அசூர் ஸ்ரீதாந்தோன்றியப்பர் ஆலயம்






எங்கு திரும்பினாலும், வயல்வெளிகளும் நீர்நிலைகளுமாகக் காட்சி தருவது சோழ தேசத்தின் சிறப்பு. சுழித்துக்கொண்டும், சீறிப் பாய்ந்தும், அன்னநடை போட்டும் காவிரி ஓடுகிற அழகே அழகு! பச்சைப் பசேலென வயல்களும், அங்கே இடுப்பு உயரத்துக்கு நிற்கிற நெற்கதிர்களும் பார்க்கப் பார்க்கப் பரவசம் தருபவை!
காவிரியில் குளித்துவிட்டு, மண்சட்டியில் வைத்திருக்கும் சோற்றை அள்ளியெடுத்துச் சாப்பிடுவதில், சோழ தேசம் அலாதி விருப்பம் கொண்டிருந்தது. தன்னையும் தன் தேசத்தையும் நாடி வரும் எவரும் பசியால் வாடிவிடக் கூடாது என்பதில், அதை ஆண்ட மன்னர்கள் உறுதியாக இருந்தார்கள்.

சோழ தேசத்தின் தலைநகரமாக தஞ்சாவூர் இருந்தாலும், ஒரு பக்கம் திருவாரூரும், இன்னொரு பக்கம் கும்பகோணமும் முக்கிய இடம்பிடித்திருந்தன. வணிகர்களும், அந்நிய தேசத்திலிருந்து வந்தவர்களும் தஞ்சைக்குச் செல்வதற்கு முன்னதாக கும்பகோணத் தில்தான் இளைப்பாறுவர். இப்போது குதிரையில் கிளம்பினால், இன்னும் இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்தில் தஞ்சையை அடைந்துவிடலாம் என்று திட்டமிட்டுப் புறப்படுவர். சேத்தியாதோப்பில் இருந்து அணைக்கரை வழியாகவும், தில்லையம் பதியில் இருந்து மாயூரம் வழியாகவும் கும்பகோணத்தை அடைந்து, பிறகு தஞ்சாவூருக்குச் செல்கிற மக்களின் எண்ணிக்கை அதிகம்.



சோழ தேசத்தின் செழிப்பையும் வனப்பையும் பார்ப்பதற்காக வருவோர் ஒரு பக்கம் என்றால், அந்தத் தேசத்து ஆலயங்களையும் அங்கே குடிகொண்டிருக்கிற கடவுளரையும் தரிசித்து சிலிர்ப்பதற்காகவும் வியப்ப தற்காகவும் வருகிற அன்பர்களும் உண்டு. அதேபோல், கடல் வழியாகவும், வீராணம் ஏரி வழியாகவும்

வந்து, கும்பகோணத்தில் மக்களுடன் மக்களாகக் கலந்து, தேசத்தைப் பிரிக்கவும், ஒற்றுமையைக் குலைக்கவும், தஞ்சை அரண்மனைக்குள் புகுந்து களேபரங்கள் செய்யவும் எதிரிகள் திட்டமிடுவார்கள். 'எதிரி தேசத்திலிருந்து காற்று கூட, நம் தேசத்துக்குள் வரக்கூடாது’ என மன்னன் உத்தரவிட, ஒவ்வொரு ஊரின் எல்லையிலும் மிகப் பெரிய படைகளைக் கொண்டு முகாமிடுவார்கள் மந்திரிகள். குழுக் குழுவாகப் பிரித்து, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள், வீரர்கள்.

கும்பகோணத்திலும் அப்படியரு முகாம் போடப் பட்டது. குடந்தை நகரில், காவிரியின் வடகரையில் உள்ள அந்தப் பகுதி நெடுங்காலமாகவே கானகமாக இருந்தது. ஆகவே, அந்தப் பகுதிக்கு ஆதிகானகம் என்று பெயர். தற்போது 'அசூர்’ என அழைக்கப்படுகிறது.



அந்தப் பகுதியைத் தேர்ந்தெடுக்க பல காரணங்கள் உண்டு. அங்குதான் அடர்ந்த மரங்களும், இளைப்பாறவும் பதுங்கி வேவு பார்க்கவும் தோதான நிழல்களும், மறைவிடங் களும் இருந்தன. மிகக் குளுமையான இடமும்கூட! காவிரி நீரில் காற்று பட்டு, அந்தச் சிலிர்ப்பு தேகத்தில் பட... மொத்த அயர்ச்சியும் ஓடிப் போகும். தவிர, சேத்தியா தோப்பு வழியே அணைக்கரையை அடைந்து, அங்கிருந்து கும்பகோணம் எல்லைக்குள் வருபவர்கள், காவிரியின் வட கரையில் வந்து குளித்துவிட்டு, தங்கிச் செல்வார்கள்.

