கேட்டு வாங்கிய காணிக்கை!

மஹான் ஷீர்டி சாயிபாபா, பக்தர்கள் கடவுளுக்கு நேர்ந்துகொண்டு, மறந்துபோன வேண்டுதல்களை அவர்களுக்கு எப்படி நினைவுபடுத்தி, அவர்களை அதை நிறைவேற்றச்செது, அவர்கள் கர்மவினைகளைச் சேர்த்துக் கொள்ளாமல் தடுத்து, அனுக்ரஹம் செய்கிறார் என்பதற்கு ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் சில நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒருமுறை கோவாவிலிருந்து இரண்டு பெரிய மனிதர்கள் பாபாவை தரிசிக்க ஷீர்டிக்கு வந்தார்கள். இருவரும் சேர்ந்து வந்தபோதிலும் பாபா ஒருவரிடம் மட்டும், பதினைந்து ரூபாய் தட்சிணையாகக் கொடு!" என்று கேட்டார். அவரும் ஆனந்தமா அதைக் கொடுத்தார். இரண்டாமவரிடம் தட்சிணை எதுவும் கேட்காவிட்டாலும், அவரே முப்பத்தைந்து ரூபாயை தட்சிணையாக அளித்தார். பாபா அதை மறுதலித்தபோது, அவருக்கு வியப்பு ஏற்பட்டது.
அந்த சமயம், ஷாமா எனும் பாபாவின் அணுக்கத் தொண்டர், இருவரும் ஒன்றாகத்தானே வந்தார்கள். ஒருவரிடம் தட்சிணை கேட்டு வாங்கினீர்கள். மற்றவர், தானே மனம் உவந்து, நீங்கள் கேட்காமலேயே தட்சிணை அளிக்கும்போது அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். இதற்கான காரணத்தை அன்பு கூர்ந்து விளக்குங்கள்!" என்றார்.
ஷாமா! உனக்கு ஒன்றும் புரிவதில்லை. நான் யாரிடமிருந்தும் எதையும் எடுத்துக்கொள்வதில்லை. எனக்கு என்ன? வீடா வாசலா? குடும்பமா? குழந்தையா? எனக்கு என்ன பணத்தேவை இருக்கிறது சொல் பார்க்கலாம்? கடனைத் திருப்பிக் கேட்பவள் இந்த மசூதி மாயி. கொடுப்பவர்தன் கடனிலிருந்து விடுபடுகிறார். அவ்வளவுதான்.
வேலை கிடைத்தால் முதல் மாதச் சம்பளத்தை கடவுளுக்குச் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டால், அதை முறைப்படி சமர்ப்பிக்க வேண்டியதுதானே. வேலையும் சம்பளமும் கிடைத்த சந்தோஷத்தில் நேர்ந்து கொண்ட நேர்த்திக்கடனை மறந்து விடலாமா? குறைந்த சம்பளத்தில் வேலையில் அமர்ந்து, இன்று அதிக சம்பளம் வாங்கும்போதும் அதை மறந்துபோனால் நியாயமா? அன்று கடவுளுக்கு தட்சிணையாகத் தருவதாக நேர்ந்துகொண்ட கடனைத்தான் இன்று மாயி வசூலிக்கிறாள். ஒவ்வொருவரும் அவரவர் நல்வினைப் பயனால் இங்கு வருகிறார்கள். கடனைத் தீர்த்துச் செல்கிறார்கள்.
ஷாமா! இன்னொரு கதையையும் சொல்கிறேன் கேள்! நான் ஒருநாள் சமுத்திரக் கரையோரமாக உலவிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரிய மாளிகையைப் பார்த்தேன். அந்த மாளிகையின் வராந்தாவில் அமர்ந்து கொண்டேன். அந்த மாளிகையின் எஜமான் ஒரு நல்ல வம்சத்தில் பிறந்தவர்... பெரிய பணக்காரர். அவர் என்னை அன்புடன் வர வேற்று உபசரித்து, அங்கேயே உறங்குவதற்கும் இட மளித்தார். நான் படுத்துத் தூங்கிய இடத்துக்கருகில் சுவரில் உள்ளடங்கிய அலமாரி ஒன்றிருந்தது. நான் தூங்கிய சமயம் திருடன் ஒருவன் உள்புகுந்து, கன்னம் வைத்து சுவரை உடைத்து அங்கேயிருந்த எல்லாப் பணத்தையும் கொள்ளையடித்துப் போய் விட்டான்.
