அகத்திய தரிசனம்! - சிலிர்ப்பூட்டும் தகவல்கள்

மாபெரும் தவமுனியான அகத்தியர் எல்லாம் வல்ல சித்தர்; `சிவன் அனைய திருமுனி’ என்று புகழப்படுபவர். இப்படிப் பல சிறப்புகளைப் பெற்ற அகத்திய முனிவரின் தோற்றத்தைப் புராணங்கள் பலவிதமாகக் கூறுகின்றன.

ஒருமுறை, பிரம்மன் ஒரு பெரிய வேள்வியைச் செய்தான். அந்த வேள்விச் சாலையிலிருந்த கும்பத்தில் சிவபெருமானின் ஓர் அம்சம் ஒளிவடிவமாக இறங்கியது. வேள்வியின் முடிவில் அது முனிவனாக உருப்பெற்றது. அட்சமாலை, கமண்டலம், யோக தண்டம், ஞானமுத்திரை ஆகியவற்றைத் தாங்கியவராக வெளிப்பட்ட அவரைக் கும்பமுனி என்றும் குடமுனி என்றும் தேவர்கள் போற்றித் துதித்தனர்.

பிறக்கும்போதே ஞானஒளியைத் தன்னகத்தே கொண்டிருந்த தால் அவரை அகஸ்தியன் என்றனர். அவர் குள்ளமான உருவமுடையவராக இருந்ததால் குறுமுனி என்றும் அழைக்கப்பெற்றார். அவர் சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவம் செய்தார். சிவபெருமான் அவர் முன்னே தோன்றி, அவரை முனிவர்களில் சிறந்தவராகவும் நட்சத்திரமாக ஒளிரவும் அருள்புரிந்தார்.

ஒருசமயம் அகத்திய முனிவர் ஒரு காட்டைக் கடந்து கொண்டிருந்தார். அக்காட்டில் அநேக முனிவர்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் அகத்தியர், ``நீங்கள் ஏன் இப்படித் தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள், ‘‘அன்பனே, எமது வம்சத்தில் தோன்றிய அகத்தியன் என்பான், தனது இல்லறக் கடமைகளைச் செய்யாது இருக்கிறான். அவன் இல்லறம் உகுந்து உரிய கடன்களைச் செய்தால்தான் நாங்கள் சொர்க்கம் புக முடியும்” என்று கூறினர்.

அதைக் கேட்ட அகத்தியர் அவர்களைப் பணிந்து, ``நான்தான் அந்த அகத்தியன். உங்கள் விருப்பத்தை உடனே நிறைவேற்றுவேன்” என்று கூறினார். பின்னர் அகத்தியர் விதர்ப்ப நாட்டு இளவரசியான லோபாமுத்திரையை மணந்து கொண்டு இல்லறம் நடத்திவந்தார். அதனால் அவருடைய முன்னோர்கள் சுவர்க்கம் புகுந்தனர். மக்களுக்கு இன்னல் விளைந்தபோதெல்லாம் அவற்றை விலக்கி அருள்புரிந்துள்ளார். முனிவர்களுக்குத் தீங்குசெய்து அவர்களைக் கொன்றுவந்த வில்லவன் வாதாபியை அடக்கியது; சூரியனின் போக்கைத் தடுமாறவைத்த விந்திய மலையை அடக்கியது; இந்திரனுக்கு எதிராகப் போரிட்டுக் கடலில் ஒளிந்துகொண்ட விருத்திரா சூரனைக் கண்டுபிடிக்க கடலை ஒருமுறை உள்ளங்கையில் அடக்கிக் குடித்து முடித்தது; ராவணனை இசையால் வென்று இலங்கைக்கு ஓட்டியது முதலியன இவருடைய அருஞ் செயல்களாகும்.
பின்னும் அகத்தியர் அநேக தவங்களைச் செய்து அஷ்டமா ஸித்திகள் கைவரப்பெற்றார். மனிதகுலம் மேன்மை அடையும் பொருட்டுத் தமிழ்மொழியை வளப்படுத்த இலக்கணங்களைச் செய்தார். அநேக ஜோதிட, வைத்திய, ஞானநூல்களை இயற்றி அளித்தார். பல அரிய செயல்களைச் செய்தபின், பொதிகை மலையில் அருவநிலையில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது வெளிப்பட்டு அன்பர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பொதிகை மலை மட்டுமல்ல, அகத்தியர் போற்றி வழிபட்ட திருத்தலங்களும், அவரைப் போற்றும் திருத்தலங்களும் அகத்திய முனிவரின் திருவருள் நிறைந்து திகழ்கின்றன. அந்தத் திருவருளை நாமும் பெற்று மகிழவும், நமது துன்பங்கள் யாவும் நீங்கவும், நாம் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறி, வாழ்வில் உச்சத்தை அடையவும் வேண்டிக்கொண்டு அகத்தியர் குறித்த சிலிர்ப்பூட்டும் தகவல்களைப் படித்தறிவோம்.
குறுமுனிவரின் ஆலயங்கள்

