ராம... ராம... ராம...’ தியாகராஜர் வேதம்!

ந்திரனைப் பழிக்கும் எழிலுடைய சீதாதேவியே... லட்சுமணனே! நீங்கள் இருவரும் ஸ்ரீராமபிரானின் இருபுறமும் நின்றுகொண்டு சேவை செய்யும் தத்துவத்தை அன்புகூர்ந்து எனக்கு விவரமாகச் சொல்லக் கூடாதா? தேகத்தால் வணங்குகிறீர்களா, நாவினால் நாம கீர்த்தனம் செய்கிறீர்களா அல்லது மனதில் தியானித்துப் பரவசம் அடைகிறீர்களா?’ - இப்படி ஒரு கேள்வியை `பக்கல நிலபடி கொலிசே...’ கீர்த்தனையில் கேட்கிறார் தியாகராஜர். சதா சர்வகாலமும் ராம சிந்தனை... ராமபக்தி! ஆனாலும், ராமபிரானின் மேல் தான் கொண்டிருக்கும் பக்தி குறைவானதோ என்கிற சந்தேகம். அற்புதமான சொல்லாடல், கவித்துவம், தேர்ந்தெடுத்த ராகத்துக்குப் பொருத்தமாக, கச்சிதமாக வந்தமரும் பாடல் வரிகள்... நினைக்க நினைக்க மலைக்கவைக்கிறார் தியாக பிரம்மம். அப்படிப் பிரமிக்கவைக்கும் பாடல் வரிகளுக்குக் காரணம், அவர் மேற்கொண்ட நாதோபாசனை. அதாவது, இசை வழியாக இறைவனை வழிபடுதல், பக்தி செலுத்துதல். `தியாகய்யா’ என்கிற தியாகராஜர் `கர்னாடக இசையின் இசை மும்மூர்த்திகள்’ என அழைக்கப்படும் மூவரில் முக்கியமானவர். மற்ற இருவர் ஷ்யாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர். தியாகராஜர் பிறந்த 250-ம் ஆண்டில் நாம் இருக்கிறோம். ஆனால், இன்றைக்கும் புதிதாக, கேட்கக் கேட்கத் தெவிட்டாததாக, பக்தி என்கிற கடலுக்குள் நம்மை மூழ்கச் செய்வதாக இருக்கின்றன அவரது கீர்த்தனைகள். அவற்றில் பெரும்பாலானவை தெலுங்கில் எழுதப்பட்டவை. சில சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை. 
1767-ம் ஆண்டு, மே மாதம், 4-ம் தேதி திருவாரூரில் இராமபிரம்மம் சீத்தம்மாள் தம்பதிக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார் தியாகராஜர். இராமபிரம்மத்துக்குப் பூர்வீகம் ஆந்திராவில் உள்ள காகர்லா என்கிற கிராமம். இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் உள்ள திருவாரூருக்கு இடம்பெயர்ந்து அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்கியது அந்தக் குடும்பம். இராமபிரம்மம் ராமாயண உபன்யாசம் செய்பவர். தாய் சீத்தம்மாள் வீணைக்கலைஞர்; `ஜெயதேவர் அஷ்டபதி' தொடங்கிப் பல பக்திப் பாடல்களை அற்புதமாக வீணையில் இசைப்பவர். தந்தையின் ராமாயணச் சொற்பொழிவாற்றலும் தாயின் இசை மேதைமையும் இயல்பாகவே இசையுணர்வை தியாகராஜருக்கு ஏற்படுத்திவிட்டன. ஒருநாள் இராமபிரம்மத்தின் உபன்யாசத்தை அன்றைய தஞ்சை மன்னர் துளசிங்க மகாராஜா கேட்டார்; நெகிழ்ந்துபோனார். பரிசாகத் திருவையாற்றில் ஒரு வீட்டை அவருக்கு வழங்கினார். இப்படித்தான் திருவாரூரிலிருந்து திருவையாற்றுக்கு வந்து சேர்ந்தது தியாகராஜரின் குடும்பம்.   
தியாகராஜருக்கு வெங்கடரமணய்யா என்பவர் கர்னாடக இசையைக் கற்றுக்கொடுத்தார். அதோடு சம்ஸ்கிருதத்தையும் திருவையாற்றில் உள்ள வேத பாடசாலையில் வேதத்தையும் கற்றுக்கொண்டார் தியாகராஜர். தந்தை சேர்த்துவைத்திருந்த ஏராளமான தெலுங்கு ஓலைச்சுவடிகளையும் அதில் உள்ள கீர்த்தனைகளையும் கற்றுத் தேர்ந்தார் தியாகராஜர். இந்த ஆர்வமும் ஊக்கமும் இருந்ததால்தான் அவரால் 13 வயதிலேயே `நமோ நமோ ராகவா’ என்ற தேசிக தோடி ராகத்தில் அமைந்த கீர்த்தனையை இயற்றி, பாட முடிந்தது.  

