மனிதர்களும் சமயங்களும்

மனிதர்களும் சமயங்களும்

"புண்ணியமாம் பாவம்போம் போனநாட் செய்தவை
மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள் எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லும்
தீ தொழிய நன்மை செயல்"

புண்ணியத்தால் வாழ்வும், பாவத்தால் தாழ்வும் உண்டாகும். ஒருவன் செய்யும்
புண்ணிய பாவங்களே அவன் எதிர்காலச் சேமிப்பு ஆகும். எல்லாச்
சமயத்தார்களும் சொல்வது இக்கருத்தே. ஆதலால் பாவத்தை நீக்கிப் புண்ணியம்
செய்க, என்கிறார் ஒளவையார். இக்கோட்பாடுகள் மனிதசமுதாய
முன்னேற்றத்திற்குத் தூண்டுகோலாய் இருக்கின்றன. இதுபோன்ற தத்துவங்கள்
(Philosophy) எப்பொழுதும் மனிதர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.
(Religion is philosophy in action) இத்தகைய கோட்பாடுகளுள் "சமய
வழிபாடுகள்" மிகவும் சக்தி வாய்ந்தன. இறைவழிபாடுகள் சமயங்களின் பெயரால்
உள்ள நூல்களில் கூறப்பட்டுள்ளவாறு நடத்தப்படுகின்றன. சமய அமைப்புகள்
அனைத்துக்கும் பொதுவான அடிப்படையாக வழிபாடு திகழ்கிறது.
மனிதர்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்ப்பதற்குச் சமயங்கள் உதவி
புரிந்திருப்பது போன்று வேறு எந்த இயக்கமும் இதுவரையில் உதவி
புரிந்ததில்லை. ஒரே நாடு, ஒரே இனம், ஒரே குடும்பம் என்ற உணர்வுகள்
உண்டுபண்ணுகின்ற ஒற்றுமையைவிட மிகப் பலத்த ஒற்றுமையைச் சமயம் செய்கிறது.
இவ்வளவு வல்லமை வாய்ந்த சமயத்தின் பிறப்பிடத்தை அறியப் பலநாடுகளிலும்
பலகாலங்களில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சமயங்கள் தோன்றியதற்குக் காரணமாக இரண்டு கொள்கைகள் கூறப்படுகின்றன.
ஒன்று "காலம் சென்ற முன்னோர்களை வணங்குவதிலிருந்து சமயம் உருவெடுத்தது".
மற்றொன்று "இயற்கை சக்திகளைத் தெய்வங்களாகக் கருதி வணங்குவதிலிருந்து
உருவெடுத்தது". இவ்விரண்டு கருத்துக்களையும் சேர்த்துக் கூறுவதும் உண்டு.
இக்கருத்துக்கள் பின்வரும் பகுதியில் ஆராயப்படுகின்றன.

முன்னோர் வழிபாடு
மாண்டு போன முன்னோர்களை நினைவில் வைத்திருக்கும் மனிதர்கள், உடல் அழிந்து
போன பின்பும் அவர்களது உயிர் வாழ்கிறது என்றும், அவ்வுயிர் மீண்டும்
பிறக்கிறது என்றும் நம்புகின்றனர்.
"ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற்
கெழுமையு மேமாப் புடைத்து"

