தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக ஐயப்பன்

சாஸ்தா என்றால் ஆளுபவன் என்று பொருள். ‘தர்மஸ்ய சாஸனம் கரோதி இதி தர்ம சாஸ்தா’ - தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக ஐயப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம்.

*கா சாஸ்தா, மேரு மலையில் ஸ்படிக மயமான சிகரத்தில் வீற்றிருக்கும் பரம்பொருள். அவரே துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனத்துக்காக பல அவதாரங்களை எடுக்கிறார். மகாவிஷ்ணு வின் அவதாரங்கள் எல்லோருக்கும் தெரியும். அதுபோல் மகா சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங் கள் உண்டு. அவை: ஆதி சாஸ்தா, கால சாஸ்தா,  பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸ்தா, கிராத சாஸ்தா மற்றும் புவன சாஸ்தா.

*தி சாஸ்தாவுக்கு பூர்ணா-புஷ்கலா என்ற இரு மனைவியர் உண்டு. அச்சன்கோவில் முதலான தலங்களில் உள்ள திருவடிவம் இதுவே. இந்த ஆதி சாஸ்தாவையே தமிழகத்தில் ஐயனார் என்று அழைத்தார்கள். இவற்றுள் அருள்மிகு பொன் சொரிமுத்து ஐயனார் ஆலயமே பிரதானமானது.

* கால சாஸ்தாவை வழிபடுவதால் எதிரி களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்; யம பயம் விலகும்.

* பால சாஸ்தா பால் கிண்ணத்தைக் கையில் ஏந்தி, குழந்தை வடிவில் காட்சி தருபவர். ஞானத்தையும் வெற்றியையும் தரக்கூடியவர். நோய்களையெல்லாம் நீக்கும் இவரையே ‘தந்வந்த்ரி சாஸ்தா’ என்றும் அழைப்பர். தகழி, த்ருப்ரயார் ராம க்ஷேத்ரம் முதலான பல தலங் களில் இவர் காட்சி தருகிறார்.

* ம்மோஹன சாஸ்தா சகலவிதமான செளக்கியங்களையும் தந்து நல்வாழ்வு அருளக் கூடியவர்.

* ர்ய சாஸ்தா எனும் அவதாரத்தில் சாஸ்தாவுக்கு ‘ப்ரபா’ என்ற மனைவியும் `ஸத்யகன்’ என்ற மகனும் உண்டு. இவர் குழந்தை பாக்கியமும் தரக்கூடியவர்.

திருகுன்னபுழை எனும் க்ஷேத்திரத்தில் சுமார் பத்தடி உயரத்தில் திகழும் ஸ்ரீப்ரபா ஸத்யக சாஸ்தாவைத் தரிசிக்கலாம். இவரது திருக்கோயிலே 108 சாஸ்தா ஆலயங்களுக்கும் முதல் திருக்கோயில் என்பார்கள்.

*கவான் வேட்டைக்காரனாக காட்சிதரும் கோலம் - கிராத சாஸ்தா திருக்கோலமாகும். எருமேலி முதலான தலங்களில் இந்தத் திருவடி வில் சாஸ்தாவைக் காணலாம்.

* புவன சாஸ்தாவாக அவதரித்த வேளையில் மதனா - வர்ணினீ என்ற இரு மனைவியரைக் கொண்டதாக சுப்ரபேத ஆகமம் கூறுகிறது.

* ஹிஷி சம்ஹாரத்தின் பொருட்டு ராஜசேகர பாண்டியனுக்கு மகனாகத் தோன்றியதே ஸ்ரீசாஸ்தாவின் மணிகண்ட அவதாரம். இதுவே கலியுக அவதாரம். இந்த அவதாரத்திலேயே நைஷ்டீக ப்ரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்கிறார் ஐயன்.

* லியுகத்தின் மாயை பாதிக்காத இடமாக வும் சகல பாவங்களையும் மாய்க்கும் இடமாக வும் விளங்கும் காரணத்தால், பகவான் அமர்ந்த ஸ்தலம் மஹாயோக பீடம் என்று அழைக்கப் படுகிறது. அதனால்தான், அந்தத் தலத்தைத் தனது ஆலயமாக பகவான் தேர்ந்தெடுத்தார்.

* காச கங்கையே மதங்க முனிவரின் தவத்துக்கிணங்கி, பம்பா நதியாக உருவெடுத்து வந்தது. பகவான் சாஸ்தா ஆகாச கங்கையுடனே பூலோகம் அடைந்து பம்பைக் கரையில் குழந்தையாகக் காட்சி தந்தார். அங்கேயே திருக்கோயில் கொண்டார்.

