சர்க்கரை நோய் தீர்க்கும் தென்னகர் சிவன்!

நாடி வந்து வணங்கிடும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தினை வழங்குபவராகவும். சர்க்கரை நோய் போக்கும் கண்கண்ட தெய்வமாகவும் அருள்பாலித்து வருகிறார் மளவராயநத்த தென்னகர் சிவபெருமான்.
தென் தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிர பரணியின் கரையோரத்தில் ரோம மகரிஷியால் உருவான நவ கயிலாயங்கள் அமைந்துள்ளன. இதுபோன்று, ‘நவலிங்கபுரம்’ என்ற ரீதியில் ஒன்பது சிவாலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாட்டில் இருந்து வந்தது. காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி தமது பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் இவை இழந்து விட்டன.
நவலிங்கபுரத்தில் கடைசி ஸ்தலமான சிவன் கோயில், தாமிபரணியின் கரையோரத்தில் ஆன்மிக நகரமான ஸ்ரீவைகுண்டத்துக்கு மிக அருகேயுள்ள மளவராயநத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை போர்த்தி இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் ‘தென்னகர் சிவன் கோயில்’ அமைந்துள்ளது.
இக்கோயில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களின் காலத்தில் உருவாகியிருக்கலாம் என்கிறது வரலாறு. சோழ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து நாளடைவில் சிற்றரசனாக மாறிய மளவராயன் இக்கோயிலுக்கு வந்து சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி பெயரும், புகழும் பெரும் செல்வங்களைப் பெற்றான். எனவே, தென்ன கர் சிவபெருமானினின் சிவாலயத்தை புதுப்பித்துக் கட்டி வணங்கினான்.
அக்காலத்தில் இக்கோயில் மளவராய மன்னனின் அரண்மனை வளாகத்துக்குள்ளே இருந்ததாக வரலாறு கூறுகிறது. இதற்குச் சான்றாக கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தாழிகள், பழங்கால போர்க் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மன்னர் காலம் முடிந்துபோன நிலையில் இவ்வூர் மளவராய மன்னனின் பெயரை தாங்கிய வகையில் ‘மளவராயநத்தம்’ என்ற பெயருடன் இன்றும் ஆன் மிகச் சிறப்புடன் திகழ்ந்து வருகிறது.
ஆலயத்தின் உள்ளே அற்புதமாக தத்ரூபமான உருவத்தில் தென்னகர் சிவபெருமான் லிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அவருக்கு முன்பு நந்தி பகவான் கம்பீரமாக அமர்ந்து காட்சி தருகிறார்.
ஆலயத்தின் சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், முருகப்பெருமான் வள்ளி-தெவானை சமேதராக வும், தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். இந்தப் பிராகாரத்தின் வெளிப்பகுதியில் தனிச்சன்னியில், ‘அறம்வளர்த்த நாயகி அம்பாள்’ தெற்கு நோக்கி அழகுற எழுந்தருளியுள்ளார். அம்பாள் திருச்சிலை சிற்பக் கலைஞர்களின் கைவண் ணத்தில் நிஜம் போல தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு ஜொலிக்கிறது.
இக்கோயிலிலுள்ள சிற்பங்கள் அனைத்தும் சிற்பக் கலைக்கு பெரும் சிறப்பு பெற்ற கிருஷ்ணராஜபுரம் சிற்பங்களுக்கு இணையாக அற்புதமாக வடிவமைக்கப் பட்டுள்ளன.
தென்னகர் சிவபெருமானை வணங்கினால் திருமணத்தடை நீங்கும், கல்வி அறிவு பெருகும், அரசு உத்தியோகம் கிடைக்கும், தொழில் விருத்தியாகும், செல்வம் பெருகும், கேட்ட வரங்கள்யாவும் கிடைத்திடும் என்பது ஐதீகம்.
இதற்கெல்லாம் மேலாக தென்னகர் சிவனை வாரம்தோறும் வந்து வணங்கினால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள், மருத்துவம் ஏதும் இன்றி குணமாவதாக நம்பப்படுகிறது. இதனை இங்குள்ள பக்தர்கள் ஆத்மார்த்தமாக உணர்ந்து மகிழ்ந்துள்ளனர்.
