தாமிரபரணி கரையினிலே... ctd

கயிலாய மலையில் சிவ-பார்வதியரின் திருக்கல்யாணம். பாராளும் நாயகனின் கல்யாணக் கோலத்தை தரிசிக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் கயிலையில் குவிந்தனர். அவர்கள் மட்டுமா? ரிஷிகள், முனிவர்கள், சித்தர் பெருமக்கள், பூதகணங்கள் என்று திருக்கயிலாயமே திமிலோகப்பட்டது!

பாசத்துக்குரிய தங்கை பார்வதியாளை தாரை வார்த்துக் கொடுக்க வந்திருந்த பெருமாளின் திருமுகத்தில் அப்படியரு மகிழ்ச்சி. மணப்பெண் தோழியாக மகாலட்சுமி! கலைமகளோ, கயிலையின் வாயிலிலேயே நின்று, வருவோரை வரவேற்றுக் கொண்டிருந்தாள்.


ஆமாம்... நந்திதேவர்?!

விருந்துக்கான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டாமா... சிவகணங்களை துரிதப் படுத்துவதும் அவர்களுக்கு வேண்டியதை எடுத்துத் தருவதுமாக பரமன் இட்ட பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார் நந்தி!

மத்தளமும் தேவதுந்துபிகளும் முழங்க... பஞ்சாட்சர கோஷம், திருக்கயிலைச் சிகரங்களை அதிரச் செய்தது! மணவறையில் வேத மந்திரங்கள் ஓதிக் கொண்டிருந்தார் பிரம்மன். மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் வர வேண்டியதுதான் பாக்கி!

பரபரப்பான இந்த தருணத்தில்தான்... லேசான ஓர் அதிர்வு; அனைவரும் அதை உணர்ந்தார்கள். என்ன ஏதென்று அனுமானிப்பதற்குள்... அதிர்வின் அளவு அதிகரித்தது; திருக்கயிலையே குலுங்கியது!

பிரம்மனுக்குத் தெரிந்துவிட்டது... 'பரம்பொருளின் திருமணத்தைக் காண கோடானகோடி பேர் கயிலையில் கூடியதால் நேர்ந்த விளைவு இது!'

- சட்டென்று சுதாரித்தவர், தீர்வு வேண்டி பரமேஸ்வரனை கண்களால் தேடினார். அதற்குள் அவரே அங்கு வந்து விட்டார்.

''எங்கே அகத்தியன்?'' கன கம்பீரமாக ஒலித்தது ஈசனின் குரல்.

மறுகணம் அவர் முன் வணங்கி நின்றார் குறுமுனிவர்.

''அகத்தியரே... தேவாதிதேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் எமது திருமணத்தைக் காண இங்கு வந்து விட்டதால், உலகம் சமநிலை தவறி விட்டது. வடக்கு தாழ்ந்து தென்புலம் உயரத் துவங்கியிருக்கும் இந்த உலகை சமநிலைப்படுத்த உன்னால் மட்டுமே முடியும். உடனே புறப்படு பொதிகைக்கு!''

''இப்போதே புறப்படுகிறேன் ஸ்வாமி. ஆனால்...'' என்று இழுத்த அகத்தியரை இடைமறித்தார் ஈசன்...

''நீர் கேட்க நினைப்பது புரிகிறது. எமது திருமணக் கோலத்தை காண முடியாமல் போய்விட்டதே என்ற கலக்கம் தேவையில்லை. தென்னகத்தில் நீர் விரும்பும் தருணத்தில் திருமணக் கோலத்தில் உமக்குக் காட்சி தருவேன்'' என்று அருள்புரிந்தார்.

அகமகிழ்ந்தார் அகத்தியர். இறைவனை வணங்கி தென்புலம் நோக்கிப் புறப்பட்டார். பொதிகைக்கு வந்து சேர்ந்தார்.

ஆம்! அகத்திய முனிவர் பொதிகைக்கு வந்தது குறித்து புராணங்கள் சொல்லும் திருக்கதை இதுதான். புராண- இதிகாச கதைகளில் மட்டுமல்ல, பழந்தமிழ் சங்க காலத்திலும்... முனிவராக சித்தபுருஷராக, புலவராக.... அகத்தியர் எனும் பெயரில் பலர் இருந்திருக்கக் கூடும் என்பது ஆய்வாளர்களது கருத்து.

'அகத்தியர், போக முனிவரின் காலத்தவராக இருக்கலாம். கருவூர் சித்தரின் குரு போக முனிவர் என்பதால், இவரின் காலம் 11-ஆம் நூற்றாண்டு' என்பது இன்னும் சிலரது கருத்து.

சித்த மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள், 'இவரே சித்தர்களில் முதன்மையானவர்; இவரது காலத்தைக் கணக்கிட முடியாது' என்றும் கூறுகிறார்கள்.

'கி.மு.16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரமேச்வரர் என்ற அரசனின் தளபதி இவர்' என்றும் ஒருசாரார் கருதுகிறார்கள். தாரகன் எனும் அசுரனை அழிக்க, இந்திரன், அக்னி மற்றும் வாயு ஆகியோர் பூமிக்கு வந்தனர். இதையறிந்த தாரகன் கடலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டான். எனவே, கடல் நீரை வற்றச் செய்து, அரக்கனை அழிக்கும்படி அக்னிக்கு ஆணையிட்டான் இந்திரன்.

