மஞ்சளில் உறைந்த மங்கலத் தாய்






ஒரு காலத்தில் தூத்துக்குடியர் மாவட்டம், விட்டலாபுரம் கிராமத்தில் வெங்கட குரு ரெட்டியார்&நாச்சியார் அம்மாள் தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் னைஞ்சிபட்டியிலுள்ள பார்வதியம்மன் மீது தீவிர பற்று கொண்டிருந்தனர். வெள்ளிக்கிழமை தோறும் நடந்தே முனைஞ்சிபட்டி சென்று விடுவார்கள். அங்கே பார்வதி அம்மனை நன்றாக மலர் சூடி அலங்கரித்து வணங்கி நிற்பார்கள். பார்வதித் தாயை வாரம் தோறும் பார்க்க முடியவில்லை என்றால் அவர்களுக்கு அன்னம் இறங்காது. அந்த அளவுக்கு அம்மன் மீது பக்தி பூண்டிருந்தனர்.

காலங்கள் உருண்டன. இருவரும் முதுமை அடைந்தனர். இதனால் அவர்களால் நடந்து முனைஞ்சி பட்டிக்கு செல்ல முடியவில்லை. ஆகவே, தாம் வணங்கும் பார்வதியம்மையை விட்டலாபுரம் கொண்டு வந்து வணங்க முடிவு செய்தனர். தங்களோடு விட்டலாபுரத்திற்கு வரவேண்டுமென்று பார்வதியிடம் மனமுருக வேண்டினார்கள். பின் பூசாரியிடம் ஒரு மஞ்சளில் அம்மனை ஆவாகனம் செய்து தாருங்கள். நான் அவளை எங்கள் ஊருக்கு கொண்டு செல்கிறேன் என்றார்கள். அதைக் கேட்டு பூசாரி அம்மனிடம் உத்தரவு கேட்டார். அம்மனும் உத்தரவு கொடுத்தார். உடனே, மஞ்சளில் அம்மனை ஆவாகனம் செய்து, மஞ்சள் துணியில் வைத்தார். அதை நாச்சியார் முந்தானையில் வைத்து முடிந்தாள்.

பிறகு நாச்சியாரிடம், ‘‘அம்மா, நீ இந்த அம்மனை பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும். இடையில் எங்கேயாவது அம்மன் தங்க வேண்டும் என்று விரும்பினால் உன்னை விட்டு எப்படியும் நழுவி விடுவாள். ஆகவே நீ பத்திரமாக கொண்டு செல்’’ என்று கூறினார் பூசாரி. அதற்கு சம்மதித்து, நாச்சியார் தனது கணவரோடு கிளம்பினாள்.அவர்கள் பயணப்பட்டது நல்ல வெயில் காலம். வயதானதால் மிகவும் கஷ்டப்பட்டாலும், பார்வதி அம்மனின் அருளை மனதில் கொண்டு தெம்பாக பயணத்தை தொடர்ந்தனர். அய்யனார்குளம்பட்டி குளக்கரைக்கு வந்தபோதுதான் அம்மன் தன் திருவிளையாடலை தொடங்கினாள். அந்த குளக்கரையே ரம்மியமாக இருந்தது. சுற்றிலும் பச்சை பசேலென வயல்வெளி. பக்கத்திலேயே சிறிய அழகான குன்று. இயற்கையின் அழகும் அம்மனின் அருளும் ஒன்றாகக் கைகோக்க, அம்மன் அத்தலத்திலேயே அமர தீர்மானித்தாள். அந்தக் கணமே நாச்சியார் சோர்வானாள்.
வெயிலின் கொடுமையால் நடக்க முடியாத நாச்சியார் அய்யனார்குளம்பட்டி குளக்கரையில் உள்ள புளிய மரத்தடியில் அமர்ந்து விட்டாள். நாச்சியாருக்கு தாகம் எடுத்தது. எனவே தன் கணவரிடம் தனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். அவரும் அருகிலுள்ள குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றார். இந்த இடைப்பட்ட நேரத்திற்குள் நாச்சியாருக்கு மயக்கம் ஏற்பட்டது. மயங்கும்போதே புடவையின் முந்தானையில் முடிந்திருந்த பார்வதி தேவி நழுவினாள். கணவர் வந்து தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளிந்து நாச்சியார் பார்த்தபோது மஞ்சளில் ஆவாகனம் செய்து வைத்திருந்த அம்மனை காணவில்லை. ‘தாயே இது என்ன சோதனை!’ என்று அதிர்ந்தாள். அக்கம் பக்கம் தேடிப் பார்த்தார்கள். இறுதியில் ஓரிடத்தில் மஞ்சள் கிடப்பதை பார்த்துவிட்டனர். உடனே அந்த மஞ்சளை எடுக்க முயற்சி செய்தபோது அது நிலத்தில் நன்றாக ஊன்றிக் கொண்டுவிட்டது. மீண்டும் மீண்டும் முயற்சிக்க, அது சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.

