எட்டயபுரம் ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர்






கடவுளரில் மும்மூர்த்திகள்- சிவன், விஷ்ணு, பிரம்மா! சங்கீதத்தில் மும்மூர்த்திகள்- தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரிகள்! சங்கீத உலகில் பல ஜாம்பவான்கள் கோலோச்சி இருந்தாலும், இந்த மும்மூர்த்திகளுக்கு இருந்த பக்தியும், சிரத்தையும் அளவிட முடியாதது. தெய்வ அனுக்ரஹத்தைப் பெற்று, இசை மேதைகளாக சிறந்து விளங்கியவர்கள்.

மூவரும் சம காலத்தவர்கள் (திருவையாற்றில் ஸ்ரீதியாக ராஜரையும், தஞ்சாவூரில் ஸ்யாமா சாஸ்திரிகளையும் சந்தித்து இருக்கிறார் ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர்.) சில நூற்றாண்டுகளுக்கு முன் சங்கீத சாம்ராஜ்யத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள். இறைவனின் பூரண ஆசியுடன் ஏராளமான கீர்த்தனைகளை இயற்றி, அடுத்தடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றவர்கள். இவர்களது கீர்த்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு, இசை விழாக்களை நடத்துவதோ சிறப்புறச் செய்வதோ இயலாத ஒன்று!

இவர்களில் முத்துஸ்வாமி தீட்சிதர் மன்மத வருடம் (கி.பி.1775), பங்குனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று ராமஸ்வாமி தீட்சிதர்- சுப்புலட்சுமி தம்பதிக்கு மகனாக திருவாரூரில் பிறந்தவர். திருமணமாகி வெகு நாள் வரை குழந்தை இல்லாமல் தவித்த இவரின் பெற்றோர், வைத்தீஸ்வரன்கோவில் சென்று அங்கு உறையும் ஸ்ரீவைத்தியநாத ஸ்வாமியையும், முத்துக்குமார ஸ்வாமியையும் வேண்டி... ஒரு மண்டலம் தவம் இருந்து இவரைப் பெற்றெடுத்தனராம்! இவர் பிறந்தது, கார்த்திகை தினம் என்பதாலும், முத்துக்குமார ஸ்வாமியின் அருளால் பிறந்தவர் என்பதாலும் 'முத்துக்குமார ஸ்வாமி' எனப் பெயரிட்டனர் (பின்னாளில் இதுவே 'முத்துஸ்வாமி' என ஆனது).

தன் தந்தையிடம் முறைப்படி சங்கீதம் பயின்றார் முத்துஸ்வாமி. வேங்கடமகியின் சங்கீத சாஸ்திரங்களையும், கிருதிகளின் சாராம்சத்தையும் தெளிவுற எடுத்துரைத்தார் தந்தை. தவிர, வீணை வாசிக்கவும் கற்றுக் கொடுத்தார். எனவே, சங்கீதத்தில் முத்துஸ்வாமி தீட்சிதர் தனித்துவம் பெற்று விளங்கியதில் வியப்பேதும் இல்லை.



அதுமட்டுமா? வேதம், வேதாந்தம், யோகம், மந்த்ர சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம், ஆகம சாஸ்திரம் முதலான பல துறைகளிலும் புலமையுடன் விளங்கினார் முத்துஸ்வாமி தீட்சிதர். இவரது ஆழ்ந்த ஞானம், இவர் இயற்றிய கீர்த்தனைகளில் பிரதிபலித்தது.

புனித யாத்திரை புறப்பட்டு, பல ஆலயங்களை தரிசித்து, அங்கு குடி கொண்டிருக்கும் மூலவர் மற்றும் உபதேவதைகளைத் துதித்து, கீர்த்தனங்கள் பாடினார். இவற்றில், தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளைப் பயன்படுத்தினார். இந்திய தேசத்தில் இவரது காலடி படாத இடங்களே இல்லை எனும் அளவுக்கு யாத்திரைகள் மேற்கொண்டார். இந்தியாவின் வடகோடியான காட்மாண்டு, பத்ரிநாத் உள்ளிட்ட தலங்களுக்கும் விஜயம் செய்துள்ளார்.

தேவி உபாசனா மார்க்கத்தைக் கொண்டு நவக்கிரகக் கீர்த்தனைகள், பஞ்சலிங்க ஸ்தல கிருதிகள், கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம் உள்ளிட்ட பல அரிய கீர்த்தனைகளைத் தந்தருளினார் ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர்.

