நாகம் வந்தது... நாராயணன் வெளிப்பட்டார்!

புதுச்சேரி யூனியனைச் சேர்ந்த பாகூர்  கிராமத்தில் கோயில்கொண்டிருக்கிறார் ஸ்ரீ சுயம்பு வரதராஜப் பெருமாள். அபய ஹஸ்தத்துடன் நின்ற திருக்கோலத்தில் அருளும் இந்தப் பெருமாள் இங்கு எழுந்தருளிய சம்பவம் சிலிர்ப்பானது என்கிறார்கள் பக்தர்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் பாகூரைச் சேர்ந்த பேராசிரியர் தில்லைவனம் என்பவர் தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காகக் குழி தோண்டியுள்ளார். அப்போது அங்கு தென்பட்ட நாகம் ஒன்று குழியில் விழுந்து விட்டது. வனத்துறையினர் வந்து நாகத்தை மீட்டபோது, ஏதோ கல் இடறுவதுபோல் தெரிந்தது. மெதுவாகத் தோண்டியபோது, சுமார் நான்கரை அடி உயரத்தில் அபய ஹஸ்தத்துடன் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூமிதேவி விக்கிரகங்கள் தென்பட்டன. ஊர் மக்கள் தெய்வ மூர்த்தங்களைக்கண்டு மிகவும் பரவசப்பட்டனர். செய்தி அறிந்து மாநில முதல்வரும் தொல்லியல் துறையினரும் வந்து தரிசித்துச் சென்றார்களாம்.

பிரெஞ்சு ஆதிக்கத்தின்போது, அவர்களிடமிருந்து பெருமாளைக் காப்பாற்றுவதற்காக மண்ணில் புதைத்து வைத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவ்வூரிலேயே அமைந்துள்ள பழைமையான அருள்மிகு மூலநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டில், அந்த ஊரில் ஒரு பெருமாள் கோயில் இருந்ததற்கான குறிப்பு உண்டாம். ஆனால், யாரும் அந்தக் கல்வெட்டுக் குறிப்பைப் பொருட்படுத்த வில்லை. இந்த நிலையில் சுமார்
40 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கிணற்றைச் சுத்தம் செய்தபோது, பெருமாள் கோயிலின் உற்சவ மூர்த்தங்கள் கிடைத்தன. அந்த மூர்த்தங்களை திரௌபதி அம்மன் கோயிலில் வைத்து வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் இப்போது இந்தப் பெருமாளும் வெளிப்பட, அவருக்குச் சிறியதொரு ஆலயம் அமைத்து வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.

பெருமாளின் திருக்கோயிலில் சனிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் தேன், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பேறு அளிக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். புதுச்சேரி - கடலூர் மார்க்கத்தில் சுமார் 15 கி.மீ தொலைவிலுள்ளது பாகூர். புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து பாகூருக்குப் பேருந்து வசதிகள் உண்டு.

Comments