறார்கள். பௌர்ணமி அன்று திருவண்ணாமலையை மாலை நேரத்தில் நாம் வலம் வரும்போது, பற்பல தேவர்களின் அருளாசி நமக்கு கிட்டுகிறது என்பது நாமே அறிய இயலாத உண்மை. இந்த அருளாசி, நம் கல்வி மற்றும் செல்வத்தை மேலும் வளப்படுத்துவதோடு, நம்மை வருத்திக் கொண்டிருக்கும் எந்தவிதமான துக்கத்தையும் விலக்கிவிடும் என்கின்றன, நாடி ஓலைகள்.

‘‘வருணனோடு இந்திரனும் பிரம்மனும் கிரியை வலஞ்
செயக் கண்டேன் சிவனே!
துயறுற்ற மாந்தர் & ஏகாந்தமாய் இறை சிந்தை கொண்டே சலத்தை வலஞ்செய
தேவர் தம்மாசி கூடுதலால் கூடா மணங்கூடும், சேராத் திரவியஞ்சேரும்,
பிணி வேறோடு நீங்கும், கல்வியுங் கிட்டும், ஞானப்பெருக்குண்டாம், அல்லலும் போமாம்
கீர்த்தி பங்கமகலவே வியாஜ்ஜியமு மகலுமே ஜெயத்தோடே’’ என்கிறார் வியாசமுனி.
இவர் இவ்வாறு திருவண்ணாமலையின் புகழ் பாட, ‘அண்ணாமலை அடைந்தக்கால் அனைத்துஞ் சித்திக்குமே உண்ணாமுலையாரை கை தொழுதக்கால் உன் எண்ணமெல்லாம் ஈடேறும் பொய்யொன்றுமில்லை சத்தியஞ் சொன்னோம்’’ என்று தம் அனுபவத்தை வெளிப்படுத்துகிறார் அகத்தியர்.

போகர் என்ன சொல்கிறார்?
‘‘நிலவிருக்க யவ்வொளியிலே அம்மலை யண்ணாமலையைச் சுற்றி ‘சிவ நம’ எனச் சாற்ற வியாஜ்ஜியத்தில் (நீதிமன்ற வழக்குகளில்) வெற்றியாம், செல்வத்து சிறப்பாம், மேனிப்
பிணியற்று போம் தமனும் உமை வணங்க, சாதிப்பதெல்லாம் எளிதே’’ என்கிறார்.
திருவண்ணாமலையில் என்னவெல்லாம் உண்டு? இதற்கு திருமூலர் பதில் சொல்கிறார்: ‘‘ஆங்கு கற்பக விருட்சமுண்டு, சஞ்சீவி பருவதமுண்டு. காமதேனும் வந்தே வணங்கிட
கண்டேனே, அண்ணாமலை யென்னே கயிலாயமே’’ என்று உள்ளம் உருகிப் பாடுகிறார்.
ஆக, திருவண்ணாமலை கோயிலை பௌர்ணமி நிலவொளியில் கிரிவலம் வருவது பெரும் பேறளிக்கக்கூடியது. ‘‘முப்பானாறு முறை வருவோர்க்கு முக்தியுங் கூடுமே’’ என்பது சித்தர் காகபுஜண்டரின் திருவாக்கு. அதாவது முப்பத்தாறு பௌர்ணமி நாட்களில் தொடர்ந்து கிரிவலம் மேற்கொண்டால், வழக்குகள் எல்லாம் சாதகமாகத் தீர்ப்பு பெறும்; திருமணத் தடை நீங்கும். எதிர்பார்த்ததை விட சிறப்பாக வாழ்க்கைத் தரம் அமையும்.
ஆதிசங்கரரின் அவதாரம் இறையருளால் நிகழ்ந்தது. சிவகுரு&ஆர்யாம்பாள் தம்பதியர், தமக்குப் பிள்ளை வரம் வேண்டி கேரளம், திருச்சூரில் உள்ள வடக்கு நாதர் என்ற சிவாலயத்தில் தங்கி இருந்தனர். இரவு நேரத்தில் அந்த வடக்கு நாதருக்கு அர்த்தராத்திரி பூஜை செய்ய விஷ்ணு பகவானும் பிரம்மனும் வந்தனர். அவர்கள், பிள்ளைவரம் வேண்டி அங்கேயே தங்கி உறங்கிக் கொண்டிருந்த தம்பதியரைப் பார்த்து ஆசியளித்தனர். அவர்களுக்கு இறைவன் அருளால் சிவ அம்சம் நிறைந்த மகன் பிறந்து, பின்னாளில் ஆதிசங்கரர் என்று பாரே போற்றும் வண்ணம் திகழ்ந்தார். இதன் மூலம் ஒரு கோயிலுக்குச் சென்று அந்த இறைவனிடம் நம் வேண்டுகோளை முன்வைக்கும்போது, அதே கோயிலுக்கு வரக்கூடிய பிற தேவர்களும், அந்த இறைவனுடன் சேர்ந்து வரமளிப்பார்கள் என்பது தெளிவாகிறது.
கோயிலில் சென்று தங்குவதையும் மனமெல்லாம் அந்தக் கோயில் இறைவனையே ஜபித்திருப்பதையும் எந்த நேரத்தில் செய்தால் முழுப் பலன் கிட்டும் என்பதையும் சித்தர்கள் குறிப்பாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஓர் உதாரணமாக, அகத்தியர், திருவண்ணாமலையாரை எப்போது தரிசித்தால் நற்பலன் நிரம்பப் பெறலாம் என்று சொல்லியிருப்பதைக் காணலாம்:
‘‘அண்ணாமலையாரைத் தொழத் தேவரும் வர கண்டேன் சிவனே& அயனும் மையானும் (மை போன்ற கரிய வர்ணம் கொண்ட விஷ்ணு), இந்திரனும், மந்த ப்ரதோஷ (சனி பிரதோஷ) காலத்து வருதல் தப்பாதே & அந்நாளண்ணாமலையாரை வேண்டித் தொழ, யெண்ணிய கருமமது சித்திக்குந் திண்ணமே’’ என்கிறார் அவர். 33 சனி பிரதோஷ நாட்களில் அண்ணாமலையாரை தொழுதால், முடியாதது என்று இப்பூமியில் எதுவும் இல்லை என்கிறது சித்தர் நாடி.

இது மட்டுமல்ல காமதேனுக் கடவுளும், கற்பக விருட்சமும், ஞானசம்பந்தன் உள்ளிட்ட நாயன்மார்களும் பௌர்ணமி திதியிலும் கார்த்திகை தீபத் திருநாளிலும் அருள்மிகு அண்ணாமலையரை தொழுகின்றனர் என்றும் கூடுதலாக விவரிக்கிறார் அகத்தியர்.
‘‘பசுத் தேவியுமெண்ணியதை யீயுந்தருவுமின்ன பிற ஞானியரு போகியருஞ் சம்பந்தனுள்ளிட்ட நாயனாரும் தொழுந் தருணமாம் கார்த்திகாயன முழுமதி தனி லண்ணாமலையாரை கை தொழுதக்கால் யெண்ணியதெல்லாஞ் சேரும். திண்ணமாய் மொழிந்த மொழி பற்றி யுய்வீரே’’ என்கிறார் குடமுனி.

இப்படி சித்தர்கள் போற்றும் திருவண்ணாமலையாரை மனதில் ஏற்று, அவர் ஆலயம் தொழுது, கிரிவலமும் மேற்கொண்டு, எண்ணியதெல்லாம் ஈடேறப் பெறுவோம்.

Comments