திருமண வரம் தருவார் லட்சுமி நரசிம்மர்!









வரம் பெற்ற மகிழ்ச்சி மெல்ல ஆணவமாய் தலைதூக்கியது. ஹிரண்யகசிபு பூமியை ஆவேசமாய் உதைத்தான். இனி எல்லாம் நான்தான், சகலமும் என் கட்டளைப்படியே எனக் கொக்கரித்தான்.

‘வீட்டிற்குள்ளேயோ, வெளியேயோ,ஆகாயத்திலேயோ, பூமியிலோ, பகலிலோ, இரவிலோ, மனிதனாலோ, மிருகத்தாலோ, எந்த ஆயுதத்தாலோ தனக்கு மரணம் நிகழக்கூடாது என்று பெற்ற வரம் அவனை மத யானையாக்கி இருந்தது.முனிவர்களை அழைத்தான். ‘‘இனி என்னை மட்டும் உபாசனை செய்யுங்கள்” என்று கட்டளை இட்டான். தேவர்கள், மனிதர்கள் என சகலரும் ஹிரண்யகசிபுவின் கட்டளைக்கு கட்டுப்பட்டு, அஞ்சி அவன் பெயரை மந்திரமாய் சொன்னார்கள்.பாம்பின் விஷமே மருந்தாவது போல, ஹிரண்யகசிபு பெற்ற பிள்ளை, கருவிலேயே நாரதரால் நாராயணன் கதை கேட்ட பிரகலாதன், தன் தந்தையின் ஆணவத்துக்கு எதிராக முழங்கினான். ‘‘ஹரியே சகலமும். அவனின்றி அணுவும் அசையாது. நீங்கள் தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள் அப்பா” என்று கெஞ்சினான்.
கர்வம், அதிகார உச்சம் தந்த திமிரில் திளைத்த ஹிரண்யகசிபு, ‘‘எனக்கே உபதேசமா? என்னை வணங்க மறுக்கும் இவனை கொன்று போடுங்கள்” எனக்கூறி பலவகையில் பிரகலாதனை வதைத்தான். நாராயணாய மந்திரம் பிரகலாதனை ஒவ்வொரு முறையும் காத்து நின்றது.முடிவாய் சபைக்கு நடுவே கொண்டு வரப்பட்ட மகனிடம், ‘‘உன் ஹரி இங்கு இருக்கிறானா?” என ஹிரண்யகசிபு கேட்க, ‘‘அவர் எங்கும் இருக்கிறார்” என்றான் பிரகலாதன்.‘‘இந்த தூணில்?”‘‘சர்வ நிச்சயமாய் இருக்கிறார்.”

ஆவேசமாய் ஹிரண்யகசிபு கதையால் ஓங்கி அடிக்க, தூணைப்பிளந்து கொண்டு, மனித உடம்பும் சிம்ம தலையுமாய் வெளிப்பட்ட நரசிம்மம், ஹிரண்யகசிபுவை தூக்கிக் கொண்டுபோய் வாசற்படியில் அமர்ந்து, மடியில் கிடத்தி, தன் கூரிய நகங்களால் கிழித்து கொன்றது. இந்த வதம் நிகழ்ந்த அந்திப் பொழுதில் அத்தனை தேவர்களும் பூமாரி பொழிய, உள்ளம் குளிர்ந்த நரசிம்மர் லட்சுமி தேவியோடு குளிர்தருவாய் அனைவருக்கும் காட்சியும் ஆசியும் தந்தார்.லட்சுமிதேவியோடு அன்று காட்சி தந்த கோலத்தோடு பாரதம் நெடுக கோயில் கொண்டுள்ள ஹரி, சென்னை& நங்கநல்லூரில், தில்லைகங்கா நகரிலும், லட்சுமி நரசிம்மர் என்கிற திருநாமத்தோடு அருள்கிறார்.ஒரு அம்மன் கோயில் திருவிழாவில் ஒரு பக்தருக்கு அருள் வந்து, நரசிம்மருக்கு ஆலயம் கட்ட வேண்டும் என அருள்வாக்காய் சொல்ல, அதன்படி அமைந்த ஆலயம் இது.நரசிம்மர் மலைவாச பிரியர் என்பதால் இரண்டுதளமாக அமைந்த ஆலயத்தில் மேலே நரசிம்மரை அமர்த்தி அழகு பார்க்கிறார்கள். கோயிலுள் முதலில் தும்பிக்கை ஆழ்வாரும், அருகே சுதர்சனரும் அருள்கிறார்கள். நடு நாயகமாய்
லட்சுமிதேவியை அணைத்தபடி அமர்ந்திருக்கும் நரசிம்மரைக் காணும்போது ‘உன்னையே பணிந்து நிற்கும் ஜீவாத்மாக்களான எங்களை ஹிரண்யகசிபுவின் வடிவான கர்வம் வதைக்காமல் என்றும் உன் கருணையால் காப்பாற்று’ என்ற பிரகலாத பிரார்த்தனை மலர்கிறது. இவர் கல்யாண வரம் தருவதில் கருணை கடல். ஆன்ம பலம் தரும் அந்த நரசிம்மத்தை தரிசித்த திருப்தியோடு வெளியே வருவோருக்கு பிரசாதமாக, இனிக்கும் பானகம் தருகிறார்கள். இவரிடம் வர, வாழ்வு மதுரமாகும் என்பது சத்தியம்!

Comments