இவரது வாழ்வில் நடந்த அற்புதங்கள் எண்ணற்றவை. இவற்றை இந்த ஒரு இதழுக்குள் சொல்வது என்பது கடினம். எனவே, சில முக்கிய அற்புதங்களை மட்டும் பார்ப்போம்.



சென்னை மணலியில் வசித்து வந்த முத்துகிருஷ்ண முதலியார் எனும் ஜமீன், திருவாரூர் தியாகராஜ பெருமானைத் தரிசிக்கச் சென்றார். இவர், பெரும் செல்வந்தர். அப்போது அங்கே... ராமஸ்வாமி தீட்சிதர் பாடிய பஜனைப் பாடல்கள், அவரைப் பெரிதும் ஈர்த்தன. எனவே, ராமஸ்வாமி தீட்சிதரின் குடும்பத்தைத் தன்னுடன் மணலிக்கு அழைத்துச் சென்றார்.

ஜமீனில் கிடைக்கும் சில சௌகரியங்களைக் கொண்டு, இசையின் பல பரிமாணங்களைக் கற்றறிந்தார் முத்து ஸ்வாமி தீட்சிதர். ஒருநாள், சிதம்பரநாதயோகி எனும் பெரும் தவசீலர், ஜமீனுக்கு வருகை புரிந்தார். காசிக்குச் செல்லும் தமக்கு உதவியாக, முத்துஸ்வாமியைத் தன்னுடன் அனுப்பி வைக்கும்படி ராமஸ்வாமி தீட்சிதரிடம் வேண்டினார் சிதம்பரநாத யோகி. நீண்ட தயக்கத்துக்குப் பிறகு மகனைக் காசிக்கு அனுப்பி வைத்தார்.

இந்த காசிப்பயணம்தான், முத்துஸ்வாமி தீட்சிதரின் வாழ்வில், மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கங்கையில் தினமும் நீராடுவது, காசி விஸ்வநாதர்- விசாலாட்சி- அன்னபூரணியைத் தரிசிப்பது, குருநாதர் சிதம்பரநாதயோகியின் பூஜைக்கு உதவுவது என்று மூழ்கினார் முத்துஸ்வாமி. 'அன்னபூரணியை வணங்க என்றும் மறவாதே. சாப்பாட்டுக்குக் கஷ்டம் இல்லாமல் அவள் உன்னைப் பார்த்துக் கொள்வதோடு, உனக்கு மோட்சமும் அருள்வாள்' என்று உபதேசித்தார் சிதம்பரயோகி. இப்படியாக... சுமார் ஐந்தாண்டுகள் கழிந்தன.

ஒரு நாள்! முத்துஸ்வாமியுடன் கங்கையில் ஸ்நானம் செய்யச் சென்ற சிதம்பரயோகி, ''முத்துஸ்வாமி... கங்கை உனக்குப் பரிசளிக்கப் போகிறாள். இந்தப் புனித நீரில் இறங்கி, கண்களை மூடி, இரு கரங்களையும் நீட்டியபடி, சரஸ்வதிதேவியைத் துதித்து, ஜபித்துக் கொண்டே இரு'' என்று உபதேசித்தார். உடனே நீரில் இறங்கி, கண்களை மூடி, கைகளை நீட்டி, கலைவாணியைத் துதித்தார் தீட்சிதர் (இனி, தீட்சிதர் என்றே அழைப்போம்). மறு கணம்... ஏதோ ஒன்று தமது கரங்களில் விழுந்தது போல் உணர்ந்தார். கண்களைத் திறந்தார். 'ராம' என்று எழுதப்பட்ட அழகான வீணை அது; சரஸ்வதியின் அருளால், தீட்சிதருக்குக் கிடைத்த பொக்கிஷம்!

தீட்சிதரை ஆசிர்வதித்த சிதம்பரநாதயோகியார், கங்கையில் இறங்கினார். நீரில் மூழ்கியவர், அப்படியே ஜல சமாதியானார். இவருக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து விட்டுத் திருவாரூர் திரும்பினார் தீட்சிதர் (சிதம்பரநாதயோகியின் சமாதி, காசியில் அனுமந்த கட்டத்தில் இருக்கிறது).