எனவே, இந்தப் பகுதிக்கு வருகிற அன்பர்கள் யாவருக் கும் அன்னதானம் வழங்குவது என முடிவு செய்தான் மன்னன். அவர்கள் வழிபடுவதற்கு வசதியாக, அங்கே ஒரு கோயில் அமைக்கவும் திட்டமிட்டான். அதன்படி கட்டுமானப் பணிகளைத் துவக்கியபோது, அஸ்திவார பள்ளம் தோண்டிய இடத்தில் சிவலிங்கம் ஒன்று தென்பட்டது. 'இதுவொரு நல்ல சகுனம். இந்தத் தேசம் இன்னும் செழிக்கப் போகிறது, பாருங்கள்’ என்று ஆச்சார்யர்களும், அமைச்சர் பெருமக்களும் முகம் மலர, நம்பிக்கை தெரிவித்தனர். ஆதிகானகம் பகுதியில் அழகிய சிவாலயம் அமைக்கப்பட்டது. கோயிலுக்கு அருகிலேயே சின்னதாக ஒரு குளமும் வெட்டப்பட்டது. ஸ்வாமி, தானே உருவான சிவலிங்கத் திருமேனி என்பதால், ஸ்ரீதான்தோன்றியப்பர் எனப் பெயர் சூட்டினான் மன்னன்.

அழகே உருவெனக் கொண்ட அம்பாளின் விக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தேவியின் திருநாமம் குறித்து ரொம்பவே யோசித்தான். இந்த இடத்தில் அன்னதானம் செய்வதற்காகத்தான் கோயிலே அமைத்துள்ளோம். ஆகவே, வருவோ ருக்கு இல்லையென்று சொல்லாமல் அள்ளி வழங்கும் தேவியின் திருநாமம் ஸ்ரீஅன்னபூரணி என்றே இருக்கட்டுமே எனக் கருதிய சோழன், அப்படியே திருநாமம் சூட்டி மகிழ்ந்தான்.

கோயிலின் சிறப்புகள், சோழ தேசம் மட்டுமின்றி மற்ற நாட்டவர்க்கும் தெரிய வரவே... ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசிக்க வருவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித் தது. அவர்களுக்குச் சுடச்சுட உணவு பரிமாறப்பட்டது. மனதாரத் தரிசித்து, வயிறாரச் சாப்பிட்டு, சோழ தேசத்தை வாழ்த்திச் சென்றனர், பக்தர்கள்!

தொடர்ந்து அன்னதானம் நடை பெறுவதற்காக குலோத்துங்க சோழன், ஸ்ரீஅன்னபூரணியின் பெயரில் ஒரு வேலி நிலம் கொடுத்ததைத் தெரிவிக் கிற கல்வெட்டுகள் ஆலயத்தில் இருக்கின்றன.



கும்பகோணத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அசூர். இந்த ஊரில் திருக்குளத்தையும், எதிரில் உள்ள ஸ்ரீதான்தோன்றியப்பர் ஆலயத்தையும் இன்றைக்கும் தரிசிக்க லாம். திருக்குளத்தில் எல்லாக் காலங்களிலும் தண்ணீர் வற்றாமல் இருக்குமாம்! அதேபோல், எந்தப் பிரார்த்தனையை வைத்தாலும், நிறைவேற்றி அருள்வாராம் ஸ்ரீதான்தோன்றியப்பர். இவரையும் ஸ்ரீஅன்னபூரணியையும் தரிசிக்கும் ஆவலில், அசூர் கோயிலுக்கு வந்தால், நொறுங்கிப் போய் விட்டது, மனசு. மதில் முழுவதும் தொலைந்து பல நூறு வருடங்களாகி விட்டதாம்! கோபுரம் தரைமட்டமாகி, எத்தனையோ வருடங்களாகிவிட்டதாம். எப்போதோ அடித்த புயலில் கொடிமரமும் விழுந்து, வழிபாடு செய்ய வசதியும் இன்றி, புதர் மண்டத் துவங்கிவிட்டதாம்!

''புதர் மண்டி, செடி- கொடிகளும் மரங்க ளும் முளைத்துவிட்டதால், வழிபடுவதற்கு மக்கள் வர இயலாத நிலை ஏற்பட்டது. உலக மக்களுக்கே அன்னதானம் செய்த ஆலயத்தில், ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் ஒரு வேளை நைவேத்தியம்கூட நடைபெற வில்லை என்பது எத்தனை வேதனையான விஷயம்! பிறகு புதர், செடி- கொடிகளைக் களைந்து, ஒருகால பூஜையும் நைவேத்தியமும் செய்து வருகிறேன்'' எனக் கண்ணீருடன் தெரிவிக்கிறார் ரவி குருக்கள்.

