நமசிவாய வாழ்க!

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவனின் பெயர் மதுவனநாதர். அம்பாள்- மதுவன நாயகி.

இந்தத் தலத்துக்கு 'மதுவனம்' என்ற பெயரும் உண்டு. 'மது' என்றால் தேன்; 'வனம்' என்றால் காடு. தேனடைகள் நிறைந்த காடு என்பதால், 'மதுவனம்' என்ற பெயர் முன்பு வழங்கப்பட்டதாம். இங்கு, தேவர்கள் தேனீக்களாக உருவெடுத்து, இறைவனை வழிபட்டதாக கூறுவர்.

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் உள்ள தலம் திருவாசி. இங்குள்ள இறைவன்- மாற்றறிவாதீஸ்வரர். பாம்பின் மீது ஆடும் கோலத்தில் சிவபெருமான் காணப்படுவதால் 'அரவத்தின் மீது ஆடும் ஆட வல்லான்' என்ற பெயரும் இவருக்கு உண்டு.
வில்லும் அம்பும் ஏந்தி திரிபுரம் எரிக்கும் கோலத்தில் காட்சி தருபவரை, 'திரிபுராந்தகர்' என்பர். திருவதிகை மற்றும் காஞ்சி கயிலாசநாதர் கோயில்களில் சிவபெருமான் திரிபுராந்தகராகக் காட்சி அளிக்கிறார்.

ஆவுடையார்கோவிலுக்கு அருகில் உள்ள தலம் திருப்புனவாயல். இங்குள்ள மூல லிங்கம், நந்தி மற்றும் ஆவுடையார் ஆகிய மூன்றும் மிகப் பெரியவை. சிவபெருமானுக்கு மூன்று முழத்திலும் ஆவுடையாருக்கு 30 முழத்திலும் உடை அணிவிப்பார்களாம்!
சிவபெருமான், தனது கழுத்தில் விஷத்தை ஆபரணமாக வைத்துள்ளதாலும், விஷப் பாம்பை மேனியில் அணிந்துள்ளதாலும் அவருக்கு 'விஷாபரணர்' என்ற பெயரும் உண்டு.

மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில், மலைப்பாதையில் உள்ளது ஜோதிபா எனும் மலைக்கோயில். இங்குள்ள இறைவனுக்கு கேதாரேஸ்வரர் என்று பெயர். இவர் பெரிய மீசையுடனும் தலைப்பாகையுடனும் காட்சி அளிக்கிறார். இந்தக் கோயிலில், தரையில் சிந்திக் கிடக்கும் குங்குமத்தை, பக்தர்கள் பக்தியுடன் உடல் முழுவதும் பூசிக் கொள்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மெர்க்காராவில் ஓங்காரேஸ் வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில், இந்திய- மொகலாய கட்டட பாணியில் விளங்குகிறது. இந்த சிவன் கோயில், லிங்க ராஜா என்பவரால் கி.பி.1813-ல் கட்டப்பட்டது. கோயி லின் திருக்குளம் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதால், மீன்கள் ஆனந்தமாக துள்ளி விளையாடும் அழகே அழகு!

சிவ தரிசன பலன்கள்: காலை தரிசனம்- பிணி நீங்கும். நண்பகல் தரிசனம்- செல்வம் பெருகும். சந்தியாகால தரிசனம்- பாவங்கள் விலகும். அர்த்தஜாம தரிசனம்- வீடுபேறு தரும்.


விசேஷ சிவலிங்கங்கள்!

தேவர்கள், சிவலிங்க வழிபாடு செய்வதற்காகவே விஸ்வகர்மாவிடம் பல சாநித்தியங்களுடன் கூடிய சிவ லிங்கங்களைப் பெற்றனர். அவை:

இந்திரன் - பதுமராக லிங்கம்

எமதர்மன் - கோமேதக லிங்கம்

விஷ்ணு - இந்திர லிங்கம்

வாயுதேவன் - பித்தளை லிங்கம்

சந்திரன் - முத்து லிங்கம்

குபேரன் - சொர்ண லிங்கம்

வருணன் - நீல லிங்கம்

பிரம்மன் - சொர்ண லிங்கம்

நாகர்கள் - பவள லிங்கம்

ருத்திரர்கள் - திருவெண்ணீற்றால் ஆன லிங்கம்

மகாலட்சுமி - நெய்யினால் ஆன லிங்கம்

சரஸ்வதி - சொர்ண லிங்கம்

அசுவினி தேவர்கள் - மண்ணால் ஆன லிங்கம்

Comments