தாமிரபரணி கரையினிலே..






தென்றல் விளையாடும் மலை; தமிழ் முனிவர் வாழும் மலை... என்று குற்றாலக் குறவஞ்சி போற்றும் பொதிகையில்தான் எவ்வளவு அற்புதங்கள். இந்த அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம்- அகத்தியர்!

வானவியலிலும் வல்லுனரான நல்லந்துவனார் என்ற கடைச்சங்கப் புலவர்,

பொதியின் முனிவர் புரைவரை கீறி
மிதுனம் அடைய விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயையென இவ்வாற்றால்
புரைகெழு வையம் பொழிமழை தாழ

- என்று பரிபாடலில் பாடுகிறார்!


அகத்தியன், புலத்தியன், அங்கிதன், கௌதமன், வசிஷ்டன், காசிபன், மார்க்கண்டு ஆகியோர் விண்மண்டலத்தில் ஏழு நட்சத்திரங்களாக ஒளிர்கிறார்களாம். இதை சப்தரிஷி மண்டலம் என்பர். இதில், 'அகத்தியனாகிய விண்மீன் மிதுன ராசியில் தோன்றும் காலத்தில், கடல் நீர் ஆவியாக மாறுவதால் கடல் வற்றுகிறது என்றும், இந்த விண்மீன் மறையும்போது மழை பொழிவதால் கடலில் நீர் மட்டம் அதிகரிக்கும்' என்றும் கூறுகிறது இந்தப் பாடல். இதையே உருவகமாக... அகத்தியர் கடலை குடித்ததாகவும் மீண்டும் கடல் நீரை அவர் உமிழ்ந்ததாகவும் புராணங்கள் விவரிக்கின்றன என்பது கங்கோலி எனும் ஆய்வாளரின் கருத்து.

அகத்தியர் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களில் ஒன்று... அகத்தியரை பரமேஸ்வரரின் தளபதியாக சித்திரிக்கிறது. கயிலாயத்தை தலைமை இடமாகக் கொண்டு ஒளிநாட்டை பரமன் ஆட்சி செய்த காலத்தில், தென்னகத்தை நிருதர்கள் (நீக்ரோக்கள்) கைப்பற்றினராம். சேர-சோழ- பாண்டியரும், எருமை நாட்டவரும் தூண்டீர நாட்டவரும் ஒன்றுசேர்ந்தும் நிருதர்களை வீழ்த்த முடியவில்லையாம். நிருதர்கள் பொன், வெள்ளி மற்றும் இரும்பினால் ஆன பெரும் கோட்டைகள் அமைத்து முப்புரத்தவர் எனும் பெயர் கொண்டு, தென்னகத்தை ஆண்டனர். தமிழ் வேந்தர்கள், பரமேஸ்வரரிடம் முறையிட்டனர். அவர், அகத்தியரிடம் பெரும் சேனையை ஒப்படைத்து நிருதர்களை அடக்குமாறு அனுப்பி வைத்தார்.

அதன்படி தென்னகம் புறப்பட்டு வந்த அகத்தியரை வழியிலேயே தடுத்து நிறுத்த, பெரும்படையை அனுப்பினர் நிருதர்கள். அந்தப் படையை வென்று கிரவுஞ்சன் என்பவனையும் வென்று பொதிகை மலையை அடைந்தார் அகத்தியர். பிறகு பாபநாசத்தில் பாசறை அமைத்து விந்தியம் முதல் பொதிகை வரையிலான பெரும் பகுதியைக் கைப்பற்றினார்.

பொதிகைக்கும் தெற்கே சென்று... அங்கிருந்த நிருதர்களை விரட்ட அகத்தியரால் இயலவில்லை. போர்ச் செய்திகள் அனைத்தை யும் தன் தலைவனுக்கும் அனுப்பி வைத்தாராம். இந்த நிலையில், தமது திருமணம் சுபமாக முடிந்ததும் பெரும்படையுடன் புறப்பட்டு வந்த பரமேஸ்வரன், முப்புரத்தை தகர்த்தார்; தன்னிடம் சரணடைந்த நிருதர்களுக்கு அபயம் நல்கியதுடன், அவர்களிடம் இருந்து தென்னகத்தை மீட்டு ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது.



இதற்குப் பிறகு, பொதிகையில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த அகத்தியர், தம் பெயரிலேயே 'அகத்தியம்' எனும் இலக்கணம் படைத்து தன்னுடைய மாணவர்களுக்கும் போதித்தாகக் கூறுவர். பாபநாசத்தின் தலபுராணமும் அகத்தியரை சிலாகிக்கிறது.

சிவாலய முனிவர் என்பவர், 'அடங்கன்முறை' என்ற மூவர் தேவார பதிகங்களை நாள்தோறும் ஓத வேண்டும் என்று விரும்பினார். இதற்காக நெடுந்தவம் மேற்கொண்டும் பலன் இல்லை. எனவே, தில்லைக்குச் சென்று அம்பலவாணரை தரிசித்து அங்கேயும் தவத்தில் ஆழ்ந்தார்.

இவர் முன் தோன்றிய தில்லைக்கூத்தன், ''முனிவரே, நீர் பொதிகை மலை சென்று அகத்தியரை தரிசியும். அவர், அடங்கல் முறை ஆகிய மூவரின் தேவாரப் பதிகங்களை ஓதும் முறையைக் கற்றுத் தருவார்!'' என்று அருளினார்.