மயம் முதல் குமரிவரை போற்றி வணங்கப்படும் பெருந்தவ முனிவராக விளங்குபவர் அகத்தியர். இவருக்குத் தனி ஆலயங்கள் அமைத்து வழிபடும் வழக்கம் பரவலாக இருந்து வருகிறது. காலப்போக்கில் அது குறைந்துவிட்டது என்றாலும் சிவாலயங்களுக்குள்ளேயே அகத்தியர் உருவங்களை நிலைப்படுத்தி வணங்கி வருகின்றனர்.

* இமயமலையில் பல இடங்களில் அகத்தியர் வழிபட்ட தலங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக இமயமலைச் சாரலில் உள்ள கேதாரத்தில் `அகஸ்தியச் சட்டி' என்ற இடம் உள்ளது. அங்கு அகத்தியருக்கான ஆலயம் உள்ளது. இதுபோன்றே நேபாளத்திலும் அகத்தியர் வழிபட்ட லிங்கங்களும் அகத்தியர் திருவுருவங்களும் உள்ளன.

*  இமயமலைச் சாரலில் `அகத்திய வடம்' என்ற இடம் இருப்பதாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. இங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கி, இதன் கரையில் உள்ள ஆலமரத்தின்கீழ் அகத்தியர் தவம் செய்தார் என்று நம்புகின்றனர். அந்த மரம் `அகத்திய வடம்' என்று அழைக்கப்பட்டது.
*  காசியில் அகத்தியர் வழிபட்ட லிங்கம் உள்ளது. அகத்தியர் ஒளி வடிவில் அதில் கலந்துள்ளார் என்பர். நாசிக் என்றழைக்கப்படும் இடத்துக்கு 24 கி.மீ தொலைவில் அகத்தியர் ஆசிரமம் இருந்தது என்று புராணங்கள் கூறுகின்றன.

*  விந்திய மலைச்சாரலில் அநேக இடங்களில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கங்கள் அமைந்திருப்பதுடன் அகத்தியருக்கான ஆலயங்களும் உள்ளன.

கன்னட நாட்டில் உள்ள குடகு மலைப்பகுதி, புராணங்களில் சையமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்துதான் காவிரி உற்பத்தியாகிறது. இந்த இடம் `தலைக்காவிரி' என்று அழைக்கப்படுகிறது. இங்கு அகத்திய ஆலயம் உள்ளது.

தமிழகத்தில் தொண்டை மண்டலத்தில், திருவேற்காடு திருவொற்றியூர் முதலான தலங்களில் அகத்தியரின் உலாத் திருமேனி வழிபாட்டில் உள்ளது. சென்னை தி.நகரில் அகத்தியருக்கென தனி ஆலயம் உள்ளது.
சோழ மண்டலத்தில் தனிக் கோயில்கள் இல்லையென்றாலும் கருவறைக் கோட்டங்களில் அகத்தியரைத் தரிசிக்கலாம். வேதாரண்யத்தை அடுத்துள்ள அகத்தியான்பள்ளி திருக்கோயிலில் தனிச் சந்நிதியில் தவக்கோலத்தில் அருள்கிறார் அகத்தியர்.

