கட்டை விரல் உயர லிங்கம்

சிவராத்திரியை ஒட்டி கர்நாடக மாநிலத்தில், கட்டைவிரல் அளவே உயரமுள்ள கோகர்ணம் மகாபலேஸ்வரர் என்னும் பிராணலிங்கேஸ்வரரைத் தரிசித்து வாருங்கள்.
தல வரலாறு : இத்தலத்தின் வரலாறு, விபீஷணன் ரங்கநாதரை இலங்கைக்கு கொண்டு சென்றதை கணபதி தடுத்ததை ஒத்துள்ளது. கணபதியைப் பார்த்தால் பக்தர்கள் தான் தலையில் குட்டிக் கொள்வார்கள். ஆனால், இத்தலத்தில் குட்டு வாங்கிய கணபதி இருக்கிறார். இங்குள்ள பிராணலிங்கத்தின் பெருமையை கேள்விப்பட்ட ராவணன் அதை இலங்கை கொண்டு செல்வதற்காக, கயிலை மலை வந்து, சிவனை வேண்டி கடும் தவம் இருந்தான். இதையறிந்த நாரதர் சொர்க்கலோகம் சென்று இந்திரனிடம், ""ராவணன் இந்த லிங்கத்தை கொண்டு சென்றால், தேவர்கள் பலமிழப்பார்கள்,''என்றார். உடனே இந்திரன் தேவர்களுடன் கைலாயம் சென்றான். அதற்குள் ராவணன் ஈசனை மகிழ்வித்து பிராணலிங்கத்தை கேட்டான். ""ராவணா! லிங்கம் உனக்கு தான். ஆனால், நீ செல்லும் வழியில் எந்தக்காரணத்தை கொண்டும் இதை கீழே வைக்க கூடாது,''என்றார். அவனிடமிருந்து அந்த லிங்கத்தைக் கைப்பற்ற எண்ணிய விஷ்ணு, கணபதியிடம்,""பிரமச்சாரி வேடத்தில் ராவணன் இருக்குமிடத்தில் சுற்றித்திரி. ராவணன் சந்தியாவந்தன நேரம் வந்தவுடன் லிங்கத்தை கீழே வைக்காமல் உன்னிடம் கொடுப்பான். நீ அவனிடம், லிங்கத்தின் பாரம் தாங்க முடியாத சமயத்தில் நான் மூன்று முறை உன்னை அழைப்பேன். அப்போது நீ வராவிட்டால், லிங்கத்தை கீழே வைத்து விடுவேன் என்று சொல்,'' என்றார். இவ்வாறு கூறிய விஷ்ணு தன் கரத்தை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் நிறுத்தினார். அப்போது மாலை வேளை போல் சற்றே இருள் கவிய, ராவணன் சந்தியா வந்தனம் செய்வதற்காக கையிலிருந்த லிங்கத்தை பிரம்மச்சாரி வேடத்தில் அங்கு நின்ற கணபதியிடம் கொடுத்து விட்டு சென்றான். அப்போது தேவர்கள் மூன்று உலகங்களின் பாரத்தையும் அந்த பிராணலிங்கத்தின் மீது செலுத்தினர். பாரம் தாங்க முடியாத கணபதி மூன்று முறை ராவணனை அழைத்தார். அப்படி அழைத்தும் ராவணன் வராத காரணத்தினால் லிங்கத்தை கீழே வைத்துவிட்டார். சந்தியாவந்தனம் முடித்து வந்த ராவணன், லிங்கம் கீழே வைக்கப்பட்டிருந்ததை கண்டு கணபதியின் தலையில் கோபத்தில் குட்டினான். தன் 20 கைகளாலும் லிங்கத்தை தூக்கி பார்த்தான். முடியாமல் போனதால் அங்கேயே விட்டுவிட்டு இலங்கை சென்றான். பிறகு தேவர்கள் தேவசிற்பியை அழைத்து லிங்கத்தை சுற்றி கோயில் அமைத்தனர். அதுவே கோகர்ணம் சிவன் கோயிலாகும். இங்கு கணபதி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிவனை மகாபலேஸ்வரர் என்றும், நதிவடிவிலுள்ள அம்பிகையை "தாமிரகவுரி' என்றும் அழைக்கின்றனர்.
