ஸ்ரீவஜ்ரகண்டீஸ்வரர் எனும் திருநாமத்துடன்








பிறரை அச்சுறுத்துவதிலும் காயப்படுத்துவதிலும் இந்த அசுரர்களுக்கு அப்படியென்ன சந்தோஷமோ? அப்பாவி மக்களிடமும், ஆண்டவனை வணங்குவதே உத்தமம்; ஹோமங்களும் யாகங்களும் மேற்கொள்வதுமே அவசியம் என்றிருக்கிற தேவர்களிடமும், தங்களது வீரத்தையும் செருக்கையும் காட்டுவதையே வேலையாகக் கொண்டு திரிகின்றனர் அரக்கர்கள்!

வஜ்ரன் எனும் அரக்கனும் அப்படித்தான்! இவனுடைய அரக்கத்தனத்தால், வானுலகில் இருந்த தேவர்கள் ரொம்பவே அவதிப்பட்டனர். அவர்களால், மனம் லயித்து யாகங்களையும் ஹோமங்களையும் செய்யமுடியவில்லை. வனங்களில், கடும் தவம் இருந்த முனிவர்களும் மகரிஷிகளும் நிம்மதியாக, தவம் செய்ய முடியவில்லை; வனத்தில் நல்லதொரு இடமாகவும் வஜ்ராசுரன் வந்து தாக்க முடியாத இடமாகவும் தேடித்தேடியே நொந்து போனார்கள்.

பாவம் மனிதர்கள். வானுலகு தேவர்களையும் வனங்களில் தவம் புரிந்த முனிவர்களையுமே ஆட்டிப்படைத்து, அல்லலுறச் செய்த அசுரன், பரிதாபத்துக்கு உரிய மக்களை மட்டும் சும்மா விட்டுவிடுவானா, என்ன?



வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு, அக்கடா என்று வயலோரத்தில் அமர்ந்திருப் பார்கள், விவசாயிகள். திடுமென்று அங்கே வரும் அசுரன், தன் காலால் வாய்க்காலை எட்டி உதைத்து, வயலில் உள்ள தண்ணீரை வீணடிப்பான். அறுவடைக்குச் சில காலமே இருக்கிற நெல்மணிகளையெல்லாம் மிதித்தபடி நடந்து, உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்துவான்!

கன்னிப் பெண்களை நிம்மதியாக நடமாட விடுவதே இல்லை வஜ்ராசுரன். அதே போல், கர்ப்பிணிகளை இரவு நேரங்களில் மிரளச் செய்து, திணறடித்தான். அவர்கள், பதறிக் கதறியதைப் பார்த்து ஆனந்தித்தான்.

செல்வந்தர்களிடம் உள்ள நகைகளையும் வைரங்களையும் அப்படியே வாரியெடுத்து, வாயில் போட்டுக்கொண்டு விழுங்கிவிட்டு, கைகொட்டிச் சிரித்தான் அவன். இதனால், செல்வந்தர்கள், ஏழையானார்கள். ஏழைகள், பரம ஏழைகளாக வாடினார்கள். பரம ஏழைகள், வாழ வழியின்றி இறந்தே போனார்கள்.

அள்ளியெடுத்துக் கொஞ்சுவதற்கு ஆளில்லை என்றால் குழந்தையும், அரவணைத்துப் பாதுகாக்க ஆட்கள் இல்லையென்றால் பயிர்களும் வாடிப்போகும் என்பார்கள், கிராமங்களில்! அப்படித்தான், பூமியின் பல பகுதிகள், மொத்த சந்தோஷங்களையும் தொலைத்து நின்றன. ஆற்றில் தண்ணீரின்றி, மணல் காடாகத் திகழ்ந்தது. வயல்கள், பாளம் பாளமாக மாறிப் போயின. மரங்களும் செடி-கொடிகளும் காய்ந்து, நிழல் தருவதையும் மறந்தன; காய்-கனிகளைக் கொடுக்க முடியாமலும் திணறின.