* லியுக தேவதையாக ஐயப்பன் விளங்கும் காரணத்தால் சத்தியமே ஒரு தேவதையாக உருவெடுத்து, சபரிமலையில் 18-ம் படியாக விளங்குகிறது. அதனால்தான் சபரிமலைக்கு இந்தத் தனிச்சிறப்பு. இருமுடியில்லாமல் ஐயப்பனைக்கூட தரிசனம் செய்யலாம். ஆனால், 18-ம் படி ஏற முடிவதில்லை.

* ஹிஷியை வதம் செய்ய மணிகண்டன் புறப்பட்டபோது, தேவேந்திரனே சிங்கமாகவும் குதிரையாகவும் உருக்கொண்டு ஐயப்பனைத் தாங்கி நின்றான்.

* ன்புலி வாகனன் என்று நாம் ஐயப்பனை அழைத்தாலும், அது புலிப்பாலுக்காக நிகழ்ந்த ஒரு சம்பவம் மட்டுமே. உண்மையில் சபரி மலையில் பகவானின் வாகனம் குதிரைதான். கொடிமரத்தின் மேலே குதிரை உருவமே அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

* தினெட்டாம் படிகளுக்குக் காவலாக கடூரவன் (என்ற) கடுத்த ஸ்வாமியும், க்ருஷ்ணாபன் (என்ற) கருப்ப ஸ்வாமியும் இருப்பதாக ஸ்ரீபூதநாத உபாக்யானம் கூறுகிறது.

* பரிமலையின் மணிகண்டனின் அங்கரக்ஷகனாக விளங்குபவன் வாபுரன் என்ற சிவ பூதகணத் தலைவன்.

கணேசம் நைர்ருதே வாயௌ மஞ்சாம்பாம் ச ப்ரபூஜயேத்
பைரவௌ த்வஸிதாங்கஞ்ச பூர்வே வாமே ச வாபுரம்


கன்னிமூலையில் கணபதியும் வாயு திசையில் மாளிகைப்புறத்தம்மனும் பகவானுக்கு முன் இரு கடூரவர்களும், கருப்பனும் இடப்புறத்தில் வாபுரனும் இருக்கிறார்கள்.

* பரிமலையைச் சுற்றியும் உள்ள 18 மலை களும், பதினெட்டாம் படியில் உள்ள ஒவ்வொரு படிக்கும் ஒப்புமையாகக் கூறப்படுகிறது.

* கவான் சாஸ்தாவுக்குத் தேவர்கள் அபிஷேகம் செய்யும் தீர்த்தமே உரல்குழி தீர்த்தமாக – கும்பளம் தோடு எனும் இடத்தில் உருவாகி வெளிவருகிறது. சபரிமலையின் முக்கிய தீர்த்தமாக இது விளங்குகிறது.

* பரிமலை யாத்திரையின்போது, கட்டுநிறை முடிந்து யாத்திரை கிளம்புவதற்கு முன் நாம் தேங்காய் உடைத்துவிட்டு கிளம்புகிறோம். இது நமக்காகக் காவல் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் ஐயப்பனின் பரிவார தெய்வங்களுக்காக உடைப்பது.

* யப்ப பக்தர்கள் ஐயனை அக்னி வடிவத் தில் ஜோதிஸ்வரூபனாகவே காண்கின்றனர். அந்த வழிபாடே கற்பூர ஆழி. 

* ண்டல விரதம் என்பது பண்டைய காலத்தில் 56 நாள்களாகவே கூறப்பட்டது. கார்த்திகை ஒன்றாம் நாள் மாலையிட்டு மகரவிளக்கு தரிசனமே ஒரு சபரிமலை யாத்திரையாகக் கொள்ளப்படும்

* பரிமலை ஆலயத்தை உருவாக்கியது விஸ்வகர்மா; விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தது பரசுராமர்; ஆலயத்தின் பூஜைமுறைகளையும், யாத்திரைக்கான வழிகாட்டுதலையும் உருவாக்கிக்கொடுத்தவர் அகத்திய மஹரிஷி.

* ணிகண்ட அவதார காலத்தில், பகவான் பூதநாதனால் தன் வளர்ப்புத்தந்தை ராஜசேகர பாண்டியனுக்கு உபதேசிக்கப்பட்ட அற்புத நூலே `ஸ்ரீ பூதநாத கீதை'.

* பரிமலையை தவிர மற்ற கோயில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம். அதன்படி, சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மறு கால் மடித்தபடியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.