வலங்கைமானை அடுத்துள்ள சந்திரசேகரபுரத்தில் அகத்தியர் வழிபட்ட சிவாலயமும் விநாயகர் ஆலயமும் உள்ளன. இங்குள்ள விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் - லோபாமுத்திரை திருவுருவங்கள் உள்ளன.

பாண்டிய மண்டலத்தில் அகத்தியர் தனிச்சிறப்புடன் திகழ்கிறார். பொதிகை மலை முதலாக அகத்தியர் புகழ் சொல்லும் ஆலயங்களும் அவர் தவம் செய்த குகைகளும் இங்கு உண்டு. அகத்தியர் பாண்டியர்களின் குல குருவாகத் திகழ்ந்து அவர்களுக்குப் பட்டாபிஷேகம் செய்துவைத்த தகவல்கள் செப்பேடுகளில் உண்டு.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி தலங்களில் அகத்திய ருக்கென தனிக்கோயில்கள் உள்ளன. பாபநாசத்தில் மலையின் மீது அகத்தியர் ஆலயமும் அகத்தியர் அருவியும் அன்பர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலங்களாகும். கேரளாவில் பல்வேறு இடங்களில் அகத்தியக் கூடங்கள் என்ற இடங்களைக் காணமுடியும்.
அகத்தியர் அமைத்த நூற்றெட்டு லிங்கங்கள்

ருமுறை கடலில் ஒளிந்துகொண்ட விருத்திராசுரனைக் கண்டுபிடிப்பதற்காக இந்திரனின் வேண்டுகோளின்படி அகத்திய முனிவர் கடலை ஒரே முறையில் ஆசமித்து அதை வற்றும்படிச் செய்தார். அவ்வேளையில் கடல் நீருடன் கடலில் வாழ்கின்ற எல்லா ஜீவராசிகளையும் சேர்த்தே உண்டார். அதனால் அவருக்குக் கடும் வயிற்றுவலி உண்டாயிற்று. அவர், தணிகை மலைக்குச் சென்று முருகப்பெருமானை வணங்கித் தனது வலி நீங்க அருள்புரியுமாறு கேட்டார். முருகன், ``முனிவரே, நீர் கடல் நீருடன் அநேக ஜீவராசிகளைச் செரித்து அழித்தீர். அது கொடிய பாவமாகும். அந்த பாவத்தின் விளைவால் இப்போது துன்பப்படுகிறீர். அத்துன்பத்தை நீக்கவல்லது சிவ பூஜை ஒன்றேயாகும். ஆதலில் நீர் சிவ பூஜை செய்யும்'' என்றார்.

அகத்தியர் ஒரு தர்பை புல்லை மந்திரித்து அனுப்பினார். அது மேற்கே சென்று அங்கிருந்த மலையிலிருந்து ஓர் ஆற்றைப் பெருகிவரச் செய்தது. அதுவே கொசஸ்தலை ஆறு ஆகும்.

தொண்டை மண்டலத் தில் ஓடும் இந்த கொசஸ்தலை ஆற்றின் கரைநெடுக அகத்தியர் 108 தலங்களில் 108 சிவாலயங்களை அமைத்துப் பூஜை செய்தார். இத்தலங்களில் அவருடன் அவருடைய முதன்மைச் சீடனான புலத்தியரும் தம் பெயரால் மற்றோர் லிங்கத்தை அமைத்து வழிபாடு செய்துள்ளார். அகத்தியரும் புலத்தியரும் நிறுவிய 108-வது ஆலயம் சின்னக் காவணத்தில் அமைந்துள்ள அகத்தீசுவரர் ஆலயமாகும். அதனால் பெருமானுக்கு நூற்றெட்டீசுவரர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. இங்கு அகத்தியர் அழிஞ்சில் மரத்தின்கீழ் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். அம்பிகையின் பெயர் அஷ்டோத்ரவல்லி (நூற்றெண்கொடி) என்பதாகும். இங்குள்ள புலத்தியர் வழிபட்ட லிங்கம் வேதபுரீசுவரர் என்றும் அவருடைய அம்பிகை வேதவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இங்குள்ள தலமரமான அழிஞ்சில் மரத்தின்கீழ் அகத்தியர் அமைத்த விநாயகரின் திருவுருவமும் கோயிலுக்குக் கிழக்கில் அகத்திய தீர்த்தமும் உள்ளன. சின்னக் காவணம் சென்னைக்கு வடக்கிலுள்ள பொன்னேரிக்கு அருகில் கொசஸ்தலை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளதாகும்.
திருவொற்றியூர் அகத்தீச்சுரம்