அறம் வளர்த்த நாயகி அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றி, மலர் மாலை அணிவித்து வணங்கினால் திருமண வரம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், பிரிந்த தம்பதிகள்
சண்டை, சச்சரவுகள் தீர்ந்து அன்போடும், ஆனந்தமாக இணைவார்கள் என்பது ஐதீகம். விவாகரத்து வழக்கு வரை சென்ற தம்பதிகள் கூட அறம் வளர்த்த நாயகி அம்பாளை வணங்கி மீண்டும் இல்லற வாழ்வில் அன்பான தம்பதியர்களாக இணைந்திடுவது இன்றும் நிகழ்ந்து வருகிறது.
தென்னகர் சிவபெருமானை பக்தர்கள் வில்வ மாலை அணிவித்தும், அறம் வளர்த்த நாயகி அம்பாளை வெண்பட்டு வஸ்திரம், வளையல், சர்க்கரைப் பொங்கல் படைத்தும் வழிபட்டு வருகின்றனர். இங்குள்ள பைரவர், தட்சிணாமூர்த்தியை வணங்கினால் தோஷங்கள் தீரும். கோயிலின் ஸ்தல விருட்சம் அட்சய மரம்.
சிவபெருமானின் மூன்று கண் அம்சங்களை உணர்த்தும் வகையில் தென்னகர் (மளவராய நத்தம்), நடுநக்கர் (புதுக்குடி), வடநக்கர் (வெள்ளூர்) என மூன்று சிவன் கோயில்கள் இப்பகுதியில் இருக்கின்றன. இதில், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுக்குடி சிவன் கோயில் மட்டும் காலமாற்றத்தால், சிலரது ஆதிக்கத்தால் ரெங்க ராஜபெருமாள் கோயிலாக மாறிப் போய் விட்டது. இக்கோயிலில் இருந்த நடுநக்கர் சிவபெரு மானின் சிலை வெள்ளூர் சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.
மளவராயநத்தம் மற்றும் சுற்றுவட்டாரக் கிரா மங்களிலுள்ள விவசாயி கள் மழை பெய்ய வேண்டுமெனில் தென்னகர் சிவபெருமானை தீர்த்தம் வைத்து வணங்குகின்றனர். சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்பு அந்த தீர்த்த நீரை வெள்ளூர் கஸ்பா குளத்தில் கொண்டு ஊற்றினால் மழை பெய்யும் என்பது விவசாயிகளின் பெரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இதுபோன்று விவசாயத் தோட்டங்களில் புதியதாகக் கிணறு வெட்டுபவர்களும், ஆழ் துளைக் கிணறுகளை அமைப்பவர்களும் தென்னகர் சிவபெருமானை வந்து வணங்கிய பின்பே அப்பணிகளை துவங்குகின்றனர். தென்னகர் அருளால் விவசாயக் கிணறுகளில் கோடையில் கூட தண்ணீர் வற்றாமல் அமுத
சுரபியாக கிடைத்திடும் என்பது ஐதீகம்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டிலுள்ள இவ்வாலயத்தில் பௌர்ணமி வழிபாடு, பிரதோஷம், சிவ ராத்திரி, சித்திரை வருடப் பிறப்பு, ஐப்பசி மாத அன்னாபிஷேகம், கார்த்திகை தீப வழிபாடு, மார்கழி வழிபாடுகள் சிவபக்தர்களால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல வருட காலமாக போதிய பராமரிப்பின்றி சிதைந்து கிடக்கும் தென்னகர் ஆலயத்தினை புனரமைக்கும் திருப்பணிகளை தற்போது சிவ பக்தர்கள் தங்களது தனிப்பட்ட முயற்சியாலும், ஊர் பொது மக்களின் பங்களிப்புடனும் மேற் கொண்டுள்ளனர். இப்பணிகளை சிவ பக்தர்களின் முன்வந்து தந்திடும் பங்களிப்புகளுடன் வரும் நாட்களில் சிறப்பாக முடித்து, மகா கும்பாபிஷேக விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Comments