தாமிரபரணி கரையினிலே...ctd






தாமிரபரணி! இந்தப் புண்ணிய நதிக்கரையில்தான் எத்தனை எத்தனை அருளாடல்கள்... எவ்வளவு இறை அற்புதங்கள்?! அனைத்துக்கும் மகுடம் சூட்டினாற்போல் திகழ்கிறது அத்தாளநல்லூர் திருத்தலம்!

தென்பாண்டி நாட்டின் திரிகூடமலையை சிவசைலம் என்பர். இங்கே ஆதிமூலமான ஸ்ரீமகாவிஷ்ணு கோயில் கொண்டிருக்கும் மலை அடிவாரப் பகுதி, பூக்கள் நிறைந்து காணப்பட்டதால், மொய்மாம் பூம்பொழில் என்று பெயர் பெற்றது. இதன் அழகில் மெய்ம்மறந்த மன்னன் இந்திரத்யும்னன், தினமும் இங்கு வந்து பெருமாளை வழிபட்டு மகிழ்ந்தான். இந்திரத்யும்னனின் பக்தி நெறியை அறிந்த அகத்தியமுனிவர் அவனைச் சந்திக்க விரும்பினார். பொதிகையில் இருந்து புறப்பட்டு மொய்மாம் பூம்பொழிலை வந்தடைந்தார்.

அகத்திய முனிவர் விஜயம் செய்த வேளை... கண் மூடி, பெருமாளை தியானித்தபடி பக்தியில் திளைத்திருந்தான் மன்னன். ஆனால் அகத்தியரோ, தன்னைப் பொருட்படுத்தாமல் மன்னன் அவமதிப்பதாகக் கருதினார். 'மாமுனிவருக்கு மரியாதை செலுத்தாமல் அகந்தையுடன் இருக்கும் நீ யானையாகக் கடவது!' என்று கோபத்துடன் சபித்தார்.

சாபம் பலித்தது. யானையாக மாறினான் இந்திரத்யும்னன்! ஆனால், மன்னனின் மீது தவறு இல்லை என்பதை தாமதமாக உணர்ந்த அகத்தியர், யானையாகி நின்ற மன்னனுக்கு கஜேந்திரன் எனப் பெயர் சூட்டி ஆசீர்வதித்து (கஜம் என்றால் யானை. இந்திரன்- மன்னனின் பெயர்) சென்றார். அகத்தியரின் சாபத்தால் மன்னனின் உருவம் மாறியதே தவிர, உள்ளம் மாறவில்லை; பெருமாளின் திருவடியையே எண்ணி தொழுது வந்தது யானை.

இதே காலத்தில்... தேவலன் என்ற முனிவர் தாமிரபரணியின் கரையில் நின்று தவம் செய்து வந்தார். அப்போது வான்வழியே சென்ற கந்தர்வன் ஒருவன், முனிவரை கேலி செய்தான். ஆற்றில் இறங்கி நீந்தி வந்து, முனிவரின் காலைப் பற்றி இழுத்து விளையாடினான். இதனால் நிலைதடுமாறிய முனிவர், கந்தர்வனின் செயலைக் கண்டு கோபம் கொண்டார். முதலை ஆகும்படி அவனை சபித்தார். அந்த முதலையும் மொய்மாம் பூம்பொழிலில் இருந்த தாமரைத் தடாகத்தை அடைந்தது.

நாட்கள் நகர்ந்தன. பெருமாள் பூஜைக்காக பூப்பறிக்க வந்த கஜேந்திர யானை, அந்தத் தடாகத்துக்குள் இறங்கியது. ஆசை ஆசையாக... மலர்ந்தும் மலராமலும் இருந்த ஒரு தாமரை மலரை துதிக்கையால் பறித்தது. 'நம் ஸ்வாமியின் அழகுக்கு அழகு சேர்க்கும் இந்தப் பூ' என்ற எண்ணத்துடன் யானை கரையேற முற்பட, அதன் காலை கவ்விப் பிடித்தது முதலை!

முதலையின் பிடியில் இருந்து விடுபட முடியாமல் கதறியது யானை. மரண பயம் சூழ்ந்த வேளை... அந்த யானைக்கு தனது கர்மவினை நினைவுக்கு வந்தது. எந்தச் சூழலிலும் அடியவர்க்கு உறுதுணையாக இருந்து அவர்களைக் காப்பாற்றும் ஆபத்பாந்தவனான ஆதிநாராயணனை பிரார்த்தித்து, 'ஆதிமூலமே காப்பாற்று' என்று அபயக் குரல் எழுப்பி பிளிரியது. மறுகணம் கருட வாகனராகக் காட்சி தந்த மகாவிஷ்ணு, சக்ராயுதத்தால் முதலையை வதைத்து யானையை மீட்டார். அவரது திருக்கரம் பட்டதும் சாபம் விலகி சுயரூபம் அடைந்த இந்திரத்யும்னனுக்கு வீடுபேறு கிடைத்தது. யானையை பெருமாள் ஆட்கொண்ட தலம் அத்தாளநல்லூர்.அத்தி என்றால் யானை.

அத்தியை ஆட்கொண்ட தலம் அத்தியாளநல்லூர்; இதுவே அத்தாளநல்லூர் என்று மருவியதாம்!