பொதுவாக ஆலயங்களின் கருவறையைக் கிழக்கு நோக்கியும் தலைவாயிலைத் தெற்கு நோக்கியும் அமைக்க வேண்டும் என்பது விதியாகும். சில சமயங்களில் அதற்கு மாறுதலாக அமைவதும் உண்டு. எடுத்துக்காட்டாக  சென்னை திருவொற்றியூரில் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அகத்தீசுவரர் ஆலயத்தின் தலைவாயில் வடக்கு நோக்கி அமைந்திருக்கக் காண்கிறோம். வாயிலுக்கு நேராக அன்பர்களை அழைத்து அருள்பவராகச் சிவபெருமான் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அபூர்வமாகச் சமயங்களில் மட்டுமே சிவபெருமானை வடக்கு நோக்கி அமைக்கின்றனர். இது ஆதியில் அகத்தியர் தென்னாடு நோக்கி வந்தபோது அவருக்கு அருள்பாலிக்க சிவபெருமான் வடக்கு நோக்கி எழுந்தருளிய கோலம் என்பர்.

இத்தலத்தில் அகத்தியர், அகிலாண்டேசுவரி அம்பிகையையும் சிவலிங்கத்தையும் அமைத்து வழிபட்டுள்ளார். இது தனிக் கோயிலாகவே திகழ்கிறது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான கலியநாயனார் இங்கு திருவிளக்குத் தொண்டு செய்துள்ளார். அவர் நிலையாகத் தங்கி இங்கு பணிகள் செய்துள்ளதை வரலாறு கூறுகிறது.
அகத்தியர் வழிபட்ட வாலூகநாத லிங்கங்கள்

றைவனின் ஆணையைச் சிரமேற்கொண்டு தென்னகம் புறப்பட்ட அகத்தியர், தான் விரும்பிய தலங்களில் எல்லாம் ஐயனின் திருமணக் கோலத்தைத் தரிசிக்க அருள்புரிய வேண்டும் என்றும் வரம் வாங்கியிருந்தார். அவ்வாறு அவர் வழிபட்டு ஈசனின் அருள்பெற்ற தலங்கள் அகத்தீசுவரங்கள் எனப்படுகின்றன.

அகத்தியர் சிவபெருமானை வழிபடுவதற்கு லிங்கமூர்த்தம் கிடைக்காத தருணங்களில் மணலைக்கூட்டி சிவலிங்கமாகச் செய்து வழிபடுவாராம். இந்த லிங்கங்கள் வாலூகநாதர் எனும் திருப்பெயருடன் திகழ்கின்றன. வாலூகம் என்றால் மண் என்று பொருள். குற்றாலத்தில் வாலூகநாத லிங்க மூர்த்தியைத் தரிசிக்கலாம்.

