AiyaRappan-ThiuvaiyaRu

ஓம்.
திருவையாறு ஐயாறப்பர்.

சூரியனுக்குப் பொங்கலிட்டு வழிபாடு செய்வது , பொங்கல் பண்டிகை. ஆனால் அந்த சூரிய பகவானே, தஞ்சையை அடுத்த திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோயிலுக்கு தனது மனைவிமார்கள் உஷா தேவி, பிரத் உஷா தேவி ஆகியோருடன்வந்து தங்கியிருந்து தனது பெயரால் அமைந்த சூரிய தீர்த்தத்தில் நீராடி சாமி தரிசனம் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை தேவாரம் பாடிய ஆசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசர், “ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு” என்று தனது பாடலில் குறிப்பிட்ட்டுள்ளார். இன்றும் திருவையாறு ஐயாறப்பர் கோயில் சோமாஸ்கந்தர் மண்டபத்தில் சூரியன் இரு கரங்களிலும் தாமரை மலர் ஏந்தி நிற்க அவரது இருபுறமும் சூரியனின் தேவியர் இருவரும் நிற்பதைப் போன்ற ஓவியம் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம். தென் கைலாயம் என்ற சிறப்புப் பெயரும் திருவையாறு ஐயறப்பர் கோயிலுக்கு உண்டு. சமயக் குரவர்களில் ஒருவரான அப்பருக்கு சிவ பெருமான் திருவையாறில் கயிலைக் காட்சியினைக் காட்டி அருள் புரிந்தாகவும், இதனால் வடக்கே காசிக்கு தீர்த்த யாத்திரை செல்ல முடியாத பக்தர்கள் தென் கயிலாயமான திருவையாறு வந்தால் காசிக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது. சூரியனுடைய வழியில்வந்த ஸ்ரீ ராமன் இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனை பூஜித்து வணங்கினார்.
பொதுவாக சிவாலய்யங்களில் நவக்கிரகங்கள் வேறு வேறு திசையில் இருக்கும். இதற்கு நேர் மாறாக திருவையாறில் நவக்கிரகங்களில் ஏனைய எட்டு கிரகங்கள் சூரியனையே பார்த்து நிற்கின்றனர்.
பொங்கல் திருநாளில் ஐயாறப்பர் பாரிவேட்டை என்ற விழா பங்கேற்க கால்நடைகளை ஓட்டிச் செல்வது போன்ற காட்சி கோயிலின் திருச் சுற்ரு மாளிகையில் வரையப்பட்டுள்ளன. இந்தச் சித்திரங்கள் 17-ஆம் ஆனைச் சேர்ந்தவை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இக்கோயில் தஞ்சாவூரிலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் சந்திரனுக்குரிய தலமான திங்களூர் அமைந்திருக்கிறது திங்களூரில் தரிசிப்பவர்கள் இங்கு வந்து ஐயாறப்பனை தரிசித்தால் தான் முழு பலன்பெறமுடியும் என்பது மரபு. சந்திரன் சஸ்யாததி பதி.. சூரியனின் கதிரை வாங்கித் தான் அருள்பாலிக்கிறான். எனவே, திருவையாறில் சூரியன் வழிபட்டதாலும், ஸ்ரீ ராமன் வழிபட்ட தலமானதால் இங்கு வழிபாடு செய்தல் சிறந்த பயனுடையது. இத்தலம் தரூமபுரம் ஆதீனத்திற்குச் சேர்ந்தது.
நன்றி முனைவர் குமாரசாமி தம்பிரான், தருமை ஆதீனம்.

Comments