அற்புதங்களுக்குக் குறைவில்லாதது மகான் தியாகராஜரின் வாழ்க்கை. `தியாகராஜருக்கு ராம மந்திரத்தை உபதேசம் செய்தவர், இராமகிருஷ்ணானந்தர்’ என்று சொல்கிறார்கள்.  இல்லை... இந்த ராம மந்திர உபதேசத்தைத் தியாகராஜருக்கு அருளியவர் ஹரிதாஸ் என்கிற சந்நியாசி என இன்னொரு குறிப்பும் இருக்கிறது. இந்த ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கட்டும். குருவிடம் உபதேசம்பெற்ற அந்த  ஸ்ரீராம மந்திரத்தைப் பல கோடி முறை ஜபித்து, ராமனை நேருக்கு நேர் கண்ணாரக் காணும் பாக்கியம் பெற்றவர் என்பது தியாகராஜரின் முக்கியமான வரலாற்றுக் குறிப்பு. அப்போது அவர் பாடிய கீர்த்தனை... `பால கனகமய சேல ஸுஜன பரி...’ என்கிற அனுபல்லவியைக் கொண்ட, `ஏல நீ தயராது...’ பல்லவியில் அமைந்த கீர்த்தனை. அந்தப் பாடலில் மனமுருகி, ஸ்ரீராமனைப் போற்றி, புகழ்ந்து தள்ளிவிடுவார் தியாகராஜர்.   
தியாகராஜரின் வரலாற்றைக் கூர்ந்து படித்தால், இல்லற வாழ்க்கை அவரின் ராமபக்தியை, நாதோபாசனையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்றே தெரிகிறது. அவரின் மனைவி பார்வதி, திருமணமான சில மாதங்களிலேயே இறந்துபோனார். பிறகு, பார்வதியின் தங்கை கமலாம்பாளைத் திருமணம் செய்துகொண்டார். லௌகீக வாழ்க்கையில் பற்று மிகுந்திருந்தால், பக்தி குறைவாகவோ அளவாகவோதான் இருக்கும். தியாகராஜர் வாழ்க்கையிலோ அப்படிப்பட்ட குறைகள் ஏதும் இல்லை. உண்மையில் அவருடைய ராமபக்தி நாளுக்கு நாள்  அதிகமாகிக்கொண்டிருந்தது. `மேருஸமான தீர! வரத ரகுவீர...’ என்கிற கீர்த்தனையில் ஸ்ரீராமனை இப்படி வணங்குகிறார்... `ஹே ரகுவீரா! வரதா! தியாகராஜனால் பூஜிக்கப் பெற்றவனே! உண்மைப் பொருளே! உன்னுடைய ஒய்யார நடையையும், நீலமேனியின் எழிலையும், கருங்குழல்களையும் கன்னங்களின் பளபளப்பையும் திவ்யாபரணங்களையும் நான் கண்ணாரக் காண என் எதிரில் வா!’ இப்படி உருகி ராமனைப் பாடுகிறவருக்கு ராமனை `வா... வா...’ என்று அழைத்துக் கொண்டிருந்தவருக்கு இல்வாழ்க்கையில் ஈடுபாடு என்ற ஒன்று எப்படி இருந்திருக்க முடியும்? சதா ராமநாம பாராயணம் அல்லது தம்பூராவை மீட்டியபடி ராமனின்மேல் மேற்படி கீர்த்தனைகள். இப்படியே இறுதி வரை நகர்ந்தது அவரின் வாழ்க்கை.    
சரணாகதித் தத்துவம்தான் பக்தியின் உச்ச கட்டம் என்கிறார்கள். இறைவனைச் சரணடைந்தவர்களுக்கு வேறு எதுவும் தேவைப்படுவதில்லை. இறையருள் வேண்டும், இறையைத் தரிசிக்க வேண்டும் என்பதைத்தவிர வேறு ஆசைகள் அவர்களுக்கு இருப்பதில்லை. அந்த வகையில் தியாகராஜரும் ஒரு துறவியே. தன் அன்றாட உணவுக்கு அவர் தேர்ந்தெடுத்த வழி, உஞ்சவிருத்தி. தம்பூராவை எடுத்துக்கொண்டு திருவையாற்றில் தெருத் தெருவாகப் போவார். பாடல்களைப் பாடி, பிக்‌ஷை எடுப்பார். அதில் கிடைக்கும் அரிசியைக்கொண்டுவந்து மனைவியிடம் தந்து சமைக்கச் சொல்வார். சமைத்ததும் முதலில் ஸ்ரீராமனுக்கு நைவேத்தியம் செய்வார். பிறகுதான் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு அன்னம் கிடைக்கும். அன்றாடப் பாடு கழிந்தால் போதும் அவருக்கு. பொன், பொருள் ஈட்டுவதில் நேரத்தைச் செலவிட்டால், ராமனை வணங்குவது எப்படி... பாடித் துதிப்பது எப்படி என்கிற எண்ணம் அவருக்கு இருந்திருக்க வேண்டும். இது உண்மைதான் என்பதை நிரூபிப்பதற்கு அவருடைய வரலாற்றிலேயே சான்றுகள் உள்ளன.