பெரும்பேர்கண்டிகை தரிசனம்

கத்தியர் பொதிகையை அடைந்ததும் உலகம் சமன்பட்டது. பின்னர், திருக்குற்றாலத்தில் ஈசனின் திருமணக் கோலத்தைத் தரிசித்தவர், அங்கிருந்து புறப்பட்டு ஒவ்வொரு தலமாகத் தரிசித்தபடி அச்சிறுபாக்கம் எனும் திருத்தலத்தை அடைந்தார்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது அச்சிறுபாக்கம். இங்கிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள கிராமம் பெரும்பேர்கண்டிகை. அச்சிறுபாக்கத்தில் இருந்து இந்தக் கிராமத்துக்கு வந்த அகத்தியர், இங்கே மலைக்குமேல் கோயில்கொண்டிருக்கும் முருகப்பெருமானை மனம்குளிர தரிசித்து வழிபட்டார்.
பிறகு, அடிவாரத்தில் இருந்து மேற்கில் சுமார் 1 கி.மீ தூரத்தில், சிவனார் சுயம்புவாக எழுந்தருளியுள்ள பெரும்பேர்கண்டிகை சிவாலயத்துக்கு வந்தார்.  ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் எனும் திருப்பெயருடன் அருளும் ஸ்வாமியைத் தரிசித்தவர், அங்கேயும் இறைவனின் திருமணக் கோலத்தைக் காண விரும்பி,  `திருவாத்தி’ மரத்தடியில் அமர்ந்து தவம்செய்ய ஆரம்பித்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற விரும்பிய இறைவன், சித்ரா பெளர்ணமி தினத்தில் அகத்தியருக்குத் தமது திருமணக் கோலத்தைக் காட்டி அருளினார். அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும்  சித்ரா பெளர்ணமியில் இந்த வைபவம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

சித்ரா பௌர்ணமியன்று அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரரும், பெரும்பேர்கண்டிகை மலையில் உள்ள முருகப்பெருமானும், மகா மேரு மலை, சஞ்சீவி மலை ஆகிய மலைகள் சந்திக்கும் பகுதியான `இரட்டை மலைச் சந்தில்’ சந்தித்துக்கொள்வார்கள். அங்கே சிவனாரை ஆராதிக்கும் முருகப்பெருமான், மணக்கோலத்தில் சிவனையும் பார்வதியையும் பெரும்பேர்கண்டிகைக்கு அழைத்து வந்து அகத்தியருக்குத் தரிசனம் தருவதாக ஐதீகம்.

கல்யாண வரம்தரும் அகத்தீஸ்வரர்

துரை - திருச்சி நெடுஞ்சாலையில், மேலூரிலிருந்து சுமார்    20 கி.மீ தொலைவில் உள்ள திருச்சுனை கிராமத்தில், சிறிய குன்றின்மீது அழகுற கோயில் கொண்டிருக்கிறார் அகத்தீஸ்வரர்.

இறைவனுக்கு அகத்தீஸ்வரர் என்று திருப்பெயர்; அம்மையின் திருப்பெயர் பாடகவள்ளி. அகத்தியர் வேண்டிக்கொண்டபடி,  தன்னை வழிபட வரும் பக்தர்களின் மனக்குழப்பங்களை நீக்கி அருள்கிறார் அகத்தீஸ்வரர். அகத்தியர் ஏற்படுத்திய சுனை, இன்றும் நீர் தளும்ப காட்சி தருகிறது. திருமணக்கோலம் கண்ட தலமாதலால் திருச்சுனை கிராமத்தைச் சுற்றியுள்ள பதினெட்டுப்பட்டி கிராமத்தினரும் இக்கோயிலில்தான் திருமணம் செய்கின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், அம்மனுக்கு மாங்கல்யமும் பட்டு வஸ்திரமும் வழங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
சத்தியநாயகி

ழலை வரம் அருளும் பரமன் கோயில் கொண்டிருக்கும் பழையவலம் எனும் திருத்தலம், திருவாரூரில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள இறைவன், அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பெற்று வழிபடப்பெற்றவர். சத்தியத்தை ஆள்பவள், சத்திய வழியில் நடப்பவர்களைக் காப்பவள் என்பதால், இங்குள்ள அம்பிகைக்கு சத்யாயதாக்ஷி என்னும் திருப்பெயர் ஏற்பட்டதாக ஊர்ப் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

நட்டாற்றீஸ்வரர் கோயில் ருத்திராட்ச லிங்கம்

கொங்குநாட்டில் அகத்தியர் தனது ருத்திராட்சத்தை சிவலிங்கமாக அமைத்து வழிபட்ட கோயில், நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் புட்லூர் எனும் ஊருக்கருகில் உள்ளது. காவிரி ஆற்றின் நடுவில் உள்ள திட்டில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம்.