மக்களது நிலை கண்டு, பெரிதும் வருந்தினார்கள் தேவர்களும் முனிவர்களும்! ஆனால், அசுர பலத்துக்கு முன்னால் என்ன செய்வது என்று தெரியாமல், கைபிசைந்து தவித்தனர். இறுதியில், திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பதற்கு ஏற்ப, சிவபெருமானைச் சரணடைந்தனர். மக்கள் படும் வேதனையையும் தாங்கள் படுகின்ற துயரங்களையும் சிவனாரிடம் எடுத்துரைத்தனர். அவர்களிடம் 'வஜ்ராசுரனின் காலம் முடியும் தருணம் வந்துவிட்டது’ என்றார் சிவபெருமான்.

இத்தனைக்கும் சிவபெருமானின் தீவிர பக்தன்தான், வஜ்ராசுரன்?! அதனால் என்ன... தவறிழைப்பதும் தீங்கு செய்வதும் தன்னுடைய அடியாராகவே இருந்தாலும், அவரை அழிக்கத் தயங்கமாட்டாரே சிவனார்?!



உலக உயிர்களுக்குத் தீங்கிழைக்கிற அரக்கன், சிவனடியாராக இருப்பது தகாது, அல்லவா? எனவே அசுரனை அழிப்பதற்காக, சிவனடியாராகவே தோன்றினார், சிவபெருமான். அவனுடன் போரிட்டார்; இறுதியில் அந்த வஜ்ராசுரன், செத்தொழிந்தான்.

முன்னதாக, இறக்கும் தருணத்தில், 'என்னை மன்னியுங்கள் ஸ்வாமி! நீங்கள் கொடுத்த வரங்களைக் கொண்டு, உலகை உய்விப்பதற்குப் பதிலாக, பல உயிர்களையும் கொடுமைப்படுத்தி, வரத்தையே சாபமாக்கிக் கொண்டுவிட்டேன். என்னைப் போல், இந்த உலகில் அரக்க குணத்துடன் அடுத்தவரை ஆட்டிப்படைப்பவர்கள், மனம் திருந்தி இங்கே வந்தால், அவர்களை மன்னித்து, ஆசீர்வதித்து அருளுங்கள்!’ என வேண்டினான் வஜ்ராசுரன்.

''அத்துடன், என்னுடைய பெயரையும் தங்களது திருநாமத்தில் சேர்த்துக்கொண்டு, இங்கே இந்தத் தலத்தில் அனைவருக்கும் காட்சி தந்து, அருள் பாலிக்கவேண்டும்’ என முறையிட்டான். 'அப்படியே ஆகட்டும்’ என்றார் சிவனார். அதன்படி, ஸ்ரீவஜ்ரகண்டீஸ்வரர் எனும் திருநாமத்துடன், இன்றைக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் சிவபெருமான்!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தலத்தில் இருந்து கும்பகோணம் செல்வதற்கு சாலை வசதி உள்ளது. திருவையாறில் இருந்து சுமார் 7 கி.மீ. பயணித்தால், சோமேஸ்வர புரம் எனும் கிராமம் வரும். அங்கிருந்து கிளை பிரியும் சாலையில், சுமார் 3 கி.மீ. சென்றால், வீரமாங்குடி தலத்தையும் ஸ்ரீவஜ்ரகண்டீஸ்வரரையும் தரிசிக்கலாம். வீரனை அழித்து, குடிமக்களைக் காத்ததால் வீரமாங்குடி எனும் பெயர் அமைந்ததாம்.

மிகச் சிறிய கிராமம்; அழகிய, அற்புதமான ஆலயம்! காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ளது, இந்தக் கோயில். இங்கே, அம்பாளின் திருநாமம் - ஸ்ரீமங்களாம்பிகை.