ஆனால், கடல்நீரை வற்றச் செய்தால் அதில் வாழும் உயிரினங்கள் பாதிப்புறுமே என்ற எண்ணத்திலும், 'தவிர... அசுரன் கடலுக்குள் புகுந்து கொண்டதால் இனி உலகுக்கு பாதிப்பில்லை' என்று கருதியும் அக்னி பகவான் சும்மா இருந்து விட்டார். ஆனால், அவரது எண்ணம் பொய்த்துப் போனது. விரைவில் கடலில் இருந்து வெளிப்பட்டு உலக உயிர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தான் அசுரன்.

இதையறிந்த இந்திரன் வருந்தினான். தனது கட்டளையை அக்னி நிறைவேற்றி இருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று கருதியவன் அக்னி பகவானின் மீது கோபம் கொண்டான். ''அக்னியும் வாயுவும் கூடி கடல்நீர் முழுவதையும் குடிக்கக் கடவது'' என்று சபித்தான். இதன் விளைவாக அவதரித்த அகத்தியர் கடல்நீரைக் குடித்து அசுரனை வெளிவரச் செய்தார் என்கின்றன புராணங்கள்.

இந்த தவசீலர் உறைந்திருக்கும் பொதிகை, உலகம் அழிந்தாலும் தான் அழியாத அற்புத மலை! காரணம்? அகத்தியரின் ஆயுள் எவ்வளவோ, அத்தனை காலம் இந்த மலையும் நிலைத்திருக்க வேண்டுமே?!

ஆமாம்... அகத்தியரின் ஆயுள்- மூன்று யுகங்கள்; 34 நாட்களாம். ஆக, யுகங்கள் கடந்து நிற்கும் தெய்வீக மலை பொதிகை! இங்கே வரும் அடியவர்கள், அகத்திய மாமுனியின் சாந்நித்தியத்தை உணர்வதுடன், பொதிகையிலும் தாமிரபரணிக் கரையினிலும்... குறுமுனிவரின் திருவருளுக்கு சாட்சியாகத் திகழும் தலங்களையும் தரிசித்து மகிழலாம்.

அகத்தியருக்கு முருகப் பெருமான் தமிழ் போதித்தார் என்று பார்த்தோம் இல்லையா... அந்தத் திருவிடம் அமைந்திருப்பதும் பொதிகையில்தான். இந்தக் கோயில், அகத்தியர் அருவிக்குச் செல்லும் வழியில் உள்ளது. கோயிலின் முன் உள்ள தலமரத்தில் சொட்டுச் சொட்டாக விழும் நீர், பக்தர்களின் மேனியிலும் தெறித்து சிலிர்க்க வைக்குமாம்.



கயிலையில் இறைவனிடம், ''தங்களின் திருமணக் காட்சியைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடையாதா?'' என்று அகத்தியர் வேண்டியபோது, ''தாமிரபரணிக் கரையில் நீ காணும்படி திருமணக் கோலத்தை காட்டி அருள்வோம்'' என்று பரமன் அருளினார் அல்லவா?! அதன்படியே, இந்த முனிவருக்கு இறைவன் கல்யாணக் காட்சி கொடுத்தது சித்திரை முதல் நாள். இதையே 'சித்திரை விஸ§' வைபவமாக... பாபநாசம் சிவாலயம் முதலான கோயில்களில் வெகுசிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

அகத்தியர் பிரம்படி மற்றும் கால் தடம் விட்டுச் சென்ற இடங்கள், அம்பாசமுத்திரம் அகத்தியர் கோயிலாகத் திகழ்கிறது.

தவிர... அகத்தியர் தென்னகத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்ட ஆலயங்களும் ஏராளம்.

தென்காசிக்கு அருகில், இலத்தூர் சிவாலயத்தில் உள்ள சிவ மூர்த்தம் அகத்தியர் தன் கைப்பிடியால் பிடித்து வைக்கப்பட்ட லிங்க மூர்த்தம்தானாம்! ஊர்க்காடு கோடீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மூலவர், அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவரே!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பொதிகை மலையில் உள்ள சொரிமுத்து ஐயனார் கோயிலில் உள்ள மகாலிங்கமும் அகத்தியர் நிறுவியதே.

ஆனைமுகத்தானையும் வழிபட்டிருக்கிறார் அகத்தியர். திருநெல்வேலி(டவுன்)யில் உள்ள சந்தி பிள்ளையார், அகத்தியர் வழிபட்ட மூர்த்தி ஆவார். அம்பலவாணபுரத்தில் உள்ள உழக்கரிசி பிள்ளையார் கோயிலும் அகத்தியர் வழிபாட்டால் புத்துயிர் பெற்றது. சீவலப்பேரி ஸ்ரீதுர்கையம்மன் கோயில் அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்டதாம்!

Comments

  1. அருமையான பகிர்வுகளுக்கு நன்றி ஐயா..

    ReplyDelete

Post a Comment