மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்... ctd

பிரார்த்தனை



பிரார்த்தனையில் ஈடுபடும் இதயம் இல்லாதவன் தன்னையும் துன்பத் துக்கு உள்ளாக்கி, உலகையும் துன்புறும்படி செய்வான். நமது தினசரி நடவடிக்கைகளில் ஒழுங்கும், அமைதியும் நிலவும்படி செய்வதற்கு உரிய ஒரே வழி பிரார்த்தனைதான். ஒவ்வொரு நாளும் நீங்கள் பிரார்த்தனையுடன் உங்கள் பொழுதைத் தொடங்குங்கள்' என்றார் மகாத்மா காந்தி. பிரார்த்தனையில் இருந்து அண்ணலின் வாழ்க்கையைப் பிரித்துப் பார்க்க முடியாது.

ஆன்மிக வாழ்க்கை முறைக்குப் பிரார்த்தனை அவசியமானது. ஒழுங்கும், கட்டுப்பாடும்தான் விலங்குகளிடம் இருந்து நம்மை வேறுபடுத்துகின்றன. ஆண்டவன் படைப்பில் மனிதர் கள் மட்டுமே நேர்க்கோடாய் நெஞ்சு நிமிர்த்தி, தலையை உயர்த்தி நடக்க முடிகிறது. ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாத மனிதர்களின் தலைகள் அவமானத்தில் தாழ்ந்து விடுகின்றன. பிரார்த்தனையில் ஈடுபடுபவருக்கு அகத் தூய்மை வரமாக வந்து சேரும்.

குரு ஒருவர், ஆலயத்துக்கு வரும் ஆட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதைக் கண்டு கவலை கொண்டார். காரணத்தைச் சீடர்கள் கண்டறிந்து வந்தனர். அருகில் உள்ள ஒரு தீவில் மூன்று சித்தர்கள் தங்கியிருப்பதாகவும், அவர்களைக் காணவே மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்வத் துடன் செல்வதாகவும் சீடர்கள் செய்தி வாசித்தனர்.

'அந்த சித்தர்களிடம் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது?' என்று அறிய விரும்பினார் குரு. சீடர்களுடன் புறப்பட்டவர், சித்தர்கள் இருக்குமிடம் சேர்ந் தார். அவரது பார்வையில் சித்தர்கள் மூவரும் பாமரராய்ப் பட்டனர். 'உங்களுக்கு முறை யாகப் பிரார்த்திக்க தெரியுமா?' என்று கோபத்துடன் கேட்டார் குரு. அவர்கள், 'முறையாக எதை யும் நாங்கள் படித்துப் பிரார்த் திப்பது இல்லை. மனதில் தோன்றியபடி பிரார்த்தனை செய்வோம்' என்றனர்.



'இந்த மூடர்களையா மக்கள் ஆராதிக்கின்றனர்?' என்று வியந்த குரு, 'இனி, நான் சொல்கிறபடி பிரார்த்தனை செய்யுங்கள்' என்று சில வார்த்தைகளை வாய் மலர்ந்தார். மக்கள் மீது ஒரு பெருமிதப் பார்வையை வீசி விட்டு, படகில் ஏறிப் பயணித்தார். அப்போது, தரையின் மேல் வருவது போல் தண்ணீரின் மேல் ஓடி வந்தபடி, 'நீங்கள் சொன்னது மறந்து விட்டது. அந்த வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள்' என்று மூன்று சித்தர்களும் உரத்த குரலில் கூச்சலிட்டதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த குரு திகைத்துப் போனார்.

அப்போதுதான் சித்தர்களின் பெருமை குருவுக்குப் புரிந்தது; பிரார்த்தனையின் வலிமை வெறும் வார்த்தைகளில் இல்லை என்று விளங்கியது. 'உங்களுக்குச் சொல்ல என்னிடம் எதுவும் இல்லை. உங்கள் விருப்பப் படி நீங்கள் பிரார்த்திக்கலாம்' என்று சொல்லி, படகை வேகமாக விடச் சொன்னார் குரு!

'இறைமையுடன் ஒன்றுவதற்கு மன நிலை தான் முக்கியம்; வார்த்தைகள் இல்லை' என்று நமக்கு உணர்த்துகிறது இந்த ஜென் கதை.

மணிக்கணக்கில் வார்த்தைகளை விரயமாக் குவதை விட, மனப்பூர்வமாக ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்வதே மேலானது. தெளிந்த புத்தியால் தூய்மை பெற்ற மனம் நடத்தும் பிரார்த்தனையே நன்மை தரும். தெளிந்த புத்தியால் பக்குவப்படாத மனம் செய்யும் பிரார்த்தனை பலனைத் தராது.

விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்க நிலை என்று மூன்று நிலைகளில் மாறி மாறி நம் உயிர்ப் பயணம் நடக்கிறது. விழித்திருக்கும்போது கனவு பொய். கனவு காணும்போது விழிப்பு பொய். ஆழ்ந்த தூக்கத்தில் கனவும் பொய்; விழிப்பும் பொய். அதனால்தான் இந்த வாழ்வே பொய் என்றார் ஆதிசங்கரர். இந்தப் பொய்யான வாழ்க்கையில் மெய்யான அனுபூதியை அடைய நாம் அன்றாடம் பிரார்த்தனையில் ஈடுபடுவது நல்லது.பிரார்த்தனை செய்யும்போது அது நிறை வேறும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.

பேரரசன் ஒருவன், கானகம் சென்றபோது முனிவர் ஒருவரைக் கண்டான். அவரின் முகத்திலிருந்து வீசிய ஒளி, அரசனை அவரிடம் இழுத்துச் சென்றது. சிறிது நேர உரையாடலில், முனிவரின் தூய்மையும் அறிவும் அரசனின் உள்ளத்தைப் பாதித்தன. ஏதாவதொரு பரிசை அவருக்குத் தர வேண்டும் என ஆசைப்பட்டான்.

முனிவரோ மறுத்து விட்டார். ''எனது பசியைப் போக்க மரம், பழம் தருகிறது. தாகம் தீர்க்க மலையருவி, நீர் தருகிறது. மானம் மறைக்க மரப்பட்டை, ஆடை ஆகி றது. குகையே வீடாகி விட்டது. ஆகவே, எவரிடத்தும் எதையும் வேண்டிப் பெறும் அவசியம் எனக்கு இல்லை!'' என்றார் முனிவர். அரசன் விடவில்லை. ''எனது நன்மையைக் கருதியேனும் நான் தரும் பரிசை நீங்கள் ஏற்க வேண்டும். அன்பு கூர்ந்து எனது அரண்மனைக்கு எழுந்தருள வேண்டும்!'' என்று வேண்டினான். அரசனின் மனதைக் காயப்படுத்த விரும்பாத முனிவர் அவனது வேண்டுகோளுக்கு இசைந்தார்.

இருவரும் அரண்மனையை அடைந்தனர். முனிவரை வரவேற்பறையில் அமரச் செய்த அரசன், வழிபாட்டு நேரம் வந்ததை உணர்ந்து பூஜை அறையில் நுழைந்தான். ''இறைவா, எனது பேரரசின் எல்லைகளை மேலும் விரிவாக்கு. அளப்பரிய செல்வத்தை அள்ளிக் கொடு. உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க உடல் வலிமையைப் பெருக்கு. நீண்ட ஆயுளை எனக்கு வழங்கு'' என்று இறைவன் முன் இரு கரம் நீட்டி அரசன் வேண்டுவதைப் பார்த்த முனிவர், இருக்கையில் இருந்து எழுந்து வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

அரசன் ஓடி வந்து வழி மறித்தான். ''பரிசைப் பெறாமல் ஏன் போகிறீர்கள்?'' என்றான். இதழ் திறந்து முறுவலித்த முனிவர், ''நான், பிச்சைக்காரர் களிடம் எதையும் பிச்சையாகப் பெறுவதில்லை!'' என்றார்.

'அதைக் கொடு, இதைக் கொடு' என்று ஆண்டவ னிடம் வேண்டுவது பிரார்த்தனை இல்லை; அது பிச்சை! தன்னலத்தில் வழிபடுவது பிச்சையெடுப்பது; மண் நலத்துக்காக மனமுருகி வேண்டுவதே பிரார்த் தனை. 'இறைவனுக்கு உன் அன்பைக் கொடு. பதிலாக எதையும் யாசிக்காதே' என்றார் சுவாமி விவேகானந்தர்.

சுயநலம்தான் பாவத்தின் முதற் படிக்கட்டு. எல்லா உயிர்களிலும் இறைவன் இருப்பதாக இந்து மதம் சொல்கிறது. உலகத்து நன்மையில் நமது சொந்த நன்மையும் சேர்ந்திருக்கிறது. உலகம் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம். அதனால்தான் 'வாழ்க வையகம்' என்று பிரார்த்திக்க வேண்டும். 'உலகத்தார் அனை வரும் சுகம் பெறட்டும்' என்பதே, 'லோக சமஸ்தா சுகினோ பவந்து' என்ற வேதமொழியின் பொருள். இதுவே உண்மையான பிரார்த்தனை.