'திருத்தணிக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும்' என்று முன்பொரு முறை தீட்சிதருக்கு உத்தரவிட்டிருந்தார் சிதம்பரநாதயோகி. அதன்படி, திருத்தணிக்கு யாத்திரை மேற்கொண்டார் தீட்சிதர். ஒரு மண்டல காலம் வரை அங்கேயே தங்கி, பஜனைகள் முதலான ஆராதனைகள் நிகழ்த் தினார். ஒருநாள், தியானத்தில் இருந்தபோது, மிகுந்த தேஜசுடன் கூடிய முதியவர் ஒருவர் தீட்சி தரின் எதிரில் தோன்றினார். தீட்சிதரை நெருங்கி, ''முத்துஸ்வாமி... உன் திருவாயைத் திற!'' என்றார்.
திடுக்கிட்டு கண் விழித்தார் தீட்சிதர்.

எதிரே- தெய்வீக ஒளி ததும்ப நிற்கும் முதியவரைக் கண்டார். முதியவர் சொன்னபடி, தீட்சிதர் வாயைத் திறக்க, திட வடிவில் இருந்த ஒரு பொருளை அவரது வாயில் இட்டார் முதியவர். பிறகு, ''கண்களை மூடிக் கொள். இப்போது உனது வாய்க்குள் நான் இட்ட பொருள் எது என்று உன்னால் உணர முடிகிறதா?'' என்று கேட்டார். தீட்சிதர் கண்களை மூடிய நிலையிலேயே, ''ஆம் ஸ்வாமி. இது கல்கண்டு. இந்தச் சுவை எனக்கு ஆனந்தத்தைத் தருகிறது!'' என்றபடி கண்களைத் திறந்தார். அந்த வயோதிக உருவம், மெள்ள மெள்ள சுப்ரமண்ய ஸ்வாமியின் கருவறை நோக்கி நகர்ந்து, கர்ப்பக் கிரஹத்தில் மறைவதைக் கண்டார் தீட்சிதர்.

சாட்சாத் சுப்ரமண்ய ஸ்வாமியே முதியவர் உருவில் வந்து, தன் வாயில் கல்கண்டை இட்ட இந்த நிகழ்வு குறித்துப் பெரிதும் மகிழ்ந்தார் தீட்சிதர். இதை ஒட்டி அவர், திருத்தணி முருகப் பெருமானைக் குறித்துப் பாடிய கிருதிகள் 'குருகுஹ கிருதிகள்' என்று அழைக்கப்பட்டன.

திருவாரூருக்கு அருகே உள்ள கீழ்வேளூர் எனும் தலத்துக்கு ஒரு முறை சென்றார் தீட்சிதர். அங்கு ஆகாசலிங்க ரூபத்தில் எழுந்தருளி உள்ள சிவபெருமான் குறித்து பாட எண்ணினார். ஆனால், இவர் கோயிலுக்குச் சென்ற போது, பூஜையை முடித்து, கருவறைக் கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தார் அர்ச்சகர்.

''ஐயா... ஈசனைத் தரிசிப்பதற்காக நான் திருவாரூரில் இருந்து வருகிறேன். கருவறைக் கதவைச் சற்று நேரம் திறந்து வையுங்கள்'' என்றார் தீட்சிதர். அதற்கு அந்த அர்ச்சகர், ''நீங்கள் நாளை வந்து தரிசியுங்கள். அதற்குள் ஸ்வாமி ஓடி விடப் போகிறாரா, என்ன?'' என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு, கிளம்ப முற்பட்டார்.

அப்போது, அங்கேயே அமர்ந்து கிருதிகளைப் பாடத் துவங்கினார் தீட்சிதர். இதைக் கேட்ட ஊர்க்காரர்கள் அனைவரும் ஆலயத் துக்கே வந்து விட்டனர். அந்த அர்ச்சகரும் ஒரு மூலையில் அமர்ந்து, பாடலை ரசித்துக் கேட்டார். பாடல் நிறைவுற்றபோதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஆலயத்தின் கருவறைக் கதவு தாமாகவே திறந்து கொண்டன.

ஊர்க்காரர்கள் அனைவரும் திகைத்துப் போய், தீட்சிதரின் பெருமை குறித்து முணுமுணுக்க ஆரம்பித்தனர். தீட்சிதரின் மகிமையை அறிந்த அர்ச்சகர், ஓடி வந்து அவரது கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். மேலும் அர்ச்சகர், இறைவனுக்கு சிறப்பு பூஜை செய்ய.. இறை வனைக் கண்குளிர தரிசித்து வணங்கினார் தீட்சிதர்.

திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி திருக் கோயிலில், ஊழியராக இருந்து வந்தவர் தம்பியப்பன் என்பவர். மத்தளம் வாசிப்பதில் தேர்ந்தவரான இவர், தீட்சிதரின் சிஷ்யரும் கூட! உண்மையானவர். ஒரு முறை தம்பியப்பனுக்குக் கடும் வயிற்று வலி. மருத்துவர்கள் பலவித வைத்திய முறைகளை மேற்கொண்டும் பலன் ஏதும் இல்லை. தீட்சிதருக்கு என்ன தோன்றியதோ, தெரியவில்லை... தம்பியப்பனின் ஜாதகத்தை எடுத்து வருமாறு அவரது குடும்பத்தினரிடம் சொன்னார்.

சமீபத்தில் நிகழ்ந்த குருப் பெயர்ச்சியால் தம்பியப்பனுக்கு இந்த நோய் வந்ததாக அறிந்தார். எனவே, கிரகங்களை சாந்தப்படுத்த வேண்டும் என முடிவு செய்தார். சாதாரணமான வழிபாடுகளால் தம்பியப்பனுக்குப் பலன் கிடைக்காது என்பதால், எல்லா கிரகங்களின் மீதும் பாடல்களை இயற்றினார் தீட்சிதர். இதையடுத்து, 'ப்ருஹஸ்பதே' என்று துவங்கும் குருபகவானைக் குறித்த பாடலை தினந் தோறும் துதித்து வந்து, வயிற்று வலியில் இருந்து நிவாரணம் பெற்றார் தம்பியப்பன். மன்னனையும் சக மனிதர்களையும் புகழ்ந்து பாட மறுத்தவர் தீட்சிதர். ஒரு முறை தீட்சிதர், தன் மனைவியுடன் தஞ்சாவூர் வந்திருந்தார். அப்போது, காமாட்சி அம்மன் கோயில் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்யாமா சாஸ்திரிகளைச் சந்தித்துப் பேசினார்.

இது போல் இருவரின் மனைவியரும் உரையாடிக் கொண்டனர். ஸ்யாமா சாஸ்திரிகளின் மனைவி, தீட்சிதரின் மனைவியிடம், ''தஞ்சை சரபோஜி மன்னன், மிகுந்த இசைப் பிரியர். அடிக்கடி எங்கள் வீட்டுக்கே வந்து இவரை கௌரவித்துச் செல்வார். உன் கணவரின் பாடல்களும் சரபோஜி மன்னருக்கு மிகவும் பிடித்துள்ளதாம். எனவே, அவரை ஒரு முறை அரண்மனைக்குச் சென்று மன்னரைப் பார்க்கச் சொல். கனகாபிஷேகம் செய்து மரியாதை செய்வார்'' என்றார். இதை, ஆர்வத்துடன் தீட்சிதரிடம் சொன்னார் அவரின் மனைவி

உடனே, ''பத்தினியே... அரசரைப் பார்த்தால் மட்டும் போதாது. அவரைப் புகழ்ந்து பாடல் புனைய வேண்டும். அப்போதுதான் வெகுமதிகள் கிடைக்கும். ஈஸ்வர பக்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நான், மனிதனைப் புகழ்ந்து பாட வேண்டும் என்று விரும்புகிறாயா?'' என்று கேட்டார் தீட்சிதர். ''அதில் என்ன தவறு இருக்கிறது. கையில் பொருள் இல்லாதவன், அரசனைப் புகழ்ந்து பாடிப் பொருள் பெற்றால், அது அவனது குடும்பத்துக்கு நல்லதுதானே?'' என்று மனைவி பேச... தீட்சிதர் குறுக்கிட்டார்: ''எனக்குப் பொன்னும் பொருளும் தேவை என்றால், மனிதர்களைக் கேட்க மாட்டேன். மகாலட்சுமியைக் கேட்பேன். அவள் எனக்கு அள்ளி வழங்குவாள்'' என்றவர், அன்றைய தினமே லட்சுமிதேவியை எண்ணி, பாடல் ஒன்று பாடினார். அன்று இரவு அவரது கனவில் எழுந்தருளிய லட்சுமிதேவி, 'உனது வாழ்வில் வறுமை என்பதே இனி இருக்காது' என்று கூறி மறைந்தாள்.

