சந்தான வரம் தருவார் துரையப்ப சாஸ்தா!

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் பழையகாயலிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது அகரம் கிராமம். இங்கு சாந்நித்தியத்துடன் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீதுரையப்ப சாஸ்தா. இந்த அகரம் கிராமம் முழுவதுமே அக்ரஹாரங்களாக (வேதியர்கள் வசித்த பகுதி) திகழ்ந்ததால், இவ்வூர் ‘அகரம்’ எனப் பெயர்பெற்றதாம். இதன் வேத காலத்துப்பெயர் ‘மணி மஹோதய அக்ரஹாரம்’ என்பதாகும்.  `வீரமங்கலம்’, ‘சதுர்வேதி மங்கலம்’ எனவும் இவ்வூர் அருகிலுள்ள மாரமங்கலத்திலுள்ள கோயில் கல்வெட்டுகளில் `வீரபாண்டிய சதுர்வேதி மங்கலம்’ எனவும் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
வழிகாட்டிய சாஸ்தா!

கொற்கை மற்றும் அதன் சுற்றுவட்டார கடற்கரை பட்டினங்கள் கடல் வணிகத்தால் சிறந்து விளங்கின. ஒருமுறை ஆங்கிலேயர்களின் கப்பல் ஒன்று கடுமையான புயலில் சிக்கித் தத்தளித்தது. அந்த நேரத்தில்,  பனைமரத்தின் உச்சியிலிருந்து ஓர் ஒளியை அனுப்பி அவர்களுக்கு வழிகாட்டி அருள்புரிந்தாராம் இந்த சாஸ்தா. கப்பலும் புயலிலிருந்து மீண்டு கரையை வந்தடைந்தது. உயிர்ப்பிழைத்த ஆங்கிலேயே துரைமார்கள், தங்களுக்கு அருள்புரிந்த பனைமரத்தடியில் இந்த சாஸ்தாவை நினைத்து வழிபட்டு வணங்கியதால், இவருக்கு ‘துரையப்ப சாஸ்தா’ என்ற பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். 

பனைமரத்துக்கு `தாலமரம்’ என்று பெயர் உண்டு. தாலமரத்தடியில் அருள்புரிந்த சுவாமி என்பதால், ஆரம்பத்தில் இவருக்கு ‘தாலமுத்து சாஸ்தா’ என்றே திருப்பெயர். ஆம்... இத்திருக்கோயிலின் தல விருட்சமாக  இரட்டை பனைமரங்கள் திகழ்கின்றன. பனைக்கு அடியிலேயே ‘தபசுராயர்’ பீடம் உள்ளது. பனைமரத்தின் அருகில் வேள்விகள் நடத்திய அந்தணர்களுக்கு வேள்விகள் முழுமையாக நிறைவடைய காட்சியளித்து அருள்புரிந்ததால் பனைமரத்தை ‘தபசுராயராக’ நினைத்து மக்கள் வழிபட்டார்களாம்.

 முனிவர் விருப்பத்தை நிறைவேற்றிய சாஸ்தா

சாஸ்தாவை நினைத்து தாலமரத்தடியில் ஐம்புலன்களையும் அடக்கி உத்தம மந்திரத்தைக் கூறிக்கொண்டு முனிவர் ஒருவர் தவம் இருந்தார். அப்போது, ஹரிஹர புத்திரனாகிய சாஸ்தா தனது பரிவாரங்களுடன் வாகனங்களுடன்   முனிவருக்குக் காட்சிகொடுத்து, ``உன் தவத்தில் மனம் குளிர்ந்தோம். உமக்கென்ன வரம் வேண்டும்’’ எனக் கேட்டார்.

உடனே முனிவர், ‘‘ஐயனே! தாங்கள் சேனை வீரர்கள், பூதகணங்கள் எல்லாவற்றையும் தவிர்த்து ஆயுதங்கள் ஏதும் இல்லாதவராகப் பிரம்மச்சாரி ரூபனாக திருக்காட்சி புரிய வேண்டும்’’ என வேண்டிக்கொண்டார். அப்படியே, சாந்த சொரூபனாக அவருக்குத் திருக்காட்சி கொடுத்தாராம் சாஸ்தா. இந்த அகரம், துரையப்ப சாஸ்தாவின் பெருமைகளைப் பற்றி ‘சாஸ்தா மகாத்மிய’த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 யோக நிலையில் துரையப்பர்

இத்திருக்கோயிலின் மூலவராக அமர்ந்த நிலையில் நெற்றியில் கஸ்தூரி திலகமும், கிரீடமும், சுருள் சுருளான தலைமுடி, காதுகளில் குண்டலங்கள், இருகரங்கள் கொண்டவராகப் பிரம்மச்சாரி வடிவத்தில் ‘யோக நிலையில்’ கிழக்கு திசைநோக்கி காட்சியளிக்கிறார், துரையப்ப சாஸ்தா.
அர்த்தமண்டபத்தில் யானையும் குதிரையும் வாகனங்களாகத் திகழ்கின்றன. முன்மண்டபத்தில் விநாயகர், நாகர், சந்தானகிருஷ்ணன், பேச்சியம்மன், துர்கை ஆகியோர் கிழக்கு நோக்கி பரிவார தெய்வங்களாகக் காட்சியளிக்கிறார்கள். கோயிலுக்கு வெளிப்புறத்தில் முன்னடிமாடன், பிரம்மசக்தி, காத்தவராயன், ஊமைச்சாமி, அக்னிமாடன், சின்னத்தம்பி, பலவேசக்காரன் ஆகியோரைத் தரிசிக்கலாம். கோயிலின் வெளிப்பிராகார இடப்புறத்தில் ஆதித்யா, அம்பிகா, விஷ்ணு, கணநாதர், மகேஷ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.

