அங்கயற்கண் நாயகி மதுரை மீனாட்சி

அங்கயற்கண் நாயகி மதுரை மீனாட்சி.# 2

''அங்கயற்கண்ணியே, ஆலவாய் வந்து உன்னை மணக்கிறேன்'' என்று ஈசன் இயம்பினான்.
போருக்குச்சென்ற கன்னி,பொங்கும் காதலுடன் நாடு திரும்பினாள்.
தன் கிளியைக் காதல் தூதாக அனுப்பினாள்.

மதுரையில் மண விழா.
காதல் கொண்ட கன்னியைக் கல்யாணத்துக்கு முன்பே பார்த்து இரசிக்க, கைலாயநாதன்
கடம் பவனத்தில் ஒரு சுயம்புவாய் எழுந்தருளினான். பிரம்மதேவன் நடத்தி வைக்க,
திருமால்,திருமகளின் கைத்தலத்தை கைலாயநாதனிடம் பற்றித் தர,யோகநாதன்
மலைமகள் கழுத்தில் மங்கலநாணைப் பூட்டி போகநாதனாக மாறினான்.

அங்கயற்கண்ணியை மணந்தவுடன் ஈசனிடம் இருந்த ரிஷபக் கொடி,மீன் கொடியாக
மாறியது. பாம்புகள் பரிதிக் கதிராய் கதிராய் சுடர்விடும் அணிகலன்களாயின. கொன்றை
மாலை வேப்பம் தோலுடை பீதாம்பரம் ஆனது.சடைச் சந்திரன் வைர முடியாக மாறியது.

கைலாயநாதன் சுந்தரபாண்டியனாக மாறினான்.அவனது கணங்கள் அத்தனையும்
மானுட வடிவம் கொண்டன. காதல் தூது சென்ற கிளி,தடாதகையின் தோளில்
தொற்றிக்கொண்டது. ஈசன்,சுந்தரபாண்டியனாகவும்,ஈஸ்வரி மீனாட்சியாகவும் அரசுக்
கட்டிலில் அமர்ந்து ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.மதுரைக் கோயிலுக்கு வரும்
பக்தர்கள் எல்லாம் முத்லில் கிளி கொஞ்சும் மீனாட்சியைத் தரிசித்து விட்டே
சோமசுந்தரர் சந்நிதியை நாடுவர்.

மீனாட்சி சந்நிதிக்கு முன்பாக பொற்றாமரைக் குளம் இருக்கிறது. இந்தக் குளத்தில்
மலர்ந்த பொன் தாமரையைக் கொண்டு ஈசனை இந்திரன் வழிபட்டதால் குளத்துக்கு
பொற்றாமரைக் குளம் என்று பெயர்.இக்குளக்கரையில் ஒரு நாரைக்கு நற்கதி
அளித்தான் ஈசன்.அன்று முதல், பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் உட்பட எந்த
நீர்வாழ் உயிரனமும் கிடையாது என ஈசன் விதித்தான்.

8-4-2009 திருக்குட நன்னீராட்டு பெருவிழா கண்ட ஆலயம் கண்கொள்ள
அழகுடன் மிளிர்க்கிறது. சிற்பங்கள் சீர்செய்தும், வண்ணங்களின் பூச்சு மேலும்
மேலும் அழகையினை கூட்டுகிறது.


இந்தக் குளத்தில் தான் திருவள்ளுவரின் திருக்குறள்களை அங்கீகரித்து சங்கப்
பலகை மிதந்தது. பொற்றாமரைக் குளத்துக்கு ஆதி தீர்த்தம் எனவும், முக்தி தீர்த்தம்
என்றும், சிவகங்கை எனவும், உத்தம தீர்த்தம் என்றும் பல பெயர்கள் உண்டு.
அன்னையின் சந்நிதிக்கு வலப்புறத்தில் விநாயகரும்,இடது புறத்தில் முத்துக்குமார
சுவாமியும் கோயில் கொண்டுள்ளார்கள்.

பிள்ளைகளை வணங்கி விட்டு அன்னையின் முன் நின்று கண்மூடி,கை கூப்பி நின்று
அகிலாண்டேஸ்வரியை அகத்தில் வணங்கிக் கண் திறந்தால்
அட்டா.... என்னவொரு அற்புத தரிசனம்.
அன்னை மீனாட்சி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அவள் திருமேனியைப்
பிரமிப்பூட்டும் ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன.உயர்ந்த வலது கையில் பூச்செண்டின்
மீது வீற்று அன்னையை அனவரதமும் கொஞ்சும் பச்சைக் கிளி. தாழ்ந்த இடது கை,
வளைந்த இடுப்பை உரசித் தாண்டி அவள் திருப்பாதங்களில் பணியத் தூண்டும். அன்னை
மீனாட்சி ஓர் அழகுப் பெட்டகம்.அவளுடைய வசீகரமான திருவிழிகள் தாய் மீனைப்
போல குழந்தைகள் மீது எல்லையற்ற கருணையைப் பொழிகின்றன.அந்தக் கருணை
முகத்தைக் கண்ணுற்றத்ம்,காலம் காலமாக சேர்ந்து வந்த கவலையெல்லாம்
கரைந்தோடும்.

அன்னையின் சந்திதியிலிருந்து வடக்குப் பக்கம் சுவாமியின் சந்நிதிக்குப் போகும்
வழியில் ஏழடி உயர முக்குறுணிப் பிள்ளையார் அமர்ந்திருக்கிறார்.

கம்பத்தடி மண்டபம் என அழைக்கப்படும் மண்டபத்தில் நந்தியும், கொடிக் கம்பமும் அழகுற
அமைந்துள்ளன. இதற்கு எதிரே உள்ள சந்நிதியில் சொக்கலிங்கப் பெருமான் என்றும்
சோமசுந்தரர் என்றும், அழைக்கப்படும் ஈசன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்

ஈசனின் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் இந்த ஊரில்தான் அரங்கேறியுள்ளன. ஈசன்
எழுந்தருளியிருக்கும் கருவறை விமானம் இந்திரனால் வழங்கப்பட்டது.
எட்டு கல்யானைகளும்,முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்து நான்கு சிவகணங்களும்
தாங்கும் இந்தக் கருவறை போல வேறு எந்தக் கோயிலின் தனிச்சிறப்பு.
ஈசனின் பிரகாரத்தில் இடப்புறம் அமைந்திருக்கும் துர்க்கை காண்போரை மயக்கும் மோகனச்
சிரிப்பைக் கொண்டவள், சக்தி வாய்ந்தவள். நடராஜரின் கூத்தில் கால் மாற்றி ஆடிய வெள்ளி
அம்பலம் மதுரை மீனாட்சி கோயிலில் தான் உள்ளது.நடராஜருக்கு எதிர் நடனம் ஆடிய
பத்ரகாளிக்கு ஒரு பிரம்மாண்டமான சிற்பம் கோயில் சுவாமி சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ளது.

அற்புதமான வேலைப்பாடுகள் நிரம்பிய அகோர வீரபத்திரர் சிற்பமும்,பத்ரகாளி சிற்பத்துக்கு
அருகிலேயே அமைந்துள்ளது.தவிர, அக்கினி வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் சிற்பங்களும்
இரு வேறு தூண்களில் செதுக்கப்பட்டு காண்பவர் கண்களைக் கவர்கின்றன

Comments