மறுநாள்! கனவில் லட்சுமிதேவி வந்து ஆசிர் வதித்துச் சென்றதை மனைவியிடம் சொன்னார் தீட்சிதர். அவரின் மனைவியும் முந்தைய தினம், தான் நடந்துகொண்டவிதத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டார்.

தீட்சிதருக்கு அப்போது வயது ஐம்பத்தொன்பது. தனது அவதார நோக்கம் பூர்த்தி அடையப் போவதை அறிந்தார் தீட்சிதர். எனவே, திருவாரூரை விட்டு புறப்படத் தீர்மானித்தார். எட்டயபுரத்தில் தன் தம்பி பாலு தீட்சிதரைப் பார்க்க ஆவல் கொண் டார். இதே நேரத்தில் எட்டயபுரத்து இளவரசரின் திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும்படி தீட்சிதருக்கு அழைப்பு அனுப்பி இருந்தார் மகா ராஜா. எனவே, எட்டயபுரம் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

தீட்சிதரின் எட்டயபுர பயணத்தைப் பற்றி அறிந்த சிஷ்யர்கள், கவலை நிறைந்த முகத்துடன் அவரைச் சூழ்ந்து கொண்டனர். கண்கள் கசிய நின்ற சிஷ்யர்களுக்கு, ஆசியும் ஆறுதலும் கூறி விட்டு, எட்டயபுரத்துக்கு கிளம்பினார். வழியில் பல தலங்களைத் தரிசித்து, அந்தந்த ஆலய மூர்த்தங்களைப் புகழ்ந்து கீர்த்தனைகள் பாடியபடியே பயணத்தைத் தொடர்ந்தார். தீட்சிதரின் மேல் அபிமானமும் மரியாதையும் கொண்ட சிலர், அவரது பயணத்தில் தங்களையும் இணைத்துக் கொண்ட னர். எட்டயபுரத்தை அவர் நெருங்குவதற்கு முன் ஒரு கிராமம் குறுக்கிட்டது.

அப்போது, நாவறட்சியால் பாதிக்கப்பட்டார் தீட்சிதர். அது கோடை காலம் வேறு! எனவே, அந்தப் பகுதிகள் வெகுவாகக் காய்ந்து காணப்பட்டன. கதிரவனின் கடும் தாக்குதலால், பூமி ஆங்காங்கே கடும் வெடிப்புடன் பாளம் பாளமாக இருந்தது. பயணத்தைத் தொடர்வதில் சற்றே சிரமப்பட்டார் தீட்சிதர். அவருடன் வந்தவர்களும் பாதிப்புக்கு உள்ளானார்கள். வழியில் தோட்டம் ஒன்று தென்பட்டது. தீட்சிதரது வரு கையை அறிந்த ஊர்க்காரர்கள், அவரை வரவேற்று, தோட் டத்தில் தங்கிச் செல்லும்படி வேண்டினர்.

களைப்பின் காரணமாகவும், உடன் வருபவர்கள் சற்று இளைப் பாறவும், அங்கே சற்று தங்கிச் செல்வது என தீர்மானித்தார் தீட்சிதர். எனவே, ஊர்மக்களின் வேண்டுகோளை ஏற்று, அங்கே ஓய்வெடுத்தார்.

மாபெரும் இசைமேதை ஒருவர், தனது தோட்டத்தில் தங்கி ஓய்வெடுப்பதை அறிந்த தோட்டத்துக்குச் சொந்தக் காரரான செல்வந்தர், ஓடி வந்து, தீட்சிதரின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். பிறகு, தாகத்தால் தவித்த அனைவருக்கும் தண்ணீர் கொடுத்து உபசரித்தார். செல்வந்தர் தன் மேல் கொண்டிருக் கும் மரியாதையையும் பக்தியையும் கண்டு மனம் உருகினார் தீட்சிதர். பிறகு அவரிடம், ''ஏன் இந்த ஊரில் இவ்வளவு வறட்சி?'' என்று கேட்டார் தீட்சிதர்.

