'இது துவக்கற கல் இல்லே... சிவலிங்கம்!'

சென்னை மீனம்பாக்கம் பகுதிக்கு வரும்போதெல்லாம், பழவந்தாங் கலில்தான் முகாமிடுவார் காஞ்சி மகாபெரியவா. அப்படித் தங்குகிறபோது, அந்த ஊரின் மையத்தில் உள்ள குளத்தில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருநாள்... அதிகாலைப் பொழுதில், குளத்தில் ஸ்நானம் செய்வதற்கு மகாபெரியவா வந்தபோது, அங்கே சிலர் துணி துவைத்துக் கொண் டிருந்தனர். அவர்களில் ஒருவர், அங்கேயிருந்த கல்லில் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட காஞ்சி மகான் நெக்குருகியவராய், 'இது துவைக்கற கல் இல்லே; லிங்கம்... சிவ லிங்கம். இதுல துவைக்காதீங்கோ’ என்று சொன்னார்.

அவ்வளவுதான்... குளத்தைச் சுற்றியிருந்தவர்கள் தபதபவெனக் கூடினர்; சிவலிங்கத் திருமேனியைச் சுற்றி நின்றனர். இதையறிந்த ஊர் மக்கள் பலரும் விழுந்தடித்துக்கொண்டு, குளக்கரைக்கு வந்தனர். அடுத்து காஞ்சி மகான் என்ன சொல்லப்போகிறார் என்று அவரையே மிகுந்த பவ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மெள்ளக் கண்மூடியபடி இருந்த மகாபெரியவா, விறுவிறுவெனக் குளத்தில் இறங்கிக் குளித்தார். அங்கேயே ஜபத்தில் ஈடுபட்டார். பிறகு கரைக்கு வந்தவர், சிவலிங்கத்துக்கு அருகில் வந்தார். ''இது அர்த்த நாரீஸ்வர சொரூபம். சின்னதா கோயில் கட்டி, அபிஷேகம் பண்ணி, புஷ்பத்தால அர்ச்சனை பண்ணுங்கோ! இந்த ஊர் இன்னும் செழிக்கப் போறது'' என்று கைதூக்கி ஆசீர்வதித்துச் சென்றார்.



பெரியவாளின் திருவுளப்படி, குளத்துக்கு அருகில் சின்னதாகக் குடிசை அமைத்து, சிவலிங்க பூஜை செய்யப்பட்டது. பிறகு கோயில் வளர வளர... ஊரும் வளர்ந்தது. பழவந்தாங்கலின் ஒரு பகுதி, இன்னொரு ஊராயிற்று. அந்த ஊர் நங்கைநல்லூர் எனப்பட்டு, தற்போது நங்கநல்லூர் என அழைக்கப்படுகிறது.

சென்னை, பழவந்தாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். காஞ்சி மகாபெரியவாள் சுட்டிக்காட்டிய இடத்தில் அற்புதமாக அமைந் திருக்கிறது ஆலயம். சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, பெரியவா அருளியதால் உருவான இந்தக் கோயில், இன்றைக்கு ஸ்ரீநடராஜர் சந்நிதி, பட்டீஸ்வரத்தைப் போலவே அமைந்துள்ள ஸ்ரீதுர்கை, அர்த்த நாரீஸ்வர மூர்த்தத்துக்கு இணையாக, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரி திருவிக்கிரகம் எனச் சிறப்புற அமைந்துள்ளது.

பிரதோஷம், சிவராத்திரியில் நவக்கிரக ஹோமம், புஷ்ப ஊஞ்சல், சுமங்கலிகளுக்கு மஞ்சள் சரடு, வசந்த நவராத்திரி விழா, சிறப்பு ஹோமங்கள், விஜயதசமியில் சண்டி ஹோமம் என ஆலயத்தில் கொண்டாட்டங்களுக்கும் வைபவங்களுக்கும் குறைவில்லை! இன்னொரு சிறப்பு... மகாபெரியவாளின் திருநட்சத்திரமான அனுஷ நட்சத்திர நாளில் (மாதந்தோறும்) சிறப்பு பஜனைகள், ஜயந்தியின் போது பிரமாண்ட பூஜை மற்றும் பஜனைகள் ஆகியன விமரிசையாக நடைபெறுகின்றன. நங்கநல்லூருக்கு வந்து ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வணங்குங்கள்; குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்!

Comments