குறை தீர்ப்பான் குமரன்!






குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான் என்பார்கள். அப்படியரு குன்றில், ஒரேயரு சந்நிதி மட்டும் கொண்டு காட்சி தந்தார் முருகப்பெருமான். ஸ்ரீவள்ளி- தெய்வானையுடன் இந்தக் குன்றில் தங்கியிருந்துவிட்டு, பிறகு திருத்தணி திருத்தலத்துக்குச் சென்றதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!

அப்பேர்ப்பட்ட திருத்தலம், வெறுமனே ஒற்றைச் சந்நிதியாக இருக்கலாமா? அந்த ஊருக்கு ஒருமுறை வந்த காஞ்சி மகான், மலை ஏறிச் சென்று, ஸ்ரீமுருகனைத் தரிசித்தார். மகா பெரியவாளை தரிசிக்கும் ஆவலில், அந்த ஊர்மக்கள் அனைவரும் மலையில் குவிந்திருந்தனர். அப்போது பெரியவா, ''உங்களுக்குள்ளே இருக்கிற ஒரே வருத்தம்... மத்த மலைவாசஸ்தலங்களைப் போல, இந்த முருகன் கோயிலும் பிரமாண்டமா வளரணுங்கறதுதானே?! கூடிய சீக்கிரமே அது நடக்கப் போறது. பத்துக் காசு இல்லாமலே, திருப்பணிகள் ஜாம்ஜாம்னு நடக்கும். அவாளே தேடி வந்து, பணத்தைக் கொடுக்கப் போறா!'' என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் ஆசீர்வதித்தார்.



அவரின் தீர்க்கதரிசனத்தின்படி, அந்தக் கோயில் வளர்ச்சியுற்றது; முருகனின் அருளாட்சி நடக்கும் அற்புத ஆலயமாக இன்றைக்கும் திகழ்கிறது. சென்னை, பல்லாவரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றத்தூர். இந்த ஊரின் கடைசியில், மலைக்கு மேல் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி.

சேக்கிழார் அவதரித்த தலம் இது. மலை அடிவாரத்துக்கு அருகில் அவருக்குத் தனிச் சந்நிதியே உள்ளது. மூன்று நிலை ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீபைரவர், நவக்கிரகங்கள், தீர்த்தக் கிணறு, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீவில்வமரத்தடி விநாயகர் என பிரமாண்டமாகத் திகழ்கிறது முருகனின் ஆலயம்.

இங்கேயுள்ள அரச மரத்தில் தொட்டில் கட்டிப் பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், குழந்தையின் எடைக்கு எடை பழம், சர்க்கரை, வெல்லம் என ஏதேனும் ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். அதேபோல், குழந்தை களுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்றால், இங்கு வந்து தவிடு மற்றும் வெல்லம் வழங்கி, 'இது உன் குழந்தை, நீதாம்பா காப்பாத்தணும்’ என்று சொல்லி முருகனுக்குத் தத்துக் கொடுத்து, வழிபட்டுவிட்டு, குழந்தையை அழைத்துச் சென்றால், கந்தக் கடவுள் அந்தக் குழந்தையைக் குறையின்றிக் காப்பார் என்பது நம்பிக்கை!



திருமணத் தடையால் அவதிப்படுவோர், இங்கேயுள்ள வேப்பமரத்தில், மஞ்சள் கயிற்றில் மஞ்சளை முடிந்து கட்டினால், விரைவில் வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்பது உறுதி! வீடு-மனை யோகம் வேண்டுவோர், இங்கு வந்து செங்கற்களை அடுக்கி மனதார வேண்டிக்கொண்டால், விரைவில் புதுமனை புகுவிழா நடத்துவர் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்!

இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு... திருமுருக கிருபானந்த வாரியார், இந்தத் தலத்துக்கு வந்து முருகப் பெருமானைக் கண் குளிரத் தரிசித்து, இங்கே பலமுறை சொற்பொழிவாற்றியுள்ளார்.

குன்றத்தூர் குமரனை வணங்குங்கள்; வீடு- வாசலுடன் நிம்மதியாக வாழவைப்பான், அழகு வேலவன்!

Comments