அதற்கு செல்வந்தர், ''ஸ்வாமி... பல ஆண்டுக ளாகவே இங்கு மழையே இல்லை. விவசாயம் கெட்டு விட்டது. விளைச்சல் இல்லை. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். மழை வேண்டி நாங்கள் போகாத கோயில் இல்லை; வேண்டாத தெய்வம் இல்லை'' என்று கண்ணீருடன் சொல்ல, உடன் இருந்த ஊர்க்காரர்களும் இவரது கருத்தை ஆமோதித்தனர்.

இந்த ஊரில் மழை பொழிய வைப்பதற்குத்தானே இங்கே தீட்சிதரை அனுப்பி இருக்கிறான் இறைவன்! தீட்சிதரின் கண்கள் கலங்கின. மழலையின் குரல்தானே தாய்க்கு ஆனந்தம்! மழையின் இதம்தானே பூமிக்கு ஆனந்தம்! அங்கிருந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு, கிராமத்தின் எல்லையில் இருந்த தேவியின் கோயிலுக்குச் சென்றார். கருவறையில் குடி இருக்கும் கருணை நாயகியைப் பார்த்து, அம்ருதவர்ஷிணி ராகத் தில் 'ஆனந்தாம்ருதாகர்ஷிணி அம்ருதவர்ஷிணி' எனும் கீர்த்தனையைப் பாடினார்.

அவ்வளவுதான்! தீட்சிதர் பாடி முடித்த அடுத்த கணம், கனலைக் கக்கிக் கொண்டிருந்த கதிரவனைக் கருமேகங் கள் சூழ்ந்தன. இதையடுத்து பலத்த இடியுடன் மழை, பிரமாண்டமான கச்சேரி ஒன்றையே நிகழ்த்தியது. இந்தக் கிராமத்து மக்கள், தங்களுடைய வாழ்நாளில் பார்த்திராத மழை அது!

செல்வந்தரும் கிராம மக்களும் தீட்சிதரின் கால்களில் விழுந்து வணங்கினர். 'எங்கள் கிராமத்தை வாழ்விக்க வந்த மகான்' என்று புகழாரம் சூட்டினர் (பின்னாளில், அம்ருதவர்ஷிணி எனும் ராகத்துக்கே பிதாமகர் என்று போற்றப்பட்டார் தீட்சிதர்).

பயணத்தைத் தொடர்ந்தார் தீட்சிதர். எட்டயபுரத்தை நெருங்கும் முன்பே அவரது வருகையை அறிந்திருந்தனர் ஊர்மக்கள். எனவே, தீட்சிதரின் தம்பியான பாலுஸ்வாமி தீட்சிதரையும் உடன் அழைத்துக் கொண்டு எட்டயபுரம் மகாராஜாவே, நகர எல்லைக்கு வந்து விட்டார். பூர்ணகும்ப மரியாதையுடன் தீட்சிதரை வரவேற்றனர். பிறகு, எட்டயபுரத்திலேயே தங்கியவர், சுற்றுப்புறங்களில் உள்ள திருச்செந்தூர், கழுகுமலை, திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி முதலான பல தலங்களுக்குச் சென்று, கீர்த்தனங்கள் பாடினார்.

நாட்கள் உருண்டோடின. அது 1835-ஆம் வருடத்தைய தீபாவளி நேரம்... அதிகாலையில் தான் செய்து முடிக்க வேண்டிய யோகப் பயிற்சிகளை முடித்து விட்டு, பின்னர் நீராடினார். அப்போது அவருக்கு எதிரே தோன்றினாள் காசி ஸ்ரீஅன்னபூரணி. தீட்சிதர் முகத்தில் மெல்லிய புன்னகை... 'ஓ... இறுதி நிலைக்கு வந்து விட்டேன் என்பதை நினைவூட்டுகிறாயோ?' என்பதாக அமைந்தது அந்தப் புன்னகை.

'உனது வாழ்க்கைக்குத் தேவையான உணவை, பஞ்சம் இல்லாமல் வழங்குவாள் காசி அன்னபூரணி. அது மட்டுமல்ல... இவள் தான் உனக்கு மோட்சத்தையும் கொடுப்பாள்' என்று காசியில் சிதம்பரநாத யோகியார் அருளியது தீட்சிதரின் நினைவுக்கு வந்தது.அன்னபூரணியைத் தனக்கு அனுக்கிரஹம் செய்ய வருமாறு, தன் கீர்த்தனையால் மனம் உருகப் பாடினார். எங்கும் நிறைந்த பரம் பொருளையே சிந்தித்தபடி, வீட்டின் முன் அறையில் வந்து அமர்ந்தார். அப்போது எட்டயபுர மன்னனான வேங்கடேஸ்வர எட்டப்பன், பதற்றத்துடன் விரைந்தோடி வந்தார். அவரை அன்புடன் வரவேற்ற தீட்சிதர், 'தங்கள் முகத்தில் ஏன் இவ்வளவு பதற்றம்?' என்று கேட்டார்.