"இன்மை யெனவொரு பாவி மறுமையு
மிம்மையு மின்றி வரும்"
என்ற குறட்பாக்களில், ஒருவன் கற்ற கல்வியானது அவனது அடுத்தடுத்த
பிறவிகளிலும் பயன்படும் என்றும், ஒருவனது நல்குரவு அவனது மறுபிறப்பிலும்
வரும் என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். இதனால் திருவள்ளுவர்
காலத்திலேயே, தமிழர்கள் இம்மை மறுமை இவற்றில் முழு நம்பிக்கை
கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. இறந்தவர்களுக்காக உணவு
படைக்கின்றனர், வணங்குகின்றனர். இத்தகைய வழிபாட்டிலிருந்து சமயம்
தோன்றியது. மனிதனுக்கு இரண்டு உருவங்கள் உண்டு. ஒன்று உடலென்றும்,
மற்றொன்று ஆன்மாவென்றும் நம்புகின்றனர். (The Body is Hard ware and
the Soul is Soft ware.) மனிதன் இறந்தபின்னர் உடல் அழிந்துவிடும், ஆன்மா
அழிவதில்லை என்றும் நம்புகின்றனர். எகிப்து, பாபிலோனியா, சீனா போன்ற
நாடுகளின் சமயக் கோட்பாடுகளில் இத்தகைய நம்பிக்கைகள் உண்டு. முன்னோரை
வணங்குவது சீனர்களின் சமயத்துக்கு அடிப்படைத் தத்துவங்களில் ஒன்று.
எகிப்தியர்கள் சற்று மாறுபட்ட நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். "உடல்
அழிந்தால் ஆன்மாவும் அழிந்துவிடும்" என்று எண்ணினர். இதனால் எகிப்து
நாட்டவர்கள், பிணத்தைப் பாதுகாக்க எல்லாவிதமான முயற்சிகளையும்
மேற்கொண்டனர். உடலையும் அதன் ஒவ்வொரு உறுப்பையும் பாதுகாத்து வைத்தனர்.
இறந்தவர்களின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றுக்குப் பழுது ஏற்படுமானால்,
அந்த உடலுக்குரிய ஆன்மாவிற்கும் அதே பழுது ஏற்பட்டு விடும் என்று
எகிப்தியர்கள் நம்பினர். கிருத்துவர்கள், இக்கருத்திற்குச் சற்று
மாறுபட்டு, இறந்தவர்களின் உடல்களைப் பெட்டியில் வைத்துப் புதைத்து
வைக்கின்றனர். என்றேனும் ஒருநாள் தேவன் நேரில் வந்து இறந்தவர்களை
உயிர்ப்பித்து மீட்பார் என்று நம்புகின்றனர்.

இந்துக்கள், இப்பிறவியின் முடிவில் உயிரானது, அதுவிருந்த உடல் செய்த
பாவபுண்ணியங்களுக்கு ஏற்பச் சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அல்லது
இறைவனிருக்கும் இடத்திற்கோ செல்கிறது என நம்புகின்றனர்.

ஆன்மா இறைவனிடம் செல்ல வேண்டுமானால் பாவங்கள் அறவே நீங்கப் பெற்று,
புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும். எனவே பாவங்கள் நீங்கிப் புண்ணியம்
அடைய அவ்வுடல் ஒருமுறையேனும் புனித தீர்த்தங்களில் மூழ்கியிருக்க
வேண்டும். அவ்வாறு இல்லையேல், இறந்த பின்னராவது உடலை, மோட்சம்
கொடுக்கக்கூடிய தீர்த்தத்தில் சேர்க்க வேண்டுமென்று இந்துக்கள் நம்பினர்.
"பகீரதன் அவனது முன்னோர்கள் மோட்சம் அடையும் பொருட்டுத் தேவலோகத்தில்
ஓடிய கங்கையைப் பூமிக்கு வரவழைத்து, அதில் அவனது முன்னோர்களின் அஸ்தியைக்
கரைத்து அவர்களை மோட்சம் அடையச் செய்தான். அதிலிருந்து இந்துக்களும்
கங்கையில் கரைக்கப்பட்ட உடலுக்கு உரிய ஆன்மா பாவம் நீங்கப் பெற்று
மோட்சம் அடையும் என நம்புகின்றனர். எனவே தங்களது முன்னோர்கள் மோட்சம்
அடையும் பொருட்டு, அவர்களின் அஸ்தியைக் கங்கையில் கரைத்து வருகின்றனர்."
இறந்தவர்களின் உறுப்புகளின் ஏதேனும் ஒரு சிறு பகுதியையாவது
திருப்பூவணத்திலுள்ள மணிகுண்ட தீர்த்தத்தில் சேர்க்க வேண்டும் எனத்
திருப்பூவணப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
"முந்தொரு காலந்தன்னின் மொழியினோர் கங்கமங்கந்
தந்தி டந் தணனங்கத்தைத் தசையென நசையிற் கொண்டே
யந்த நற்றீர்த்தத் திட்டாங்க கன்ற தக்கணத்தினன்னோ
னிந்த நற்றீர்த் தந்தன் னாலிருங் கதியே றினானால் " (பாடல் 446)
ஓர் அந்தணனின் அங்கமானது ஒரு கழுகினால் தூக்கிவரப்பட்டு இத்தீர்த்தத்தில்
வீழ்ந்தது. அதனால் அந்த அந்தணன் மோட்சம் பெற்றான். அறியாமல் அங்கம்
சேர்ந்தவருக்கே மோட்சம் என்பதால், அறிந்து திதி செய்தால், நீத்தார்கள்
நற்கதி அடைவது நிச்சயம் என்று திருப்பூவணப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் ஓர் உடலுறுப்பாவது இங்குள்ள மணிகன்னிகா தீர்த்தத்தில்
சேருமானால் அதன் உடலுக்கு உடையவன் நற்கதி அடைவான் என்ற இந்த நம்பிக்கை
எகிப்தியர்களின் நம்பிக்கையோடு இயைபுடையதாக உள்ளது.

