காவிரிக் கரையிலிருந்து கங்கை வரை - பகுதி - 2.

அருள்மிகு மகிமாலீஸ்வரர் - ஈரோடு.

விடியற்காலை 5 மணிக்கு சரியாக பேருந்து புறப்பட்டு விடும் என்று தலைவர் கூறிவிட்டார். என் கணவரின் மூத்த சகோதரர்தான் என்றாலும், உறுதியாகக் கூறிவிட்டார், யாருக்காகவும் பேருந்து ஒரு நிமிடம் கூட காத்திருக்காதாம். ஒரு சிலருக்காக இரண்டு பேருந்தில் இருக்கும் மொத்த பேரையும் காக்க வைக்க முடியாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.[ அதுவும் நியாயம்தானே ]

நாங்களோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தினால், சென்னையிலிருந்து, முதல் நாள் இரவு, சேரன் விரைவு வண்டியில் தான் புறப்பட்டு வருவதாகத் திட்டம். பயணச் சீட்டும், உறுதியாக வில்லை. வெயிட்டிங் லிஸ்ட்டில், 2, 3 என்று இருந்ததால், எப்படியும் கன்ஃபார்ம் ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் வந்து விட்டோம் ரயில் நிலையத்திற்கு. அங்கு சென்று பார்த்தால் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை. என் கணவர் ஒவ்வொரு டிடிஆர் பின்னாலேயும் அலைந்து சலித்துப் போய், இறுதியாக வண்டி புறப்படும் நேரம் ஆகிவிட்ட படியால், ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்டில் ஏறிவிட்டோம்

அங்கிருந்த டிடிஆரிடம் கேட்கலாம் என்றால், அப்பொழுதுதான் அவர் ஒரு பெரியவரை கோபமாக திட்டி, கீழே இறங்கச் செய்தார், சீட் இல்லையென்று. என்னவரும் மெதுவாக தயக்கத்துடனே டி.டி.ஆரை நெருங்கி, மெதுவாக, வெயிட்டிங்.................என்று ஆரம்பிப்பதற்குள்,

‘ சீட்டெல்லாம் இல்லை. சும்மா உயிரை வாங்காதீங்க சார்”..............[ பாவம் மனைவியிடம் கடுமையாக சண்டை போட்டுவிட்டு வந்திருப்பாரோ என்னவோ],

அவரும் சரி வா கீழே இறங்கலாம் என்றார், அதற்குள் வண்டி புறப்பட சிக்னல் போட்டு விட்டார்கள். நமக்கும் இந்த ரயிலை விட்டால் அடுத்த நாள் காலை திருக்கூட்டத்துடன் யாத்திரை செல்லும் அரிய வாய்ப்பு தவறி விடும். வேறு வழியே, இல்லை. என்ன ஆனாலும் போயே ஆக வேண்டும் என்ற உறுதி மட்டும் இருந்தது இருவரிடமும்.

டி.டி ஆர், எங்களை ஒரு மாதிரி முழித்துப் பார்த்துவிட்டு, “இதா - அப்படி ஓரமா நில்லுங்க------பாக்கலாம்”, என்று கழிப்பறை இருந்த பகுதியைக் காட்டினார்.

என்னவரும், சரி உள்ளே ஏதாவது சீட் காலி இருக்கும் போலிருக்கிறது, வந்து போட்டுக் கொடுப்பார், நாமும் போட்டுக் கொடுத்து விடலாம், என்றார். ஒரு 30 நிமிடம் நின்று பார்த்தோம், வரிசையாக ஒவ்வொருவராக கழிப்பறை நோக்கி வரும் போதும், நாங்கள் சுவரோடு, சுவராக பல்லியைப் போல ஒட்டிக் கொள்ள வேண்டும். டாய்லெட் திறந்தவுடன், வரக்கூடிய துர்நாற்றத்தையும் சகிக்க முடியாமல், மூச்சை உள்ளிழுக்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.,