ஒரே சமயத்தில் முப்பதினாயிரம் ரூபாய் கொள்ளை போய்விட்டது. மிகவும் மனம் வருந்தினேன். ஒன்றும் சாப்பிடப் பிடிக்காமல், பட்டினியாக அந்த இடத்திலேயே பதினைந்து நாட்கள் பித்துப் பிடித்தது போல உட்கார்ந்திருந்தேன். அந்தச் சமயத்தில் ஒரு பக்கீர் அவ்வழியே வந்தார். நான் அழுவதைப் பார்த்து எனது துக்கத்துக்கான காரணத்தைக் கேட்டார். அவரிடம் நடந்ததைச் சொன்னேன். அவர், நான் சொல்வது போலச் செய்தால் பணம் உனக்குத் திரும்பக் கிடைத்துவிடும். செய்வாயா?" என்றார். அவர் என்ன சொன்னாலும் செய்வதாக வாக்களித்தேன்.
ஒரு பக்கீரைக் குறித்து நான் சொல்கிறேன். நீ அவரிடம் முழுமையாகச் சரணடைந்து பிரார்த்தனை செய்! அவர் உனது பணம் மீண்டும் கிடைக்கும்படிச் செய்வார். ஆனால், உனது பிரார்த்தனை நிறைவேறும் வரை உனக்கு மிகவும் பிடித்த உணவுப் பண்டம் ஒன்றைச் சாப்பிடுவதை விட்டுவிட்டு விரதம் இருக்க வேண்டும்" என்றார்.
நான் அவரது அறிவுரைப்படி நடந்து கொண்டதால் எனக்கு எனது பணம் திரும்பக் கிடைத்தது. பின்னர், நான் மீண்டும் சமுத்திரக் கரையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தபோது எனது கண்களுக்கு ஒரு கப்பல் தென்பட்டது. அதில் கூட்டமாக இருந்ததால் ஏற முடியவில்லை. ஆனால், அங்கிருந்த நல்ல குண முடைய நண்பர் ஒருவர் உதவியால் அதிர்ஷ்டவசமாக கப்பலில் ஏறிக்கொண்டேன். கப்பலில் பயணித்து கரையேறி பிறகு ஒரு ரயிலைப் பிடித்து இந்த மசூதி மாயியிடம் வந்து சேர்ந்தேன்" என்றார்.
கதை முடிந்தது. பாபா, ஷாமாவை அழைத்து, கோவாவிலிருந்து வந்திருக்கும் விருந்தினர்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறினார். அவர்களோடு சேர்ந்து உணவு உட்கொண்ட சமயத்தில் ஷாமா அவர்களிடம், பாபா சொன்ன கதை ஒன்றும் புரியாத புதிராக இருக்கிறது. ஏனென்றால், பாபா எந்த சமுத்திரக் கரையோரமும் சென்றதில்லை. அவரிடம் ரூபாய் முப்பதினாயிரம் என்றுமே இருந்ததில்லை. அவர் எந்தக் கப்பலிலும் பயணித்ததில்லை. உங்களுக்கு பாபா சொன்ன குறிப்புகள் ஏதாவது விளங்குகிறதா?" என்று கேட்டார்.
விருந்தினர்கள் மனமுருகி கண்ணீர் சிந்தினர். சத்குரு சாயி பாபா தன்னிகரில்லாத முழுமுதற்பொருள். பரப்பிரும்ம அவதாரம் என்பதில் சந்தேகமேயில்லை. அவர் கூறிய கதைகள் எங்களுடையதுதான்" என்று கூறி, முதலாமவர் தனது கதையைச் சொல்லத் தொடங்கினார்.
மலைத்தொடர் மீதுள்ள ஒரு கோடைவாசஸ்தலமே எனது ஊர். ஒரு வேலை தேடி பணம் சம்பாதிக்கும் பொருட்டு கோவாவுக்குச் சென்றேன். எனக்கு வேலை கிடைத்தால் எனது முதல் மாதச் சம்பளத்தை தத்தர் தெய்வத்திடம் காணிக்கையாக அளிப்பதாக வேண்டிக்கொண்டேன். தத்தாத்ரேயரின் அருளால் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தது. பிறகு பாபா குறிப்பிட்டபடி எனது சம்பளம் ஏற ஏற, வேண்டுதலை மறந்து போனேன். இதைத்தான் அவர் தட்சிணை என்ற பெயரில் கேட்டு வாங்கி, நீண்ட நாட்களாக மறந்துபோன எனது வேண்டுதலை நிறைவேற்ற வைத்து கடவுளுக்கு நான் பட்ட கடனைத் தீர்த்து அனுக்ரஹம் செய்திருக்கிறார்" என்று கூறிய விருந்தாளியின் குரல் நன்றி உணர்ச்சியிலும் மனமார்ந்த பக்தியிலும் தழுதழுத்தது.