மன்னனின் முகத்தில் பீதி குறையவில்லை. ''ஸ்வாமி... நம் பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. கொட்டடியில் இருந்து சங்கிலியை அறுத்துக் கொண்டு வீதி வழியாக ஓடி, தற்போது மயானத்தில் மையம் கொண் டுள்ளது. பல பேர் முயற்சித்தும், கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இது, ஏதேனும் அசுப நிகழ்வுக்கான அறிகுறியோ என்று பயமாக இருக்கிறது. தாங்கள்தான் விளக்க வேண்டும்!'' என்று பணிவுடன் சொன்னார்.

இதைக் கேட்டதும் சில விநாடிகளுக்கு ஏதும் பேசாமல் இருந்தார் தீட்சிதர். இது மன்னனை மேலும் கலவரப்படுத்தியது. ''ஸ்வாமி... எனக்கு ஏதாவது தீங்கு வந்து விடுமா... அல்லது எனது ராஜ்யத்துக்குக் களங்கம் ஏற்பட்டு விடுமா?'' என்று கேட்டார் கலக்கத்துடன்.

தீட்சிதர் திருவாய் மலர்ந்தார்: ''மகாராஜா! கலக்கம் வேண்டாம். தங்களுக்கும் தங்களது ராஜ்யத்துக்கும் எந்த விதக் கேடும் விளையாது. தைரியமாக உங்கள் பணிகளைப் பாருங்கள்!'' என்றார். இதைக் கேட்டு சந்தோஷமான மன்னன், தீட்சிதரை வணங்கி விட்டு அரண் மனைக்குச் சென்றார்.

அன்று நரக சதுர்த்தசி தினம். தீபாவளி கொண்டாட்டங்கள் திமிலோகப்பட்டன. தன் வீட்டு பூஜை அறையில் இருந்த தீட்சிதர், 'இன்று அம்பிகைக்கு உகந்த தினம். எனவே, தேவியின் கீர்த்தனங்களை எல்லோரும் பாடுங்கள்' என்று சிஷ்யர்களுக்கு அறிவுறுத்தினார். வீணையை தீட்சிதர் வாசிக்க... 'மீனாட்சி மே முதம் தேஹி' என்கிற அவரது கீர்த்தனையை சிஷ்யர்கள் பாடினர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தீட்சிதர், ''இந்த உலக பந்தங்களில் இருந்து மீனாட்சி தேவியானவள் எனக்கு விடுதலை தர விரும்புகிறாள். அந்த தேவியை மீண்டும் வணங்க ஆசைப்படுகிறேன். இதே கீர்த்தனையை இன்னும் ஒரு முறை பாடுங்கள்'' என்றார் நெகிழ்ச்சியாக.

சிஷ்யர்களும் உருக்கமாகப் பாடினர். அந்தக் கீர்த்தனையின் அனுபல்லவியில் 'மீனலோசனி பாசமோசனி' என்று வரும்போது, அந்த வரிகளைத் தானும் முணுமுணுத்தார் தீட்சிதர். அதோடு, தன் இரு கரங்களையும் உயரே குவித்து 'சிவேபாஹி' என்று மூன்று முறை உச்சரித்தார்.

இதுதான் தீட்சிதர் வாழ்வின் கடைசி தருணம். அடுத்த விநாடி, அவரது ஜீவன், ஜோதிசொரூபமாக அம்பாளது பாதார விந்தங்களில் இரண்டறக் கலந்தது. தீபாவளி அமாவாசை நிறை நாளில் அன்னையின் ஆசியோடு நாத ஜோதியில் கலந்தார் தீட்சிதர்.

இது நிகழ்ந்த மறு கணம்... மதம் பிடித்து சுடுகாட்டில் அமர்ந்த யானை, இயல்பு நிலைக்கு வந்தது மட்டுமின்றி, அரண்மனை நோக்கி திரும்பியது. தீட்சிதர், இறைவனடி கலந்த நிகழ்ச்சியைக் கண்ட சிஷ்யர்களும் உள்ளூர் அன்பர்களும் கண்ணீர் சொரிந்தனர்.