உலகம் முழுவதையும் பராசக்தியின் வடிவமாகப் பார்த்துப் பழக வேண்டும். விநாயகர் ஒரு நாள், பூனை ஒன்றுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது நகம் பட்டு, பூனையின் முகத்தில் கீறல் விழுந்தது. விளையாடி முடித்தவர் அன்னை பார்வதியிடம் வந்தபோது, தேவியின் முகத்தில் கீறலைக் கண்டு வருந்தினார். 'யார் இந்தத் துன்பத்தை விளைவித்தது?' என்று கேட்டார். 'நீ பூனையைக் கீறியதே என் முகத்தில் புண்ணாக விளைந்தது' என்றாள் உலகமாதா. உயிர்கள் அனைத்திலும் ஆண்டவன் உறைந்திருப்பதை உணர்த்துகிறது இந்தக் கதை. 'நீ அன்பு வைத்திருக்கும் எவரிடத்தும் எதையும் எதிர்பார்க்காதே. எதையும் அவர்களிடம் கேட்காதே. அப்படி நீ கேட்டால், சிலர் குறைவாக வும் சிலர் அதிகமாகவும் தருவார்கள். இதனால், குறைவாகத் தருபவர் மீது குறைவாகவும், அதிகமாகத் தருபவர் மீது அதிகமாகவும் நீ அன்பு வைக்கக் கூடும். நீ நேசிக்கும் யாரிடத்தும் எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால்தான் அனைவரையும் உன்னால் சமமாக நேசிக்க முடியும்' என்று அருளுரை வழங்கினார் அன்னை சாரதாதேவி.

எந்தத் தொழிலைச் செய்தாலும் அதன் மூலம் மனிதன் உலகுக்குக் கொடுப்பது அதிகமாகவும் உலகில்இருந்து, தான் பெறுவது குறைவாகவும் இருக்க வேண்டும் என்பதே உயர்ந்தோர் வகுத்த வாழ்க்கை விதி.

ஜனக மகாராஜன், ஓர் ஆன்மிக ஞானி. இவ ருக்கு, ஞானிகளின் சபையைக் கூட்டி விவாதங்கள் மூலம் வாழ்க்கைப் பேருண்மைகளை அறிவதில் எல்லையற்ற ஆசை. அன்றும் ஒரு விவாதம் அரங்கேறியது. யாக்ஞவல்கி என்ற வேதங்களின் வித்தாக விளங்கிய மகரிஷிக்கும், கார்கி என்ற அறிவிற் சிறந்த பெண்ணுக்கும் அறிவுப் போர் ஆரம்பமானது.

''மகரிஷியே! ஒளி எங்கிருந்து வருகிறது?'' என்று கேட்டாள் கார்கி. ''சூரியனிடமிருந்து!'' என் றார் மகரிஷி. விவாதம் தொடர்ந்தது:

''சூரியன் இல்லாதபோது?''
''சந்திரனிடமிருந்து ஒளி கிடைக்கும்!''
''சூரியனும் சந்திரனும் இல்லாத நேரங்களில்?''
''நட்சத்திரங்களிலிருந்து ஒளி கிடைக்கும்!''
''நட்சத்திரங்களும் இல்லாத நேரங்களில்?''
''நெருப்பிலிருந்து ஒளி வரும்!''
''நெருப்பும் இல்லாதபோது?''
''பேசும் பேச்சிலிருந்து வரும்.''
''பேச்சற்றுப் போகும்போது எங்கிருந்து ஒளி வரும்?' எனக் கேட்டாள் கார்கி.

''பெண்ணே! எந்த ஒளியும் இல்லாதபோது அவரவர் ஆன்ம ஒளி வழிகாட்டும்'' என்றார் யாக்ஞவல்கி.

ஒவ்வொருவரின் ஆன்ம ஒளியைப் பெருக்கும் அற்புத சாதனங்கள்தான் தியானமும், பிரார்த்தனை யும்! சுயநலமாக நாம் சுருங்கி விடாமல், உலகம் தழுவிய அன்பைப் பொழிவதே பிரார்த்தனையின் மூல மந்திரம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்வோம்.

பிரார்த்தனை, பிரபஞ்ச அன்பாகப் பெருக வேண்டும். தீயிடம் ஒப்படைக்கப்பட்ட விறகுக் கட்டை, தானே தீயாவது போல்... பிரார்த்தனை மூலம் தெய்வத்தைச் சேர்பவன், தானே தெய்வம் ஆகிறான்.

Comments