அதன்படியே பொதிகைக்கு வந்த சிவாலய முனிவர், அகத்தியரை தரிசிக்க தவத்தில் ஆழ்ந்தார். முனிவரின் தவத்தால் மகிழ்ந்த அகத்தியர் அவருக்குக் காட்சி தந்து அடங்கன்முறை தேவாரத் திரட்டை பொருள்பட எடுத்துரைத்தார். அவர் தொகுத்த 25 பதிகங்களைத் திரட்டி எழுதப்பட்டதே அகத்தியர் தேவாரத் திரட்டு. இன்றும்... இதை அனுதினமும் ஓதி பெரும்பயன் அடைகிறார்கள் சிவபக்தர்கள்.அப்பப்பா... அகத்தியர் குறித்துதான் எவ்வளவு புராணத் தகவல்கள்?!

புராண காலத்தில் மட்டுமின்றி இந்தக் கலியுகத்திலும் பொதிகையில் தமது அருளாட்சியைத் தொடர்கிறார் அகத்தியர். இதற்கு சாட்சியாக பல இடங்கள் பொதிகையில் உண்டு.

கயிலையில் நிகழ்ந்த தமது திருமணக் காட்சியை சிவபெருமான் அகத்தியருக்கு காட்டியருளிய இடம் கல்யாண தீர்த்தம். நெல்லை மாவட்டம்- பாபநாசம் பேருந்து நிலையத்தை அடைந்து, அங்கிருந்து களக்காடு- முண்டந்துறை செக்போஸ்ட் வழியாக ஒரு கி.மீ. தூரம் பயணித்தால், அகத்தியர் அருவியை அடையலாம். அருகிலேயே, அகத்தியருக்கு தமிழ் உபதேசித்த முருகனின் திருக்கோயில். தரிசித்துவிட்டு, படிகள் வழியே மலையின் மீது ஏறினால், சுமார் அரைமணி நேர பயணத்தில் கல்யாண தீர்த்தத்தை அடையலாம்.

இப்படி, கல்யாண தீர்த்தத்துக்கு செல்லும் வழியில்... இடப்புறமாக புதருக்குள் நுழைந்து (தகுந்த வழிகாட்டிகளின் உதவியுடன்) ஆற்றுக்குள் இறங்கிச் சென்றால் ஓர் அற்புத தரிசனம்! இந்த இடத்தில்... சிறு சிறு ஓடைகளாக ஓடுகிறது தாமிரபரணி. இங்கே, ஆற்றின் மையத்தில் வளர்ந்து நிற்கும் புதர்களுக்கு இடையே, பாறைகளுக்கு அடியில் இரண்டு சுயம்பு லிங்கங்கள். ஒன்று உயரமானது; மற்றொன்று குட்டையாகக் காட்சி தருகிறது. பாறையின் கீழ் நான்கைந்து பேர் அமர்ந்து பூஜிக்கும் அளவுக்கு இடவசதி. பௌர்ணமி நிலவொளியில் இந்த லிங்கங்களை பூஜிப்பது சிறப்பு. உள்ளூர்க்காரர்களும் விஷயம் அறிந்தவர்களும் இங்கே வந்து இரட்டை லிங்கங்களை தரிசித்த பிறகே, கல்யாண தீர்த்தத்துக்கு பயணிக்கின்றனர்.

கல்யாண தீர்த்தம் அருகே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீகோடிலிங்கேஸ்வரர்- ஸ்ரீலோகநாயகியையும் அகத்தியரையும் பௌர்ணமியில் தரிசிப்பது விசேஷம். அதுவும் திருவாதிரை நட்சத்திரத்துடன் இணைந்து வரும் பௌர்ணமி என்றால் கூடுதல் விசேஷம். அன்று... இறைவனை தரிசிக்க, தேவர்களும் முனிவர்களும் இங்கே கூடுவதாக ஐதீகம். தவிர, புண்ணியம் மிகுந்த இந்த நாளில் இந்த இடத்தில் பன்னீர் மழை பொழியும் என்பதும் இங்கே உள்ளவர்களின் நம்பிக்கை!

ஸ்ரீகோடிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்குப் பின்னால் அழகிய பள்ளத்தாக்கு. இந்தப் புனித இடத்தில் தியானம் செய்வதற்காக ஆன்மிக அன்பர்கள் பலரும் வந்து செல்கின்றனர். இந்தப் பள்ளத்தாக்கில் உள்ள பாறைச் சிற்பங்கள் மிக அற்புதம். குழலூதும் கோபால கிருஷ்ணன்,

அருகில் சிவலிங்கம், ஸ்ரீராமர், சீதாதேவி, லட்சுமணர், அனுமன் ஆகியோரின் சிற்பங்கள் உயிரோட்டத்துடன் திகழ்கின்றன. சிற்பங்களுக்கு ஊடே தென்படும் வடமொழி வாசகங்கள்... இவை, வடக்கே இருந்து வந்த யாத்திரீகர்களால் செதுக்கப்பட்டவையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன!

பொதிகையின் மற்றொரு வரப்பிரசாதம் அகத்தியர் அருவி. அகம் மகிழ இதில் நீராடி, அகத்தியரை மனதால் மீண்டும் வழிபட்டு, பொதிகை மலையிலிருந்து விடைபெறுவோம்; இன்னும்... தாமிரபரணிக் கரை நெடுக தரிசிக்க வேண்டிய தலங்களும் கோயில்களும் நமக்காகக் காத்திருக்கின்றன!

Comments