அப்போது தஞ்சையை ஆண்டவர் சரபோஜி மகாராஜா. தியாகராஜரின் ராமபக்தியையும் இசையாற்றலையும் பற்றிக் கேள்விப்படுகிறார். ஆடை, ஆபரணம், பொன் என பலவற்றைத் தன் சேவகர்களிடம் கொடுத்து தியாகராஜரிடம் கொடுக்கச் சொல்லி, அவரை தன் அரண்மனைக்கு அழைத்து வரச் சொல்கிறார். அவற்றில் எதுவும் வேண்டாம் எனச் சொல்லி மறுத்துவிடுகிறார் தியாகபிரம்மம். அதோடு, ராமனைவிட இந்தப் பொன் பொருள் எல்லாம் சுகம் தந்துவிடுமா என்கிற கருத்து அமைந்த `நிதி சால சுகமா...’ என்கிற கீர்த்தனையையும் பாடுகிறார். அதேபோல மகாராஜா சுவாதி திருநாள், பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பி தன் சபைக்கு அவரை அழைத்தபோதும் ஏற்க மறுத்துவிட்டார். மகாராஜாக்களின் அழைப்பை மறுத்தவர், பல இசை மேதைகளின் அழைப்பை ஏற்றிருக்கிறார்.  
திருவனந்தபுரத்திலிருந்து கோவிந்தமாரார் என்கிற இசைக்கலைஞர் தியாகராஜரைத் தேடிவந்தபோது, அவருக்காகப் பாடியிருக்கிறார். வட இந்தியாவிலிருக்கும் பண்டரிபுரத்தைச் சேர்ந்த கணேசகிரி பாவா என்பவர் இவரைத் தேடி திருவையாறுக்கு வந்தபோது, தன்னுடனேயே சில காலம் வைத்துக்கொண்டார். காஞ்சிபுரத்தில் இருந்து உபநிஷத பிரமேந்திர சுவாமிகள் என்ற பெரியவர் அழைத்தபோது மறுக்காமல் அவரைக் காணச் சென்றிருக்கிறார். காஞ்சிக்கு வந்தவர், காஞ்சி காமாஷியைப் போற்றி, மத்யமாவதி ராகத்தில் பாடிய பாடல்... அமுதம்! `விநாயகுனிவலெனு ப்ரோவவே நிநு...’ என்கிற அந்தப் பாடலில் `காமாஷி... காஞ்சிபுர நாயகி... உன் அடியார்கள் கஷ்டப்படக் கூடாத வகையில் நீ கருணை புரிய வேண்டும்...’ என்று கோரிக்கையெல்லாம் வைக்கிறார். இப்படி எத்தனையோ அற்புதமான சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. அத்தனையிலும் அவருடைய பக்தியே விஞ்சி நிற்கிறது.  தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் புகழ்பெற்றவை. ஆண்டுதோறும் திருவையாற்றில் பல கர்னாடக இசைக்கலைஞர்கள், தை மாதம், பகுள பஞ்சமி நாளில் அவரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி அவருக்கு ஆராதனை நடத்துகிறார்கள்.

தியாகராஜர் நமக்கு உணர்த்தும் முக்கியமான செய்தி பக்தி மனோபாவம்... அதிலும் உறுதியான பக்தி. எப்பேர்ப்பட்ட இன்னல்கள் வந்தாலும், தன் இறுதி மூச்சு வரை ராமநாமத்தை உச்சரித்து, அவனையே பாடித் துதித்து வழிபட்டவர். ஓர் உண்மையான பக்தன் எப்படிப் பக்தி செலுத்த வேண்டும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம். அவரளவுக்குப் பக்தி செலுத்த இயலவில்லை என்றாலும், அவர் பாடிய பாடல்களை மனமுருகிப் பாடினாலும், கேட்டாலும் அந்த ஸ்ரீராமனின் அருள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.  

Comments