''ஒருகாலத்தில், எங்கிருந்தெல்லாமோ இந்தக் கோயிலுக்கு அன்பர்கள் வருகை தந்தனர். ஆனால், இன்று உள்ளூர்க் காரர்களே வந்து வணங்க முடியாதபடி, சின்னாபின்னமாகி இருக்கிறது ஆலயம். ஸ்ரீதட்சிணாமூர்த்தியும் அம்பாளும் கொள்ளை அழகுடன் தரிசனம் தரும் ஆலயம் இது! ஆனால் காலமாற்றத்தில், கோயிலின் அழகு மொத்தமும் கொள்ளை போய்விட்டதுதான் கொடுமை'' என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர், ஜோதி வார வழிபாட்டு மன்றத்தினர்.

''கும்பகோணத்தின் வாயுமூலையில் இருக் கிறது ஸ்ரீதான்தோன்றியப்பர் திருக்கோயில். இது ரொம்ப விசேஷம் என்று என் தாத்தாவும் அப்பாவும் தெரிவித்துள்ளனர். அதனால்தான், இந்தக் கோயில் சிறக்கவும், பக்தர்களின் வருகை அதிகரிக்க வேண்டும் என்றும் நாள் தவறாமல் பூஜை செய்து வருகிறேன். தற்போது, பிரதோஷ பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது. தீர்த்தத்தின் பெயர் வாயு புஷ்கரணி. ஆகவே தீர்த்தமும் தலமும்

போற்றத்தக்க இந்த ஆலயத்துக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்கிற பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் இல்லை, எங்களுக்கு!'' என்கிறார் ரவி குருக்கள்.



உலகுக்கே படியளக்கும் ஸ்ரீஅன்னபூரணி குடி யிருக்கும் கோயில், இப்படியா சிதைந்து கிடப்பது? அன்னதானம் அமர்க்களப்பட்ட ஆலயத்தில், இன்றைக்கு ஒருகால பூஜையும், ஒருவேளை நைவேத்தியமும் மட்டுமே நடந்தால் நாடு எப்படிச் சிறக்கும்? பூமி எவ்விதம் செழிக்கும்?

குலோத்துங்க சோழன், ஸ்ரீஅன்னபூரணியின் பெயரில் ஒரு வேலி நிலத்தை எழுதிவைத்தானாம். எதற்காக..? அன்னதானம் சிறப்புற நடக்க வேண்டும் என்பதற்காகத்தானே! இன்று அந்த நிலம் என்ன ஆனதோ, தெரியவில்லை. ஆனால், அன்னதானம் குறையற நடந்த கோயிலில், பூஜையும் நைவேத்தி யமும் குறையின்றி நடக்க வேண்டாமா?

''எங்கள் கோயிலுக்கு மதில் வேண்டாம்; கோபுரம்கூட இப்போது அவசியமில்லை. செங்கல் கட்டுமானம் பெயர்ந்து பரிதாபமாகக் காட்சி தருகிறது கோயில். நந்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீதட்சிணாமூர்த்தி முதலான மூர்த்தங்கள் பின்னமாகிக் கிடக்கின்றன. சந்நிதிகள் வெறும் அறைகளாக, காரை பெயர்ந்த நிலையில் காட்சி தருகின்றன. இந்தத் திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேகமும் சிறப்புற நடந்துவிட்டால், பிறகு ஸ்ரீஅன்னபூரணியின் அருட்கடாட்சம் அவனியெங்கும் தழைக்கும்'' என்கின்றனர் ஜோதி வார வழிபாட்டு மன்றத்தினர்.

'வீட்டில் அரிசி நிறைஞ்சிருந்தா, வயிறே நிறைஞ்சிருக்கும்; பசியே எடுக்காது’ என்கிற நம்பிக்கை வாசகம் கிராமங்களில் சொல்லப் படுவது உண்டு. நைவேத்தியமின்றி, அழகையும் தொலைத்துவிட்டு நிற்கிற அன்னபூரணிக்குக் கைப்பிடி அரிசியும், கோயில் கட்டுமானத்துக்கு உதவியும் செய்தால், நம்முடைய வயிறு மட்டுமின்றி, மனசும் நிறைந்திருக்கும்! நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் குடிகொண்டிருக்க... ஸ்ரீஅன்னபூரணிக்கு அன்னமிடுவோம்; ஆலயப் பணிகளுக்குக் கரம் கொடுப்போம்!

Comments