நின்று, நின்று கால்வலி வேறு. சரி ஒரு சீட்டில் இருவர் உட்கார்ந்து அளவளாவிக் கொண்டுதானே இருக்கிறார்கள். அப்படியே ஓரமாக கொஞ்சமாக உட்கார்ந்து கொள்ளலாம் என்று, என்னவர் நான் நிற்பது கண்டு ,மனம் பொறுக்காமல் என்னைக் கட்டாயப் படுத்தி அந்த சீட்டில் உட்கார வைத்தார். அப்படியே ஒண்டிக் கொண்டு, ஓரமாக, [அடுத்தவர் சீட் என்ற சங்கோஜம்] உட்கார்ந்திருந்தேன். என்னவர்க்கு, அப்பாடி என்று ஒரு பெருமூச்சு, எனக்கு இடம்பிடித்து உட்கார வைத்த திருப்தி வேறு. ஒரு 15 நிமிடம் கடந்திருக்கும், என் சீட்டில் இருந்த இருவரும் அப்படியே திரும்பி என்னைப் பார்த்தார்கள். காரணம் எனக்குப் புரிந்தாலும், நானும் பார்க்காதது போல தலையைத் திருப்ப முயன்றேன். .....பார்த்தால் எழுந்து கொள்ள வேண்டிவருமே.........

ஆனால் அவர்கள் அதற்கெல்லாம், சளைத்தவர்கள் அல்ல, ஏன்னா அவர்கள் கன்ஃபார்ம்ட் டிக்கெட் வைத்திருப்பவர்கள் ஆயிற்றே. முகத்துக்கு முன்னாடி வந்து, நாங்க படுக்க வேண்டும் என்றாரே பார்க்கலாம். வேறு வழி கம்முனு எழுந்து பழைய இடத்திற்கே வந்துவிட்டேன்.

இதற்குள் டி.டி.ஆர் அண்ணாச்சி அப்படியே சுற்றி நோட்டம் விட்டுக் கொண்டே வந்தவர், எங்களருகில் வந்தவர், சீட்தான் போட்டுக் கொடுக்கப் போகிறார் என்று பார்த்தால்,

“ இங்க பாருங்க, ஓபன் டிக்கெட் வாங்கிட்டு, ரிசர்வேசன்ல ஏறியிருந்தா, ஒழுங்கா அடுத்த ஸ்டேசன்ல நீங்களே கீழே இறங்கிடுங்க, என் பிராணனை வாங்காதீங்க என்றார். என்னவர் டிக்கெட்டை எடுத்து காட்ட முயற்சிப்பதற்குள், இன்னும் ஒரு முறை அதே டயலாக்கை, அதே தொனியில் சொல்லி விட்டு, விடுவிடுவென சென்று விட்டார். மக்கள் எல்லாம், விதவிதமாக குறட்டை விட்டுக் கொண்டு, ஆனந்தமாக தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு இன்று சிவ ராத்திரி என்று ஆண்டவன் முடிவு போல் உள்ளது என்று ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டு, நின்று கொண்டிருந்தோம்.

அப்போது, அப்படியே நின்று கொண்டே லேசாகக் கண்கள் சுழற்றும் வேளையில், ஹலோ என்ற குரல் கேட்டு, நாங்கள் இருவரும் திக்கென்று திரும்பிப் பார்த்தோம். அங்கே, ரயில்வே போலீசுடன், ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டராக இருக்கும் என நினைக்கிறேன், மஃடியில் இருந்ததால் தெரியவில்லை, அருகில் நின்று கொண்டு, ஏன் இங்கு நிற்கிறீர்கள், டிக்கெட்டை கொடுங்கள் என்றார்.

என் கணவரும் பேசாமல், டிக்கெட்டை எடுத்துக் கொடுக்கவும், அவர் வாங்கிப் பார்த்துவிட்டு, செகண்ட் ஏ.சி. வாங்கிட்டு, என் இந்த சாதா கோச்சில் எறினீங்க, என்றார்.நடந்ததை விளக்கிக் கூறவும், அவரும் பரிதாபமாக எங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நீங்க பாயிண்ட் டூ பாயிண்ட் டிக்கெட் எடுத்திருந்தால் உங்க டிக்கெட் கட்டாயம் கன்ஃபார்ம் ஆகியிருக்கும், திருப்பூர் டூ சென்னை என்று எடுத்திருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. கொஞ்சம் யோசித்திருந்தால், இந்த சிரமத்தைத் தவிர்த்திருக்கலாமே என்றார் அக்கரையாக.