ஊர் பெயர் விளக்கம்: முன்னொரு காலத்தில் படைக்கும் தொழிலை சிறப்பாக நிறைவேற்ற சிவன் கடும் தவம் இருந்தார். அப்போது அவரது நெற்றியிலிருந்து ருத்ரன் வெளிப்பட்டார். படைக்கும் தொழிலை செய்யும்படி உத்தரவிட்டார். ருத்ரரும் ஒப்புக்கொண்டு, பாதாள உலகம் சென்று கடும் தவம் இருந்தார். இதற்குள் 3 யுகங்கள் கழிந்து விட்டன. எனவே பிரம்மா உயிர்களை படைக்க தொடங்கினார். இதையறிந்த ருத்ரர் பயங்கர கோபத்துடன் பாதாள உலகிலிருந்து பிரம்மனிடம் வந்தார். ஆனால், அவரால் படைக்கப்பட்ட பெரிய உலகம் குறுக்கிட்டது. அவர் அதை நொறுக்கத் தொடங்கினார். பயந்து போன பூமாதேவி, ""இறைவா! தாங்கள் தயவு செய்து கோபம் குறைந்து, தங்கள் உருவை சிறிதாக்கி கொண்டு என் காதின் வழியாக மெதுவாக வாருங்கள்,''என கெஞ்சினாள். இவளது வேண்டுதலை ஏற்ற ருத்ரன் கட்டை விரல் அளவில் உடலை சிறிதாக்கி கொண்டு அவள் காதின் வழியே வெளியே வந்து, ""பூமா
தேவியே! நான் பாதாள உலகில் இருந்து வெளியே வருவதற்கு நீ கருப்பையாக இருந்ததனால் இந்த இடம் "ருத்ரயோனி' என்றும், அதற்கு காரணமான நீ "கோ' (பசு) என்றும், உனது காது "கர்ணம்' என்றும் வழங்கப்படும் என்றார். அன்றிலிருந்து இத்தலம் "கோகர்ணம்' ஆனது. இதை "காது துவார தலம்'என்றும் அழைக்கிறார்கள்.
கட்டைவிரல்உயரம்: மூலஸ்தானம் சிறியது. நடுவில் சதுரமேடை அதில் வட்டமான பீடம் உள்ளது. பீடத்தின் தென்கிழக்கில் வெடிப்பு உள்ளது. இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவில் வெள்ளை நிற பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் சிவலிங்கபாணம் தென்படுகிறது. விரலால் தொட்டு லிங்கம் இருக்குமிடத்தை உணரலாம். இவருக்கு பக்தர்களே பிரகாரம் செய்யலாம்.
பிசாசு மோட்சம்: இத்தலத்தில் அதிகளவில் பித்ருபூஜை செய்கிறார்கள். மரணமடைந்தவர்களுக்காக தினமும் "பிசாசு மோட்சம்' என்ற சடங்கு நடக்கிறது. இதனால் முன்னோர்கள் நரகத்திலிருந்தாலும் சொர்க்கம் செல்வார்கள் என்பதும், பவுர்ணமியன்று இந்த ஆற்றில் நீராடி சிவனை வழிபாடு செய்தால் பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்ததற்கு ஈடான பாவம்) விலகும் என்பதும் நம்பிக்கை. இங்கு செய்யப்படும் ஒரு புண்ணியச்செயல் கோடி மடங்கு பலன் தரும்.
திருவிழா: மாசி மகாசிவராத்திரி 9 நாள் விழா.
இருப்பிடம் : சென்னை, மதுரை, கோவை, பாலக்காட்டில் இருந்து மங்களூரு சென்று, அங்கிருந்து உடுப்பி வழியாக 230 கி.மீ. பஸ்களில் பயணம் செய்தால் கோகர்ணத்தை அடையலாம்.
திறக்கும் நேரம் : காலை 6-12.30 மணி, மாலை 5- இரவு 8.30 மணி.

Comments