* ம் உடலில் உள்ள ஆறு ஆதார சக்கரங்களைக் குறிக்கும் ஆறு சாஸ்தா க்ஷேத்திரங்கள் உண்டு. அவை: மூலாதாரம் - சொரிமுத்தய்யன் கோயில், ஸ்வாதிஷ்டானம் - அச்சன்கோயில், மணிபூரகம் - ஆர்யங்காவு, அனாஹதம் - குளத்துபுழை, விசுத்தி - எருமேலி, ஆக்ஞை - சபரிமலை.

சாஸ்தாவின் கோயிலில் தீபமேற்றினால்...

சாஸ்தாவுக்கு ஆலயம் அமைப்பவர்களது முன்னேழு தலைமுறையும் பின்னேழு தலைமுறையும் ஐயனின் பதத்தை அடைந்து இன்புறுவர். ஐயனின் பூஜைகளுக்கென பசுவும் கன்றும் ஆலயத்துக்கு அளிப்பது சாமானியமான செயலல்ல. அது சகல பாவங்களையும் போக்கவல்லது. அவர்கள் கோ லோகத்தை அடைவர்.

மேலும் பலவித தோஷங்களாலும் கண்டங்களாலும் அவதியுறுபவர், பகவானின் ஆலயத்துக்குப் பசுவையும் கன்றையும் கொடுப்பதன் மூலம் சர்வ பாப விமுக்தனாகிறார்கள்.

சாஸ்தாவின் ஆலயத்தை பசுஞ்சாணமிட்டு மெழுகிக் கோலமிடுபவர், இந்திர லோகத்தை அடைந்து அப்ஸரஸ்களால் சூழப்பட்டு ஆயிரமாண்டுகள் வாழ்வர். ஐயனின் ஆலயத்தில் நல்லெண்ணெய், நெய் தீபம் ஏற்றுவோர் சரீர பீடைகளும், க்ரஹ பீடைகளும் ஒழிந்து நல்வாழ்வு பெறுவர்.

காக்கும் தெய்வங்கள்

சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாகச் சொல்வது வழக்கம். ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகிறார்கள்.

முதல் கோட்டை     - எருமேலி -  வாபுரன்

இரண்டாம் கோட்டை     - காளைகெட்டி - நந்திகேஸ்வரன்

மூன்றாம் கோட்டை     - உடும்பாறை - ஸ்ரீபூதநாதன்

நான்காம் கோட்டை      - கரிமலை -  பகவதி

ஐந்தாம் கோட்டை     - சபரி பீடம் -  சபரி துர்கை

ஆறாம் கோட்டை     - சரங்குத்தி - அஸ்த்ர பைரவர்

ஏழாம் கோட்டை     - பதினெட்டாம்படி - கருப்ப ஸ்வாமி

சாஸ்தா அபிஷேக பலன்கள்

சாஸ்தாவுக்குச் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அளவற்ற பலன்களைக் கொடுக்கவல்லது.

தைலாபிஷேகம் - வியாதிகளை நாசம் செய்யும்.

திரவியப்பொடி, மஞ்சள் பொடி, அரிசிமா பொடி, நெல்லிப்பொடி போன்ற அபிஷேக பொடிகள்  - கடன் நிவாரணத்தை அளிக்கும்.

பஞ்சகவ்யம்         - ஞானம் அருளும்.

பஞ்சாமிர்தம்         - ஆயுள் விருத்தியை அளிக்கும்.

பசும்பால்         - செல்வ வளத்தை அளிக்கும்.

தயிர் அபிஷேகம்     - தேக புஷ்டியையும் ஆரோக்கியத்தையும் அருளும்.

நெய் அபிஷேகம்     - நோயற்ற வாழ்வு தரும்.

தேன் அபிஷேகம்     - இனிய குரல் வளத்தையும் நல்ல வாழ்க்கை துணையையும் கொடுக்கும்.

கருப்பஞ்சாறு         - வம்ச விருத்தி உண்டாகும்.

பழச்சாறுகள்         - தோற்றப்பொலிவைத் தரும்.

இளநீர்         - சத்புத்ர பேற்றையும் பெரும் வித்யையையும் அளிக்கும்.

சந்தன அபிஷேகம்     - தான்ய லாபத்தையும் தேக சௌக்கியத்தையும் அளிக்கும்.

விபூதி அபிஷேகம்     - ஐஸ்வர்யத்தையும் முக்தியையும் அளிக்கும்.

புஷ்போதக அபிஷேகம்     - ராஜ பதவியை அளிக்கும்.
 

Comments