அருள்மிகு பேராத்துச்செல்வியம்மன் திருக்கோயில்








மூலவர் : பேராத்துசெல்வி
தீர்த்தம் : தாமிரபரணி
பழமை : 500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : பேராற்று செல்வி
ஊர் : வண்ணார்பேட்டை
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா:

சித்திரை மூன்றாம் செவ்வாயில் கொடைவிழா நடக்கிறது. ஆடி இரண்டாம் செவ்வாயில் முளைப்பாரி விழா, புரட்டாசியில் பாரிவேட்டை.
தல சிறப்பு:

ஆற்றில் கிடைத்த அம்பாள்
திறக்கும் நேரம்:


காலை 6.30 - 11.30, மாலை 5.30 - 8.30 மணி. செவ்வாய்க்கிழமைகளில் நாள் முழுதும் திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பேராத்துச்செல்வியம்மன் திருக்கோயில், வண்ணார்பேட்டை-627 003. திருநெல்வேலி மாவட்டம்.




பொது தகவல்:

இக்கோயிலுக்கு எதிரே சுடலைமாடன், பேச்சியம்மன் சன்னதி உள்ளது.

இவர்களும், பிரகாரத்தில் உள்ள சங்கிலிபூதத்தார், நல்லமாடன் இருவரும் பீட வடிவில் இருப்பது விசேஷம்.

தளவாய்பேச்சி தனிசன்னதியில் இருக்கிறாள். வளாகத்தில் லிங்கேஸ்வரர், சக்கரவிநாயகர் இருக்கின்றனர்.




பிரார்த்தனை

திருமணம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு அம்பாளுக்கு செவ்வரளி மாலை சாத்தி, மாவிளக்கு ஏற்றிவேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுதல் நிறைவேறியவர்கள் அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

விநாயகர் அருகில் நந்தி. இக்கோயிலில் அம்பாள் 8 கைகளில் ஆயுதங்களுடன், வடக்கு நோக்கி அருளுகிறாள். வரப்பிரசாதியான இவள் சாந்தமானவள் என்பதால், "சாந்தசொரூப காளி" என்றும் அழைக்கிறார்கள்.

செவ்வாய்க்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் உள்ள சன்னதியில் இரட்டை விநாயகர் இருக்கின்றனர். இவருக்கு இடது புறத்தில் இரண்டு நந்தியும் இருக்கிறது. இந்த நந்திகள் சிவஅம்சமாக இங்கு இருப்பதாக சொல்கிறார்கள்.

தீர்த்த சிறப்பு: காசியை ஆட்சி செய்த மன்னன் ஒருவன், இந்த தீர்த்தத்தில் நீராடி, குஷ்டநோய் நீங்கப்பெற்றான். எனவே இத்தீர்த்தத்திற்கு, "குட்டகுறை தீர்த்தம்' என்ற பெயரும் உண்டு.

இவ்விடத்தில் தாமிரபரணி நதிக்கு, "உத்திரவாகினி" என்று பெயர். பொதுவாக வடக்கு நோக்கி செல்லும் நதிகள் புண்ணியமானதாக கருதப்படும்.

இவ்விடத்தில் இந்நதி வடக்கு நோக்கியே செல்கிறது. எனவே, இங்கு தீர்த்தநீராடி அம்பாளை வழிபடுவது விசேஷமானதாக கருதப்படுகிறது.



தல வரலாறு:

பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த ஏழை பக்தர் ஒருவர், அம்பாளை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டார். அவருக்கு அம்பாளுக்கு கோயில் கட்டி வழிபட வேண்டுமென விருப்பம். ஆனால் கோயில் கட்டுமளவிற்கு அவரிடம் வசதி இல்லை. எனவே, அம்பாள் சிலையாவது பிரதிஷ்டை செய்ய வேண்டுமென நினைத்தார்.

ஒருநாள் இரவில் அவரது கனவில் அம்பாள் தோன்றினாள். தாமிரபரணி நதிக்கரையில் மூன்று அத்திமரங்கள் ஒன்றாக இருக்கும் இடத்தின் அருகில் ஆழமான பகுதி இருப்பதாக சுட்டிக்காட்டி, அவ்விடத்தில் தான் இருப்பதாக கூறினாள். மறுநாள் அவர், அந்த இடத்திற்கு சென்று வலையை வீசினார். அப்போது, அம்பாள் விக்கிரகம் அவருக்கு கிடைத்தது.

நதிக்கரையிலேயே சிறு குடிசை அமைத்து, அம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவள் பெரிய ஆற்றில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், "பேராற்றுசெல்வி" என்ற பெயரும் பெற்றாள்.

இருப்பிடம் :
திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து, புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் வண்ணார்பேட்டையில் இறங்கி கோயிலுக்கு செல்ல வேண்டும்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை, திருவனந்தபுரம்

தங்கும் வசதி :திருநெல்வேலி

ஓட்டல் ஆர்யாஸ்:போன்:+91-462-2339002

ஓட்டல் ஜானகிராம்:போன்: +91- 462-2331941

ஓட்டல் பரணி:போன்: +91- 462-2333235

ஓட்டல் நயினார்:போன்; +91- 462-2339312

Comments