ஒருமுறை இப்பகுதிக்கு வந்த அகத்தியர் தியானத்தில் ஆழ்ந்தார். நண்பகலில் கண்விழித்தவர் சிவபூஜை செய்ய விரும்பினார். அந்தத் தருணத்தில் சிவலிங்கம் அமைக்க தேவையான பொருள்கள் எதுவும் கிடைக்காததால் தமது ருத்திராட்சத்தையே சிவலிங்கமாக பாவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டார். பூஜை முடிந்ததும் ருத்திராட்சத்தை அவர் எடுக்க முயன்றபோது, அவரால் அதை எடுக்க முடியவில்லை. இறை சித்தப்படி ருத்திராட்சம் அந்த இடத்திலேயே தங்கி நாளடைவில் சிவலிங்கமாக உருப்பெற்றது என்கிறது தலபுராணம்.
லிங்கமாக மாறிய அகத்தியர்!

கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருத்தலம் நல்லூர். அகத்தியருக்கு சிவனாரின் திருமணக் காட்சி கிடைத்த தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே கட்டுமலையின்மீது அமைந்த கல்யாணசுந்தரர் ஆலயத்தில், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பின்னால் உமாமகேஸ்வர திருவடிவையும் தரிசிக்கலாம்.

இந்த லிங்கத்தில் ஒரே ஆவுடையார்மீது இரண்டு பாணங்கள் அமைந்துள்ளன. வலப்பக்கம் இருப்பது பெரிதாகவும் இடப்பக்கம் உள்ளது சிறியதாகவும் காட்சியளிக்கின்றன. பெரியது பல துளைகளுடன் வண்ணம் மாறும் இயல்புடையது என்பதால் பஞ்சவர்ணேசுவரர் என்ற திருப்பெயருடன் பூஜிக்கப்படுகிறது. சிறியதை அகத்தியலிங்கம் என்கிறார்கள். சிவபெருமான் அகத்தியருக்குத் தமது திருமணக் கோலத்தைக் காட்டியபிறகு, அவரை லிங்கவடிவில் தமக்கு இணையாக இருக்குமாறு அமர்த்தி அருள்புரிந்ததாகச் சொல்கிறார்கள். சிவனடியார்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம் இது.
அகத்தியர் அமைத்த நீர் லிங்கம்

தென்பொதிகை மலையின் ஒரு பகுதியாகத் திகழ்வது சிவகிரியாகும். விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து தோரணமலைக்குச் சென்று, அங்கிருந்து சிவகிரிக்குச் செல்கிறார்கள் பக்தர்கள்.  இங்கு மலையில் ஒரு பெரிய சுனை உள்ளது. ஆழமான இந்தச் சுனையின் நீருக்கடியில் ஒரு சிவலிங்கம் உள்ளது. கருங்கல்லால் ஆனது என்றாலும், அகத்திய பெருமான் நீரைத் திரட்டி அமைத்திட்ட சிவலிங்கம் இது என்பது நம்பிக்கை. நீரில் மூழ்கி மூச்சை அடக்கிக்கொண்டு சொல்ல வேண்டிய மந்திரங்கள் பல உள்ளன. அகத்தியர்  இங்குள்ள சுனையில் மூழ்கி அத்தகைய மந்திரங்களை ஓதி பல ஸித்திகளைப் பெற்றார் என்று கூறப்படுகிறது. அப்போது அவர் அமைத்ததே இந்தச் சிவலிங்கம் என்கிறார்கள் பக்தர்கள்.
அகஸ்திய நட்சத்திரம்