அப்போதுதான் பூசாரி சொன்னது நினைவுக்கு வந்தது. ‘ஆகா, பார்வதி தேவி இந்த இடத்தில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலிக்க விரும்புகிறாள்’ என்று உணர்ந்தார்கள். உடனே அந்த இடத்தில் முதலில் சிறிய ஓலை குடிசையை கட்டி அம்பாளை வணங்க ஆரம்பித்தார்கள். அம்பாளின் அனுகிரகத்தால் அவளின் புகழ் இந்த பகுதியில் பரவ ஆரம்பித்தது. நாச்சியாரும் அவரது கணவரும் விட்டலாபுரத்தில் வாழ்ந்துகொண்டே அய்யனார்குளம்பட்டி வந்து
பார்வதியம்மனை வணங்கிச் சென்றனர்.

ரெட்டியார் தன் அந்திமக் காலம் நெருங்குவதை உணர்ந்தார். உடனே தனது மனைவியை கூப்பிட்டார். ‘‘நாச்சியார், என் உயிர் பிரிய போகிறது. அப்போது என் கால் கட்டைவிரலை வெட்டி மாடக் குழியில் வை. அந்த விரல் எப்போது துடிப்பை நிறுத்துகிறதோ
அப்போது அந்த கட்டை விரலை எடுத்துக் கொண்டு மேளதாளத்துடன் தாமிரபரணி கரைக்கு போ. அங்கே தாமிரபரணி தீர்த்தத்தில் மூன்று கை தண்ணீரை எடுத்து விட்டு ஒரு நெருப்பை ஏற்படுத்தி அதனுள் இறங்கு. நாம் இருவரும் அதன் பின் நற்கதியடையலாம்’’ என்று
கூறினார்.

அதிர்ந்து போனாள் நாச்சியார். ஆனாலும் இறைவனின் முடிவை யார் தடுக்க முடியும்! அந்த காலமும் வந்தது. ரெட்டியாரின் ஆவி பிரிந்தது. அவர் சொன்னபடியே வலது கட்டை விரலை வெட்டி மாடக்குழியில் வைத்தாள் நாச்சியார். தினமும் அந்த கட்டைவிரல் துடிப்பை பார்த்துக் கொண்டே இருந்தாள். ஒரு நாள் ரெட்டியாரின் கட்டைவிரல் தனது துடிப்பை நிறுத்தியது. உடனே நாச்சியார் மேளதாளம் முழங்க அந்த கட்டை விரலை எடுத்துக்கொண்டு தாமிரபரணி நதிக்கரையை நோக்கி சென்றாள். அங்கே மிகப்பெரிய நெருப்பை உருவாக்கினாள். பின் தாமிரபரணியில் மூழ்கி எழுந்தாள். மூன்று முறை தனது கைகளினால் தாமிரபரணி தண்ணீரை அள்ளினாள். முதலில் விபூதி வந்தது. இரண்டாவதாக மஞ்சள்பொடி வந்தது. மூன்றாவதாக குங்குமம் வந்தது.அதன்பின் நதிக்கரையில் ஈர உடையுடன் கணவரின் கட்டைவிரலை கையில் வைத்துக் கொண்டு தீயில் நுழைந்தாள். அவ்வளவுதான், அக்னி ஜுவாலையில் கரைந்து, காணாது போனாள். அப்போது அந்த அக்னியிலிருந்து இரண்டு புறாக்கள் வானம் நோக்கிப் பறந்தன.

