சந்தோஷம் அருள்வார் சந்திரசேகரர்

சேகரன் என்ற திருப்பெயருக்கு சேகரித்துவைப்பவன், துணை நிற்பவன், காப்பவன், காவலன் என்று பல பொருள் சொல்லலாம். தட்சனின் சாபத்தால் களையிழந்து தவித்த சந்திரனுக்கு மீண்டும் பொலிவைத் தந்து அருளியதால், சிவனாருக்கு `சந்திரசேகரர்' என்று திருப் பெயர். சிவபெருமான் சந்திரசேகரராக அருளும் கோயில்களுக்குச் சென்று வழிபட்டுவந்தால் வாழ்வில் சந்தோஷம் பெருகும்; மனதில் சஞ்சலங்களுக்கு இடமிருக்காது.

சந்திரசேகரரைத் திங்கட் கிழமைகளில் தரிசிப்பதும் வழிபடுவதும் விசேஷம். அப்போது நந்தியாவர்த்தம், தும்பை போன்ற வெள்ளை வண்ண மலர்களால் அர்ச்சித்து வழிபடுவதால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.
திருக்கழிப்பாலை எனும் திருத்தலத்தில் இறைவனுக்குத் தும்பைப்பூ கொண்டு அர்ச்சித்ததைக் கல்வெட்டு தகவல் குறிப்பிடுகிறது. காஞ்சியில் சிவபூஜையின் பொருட்டு, தும்பை வனம் அமைத்துப் பராமரிக்கப்பட்டதையும்  அறிய முடிகிறது.

மயிலாடுதுறையிலிருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ள திருவீழிமிழலை, சென்னை - தி.நகரில் அகத்தீஸ்வரர் ஆலயம், திருப்புகலூர் சிவாலயம் முதலான தலங்களில் சந்திரசேகர மூர்த்தியைத் தரிசிக்கலாம்.

Comments