லிங்க வடிவான கூடை!

அடர்ந்த காடு; ஓங்கி வளர்ந்த மரங்கள்; எங்கும் பச்சைப்பசேல் என்ற காட்சி; பறவைகளின் கீச்கீச்; தெள்ளிய நீரோடை; நெளிந்தோடும் ஆறு; ஆற்றிலே கூட்டம் கூட்டமா மீன்கள்; கொண்டாடி மகிழத்தக்க சூழல். இப்படி ஓர் அற்புதமான சூழலில் அமைந்திருக்கிறது அந்த வனக் கிராமம். அதன் பெயர் குக்கே சுப்ரமண்யா. கர்நாடக மாநிலத்தில் இயற்கை வளத்தையெல்லாம் குழைத்துக் குழைத்து இறைவன் படைத்த அந்தச் சிற்றூரின் நடுவிலே எழிலோடு பொலிவாத் திகழ்கிறது குக்கே சுப்ரமண்யர் திருக்கோயில்!
"குக்கே’ என்றால் கன்னடத்தில் கூடை என்று பொருள். இந்த ஊர் இருக்கும் இடமான குமார பர்வதத்தில் பயங்கரக் காட்டுத் தீ ஒருமுறை பற்றியது. கதறிய உயினங்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடின. அதில் பாம்புகளும் பரிதவித்தன. பாடாப் படுத்திய வெம்மையில் துடிதுடித்துத் துவண்டன.
அக்காட்டு ஆதிவாசிகள் ஒரு கூடையில் பாம்பு களைச் சேகரித்தனர். அங்கிருந்த கோயிலில் அவற்றை விட்டனர். பாம்புகள் பிழைத்தன. கொண்டு சென்ற கூடையோ லிங்க வடிவு கொண்டது. அந்த லிங்கம் ‘குக்கே லிங்க தேவர்’ என்ற பெயரோடு விளங்குகிறது. அதனால் அந்த ஊருக்கும், ‘குக்கே’ என்ற அடை மொழி ஒட்டிக்கொண்டது.


பொதுவாக, அம்மன் ஆலயங்கள்தானே பாம்புகளுடன் தொடர்புடையனவா இருக்கும்? இங்கே தமிழ்க் கடவுளாம் முருகர், ‘குக்கே சுப்ரமண்யர்’ என்ற பெயரோடு நாகங்களுக்கு அபயம் அளிக்கும் அபூர்வம் நடந்திருக்கிறது.
நாகங்கள் என்றாலே புற்று இல்லாமலா? புற்றும் இருக்கிறது; புற்று தோன்றிய புனிதமும் இருக்கிறது. சுப்ரமண்யர் ஆலயத்துக்கருகிலேயே, ஆதி சுப்ரமண்யர் ஆலயத்தில் புற்றேதான் மூலஸ்தானத்தில் முக்கிய வழிபாட்டுருவமாகத் திகழ்கிறது.
வாருங்கள் குக்கே சுப்ரமண்யர் தலச் சிறப்புகளை யும், அருகிலேயே அவரது அருளாசியோடு தனி ஆலயத்தில் கோலோச்சும் புற்றினையும் தரிசிக்கலாம்!
தாருகாசுரன் மற்றும் சூரபத்மன் என்ற அரக்கர்கள் அகிலத்தையே ஆட்டிப்படைத்து, அக்கிரமங்களை அவிழ்த்துவிட்டனர். அருள் பெற வேண்டினர் மக்கள். வேலனாம் சுப்ரமண்யன் விழிகளிலே கோபம் கொப்புளித்தது. அசுரர்களை அண்ணலின் வாள் அழித்தது. கொன்ற வாளினை குக்கே சுப்ரமண்யா ஊர் அருகே ஓடும், ‘குமாரதாரா’ என்ற நதியிலே தூமை செய்தார். சுப்ரமண்யக் கடவுளின் பாதத்தை நனைத்த நதி, தூமையின் உச்சத்தைத் தொட்டது. பாவங்களைப் போக்கும் பாக்கியமும் அதற்குக் கிடைத்தது. இன்றளவும் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள், எழிலோடு சுழித்தோடும் நதியிலே முங்கி, உடலும் மனமும் புத்துணர்வால் மெருகேறிப் பின்னர் ஊரின் நடுவே ஒயிலோடு விளங்கும் ஆலயத்தை தரிசிக்கின்றனர். அருள முது உண்கின்றனர்.


சரி, அரக்கர்களை அழித்தாயிற்று. அண்ணலும் அவர் அண்ணன் கணபதியும் ஆசுவாசப் படுத்திக்கொள்ள அமர்ந்தார்கள். அதுவே ஆலயமும் ஆயிற்று. தேவர்கள் மகிழ்ந்தனர். தேவேந்திரன் தமது மகளான தேவசேனையை தேவதேவரான சுப்ரமண்யருக்குத் திருமணமும் செய்து வைத்தார். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்று தேவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழ்த்துரைத்தனர். அன்று முதல் தேவசேனாவுடன்திகழ்கிறார் சுப்ரமண்யர்.
கோயிலுக்குள் நுழையும் முன்பே பிரம் மாண்டமான தேர் நம்மை வரவேற்கிறது. இங்கிருக்கும் மரச்சிற்பங்கள் தல வரலாற்றைச் சொல்வதாக அமைந்திருக்கின்றன. கருவறையில் உள்ள புற்றும், அதன் முன்னே மயில் வாஹனராகக் காட்சி தரும் சுப்ரமணியரும், வாசுகி நாகமும் உலோகச் சிற்பங்களாகத் தரிசனம் தருகின்றனர்.
சரி... இதிலே புற்று எங்கே வந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன்.
பறவைகளின் தலைவன் கருடன் என்பதும், பாம்புகளுக் குத் தலைமை ஏற்பது வாசுகி என்றும் தெரியுமல்லாவா? ஒரு சமயம் இருவருக்கும் போர் மூண்டது. கண்ணில் கண்ட சர்ப்பத்தையெல்லாம் கவ்விச் சிதறடித்தது கருடன். சிவனை நோக்கித் தவமிருந்த வாசுகி, இன்னல் நீக்குமாறு இறைஞ் சியது. மனம் இறங்கிய சிவனார், குக்கே சுப்ரமண்யர் ஆலயத்தில், அத்தல இறைவனுடன் ஐக்கியமாகு; உன் அல்லல் மறையும்" என அருளினார். அன்று முதல் வாசுகியும் இக்கோயிலில் குடிகொண்டாள்.
இப்படி வாசுகி தவம் இருந்த இடம், குக்கே சுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தனி ஆலயமாக அமைந்திருக்கிறது. இங்கு புற்றுதான் மூலஸ்தானத்தில் இருக்கிறது. பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுவதும் புற்று மண்தான்! இந்த ஆலயம் கேரள ஆலயங்கள் போல அமைந்திருக்கிறது. ‘ஆதி சுப்ரமண்ய கோயில்’ எனச் சிறப்போடு அழைக்கப்படுகிறது.
பாம்புகளை ஆராதிக்கும் இந்தத் தலம் இந்தியாவில் இருக்கும் 108 முக்கிய சைவ கே்ஷத்ரங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Comments