பிரான்மலை கொடுங்குன்ற நாதர்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்த ‘பாம்புமலை’ என்ற பிரான்மலையில் உள்ளது கொடுங்குன்றநாதர் திருக்கோயில்.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆட்சிக்குட்பட்ட, இயற்கைச் சூழலில் அமைந்த இத்தலம், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.
பாண்டிய நாட்டுத் தலங்களில் ஐந்தாவதாகப் போற்றப்படும் இக்கோயில், சுமார் இரண் டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. மூன்றடுக்கு சிவன் கோயிலான இம்மலைக் கோயிலில் பாதாளம், பூலோகம், கயிலாயம் என மூன்று அடுக்குகளில் சிவபெருமான் காட்சி தருகிறார். பாதாளத்தில் உள்ள கோயிலில் கொடுங்குன்றநாதர், குயிலமுத நாயகி அருள்பாலிக்கிறார்கள். பூலோகம் என்று சொல்லப் படும் மத்தியில் உள்ள கோயிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதர் அருள்பாலிக்கிறார். மேல்நிலை கோயில் கயிலாயம் எனப்படும். இங்கு தேனம்மை என்ற அம்பிகையுடன் மங்கைபாகராகக் காட்சி தருகிறார்.
‘கயிலாயம்’ எனப்படும் மேலடுக்குச் சன்னிதி, குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. இந்த சன்னிதியில் மங்கைபாகர் அம்பிகையுடன் இணைந்து அகத்தியருக்குத் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். இதை, சிவபெருமானின் அன்யோன்ய திருக்கோலம் என்கிறார்கள்.
இச்சன்னிதியில், தேனம்மை என்ற இறைவியின் பெயருக்கிணங்க தேனடைகள் நிறைந்திருக்கின்றன. பாதாளத்தில் அமைந்துள்ள கொடுங்குன்றநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தத் திருக்கோயிலில் ஐப்பசி முதல் பங்குனி மாதம் வரை சிவன் மீது சூரிய ஒளிக் கதிர்கள் விழுகின்றன.
சன்னிதியின் முன்புற மண்டப மேற்சுவரில் கயிலாயத்தில் சிவ பார்வதி திருமணம் காணச் சென்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். மங்கைபாகர் மூர்த்தம் நவமூலிகைச் சாற்றால் உருவாக்கப்பட்டதால் இவருக்கு அபிஷேகம் இல்லை. பௌர்ணமியன்று காலையில் நவ பாஷாண சிலைக்கு புனுகு சாம்பிராணிதைலம் மட்டுமே சாத்துகின்றனர்.
குறிஞ்சி நிலத்தில் அமைந்துள்ளதால் இத்திருக் கோயிலில் இந்த நிலத்துக்குரியதேன், தினை மாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த பொருட்களை
நைவேத்தியமாகப் படைக்கின்றனர். மற்ற சிவன் கோயில்களில் உள்ளதுபோல் சிவன் சன்னிதியின் எதிரில் நந்தி கிடையாது. சிவன் அகத்தியருக்குத் திருமணக் கோலத்தில் காட்சியளித்தபோது நந்தி தேவர் மத்தளம் வாசித்துக்கொண்டிருந்தார் எனும் அடிப்படையில் இங்கு நந்தி நிறுவப்படவில்லை. மேலும், இவ்வாலயத்தில் கொடி மரமும், பலி பீடமும் கிடையாது. பெருமானுக்கு ஒருமுறை அணி வித்த வஸ்திரத்தை மறுமுறை அணிவிப்பது இல்லை. ஒவ்வொரு முறையும் புத்தாடையே அணிவிக்கின்றனர். இத்திருத்தலத்தில் சிவன் கையில் நான்கு
வேதங்களை வைத்தபடி காட்சி தருகிறார். எனவே, இவருக்கு, ‘வேத சிவன்’ என்ற பெயரும் உண்டு. கல்வியில் சிறப்பிடம் பெற, மாணவர்கள் இவருக்கு வெண்மை நிற மலர் மாலை சாத்தி, வெண்ணிற வஸ்திரங்களை அணிவித்து வேண்டிக்கொள்கின்றனர்.
அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் முருகன் நடனக் காட்சி காட்டியதாக ஐதீகம். இக்கோயிலில் தனிச் சன்னிதியில் முருகன் வயோதிகக் கோலத்தில் காட்சி தருகிறார். வழக்கமாக முருகன் சன்னிதிக்கு எதிரில் மயில் வாகனம் தான் இருக்கும். ஆனால் இங்கு யானை காணப்படுகிறது.
முருகன் பத்மாசுரனை சம்ஹாரம் செய்தததால் தோஷம் உண்டானது.
தோஷ நிவர்த்திக்காக இத்தலத்தில் இரண்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, தோஷம்
நீங்கப்பெற்றதாக ஐதீகம். இந்த இரு லிங்கங்களும் சன்னிதி பிராகாரத்தில் சொக்கலிங்கம், ராமலிங்கம் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்கள்.
தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி, யோக நிலையில் காட்சி தரும் சுமார் நான்கரை அடி உயரம் கொண்ட திருவுருவச் சிலை காணப்டுகிறது. இப்பகுதியில் இதுபோன்ற திருவுருவச் சிலை வேறு எங்கும் காணக் கிடைப்பது இல்லை.
இத்திருத்தலத்தின் தல விருட்சமாக பல நூற்றாண்டுகள் கண்ட உறங்காப்புளி எனும் புளிய மரம் உள்ளது. இம்மரம் பூக்கும், காய்க்கும். ஆனால், பழுக்காது. இத்தலத்தில் பைரவருக்கு தனிச் சன்னிதி உள்ளது.
இத்திருக்கோயில் தீர்த்தம் மிகவும் சிறப்பு மிக்கதாகும். இத்தீர்த்த நீர், ‘குஷ்டவிலக்கி சுனை’ என்று அழைக்கப்படுகிறது. இச்சுனை நீரில் நாள்பட்ட தோல் வியாதி உள்ளவர்கள் நீராடி சிவனை வழிபட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்.
இத்தலத்துக்கு வந்த திருஞானசம்பந்தர் மலையை தூரத்திலிருந்து கண்டபொழுது அம் மலையே சிவனாகக் காட்சி தந்தது. இதையடுத்து, அத்தலத்தில் தனது கால் படக் கூாடது என நினைந்து, ஐந்து மைல் தொலைவிலேயே நின்று தரிசித்துள்ளார். எனவே தான், இத்தலம் எம்பிரான் மலை எனப் பெயர் பெற்று, பிற்காலத்தில் பிரான்மலை என மருவியது.
இன்றும் இத்தலத்தில் பாரி உத்ஸவம் என்னும் ஒரு விழா எடுக்கிறார்கள். இவ்விழாவில் வள்ளல் பாரி, முல்லைக்குத் தேர் கொடுக்கும் வைபவம் நடைபெறும். பாரி மன்னனின் திருவுருவச் சிலையை ஒரு தேரில் வைத்து பறம்பு மலை அடிவாரத்துக்குக் கொண்டு செல்கின்றனர். அங்கு முல்லைக் கொடியின் அருகில் தேரை நிறுத்திவிட்டு திருவுருவச் சிலையைக் கோயிலுக்குத் திருப்பிக் கொண்டு வந்து விடுவர். அதன்பின் அப்பகுதி மக்களுக்கு மன்னர் தானம் செய்யும்படி, அரிசி அளப்பு வைபவம் நடைபெறும். அப்பொழுது, பக்தர்களுக்கு அரிசியைத் தானமாகத் தருகின்றனர்.
இக்கோயில் திருவண்ணாமலை ஆதீனத்துக்கு உட்பட்ட குன்றக்குடி ஆதீனத்தில் உள்ளது. இத்திருத்தல சிவனைத் தரிசித்து மலையில் உள்ள சுனை தீர்த்தத்தில் நீராடி வேண்டிக்கொண்டால் எண்ணியது ஈடேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
செல்லும் வழி, மதுரையில் இருந்து சிங்கம்புணரி வழியாக பொன்னமராவதி செல்லும் பேருந்தில் பிரான்மலை பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். மதுரையில் இருந்தும், திருப்பத்தூரில் இருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.

Comments