நீத்தார்களைப் போற்றும் பண்பு பண்டைக் காலந் தொட்டு இந்துக்களிடம்
இருந்துவருகிறது. இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் "நடுகல்" வைத்து
வணங்கும் வழக்கம் தமிழகத்தில் உள்ளது. நிரைகவர்ந்த வெட்சியாரிடமிருந்து
ஆநிரைகளை மீட்கும் போது இறந்துபட்ட வீரர்கட்கு நடுகல் இட்டு பெயரும்
பீடும் எழுதி வைத்து வழிபட்டுள்ளனர். வழிபாட்டில் கள் வைத்துப்
படைத்தலோடு உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கமும் இருந்துள்ளது. இதனை,
"முனையாத் தந்து முரப்பின் வீழ்ந்த
வில்லோர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லான் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரு்உப் பலி கொடுக்கும்"
என்பது உணர்த்தும், இவ்வழக்கத்தை,
"என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின்ற வர்"
என்ற திருக்குறளும் உறுதிப்படுத்துகிறது. இந்து சமயத்தில், சீவசமாதியின்
மீதும் சிவனடியார்களைப் புதைத்த சமாதிகள்மீதும் சிவலிங்கம் வைத்து
வழிபாடு செய்வதும் இக்கோட்பாட்டின் ஓர் வடிவமே. ஆக மடிந்தவரைப்
போற்றுவதும் உணவளிப்பதும் வணங்குவதும் ஆகிய செயல்கள் சமயங்களில்
சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன.

"கதிர்விடு மணிகுண்டத்தின் கரையினிற் கடவுண் முன்னர்ப்
பிதிர் மகிழ் சிராத்தத்தோடும் பிண்ட நற் றிலோதகத்தை
விதிமுறை பிதிர் கட்காற்றின் வெஞ்சுடர்ப் பரிதிவானோன்
மதி தரு வாழ்நாள்காறு மனமிக மகிழ்ச்சி யுண்டால்" (பாடல் 443) என்ற
பாடலில் இக்கருத்து வலியுறுத்தப்படுவதைக் காணமுடிகிறது. திருப்பூவணத்தில்
நீத்தார்களுக்கு எள் ஆகியவற்றை முறைப்படி வழங்கினால் நீத்தார்களது மனம்
மிக மகிழ்ச்சி அடையும் என்று கூறப்பட்டுள்ளது. திருப்பூவணம்
பிதிர்மோட்சபுரி என்று புகழ்ந்து பாடப்பெற்றுள்ளது. இக்கருத்துக்கள்
சமயம் தோன்றுவதற்கான காரணிகளாக அமைகின்றன. இவற்றால் முன்னோர் வழிபாடு,
சமயங்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணிகளுள் ஒன்று என்பது தெளிவாகும்.

இயற்கை வழிபாடு
"தொடக்க காலத்தில் இயற்கை மனிதனுக்கு ஒரு புதிராகத் தோற்றமளித்தது.
இருள், சூரியன், பாம்பு ஆகிய இயற்கைப் பொருள்கள் மனிதனுக்கு புதிராகவும்
இருந்தன. அதே நேரத்தில் அச்சத்தையும் ஊட்டின. ஆயினும் மனிதன் இயற்கையே
தனக்கு உணவை அளிக்கிறது என்று அறிந்து கொண்டான். அச்சமும் உணவுத்
தேவையும் கொண்ட மனிதன் இயற்கையின் பேராற்றலை வணங்கத் தலைப்பட்டான்.
கூட்டு உழைப்பினால் உணவைத் தேட மனிதன் முற்பட்டபோது ஆற்றல் மிகுந்த
இயற்கையை தனக்கு இணங்க வைக்க முயன்றான்."

இயற்கை வழிபாட்டிலிருந்து சமயம் உருவெடுத்தது என்பதும் ஒரு
கோட்பாடாகும். இக் கோட்பாட்டிற்கு, இந்தியாவின் பழமையான வேதங்களில்
நிறையச் சான்றுகள் உள்ளன. மிகப் பழமையானதாகக் கருதப்படும் ரிக்வேதம் இது
பற்றிக் குறிப்பிட வில்லை. சூரிய உதயம் மற்றும் மறைவு, புயற் காற்று,
மின்னல், இடி, இயற்கையின் வனப்பு ஆகியவை மனிதனிடம் தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளன. பஞ்ச பூதங்கள், மித்திரன், வருணன், இந்திரன்,
சூரியன், சோமன் ஆகிய தெய்வங்கள் இயற்கையைப் பின்பற்றியே வழிபாடு
செய்யப்படுகின்றன. அவர்களின் குணம், தோற்றம், உணவு, ஆற்றல், மக்களுக்கு
அருளும் தன்மை போன்ற விளக்கங்களும் தோன்றலாயின. இயற்கைச் சக்திகளைப்
பிரித்துப் பார்த்துப் பெயாpட்டு அழைத்தனர். அச்சக்திகளைக் குறிப்பிட்ட
தெய்வங்கள் ஆட்சி செய்கின்றன என்று நம்புகின்றனர். இது ஒருபுறமிருக்க,
அத் தெய்வங்களின் மகிமைகளை உணரஉணர அவற்றை வேறுவேறு தத்துவங்களாகவும்
கோட்பாடுகளாகவும் அக்காலத்திய முனிவர்கள் கூறியுள்ளனர்.

இதைப் போன்றே பண்டைய கிரேக்கர்கள் தங்கள் சமயத்தை உண்டாக்கியிருந்தனர்.
பண்டைய ஜெர்மானியர்களும் ஸ்காட்லாந்து நாட்டவர்களும் இம்முறையில்தான்
சமயங்களை வளர்த்து வந்துள்ளனர்.

இந்து சமயத்தில், குறிப்பாகத் தமிழகத்தில், மரங்களின் கீழே தெய்வங்கள்
உறைகின்றன என்ற நம்பிக்கை சங்ககாலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது.
"தெய்வம் சேர்ந்த பராரை வேம்பின்
கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப்
புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறை"
என்ற பாடலில் வெட்சிவீரர்கள் வேம்பினடியிற் குடி கொண்டிருந்த
தெய்வத்திற்குக் கொழுப்பா எறிந்து வழிபட்டனர் என்று கருவூர் கதப்பிள்ளைச்
சாத்தனார் குறிப்பிடுகிறார்.
"கள்ளி நீழற் கடவுள் வாழ்த்தி"
என்ற புறநானூற்றுத் தொடரில் கள்ளிச்செடியின் நிழலில் கடவுள் நிலை
கொண்டிருந்தமையையும் அதனை மக்கள் வழிபட்டமையையும் அறியமுடிகிறது.
"அப்பரிசந்த வருந்தவ முழந்தே யாயிரமாண்டு மாண்டதற்பி
னொப்பரிதாய வுமையவள் வளர்த்த வோங்கு மந்தார மூலத்திற்
பைப்பெரும் பாந்தட் பாதலத் துதித்துப் படியினைக் கீண்டு மேன் முளைத்துத்
திப்பியமாகத் திருவருளுருவாய்ச் சேர்ந்த தோர் திகழ் சிவலிங்கம்" (1162)
என்று திருப்பூவணத்தில் பாரிசாத மரத்தின் அடியிலேயே சிவலிங்கம் தோன்றியது
என்ற கருத்தும் இத்துடன் தொடர்புடையதாய் உள்ளது.
இவற்றால், இயற்கையை வணங்கும் முறையால் சமயங்கள் தோன்றின என்ற கருத்து
ஏற்புடையதாகிறது.
காலப்போக்கில் முன்னோர்களை வணங்குதல், இயற்கையை வணங்குதல் ஆகிய இவ்விரு
தத்துவங்களும் இணைந்து "வணங்குதல்" என்னும் புதிய தத்துவமாக
மலர்ந்துள்ளது.

வணங்குதல்
"தென்புலத்தார் தெய்வம்" எனத் திருவள்ளுவர் குறிப்பிடுவதுபோல்,
இறந்தவரை வணங்குதல், இயற்கையை வணங்குதல் ஆகிய இவ்விரண்டு
கொள்கைகளுக்கும் பொதுவானது வணங்குதல் என்னும் பண்பாகும். இறந்தவர்களை
வணங்குவதினாலும், இயற்கையை வணங்குவதினாலும் உடலுக்கும் உள்ளத்திற்கும்
அப்பாற்பட்ட நிகழ்வுகளையும் சக்திகளையும் ஆட்படுத்த முடியும் என்ற எண்ணமே
அது. ஒரு செயல் நடைபெற்றதற்கான காரணத்தை அறியமுடியாதபோது, அச்செயல்,
ஒன்று "முன்னோர்களின் ஆன்மாக்களின் செயல்பாட்டினால் நடக்கிறதென்றும்"
அல்லது "இயற்கைச் சக்திகளுக்குத் தலைமை வகிக்கும் தெய்வங்களால்
நடக்கிறதென்றும்" நம்புகின்றனர். அச்செயல்கள், தனக்குச் சாதகமாக நடைபெற
வேண்டுமென்று விரும்புகின்றனர். இந்த விருப்பத்தை முன்னோர்களின்
ஆன்மாவோ அல்லது இயற்கைத் தெய்வங்களோ நிறைவேற்றும் என நம்புகின்றனர்.
"தெய்வங்கள், வழிபடுபவர்களைத் துன்பங்களிலிருந்து காக்கின்றன" என்ற
நம்பிக்கை தமிழரிடம் உண்டு. "வழிபடு தெய்வம் நிற்புறங்காப்ப" எனத்
தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். வழிபடு தெய்வத்தைப் பற்றிய குறிப்பு
இல்லை. மதுரை நகரைக் காத்து வந்த "மதுராபுரித் தெய்வம்" பற்றிய
குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.
"சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக் குவளை உண்கண் தவளவாள் முகத்தி ...
... ... பொற்கோட்டு வரம்பன் பொழியிற் பொருப்பன் குலமுதற் கிழத்தி ...
... மாபெருங் கூடல் மதுரா பதிஎன்பேன்" என்று மதுராபதித் தெய்வம் கட்டுரை
காதையில் வருணிக்கப்பெற்றுள்ளது.
இதனால், முன்னோர்களை அல்லது தெய்வத்தை உரிய வழியில் வணங்கினால் அவர்கள்
அச்செயலைச் தங்களுக்கு ஏற்புடையதாய்ச் செய்து முடிப்பர் என்று
நம்புகின்றனர். இத்தகைய கோட்பாடுகளே சமயங்களின் அடிப்படையாய் உலகம்
எங்கும் விரவி உள்ளது.
"குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வ
மடிதற்றுத் தான்முந் துறும்"
"குடித்தனத்தின் நிலைமையை உயர்த்துவேன் என உறுதி கொள்ளும் ஒருவனுக்கு
உதவி செய்யத் தெய்வம் கச்சை கட்டிக் கொண்டு தானே முன்வரும்" என்ற
இத்திருக்குறள் தெய்வங்கள் மனிதர்களுக்கான பணிகளைச் செய்கின்றன என்ற
கருத்திற்கு ஆதாரமாக உள்ளது. சங்கப் பாடல்களில் சிவனைப் பற்றியும்
திருமாலைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன.

Comments

Post a Comment