இதை அறிந்த மகாராஜா, ஓடி வந்தார். ''ஸ்வாமி... யானைக்கு மதம் பிடித்து விட்டது என்றவுடன் எனக்கோ, என் நாட்டுக்கோ ஏதேனும் தீங்கு விளையுமா என்று சுயநலத்துடன் கேட்டேன். 'எதுவும் விளையாது' என்று எனக்கு நம்பிக்கை கொடுத்து, திருநீறு அளித்து அனுப்பினீர்கள். ஆனால், இப்போது தங்களை இழந்து தவிக்கிறேனே... தெரிந்திருந்தால் இந்த இழப்பைத் தவிர்க்க என் ராஜ்யத்தையே அந்த எமனிடம் கொடுத்திருப்பேனே'' என்று கதறினார்.

அந்த தீபாவளி திருநாள், எட்டய புரத்தில் தீட்சிதர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. எட்டயபுர மன்னர் தேர்ந்தெடுத்த பூமியில், தீட்சிதரின் தேகம் அடக்கம் செய்யப்பட்டு, சமாதி எழுப்பப்பட்டது. முருகப் பெருமானுக்கு உகந்த கார்த்திகை நாளில் அவதரித்தார்; முருகப் பெருமானுக்கு உகந்த ஸ்கந்த சஷ்டியின் துவக்க நாளில் முக்தி அடைந்தார்.

எட்டயபுரம் ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் நினை வாலயத்தைத் தரிசிப்போமா?

ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் பொன்மேனி அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மேல் சிவலிங்க பிரதிஷ்டை அமைந்துள்ளது. இந்த லிங்கத் திருமேனியின் முன்னால் தீட்சிதரின் சிலா விக்கிரகத்தைத் தரிசிக்கிறோம். இவை வடக்கு நோக்கிய பிரதிஷ்டை. தீட்சிதரின் உற்சவத் திருமேனி, மேற்கு நோக்கித் தத்ரூபமாகக் காணப்படுகிறது. இதே மண்டபத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமீனாட்சி அம்மன், ஸ்ரீசுப்ரமண்யர் ஆகிய தெய்வத் திருவுருவங்களின் சிலா விக்கிரகங்களும் கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு அனைத்து சந்நிதிகளுக்கும் அபிஷேக- ஆராதனைகள் நடை பெறுகிறது. சுத்த அன்னம் நைவேத்தியம். மாலை வேளையிலும் பூஜை உண்டு.



வெளியூர்களில் இருந்து சங்கீத அன்பர்கள் பலர், இங்கு வந்து... தீட்சிதரின் கீர்த்தனைகளைப் பாடி, அஞ்சலி செலுத்துகின்றனர். அப்படி பாடுகிற
வேளையில், பாட்டுக்குத் தேவையான வாத்தியங்கள் தேவைப்பட்டால், இசைக் கருவிகளை நினைவால யத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். (இதற்கென்றே சுருதிப்பெட்டி, ஆர்மோனியம், வயலின் உள்ளிட்ட இசைக் கருவிகள் வைத்துள்ளனர் நிர்வாகிகள்). உண்மையான லயிப்புடன் இங்கே கீர்த்தனைகளை எவர் பாடினாலும் பெரு மழையோ... சிறு தூறலோ நிச்சயம். தீட்சிதரின் மகிமை அது!

எட்டயபுரம் சமஸ்தானத்தின் உதவியுடன் திருப்பணிகள் துவங்கி, பல அன்பர்களது முயற்சியுடன் இன்று முத்துஸ்வாமி தீட்சிதரின் நினைவுத் திருக்கோயில் கம்பீரமாக எழுந்துள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுந்தரம் பிள்ளை எனும் தனவந்தர், இந்தத் திருக்கோயில் எழும்ப பெரும் உதவி செய்துள்ளார். செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயரில் துவங்கி, பல இசைக் கலைஞர்களும் இங்கே வந்து தரிசித்துச் சென்றுள்ளனர்.

இசைக் கச்சேரிகள், களை கட்டும் இந்த வேளையில் தீட்சிதரின் பெருமைகளைப் போற்றுவோம்!

Comments