அவரும் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். பழையபடி சுவரி சாய்ந்து செட்டில் ஆனோம். அவர் மெதுவாக அப்படியே பெட்டியின் மீதே உட்கார முயற்சித்தார். இதற்குள் முன்பு திட்டிவிட்டுப் போன டி.டி.ஆர்., வந்து, ஏன் சார் முன்னாடியே சொல்ல மாட்டீங்க ஏசி டிக்கெட்டுன்னு, பாவம் இப்படி நின்னுகிட்டு வரீங்களே, என்றார். அந்த கம்பார்ட்மெண்ட் போங்க சீட் கொடுப்பாங்க என்றார், கையை நீட்டியபடியே. நாங்களும் பெட்டியை தூக்கிக் கொண்டு, ஓடும் ரயிலில் நடனம் ஆடிக் கொண்டே அடுத்த பெட்டி சென்று அடைந்தோம். வாசலிலேயே அந்த பரிசோதகர் வரவேற்று, அதோ அங்க ஒரு சீட்டும், இங்க ஒரு சீட்டும் இருக்குது பாருங்க, என்று பெரிய மனது பண்ணி சொல்லிவிட்டுச் சென்றார்.

மணி இரவு 1 மணி இருக்கும். அரக்கோணம் தாண்டியாகிவிட்டது. இனிமேல் தூங்கிவிட்டால் ஈரோட்டில் இறங்க தவறி விடுவோம் என்ற அச்சத்தில் தூங்காமலே இருக்க முயற்சித்தேன். நான் விழித்துக் கொண்டிருக்கிற தைரியத்தில் அவர் ஆனந்தமாக தூங்க ஆரம்பித்து விட்டார்.

ஒரு வழியாக இரயில் விடியற்காலை ஈரோடு வந்து சேர்ந்தது. மணியைப் பார்த்தால், 4.10. அடக் கடவுளே, இவ்வளவு சிரமப்பட்டு வந்து, பட்ட பாடெல்லாம் வீணாகிவிடும் போலிருக்கிறதே என்ற பயம் வந்து விட்டது. 5 மணிக்குள் வீடு சென்று, குளித்து, உடை மாற்றி, பேக்கிங் செய்து கொண்டு கிளம்ப வேண்டும். இது சாத்தியமா என்று டென்சன் ஆகிவிட்டது. இதற்குள் ஆரூரன் [ அவர் அண்னார் மகன் ] போன் செய்து எங்கிருக்கிறீர்கள்,எல்லோரும் கிளம்பி விட்டார்கள் என்றார். நாங்களும் இதோ வந்து கொண்டேயிருக்கிறோம் என்று சொல்லி விட்டோம், இரயில் நிலையத்திலிருந்தே. வீட்டிற்கு தூரம் ரொம்பவும் அதிகமில்லையாதலால், ஏதோ தைரியம், எப்படியும் சரியான நேரத்தில் கிளம்பிவிடலாம் என்று. வீடு வந்த சேர்ந்த போது மணி 4.40. ஆரூரன் திரும்பவும் போன். கோவிலில் பூசை ஆரம்பிக்கப் போகிறார்கள், இன்னும் வந்து சேரவில்லையே என்று. 5 மணிக்கு கிளம்பிவிடுவார்கள் என்றார்.

பரக்க பரக்க குளித்து, பெட்டியில் அப்படியே எதையோ அள்ளிப் போட்டுக் கொண்டு, கிளம்பினால், மணி 4.52. இன்னும் 8 நிமிடத்தில் போய் சேருவதென்பதெல்லாம் நடக்கக் கூடிய காரியமாகத் தெரியவில்லை. வீட்டை பூட்டி வெளியில் வந்து கொஞ்ச தூரம் வந்த பிறகுதான் கேமராவை வீட்டிற்குள்ளேயே வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அவரிடம் சொன்னால் கட்டாயம் வண்டியை திருப்ப மாட்டார், என்ன செய்வது என்றே புரியவில்லை, அதற்குள் திரும்பவும் ஆரூரன் போன், இதோ வந்துட்டோம் என்று சொன்னோமே தவிர அவர் மறு முனையில் என்ன சொன்னார் என்றே கேட்கவில்லை.

பேருந்து கிளம்புவதற்குள் சென்று சேருவோமா, மகிமாலீஸ்வரர் அருள் புரிவாரா? மனது லப்....டப்....லப்....டப்............

Comments