காலங்கள் கடந்தன. தம் உறவினர்கள் கனவில் நாச்சியார் தோன்றினாள். ‘‘நானும் என் கணவரும் தானே முளைத்த லிங்கமாய் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளோம். நான் நெருப்பு ஜுவாலையில் இறங்கிய இடத்தில் அந்த உருவம் உள்ளது. அதை எடுத்து வணங்கி வந்தால் நாங்கள் உங்களுக்கு கேட்ட வரம் தருவோம்’’ என்று கூறினாள். அதன்படி உறவினர்கள் தாமிரபரணி ஆற்றங்கரைக்குச் சென்று பார்த்தபோது, அந்த சுயம்பு உருவம் கிடைத்தது. அதை அப்படியே கொண்டு வந்து வணங்கினர். வணங்கிய உறவினர்களுக்கு கேட்ட வரம் கிடைத்தது. தீ ஜுவாலையிலிருந்து தோன்றிய நாச்சியார், தீப்பாச்சியம்மன் என்றழைக்கப்பட்டாள். அதே நேரம் நாச்சியார் மூலம் உருவான பார்வதியம்மனையும், தாமிரபரணி முத்தாலங்குறிச்சி கரையிலுள்ள தீப்பாச்சி அம்மனையும் ஒரே நேரத்தில் வணங்க முடியவில்லை. அதிலும் ஆற்றில் வெள்ளம் வந்தால் முத்தாலங்குறிச்சி பகுதிக்குச் செல்ல முடியாது. எனவே, இந்த பிரச்னையை தீர்க்க தீப்பாச்சியம்மனையும் அய்யனார்குளம்பட்டிக்கு கொண்டு வந்தனர். ஒரே இடத்தில் வைத்து வணங்க ஆரம்பித்தனர்.

ஓலை குடிசையாக இருந்த கோயில் மிகப்பெரிய கான்க்ரீட் கட்டடமாக மாறியது. இந்த அம்மனை வணங்கியவர்கள் தற்போது மிகப்பெரிய பதவியிலும் செய்யும் தொழிலில் சிறந்து விளங்குகிறார்கள். கோயிலுக்கு கிழக்கு நோக்கி வாசல் உள்ளது. கருவறையில் பார்வதியம்மன் உள்ளார். அடுத்த அறையில் நாச்சியாரம்மனும் ரெட்டியாரும் இணைந்து ஓருருவாகக் காட்சியளிக்கும் தீப்பாச்சியம்மன் உள்ளார்.

கோயில் அம்மனால் பயன் பெற்றவர்கள் மிக அழகான முறையில் மணி மண்டபம் அமைத்துள்ளனர். கன்னி மூலையில் வல்லப மகா கணபதி உள்ளார். அடுத்த மூலையில் பாலசுப்ரமணியர் உள்ளார். அடுத்து கோயிலின் தல விருட்சமாக நாச்சியார் சோர்வாகப் படுத்த புளியமரம் உள்ளது. இந்த புளியமரத்தின் கீழே நாகர் உள்ளது. அடுத்து சிவனைந்த பெருமாள், ஸ்ரீபற்பநாத சாமி, சுடலைமாடசாமி, இசக்கியம்மாள், பேச்சியம்மாள் மற்றும் நவகிரகங்களும் உள்ளன.

நெல்லை & திருச்செந்தூர் மெயின்ரோட்டில் செய்துங்கநல்லூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது, அய்யனார்குளம்பட்டி. ஆட்டோ வசதி உண்டு.

Comments

  1. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete

Post a Comment