இந்தத் தலத்தில், ஸ்ரீகஜேந்திர வரதராகக் கோயில் கொண்டிருக்கிறார் பெருமாள். சுமார் 2,500 ஆண்டுகள் பழைமையான கோயில். ஆண்டாளின் அவதாரம் தங்கள் குடும்பத்தில் நிகழ வேண்டும் என்று அவரின் முன்னோர் வேண்டிக் கொண்ட தலம் இது என்கிறார்கள். .



சிறிய முகப்பு கோபுரத்துடன் திகழ்கிறது ஆலயம். இடப்புறம்- அத்தாளநல்லூர் கஜேந்திரவரதர் அறக் கட்டளை மூலம் இயங்கும் அருங்காட்சியகம் உள்ளது. கோபுர வாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்தால், விசாலமான பிராகாரங்களுடன் அமைந்திருக்கிறது ஆலயம். உள்ளே... தனிச் சந்நிதியில் அருளும் ஸ்ரீசக்கரத்தாழ்வார், மூலவர் சந்நிதிக்கு எதிரில் ஸ்ரீகருடாழ்வார் ஆகியோரை தரிசிக்கலாம். அருகில் கஜேந்திர மோட்சத்தை சித்திரிக்கும் ஓவியம். மேலும் தர்மர், பீமன், இரண்யனை வதம் செய்யும் ஸ்ரீநரசிம்மர், போதிமரத்தடி புத்தர் ஆகிய தூண் சிற்பங்களையும் காண முடிகிறது. அருகில் உள்ள கல்லில் வேட்டுவப் பெண்ணாக ஸ்ரீபார்வதி, வாலி, சுக்ரீவன், ஸ்ரீராமன் மற்றும் விஸ்வாமித்திரர் ஆகியோரது சிற்பங்கள் அழகுற பொலியப்பட்டுள்ளன.

உள் பிராகாரத்தில்- ஆழ்வார்கள் மற்றும் ஸ்ரீவேணுகோபாலன் சந்நிதிகளை தரிசிக்கலாம். கருவறையில் சுதை சிற்பமாகத் திகழ்கிறார் மூலவர். ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீகஜேந்திர வரதர். அருகில் பிருகு மற்றும் மார்க்கண்டேய முனிவர்கள். மூலவர் பெருமாள் அழகோ அழகு! இங்கே, தனித் தனிச் சந்நிதிகளில் தெற்கு நாச்சியார், வடக்கு நாச்சியார் என்று இரண்டு தாயார்களும் தரிசனம் தருவது சிறப்பு. இந்தக் கோயில்... நம் நாட்டில் அமையப் பெற்றிருக்கும் கஜேந்திர வரதர் கோயில்களுக்கு எல்லாம் மூலக் கோயிலாம்.

கஜேந்திர வரதர் அருளும் மூலக் கோயில் அடிக்கடி ஆற்றுவெள்ளத்தில் மூழ்கிவிடுமாம். எனவே, 16-ஆம் நூற்றாண்டில்... கருவறை உயரமாக அமைக்கப்பட்ட புதிய கோயில் கட்டப்பட்டதாம். ஸ்ரீதேவி- பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் மூலவர்.

அம்பாசமுத்திரத்துக்கு அருகில் இருக்கிறது அத்தாளநல்லூர். அம்பாசமுத்திரத்தில் இருந்தும் வீரவநல்லூரில் இருந்தும் பஸ் வசதிகள் உண்டு.

மூன்று தீர்த்தங்கள்

தாமிரபரணிக் கரையில்... யானை மற்றும் முதலைக்கு பெருமாள் விமோசனம் அளித்த இடம், கஜேந்திர மோட்ச தீர்த்த கட்டமாக திகழ்கிறது. அருகிலேயே ஸ்ரீசட்டநாதர் கோயில். கஜேந்திர மோட்சத்தை சித்திரிக்கும் சிற்பங்களையும் காணலாம்.

தல புராணப்படி இங்கே மூன்று தீர்த்தங்கள்! முதலையிடம் இருந்து விடுபட்ட கஜேந்திரனை, மகாவிஷ்ணு தன் கரத்தால் தூக்கிவிட்டு வீடுபேறு அடையச் செய்த இடம் விஷ்ணுதீர்த்தம். பெருமாள் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள இந்த தீர்த்தத்தில் குளித்து, ஸ்ரீகஜேந்திரவரதரை வழிபட்டால் பிணிகளும் ஆபத்துகளும் நீங்கும்; மீண்டும் பிறவாத பெருநிலையை அடையலாம் என்பது நம்பிக்கை. இதன் வடபுறம் சிங்க தீர்த்தம்! இதில் நீராடி இறைவனை வழிபட்டால் மரணபயம் நீங்கும்; நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.

சிங்க தீர்த்தத்துக்கு தெற்கே சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது சக்கர தீர்த்தம். இந்த இடத்துக்கு திருவலஞ்சுழி என்று பெயர். பெருமாள் இந்த இடத்தில் நின்றுதான் முதலையின் மீது சக்ராயுதத்தை ஏவினாராம். முதலையை அழித்தபிறகு, இந்த தீர்த்தத்தில் மூழ்கி புனிதம் அடைந்த சக்ராயுதம், பெருமாளின் கரத்தை அடைந்ததாக ஐதீகம். இந்த தீர்த்தத்தில் நீராடினால் சகல தோஷங்களும் நீங்கும் என்பர்.

Comments

  1. நன்குடியார் வழிபட்ட கோயில். பதிவிற்கு நன்றிகள் பல.

    ReplyDelete

Post a Comment