 திருவிழா வைபவங்கள்


இத்திருக்கோயிலில் முக்கியமான திருவிழா, பங்குனி உத்திரம்தான். அன்று அதிகாலையில் தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்துவரப்படும். தொடர்ந்து காலையில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடைபெறும். அதைத் தொடர்ந்து 17 வகை அபிஷேகங்களும் விசேஷ தீபாராதனையும்  அன்னதானமும் நடைபெறும்.  தை பூசத் திருநாளிலும் இதேபோலவே பூஜைகள் நடைபெறும். ஆனி மாதத்தில் உத்திராட நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடைபெறும். கார்த்திகை மாதத்தில் முதல் தேதியிலிருந்து மகர ஜோதி வரை தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

 சாஸ்தாவின் சந்நிதியில் பத்திரிகை வாசிப்பு

‘‘இந்த துரையப்பா சாஸ்தா நிறைய கஷ்டங்களைக் கொடுத்துச் சோதிப்பார். ஆனால், அந்தக் கஷ்டங்களை எளிதில் நிவர்த்தி செய்யக்கூடியவரும் அவரே’’ என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள். இப்பகுதியில் திருமணம் வைத்திருப்பவர்கள் முதல் பத்திரிகையை சாஸ்தாவிடம் வைத்து வணங்குகின்றனர். சாஸ்தா முன்பு பத்திரிகை முதல் வரியிலிருந்து கடைசி வரி வரைக்கும் முழுமையாக வாசிக்கப்படுகிறது. சாஸ்தாவே திருமண வைபவத்தை முன் நின்று நடத்தி வைப்பதாக ஐதீகம்.  திருமணம் முடிந்த தம்பதியர் சாஸ்தாவை வணங்கி நெய் தீபம் ஏற்றி, பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபட்டுச் செல்கின்றனர்.

 சந்தான பாக்கியம் கிடைக்கும்

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இக்கோயிலிலுள்ள கிணற்றில் குளித்துவிட்டு  புத்தாடை அணிந்து சாஸ்தா முன்பு சந்தான கோபால ஹோமம் செய்து பால், விபூதி, நெய், இளநீர் அபிஷேகம் செய்து வெண்பட்டு வேஷ்டி, வெண்பட்டு துண்டு, ரோஜா மாலை சாற்றி பால் பாயசம் நிவேதனம் செய்து சாஸ்தாவை மனமுருகி வேண்டியபின், நிவேதனம் செய்யப்பட்ட பால் பாயசம் தம்பதியருக்குக் கொடுக்கப்படுகிறது. இப்படிச் செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள் பலனடைந்தோர்.
கல்வி மேன்மைக்குத் தேன் அபிஷேகம்

மாணவர்கள் கல்வியில் மேன்மை பெற்றிட சாஸ்தாவுக்குத் தேன் அபிஷேகம் செய்து பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவதோடு, கோயில் வெளிப்பிராகாரத்திலுள்ள கல்விக்கு அதிபதிகளாக விளங்கிவரும் ஆதித்யா, அம்பிகா, விஷ்ணு, கணநாதர், மகேஷ்வரர் ஆகிய ஐவருக்கும் நெய் தீபமேற்றி வழிபட்டால் முழுப்பலன் கிடைக்கும். புதன் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து 11 கிழமைகள் இலையில் பச்சரிசி பரப்பி, தேங்காய் முறிகளில் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டுவந்தால் மனக் குழப்பம், தேவையற்ற சிந்தனை, வீண் பயம், பதற்றம் ஆகியன விலகும். இந்த நீராஞ்சன விளக்கு வழிபாட்டை புதன்கிழமை என்றால் ஒவ்வொரு வாரமும் புதனில் தொடர வேண்டும். சனிக்கிழமை என்றால் சனிக்கிழமையிலேயே தொடர வேண்டும்.

 மனநிலை சீராக பிரதிபந்தக வழிபாடு


மனநிலை பாதிக்கப்பட்டவரின் ஜன்ம நட்சத்திரத்தன்று சாஸ்தா முன்பு பிரதிபந்தக ஹோமம், 11 வகை அபிஷேகம் செய்து  பாதிக்கப் பட்டவரின் பெயர், நட்சத்திரத்தை சங்கல்பம் செய்து புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், உளுந்தவடை, பால் பாயசம், பானகம் ஆகிய பஞ்ச நைவேத்தியம் செய்து வழிபட்டால் பாதிப்பு நீங்கி விரைவில் குணம் பெறுவார்கள்.

பக்தர்கள் கவனத்துக்கு

எப்படிச் செல்வது? தூத்துக்குடி – திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ளது பழையகாயல். பழையகாயலிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது அகரம் கிராமம்.

தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகளும் பழையகாயல் ஊர் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும். அங்கிருந்து மினி பஸ், உள்ளூர் பஸ் அல்லது ஆட்டோவில் துரையப்ப சாஸ்தா கோயிலுக்குச் செல்லலாம்.
நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை.
தற்போது ஒருகால பூஜைதான் நடந்துவருகிறது. கோயிலுக்கு வருபவர்கள் முன்னரே தகவல் தெரிவித்துவிட்டுச் செல்வது சிறப்பு.

தொடர்புக்கு: ஹரிஹரன் - 99408 69499.

Comments