ஜோதிர்லிங்க பூஜை

இறைவனை தீப ஒளியில் வணங்கும் நாள் தீபாவளித் திருநாள். தீபமிட்டு வணங்கும் நாள் கார்த்திகை தீபத் திருநாள். தீபத்தால் அவனது திருவுருவை எரிசுடராக்கி அவனை விஸ்வரூப மாகக் கண்டு தரிசிக்கும் இந்த சுப நாளில் முருகப்பெருமானாகவும், அவனது தந்தை ஈசனாகவும் வழிபடும் மரபு காலம் காலமாக இருந்து வருகிறது.
தீபத்தை தரிசித்தால் பாவங்கள் விலகும் என்று வேதங்கள் இயம்புகின்றன. அந்த தீபத்தால் இறைவனது ஆக்ரோஷ மான அக்னி வடிவில் காணும் நாள்தான் திருக்கார்த்திகைத் திருநாள். அன்று சிவபெருமானை ஜோதி வடிவாகத் தரிசிப் பதால் அவருடைய கருணையைப் பெற முடியும்.
ஜோதிர்லிங்க பூஜை : ஒரு விளக்கை ஏற்றும் போது அதில் விநாயகர், லக்ஷ்மி, விஷ்ணு, ஈசன், முருகன் என்று பல தெய்வங்களை வர்ணிப்போம். ஆனால், திருக்கார்த்திகை திருநாளில் சிவபெருமானை மட்டும் நினைத்து ஜோதி வடிவில் அவரைத் தரிசிக்க வேண்டும். சிவாகம முறைப்படி செய்யப்படும் இவ்வழி பாட்டையே மன்னர்கள் காலத்திலிருந்து
ஜோதிர்லிங்க பூஜை என்று செய்து வருகிறோம்.
சிவாலயங்களின் முன் மகாமண்டபத்தில் ஐந்து பெரிய அகல்களில் கிழக்கு முகமாகத் திரியிட்டு எண்ணெய் ஊற்றி சந்தனம், குங்குமம், மலரிட்டு அலங்கரித்து வைப்பார்கள்.
ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், அகோர ஹஸ்தயம் என்ற ஐந்து சிவமூர்த்தங்களை அவற்றில் ‘ஆவாஹனம்’ செய்து, கிழக்கு முகமாக வருண பகவானை நினைத்து பூஜை செய்து தீபங்களுக்கும், பூஜை திரவியங்களுக்கும் நீர் தெளிக்க வேண்டும்.


‘ஓம் ஆதார சக்தியே நம:
ஓம் அனந்தாசனாய நம:
ஓம் தர்மாய நம:
ஓம் ஞானாய நம:
ஓம் வைராக்யாய நம:
ஓம் ஐஸ்வர்யாய நம:
ஓம் பத்மாய நம:’
- என்று சொல்லி, வில்வம் அல்லது வெண்மலர்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்ட வேண்டும். பின்னர், பொரி உருண்டை, வெல்ல அடை, உப்பு அடை, வெண்பொங்கல் படைத்து, புஷ்பாஞ்சலி செய்து மங்கள ஆரத்தி செய்ய வேண்டும். ஆலயத்தில் உபதெய்வங்களாக விளங்கும் மூர்த்தங்களுக்கும், சிறு அகல் தீபங்களை இந்தப் பூஜையுடன் சேர்த்து ஏற்றுவது வழக்கம். பூஜை நிறைவடைந்ததும்,
‘இந்துநிவ பஞ்சமுக ஹஸ்த தச யுக்தம்
சூலபர டங்கமளி வஜ்ரமயம் ஸ்யாது
பாச வரதாங்குச மணிர்தகன வாமே
ஸ்வேத கமலாசன சதாசிவ ஸ்வரூபம்’
என்ற சிவ தியானத்தை மூன்று முறை சொல்ல வேண்டும். பின்னர் சிவாலயத்தைச் சுற்றி வந்து பிராகார தெய்வங்களுக்கு சிறு தீபத்தையும், ஈசன், அம்பிகை, கணபதி, முருகப் பெருமான் சன்னிதிகளில் பெரிய அகல் தீபத்தையும் ஏற்றவேண்டும். ஆலய வாசலுக்கு வந்து அங்கே பனை ஓலையால் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனைக்குத் தீபம் வைக்க வேண்டும்.

Comments