இப்போது, இரண்டாவது விருந்தாளி தனது கதையைச் சொல்லலானார். முப்பத்தைந்து ஆண்டுகளாக ஒருவர் என்னிடம் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நம்பிக்கைக்கு உரியவர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் புத்தி கெட்டுப்போ நான் சேமித்து வைத்திருந்த பணத்தை யெல்லாம் கொள்ளையடித்தார். நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, அலமாரியில் கன்னம் வைத்து துளை போட்டு பணத்தைக் களவாடி விட்டார். பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணம் முழுவதும் களவாடப்பட்டதால் நான் இடிந்து போய் இரவு, பகலாக அழுது கொண்டிருந்தேன். இந்த துக்கத்திலிருந்து எப்படி வெளியே வருவது என்று புரியாமல் இருந்தபோது அந்த வழியே போன ஒரு பக்கீர் எனது அழுகை, துக்கத்துக்கான காரணத்தைக் கேட்டதோடு, எனது கஷ்டம் தீர உபாயமும் சொன்னார்.
‘கோபர்காவ் தாலுகாவில் ஷீர்டி என்னும் கிராமம் இருக்கிறது. சாயிபாபா என்னும் பெரிய மகான் அங்கே உள்ளார். அவரிடம் நீ வேண்டிக்கொள். உனக்குப் பிடித்தமான உணவு ஒன்றைச் சாப்பிடுவதை விட்டு விட்டு, உங்கள் தரிசனம் பெறும் வரை நான் இதைச்
சாப்பிட மாட்டேன் என்று விரதம் மேற்கொள். நிச்சயம் உனது துக்கம் தீரும்!" என்றார்.
நானும் அதேபோல் வேண்டிக்கொண்டு எனக்கு மிகவும் பிடித்த அரிசிச் சோறு சாப்பிடு வதை விட்டு விட்டேன். பதினைந்து நாட்கள் கழிந்தபின் அந்த சமையல்காரருக்கு என்ன தோன்றியதோ தெரிய வில்லை, என்னைத் தேடி வந்தான். ‘புத்தி கெட்டு இந்தக் காரியத்தைச் செய்தேன். தயவுசெய்து என்னை மன்னியுங்கள்’ என்று கூறி எனது காலில் விழுந்து களவாடிய பணம் முழுவதையும் திரும்பக் கொடுத்தான்.
ஆனால், என்னைச் சந்தித்து எனக்கு அறிவுரை கூறிய அந்த பக்கீரை நான் மீண்டும் சந்திக்க முடியவில்லை. அவர் என்னிடம் கூறிய ஷீர்டி சாயி பாபாவை தரிசிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. எனது வீடு வரை வந்த அந்த பக்கீர் சாயி பாபாவைத் தவிர, வேறு யாருமில்லை என்றே தோன்றுகிறது.
என்னைக் காண வந்து தொலைந்துபோன எனது பணத்தை மீண்டும் பெற உதவிய அவரா என்னிடம் முப்பத்தைந்து ரூபாய் தட்சிணை பெற ஆர்வமாக இருப்பார்? நான் எண்ணிப் பார்க்கிறேன். நிஜமாகவே நான் யார்? முன்பின் தெரியாத என்னை நினைவுகூர்ந்து இங்கே இழுத்து பாபா ஆட்கொண்டதினால் நான் எப்பேர்ப்பட்ட பாக்கியசாலி ஆகிவிட்டேன்? ஷீர்டியிலுள்ள நீங்களெல்லாம் எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள்? இரவு, பகல் அவர் கூடவே இருக்கும் பாக்கியம் உங்களுக்கல்லவா கிடைத்துள்ளது?" விருந்தாளி கண்ணீருடன் ஷாமாவின் கரங்களைப் பிடித்துக்கொண்டு தனது கதையைக் கூறினார்.
சாயியே எங்கள் தத்தாத்ரேயர்! எங்களை ஷீர்டிக்கு அழைத்து நல்வழிப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை நாங்கள் ஆயுள் உள்ளவரை மறக்க மாட்டோம்!" என்று உணர்ச்சி மேலிட, பக்திப் பரவசத்தோடு கூறினார்கள்.

Comments