தேவரிஷிகள் பூமியில் செய்த கடுந்தவத்தின் பயனாக நட்சத்திர மண்டலத்தில் தனக்கென ஓர் உலகத்தைப் படைத்துக் கொண்டு வாழ்கின்றனர். சப்தரிஷிகள் வாழும் மண்டலம் சப்த ரிஷி மண்டலம் என்ற நட்சத்திரக் கூட்டமாகத் திகழ்கிறது. விசுவாமித்திரரும் சிவனருளால் நட்சத்திர மண்டலத்தில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். இவர்களைப் போலவே அகத்தியரும் வானவெளியில் நட்சத்திரமாக விளங்குகிறார். ஒரு சமயம் அகத்தியர் கடுந்தவம் செய்தார். அதன் வெப்பம் எங்கும் பரவியது.

அதனால் மும்மூர்த்திகள் அவர் முன்னே தோன்றி ‘`அன்பனே உனக்கு என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டனர். அவர், ‘`நான் இருபத்தைந்தாயிரம் கோடி பிரம்மாக்களின் காலம்வரை வானவீதியில் நட்சத்திரமாக இருக்கும்படியான வரத்தை அருளுக” என்றார். அவர்களும் அப்படியே ஆகட்டும் என்றார்கள். அதன்படியே அவர் நட்சத்திர மண்டலத்தை அமைத்துக்கொண்டு அதில் வீற்றிருந்தார். அந்த நட்சத்திரம் மிகவும் வெப்பம் மிகுந்ததாகும். அது பூமியிலுள்ள கடல் அலைகளைக் கட்டுப்படுத்துவதுடன், கடல்நீர் பெருகி, பூமியை மூழ்கடித்து விடாமல் இருக்கக் கடல் நீரை ஆவியாக்கிக்கொண்டேயிருக்கிறது எனவும் மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன.
தேவாரத்தில் அகத்தியர்

கத்திய முனிவர் முப்பொழுதும் சிவ வழிபாடு செய்து வழிபட்டதையும், அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவரைப் பொதிகை மலையில் நிலையாகத் தங்கியிருக்கும்படி அருள்பாலித்ததையும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மிக அழகாக விளக்குகிறார்.

சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச்சகளி
செய்திறைஞ்சும் அகத்தியர் தமக்கு
சிந்துமாமணி அணி திருப்பொதியிற்
சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன்


அப்பர் அடிகளும் அகத்தியரைப் போற்றுகிறார். ‘அகத்தியனும் அர்ச்சித்தாரே’ என்று திருமங்கலக்குடி பதிகத்தில் பாடும் அப்பர், திருவீழிமிழலைப் பதிகத்தில் ‘அகத்தியனை உகப்பானை’ என்று பாடிப் பரவுகிறார்.

திருமந்திரத்தில் அகத்தியர்

த்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் இரண்டாம் தந்திரத்தில் முதல் பகுதியாக ‘அகத்தியம்’ விளங்குகிறது. ‘அங்கி உதயம்’ எனும் பாடல், என்ன கூறுகிறது தெரியுமா?

உதயகாலத்தில் சிவமந்திரங்களை ஓதி சிவ வேள்வியைச் செய்கிறார் அகத்தியர். அதனால் நாடு வளம் பெறுகிறது. அவர் செய்யும் வேள்வியின் உட்பொருளாக இருப்பவர் சிவபெருமான். அந்தச் சிவனார் உயிர்களின் உள்ளொளியாக, பேரொளியாக, அறிவொளியாகத் திகழ்கிறார். அந்த ஒளி அகத்தியரின் அருள் விளக்கத்தால் உலகங்கள் அனைத்தையும் ஒளியூட்டி வளப்படுத்துகிறது என்பதாகும்.

இப்பாடலில் ‘வடபால் தவமுனி’ எனும் சொல் வட கயிலையில் யோக முனிவனாக அருளும் சிவபெருமானைக் குறிப்பது. அவரைப் போல் தெற்கே மேற்கு மலைத் தொடரில் அகத்தியர் வீற்றிருக்கிறார். இதனால் அவர் ‘தென்முனி’ என்று போற்றப்படுகிறார்.
 

Comments