அசுரனை அழித்து, அங்கே இறைவன் கோயில் கொண்டதும், காவிரியிலும் கொள்ளிடத்திலும் கரைபுரண்டு ஓடியதாம் தண்ணீர். காடு-கரையெல்லாம் நிறைந்து, திரும்பிய பக்கமெல்லாம் நெல்மணிகள் செழித்து உயர்ந்து வளர்ந்திருந்ததாம்! விளைச்சல் அமோகமாக இருக்கவே, விவசாயிகளும் தனவான்களும் பொன்னும் பொருளும், ஆடைகளும் ஆபரணங்களுமாக வாங்கிச் சேர்த்தார்களாம்! அத்தகைய கீர்த்தி மிக்க கோயிலில், கடந்த பல வருடங்களாகவே கும்பாபிஷேகமும் நடக்காமல், விழாக்களும் அரங்கேறாமல் இருப்பதாகச் சொல்கிறார் வீரமாங்குடியைச் சேர்ந்த கோவிந்தராஜ்.

''சொந்த ஊரில் உள்ள கோயில் சிதிலம் அடைஞ்சு, புதர்கள் மண்டி, பரிதாபமா காட்சி தருது. இந்தக் கோயிலுக்கு திருப் பணிகள் நடக்கணும்; கும்பாபிஷேகத்தை எங்க ஊர்மக்கள் பார்க்கணும்'' என வருத்தம் தோய்ந்த குரலில் தெரிவிக்கிறார், கோவிந்தராஜ்.

இந்த ஆலயத்தில் சங்கு-சக்ரதாரியாக, வலக் கையில் அபய முத்திரை திகழ இடக்கையை தொடையில் வைத்தபடி ஸ்ரீவரதராஜ பெருமாளும் காட்சி தருகிறார்! இவருக்கு எதிரில் வழக்கம்போல், ஸ்ரீகருடாழ்வார்; இடது பக்கமாக சற்றே சாய்ந்த நிலையில் இருக்கிறார். 'பரம்பொருளுக்கே வாகனமாக இருக்கிறோமே... என்கிற ஆனந்த நிலை’ என்கிறார் கோயில் அர்ச்சகர்.



ஸ்ரீவரதராஜரை வணங்கினால், தொலைந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் பெறலாம் என்பது ஐதீகம்!

இங்கேயுள்ள, நவக்கிரக சந்நிதி விசேஷம்; எண் கோண வடிவ பீடத்தில், நவக்கிரகங்கள் அனைத்தும் தம்பதி சமேதராகக் காட்சி தருகின்றனர். நடுவில், ஏழு குதிரை பூட்டிய குதிரையுடன் சூரிய பகவான் காட்சி தருகிறார். கிரக தோஷம் நிவர்த்தியாகும் தலம் எனப் போற்றுகிறது ஸ்தல புராணம்.

ஒருகாலத்தில், கிரக தோஷ தலமாக அனைவரா லும் வணங்கி வழிபடப்பட்ட இந்த ஆலயம், தன் மொத்த அழகையும் தொலைத்துவிட்டு நிற்கிறது. ஸ்ரீவஜ்ரகண்டீஸ்வரர் மற்றும் ஸ்ரீமங்களாம்பிகைக்கு வஸ்திரம் சார்த்தி, நைவேத்தியம் செய்து வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள்! மாங்கல்ய பாக்கியமும் பலமும் தருகிற அம்பிகை குடியிருக்கும் கோயிலுக்கு, மங்கலம் கிடைப்பது எப்போது?

கிரக தோஷம் உள்ளவர்கள், அந்தந்த கிரகங்களுக்கு உரிய நாளில், இந்தத் தலத்துக்கு வந்து, தங்களால் முடிந்த திருப்பணியைச் செய்யுங்கள்; கிரக தோஷம் விலகும்; அத்துடன், யாகங்களும் ஹோமங்களும் செய்து, கும்பாபிஷேகமும் நடைபெறும்!

நீங்கள் தருகிற உதவி சிறியதோ, பெரியதோ... எதுவானால் என்ன? அது பொலிவுற்று, கும்பாபிஷேக தினத்தன்று அபிஷேகிக்கப்படும் கும்ப நீரிலும் யாக பூஜைப் புகையிலுமாக இரண்டறக் கலந்து, உங்கள் வம்சத்தையே சீரும் சிறப்புமாக வாழவைக்கும்!

Comments

  1. 'பரம்பொருளுக்கே வாகனமாக இருக்கிறோமே... என்கிற ஆனந்த நிலை’ //

    1 கோவிலை கண் முன் நிறுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment