மந்திரம் ப்தில்

பிரம்மசரியம்த்திற்கும், மந்திரங்களுக்கும் அப்படி என்ன நெருங்கிய உறவு? என்று என்னிடம்
சிலர் கேட்கிறார்கள் கேட்காதவர்களும் கேட்க நினைக்கிறார்கள் அவர்களுக்கு பதில்
சொல்லவே விரும்பி இந்த பதிவை தருகிறேன்


நமது உடல் இந்த பூமியில் நடமாட உயிர் என்பது அவசியம் தேவை. இது எல்லோருக்கும்
தெரிந்த விஷயம் தான். அப்படி என்றால் உயிர் என்றால் என்ன? அதன் வடிவம்
எப்படியிருக்கும்? அது ஒரு உடலில் எங்கேயிருந்து செயல்படுகிறது என்பது நம்மில்
எத்தனை பேருக்கு தெரியும். யாராவது அதைப்பற்றி யோசித்துயிருப்போமா அப்படியே
எவனாவது ஒருவன் சிந்தித்து இந்த கேள்விகளை கேட்டால் அவனே வேலை வெட்டியில்லாத
பைத்தியகாரன் என்று தானே ஏளனம் செய்வோம். அது எல்லாம் கிடக்கட்டும். உண்மையில்
உயிர் என்றால் என்ன?


நாம் உலக அதிசயம் என்று எதை எதையோ சொல்கிறோம். பார்த்து வாய்பிளந்து மலைத்தும்
போகிறோம். எங்கோ அமெரிக்காவில் நடப்பதை ஒரு சின்ன பெட்டிக்குள் நம் வீட்டு
வரவேற்பு அறையில் வைத்து பார்க்கும் படி செய்த மனித மூளையின் திறமையை பார்த்தும்
வியக்கிறோம். மனித மூளையே ஒரு வியப்பான பொருள் என்றால் அந்த மூளையை இயக்குகின்ற
உயிர் வியப்பிலும் வியப்பான ஒன்றாகும்.


பத்து டன் பாரம் ஏற்றிய லாரி டயரில் இருக்கும் காற்று பலத்தால் தான் ஓடுகிறது.
அந்த டயரில் ஒரு சின்ன ஆணி குத்திவிட்டால் ஓடுகின்ற லாரி உட்கார்ந்து விடும்.
ஆனால் நமது உடம்பிலோ நவதுவாரம் என்ற ஒன்பது ஓட்டையிருக்கிறது. அப்படியிருந்தும்
உயிர் என்பது வெளியில் செல்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இது தான் மிகபெரிய உலக
அதிசயம்.


சரி இப்படி ஓடுகின்ற உயிர் காற்றா? நிச்சயம் காற்று அல்ல. ஆனால் உயிர் உடம்பை
பற்றி கொள்வதற்கு காற்று அவசியம் தேவை. எனவே காற்று என்பது உயிர் உபயோகப்படுத்தி
கொள்ளும் ஒரு பொருள் தான். மேலைநாட்டு விஞ்ஞானம் உயிரை ஒருவித ரசாயணம் என்கிறது.


அந்த ரசாயணம் உடல் முழுவதும் பரவி இருந்து தான் சரீரத்தை இயக்குகிறது என்றும்
சொல்கிறது. ஆனால் நம்நாட்டு சித்தர்கள் உடலில் உள்ள ரசாயணத்தை இயக்குவதே உயிர்
தான். எனவே உயிர் ராசாயணமல்ல என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் உயிரையும் சத்தம்
என்றே சொல்கிறார்கள். அதனடிப்படையில் தான் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு
என்றும் பாடுகிறார்கள்.
நமது இந்துமதம் கடவுளையும் கூட ஒரு சத்தம் என்றே சொல்கின்றது. அதாவது ஓம் என்ற
பிரணவ நாதம் தான் கடவுள் என்பது நமது மதத்தின் ஆதார கருத்து, அதனால் தான் இறைவனை
நாத விந்தும் என்றும், மந்திர சொரூபம் என்றும் ரிஷிகள் அழைத்தார்கள்.


நாத வடிவான கடவுளின் ஒரு சிறு அம்சமே மற்ற உயிர்களாகும். இதை தெளிவாக உணர்ந்து
கொள்ள நமது ரிஷிகள் மிக சுலபமான ஒரு வழியை நமக்கு காட்டியிருக்கிறார்கள். அதாவது
படுக்கையில் தலையனை இல்லாமல் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொண்டு கைவிரல்களால் ஒரே
நேரத்தில் காதுகளையும் மூக்கையும் மூடிக்கொண்டு கண்களை மூடினால் நமது மண்டைக்குள்
‘ம்’ என்ற ஒரு சத்தம் கேட்கும். இந்த ‘ம்’ ஒலிதான் பிரணவம். இது தான் பிரபஞ்சம்
எங்கும் நிறைந்துள்ளது. அது தான் உயிர் என்று சொல்கிறார்கள். சகல உயிர்களும்
இறைவனின் வடிவம் என்று கூறுவதும் இதனால் தான்.


இந்த ‘ம்’ என்ற பிரணவ சத்தம் மண்டைக்குள் கேட்பதினால் உயிர் என்பது தலையில் தான்
இருக்கிறது என்று சிலர் சிந்திக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. நமது மூலாதாரம் என்ற
நாபி கமலத்தில் அதாவது தொப்புளில் உயிர் சக்தியின் மூலம் இருக்கிறது. இங்கிருந்தே
உயிர் உடல் முழுவதும் வெளிச்சம் போல் பரவியுள்ளது.


இந்த உயிர் எந்த அளவு பிரகாசத்தோடு இருக்கிறதோ அந்தளவு ஒரு ஜீவன் ஆளுமை தன்மை
அல்லது தேஜஸ் உடையதாக இருக்கிறது. உயிரின் ஒளி என்பது அது பற்றி நிற்கும்
மூலத்தின் பலத்தை பொறுத்தே அமைகிறது. அந்த பலம் உடலுக்கு இந்திரிய சக்தி மட்டுமே
கொடுக்கிறது.



இந்திரியமானது சக்தியை இழக்கும் போது உயிரின் பலம் குறைந்து அதன் விளைவாக
மூளையின் செயல்பாட்டில் நிதானம் தப்புகிறது. இதனால் மனம் அலக்கழித்து மனிதனை
படுகுழியில் தள்ளிவிடுகிறது. இந்திரிய அடக்கமானது எந்தளவு இருக்கிறதோ அந்தளவு ஒரு
மனிதனின் சக்தி அமைகிறது.

மனம் ஒரு நிலைபடவில்லை என்றால் மந்திரத்தின் நிஜ அதிர்வை மனிதனால் கொண்டு வர
இயலாது. அப்படி இயலாத போது மந்திரங்களும் சக்தி இழக்கிறது. மனிதனும் தடுமாறி
உணர்வு என்ற பாதாளத்திற்குள் விழுந்து விடுகிறான். எனவே தான் மந்திர
பிரயோகத்திற்கு பிரம்மசரியம் மிக அவசியம் என்று சொல்லப்படுகிறது.

Comments