ஷீர்டிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவி!

பாபாவைப் போன்ற மஹா புருஷர்கள் எல்லோருமே மக்களை சம்சார சாஹரத்திலிருந்து மீட்டுப் பிறவிப்பயனை அடைய உதவுவதற்காகவே அவதரித்தவர்கள். அந்த முக்தியும் பாபாவின் முன்னிலையிலேயே கிடைத்தவர்கள் எப்பேர்ப்பட்ட பாக்கியசாலிகள்! இப்படி சில நிகழ்வுகள் ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன.
சென்னையைச் சேர்ந்த விஜயானந்த் என்கிற சன்யாஸி மானஸரோவருக்கு தீர்த்த யாத்திரை புறப்பட்டார். செல்லும் வழியில் ஷீர்டி பாபாவின் புகழைக் கேள்வியுற்று ஷீர்டியில் தங்கினார். அங்கே ஹரித்துவாரைச் சேர்ந்த சோமதேவ் ஸ்வாமியைச் சந்தித்தார். மானஸரோவர் யாத்திரை பற்றி சோமதேவ் ஸ்வாமி அவருக்கு விரிவாக எடுத்துரைத்தார். கங்கோத்ரியிலிருந்து மேலே ஏறிச்செல்ல வேண்டும் என்றும் எப்போதும் பனி பொழியும் பிரதேசம் அது என்றும் கூறினார். மேலும் வழியில் யாத்ரீகர்கள் எதிர்கொள்ளக்கூடிய தொல்லைகள் எல்லாம் கூறப்பட்டன. இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் சன்யாஸி உற்சாகம் இழந்தார். யாத்திரை செல்லத்தான் வேண்டுமா என்ற யோசனை மனதில் தோன்ற ஆரம்பித்து விட்டது. அந்த எண்ணத்துடனேயே மசூதிக்கு பாபாவின் தரிசனத்துக்குச் சென்று பாபாவை சாஷ்டாங்கமாகப் பணிந்தார்.
பாபா மிகுந்த கோபத்துடன், ‘இந்த உபயோகமற்ற துறவியைத் துரத்துங்கள்!’ என்றார். சன்யாஸி விஜயானந்திற்குத் தூக்கிவாரிப் போட்டது. தன் நிலையற்ற மனதையே அவர் குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொண்டார். இருந்தாலும் பாபாவின் மேல் பக்தியும் பாசமும் மிக, அவர் அங்கேயே சில தினங்கள் தங்கினார். அப்போது சென்னையிலிருந்து அவருடைய தாய் மிகுந்த நோய்வாய்ப்பட்டிருப்பதாக அவருக்குக் கடிதம் வந்தது. அவர் தன்னுடைய தாயாரை உடனே சென்று பார்க்க விரும்பினார். ஆகவே தன் கையில் கடிதத்துடன் பாபாவிடம் சென்று சென்னை திரும்ப அனுமதி கேட்டார்.
‘உன் தாயாரை நீ இவ்வளவு நேசிக்கும்போது ஏன் துறவியானா? சொந்த பந்தங்களுக்கும் காவி உடைக்கும் ஒத்து வராது! சரி! நீ சில காலம் பொறுமையாக இங்கேயே இருந்து பாகவதத்தை மூன்று வாரங்கள் பாராயணம் செய்!’ என்றார். அவருடைய அந்திம காலம் நெருங்கிக் கொண்டிருப் பதை உணர்ந்தே பாபா அவ்வாறு அறிவுரை கூறினார்.
சன்யாஸியும் அவ்வாறே மிகுந்த சிரத்தையுடன் பாகவதத்தை சப்தாக மாகப் பாராயணம் செய்ய ஆரம்பித்தார். இரண்டு சப்தாகங்கள் பூர்த்தியாகின. மூன்றாவது சப்தாகம் ஆரம்பிக்கும் போது அவருக்கு உடல்நலம் குன்றி பாராயணத்தில் சிரத்தை குறைந்தது. வாடாவில் தன் இருப்பிடத்துக்குத் திரும்பினார். இரண்டு நாட்கள் உடல் நலக் குறைவுடனேயே சோர்ந்து காணப் பட்டார். மூன்றாவது நாள் பக்கீர் பாபா என்று அழைக்கப்படும் ‘படே பாபா’ வின் மடியில் உயிர் துறந்தார். பூர்வ புண்ணியம் அந்த சன்யாஸியின் பங்கில் இருந்ததால்தான் தன் அந்திம காலத்தில் ஷீர்டிக்கு வந்து பாபாவின் முன்னிலையில் சத்கதி அடைய முடிந்தது என்று ஷீர்டியில் கூடியிருந்த பாபாவின் அடியவர்கள் புரிந்துகொண்டனர்.
தாத்யா சாஹேப் நூல்கர் பாபாவின் பெரும் அடியவர். பண்டரிபுரத்தில் அவர் சப்-ஜட்ஜாக இருந்தார். அவருக்கும் நானா சாஹேப் சந்தோர்க்கருக்கும் நல்ல நட்பு இருந்தது. நானாவின் மூலம் அவர் பாபாவைப் பற்றி அறிந்து கொண்டார். ஆனால் அவருக்கு ஞானிகள் மேல் நம்பிக்கையில்லை. பாபாவின் லீலைகள் பலவற்றை நானா எடுத்துக் கூறி பாபாவின் தரிசனத் திற்காக அவரை ஷீர்டி போகும்படி செய்தார். படிப்படியாக நூல்கர் தனக்கேற்பட்ட அனுபவங்களால் பாபா கடவுளின் அவதாரமே என்று புரிந்து கொண்டார். பாபாவிடம் மட்டற்ற அன்பு பூண்டு தனது இறுதி காலம் வரை அங்கேயே தங்கினார். அவருடைய முடிவு நெருங்கிக் கொண்டிருக்கும்போது அவரிடம் புனித நூல்கள் வேதங்கள் படிக்கப் பட்டன. உயிர் பிரியுந்தருவாயில் பாபாவின் பாத தீர்த்தம் கொண்டு வரப்பட்டு குடிப்பதற்காக அவரிடம் தரப்பட்டது.
அவர் மரணமடைந்ததும் பாபா, ‘தாத்யா நம்மை விட்டுச் சென்று விட்டார். அவர் மீண்டும் பிறக்க மாட்டார்!‘ என்று அவர் முக்தியடைந்து விட்டதை அறிவித்தார்.
மேகா என்பவன் ஏற்கெனவே ஷீர்டி சாயி சரிதத்தில் ‘ஷீர்டிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவி’யாக அறிமுகம் ஆனவன். அவனும், தான் சிவபெருமானாகவே பாவித்த பாபாவுக்கு மசூதியில் தினமும் ஆரத்தி எடுத்து வழிபட்டான். அவன் அந்திம காலம் வரை ஷீர்டியிலேயே தங்கி அங்கேயே அவன் முடிவும் வந்தது. மேகா இறந்த பின்னர் கிராமத்தார் எல்லோரும் சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பாபாவும் அவர்களுடன் கூடச் சென்று மலர்களை மேகா உடல் மீது பொழிந்தார். சடங்குகள் செய்யப்பட்டபோது சாதாரணமான மனிதர்களைப் போலவே பாபாவின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. மேகாவிற்கும் பாபா முன்னிலையில் முக்தி கிடைத்தது.
ஒருமுறை ஷீர்டியில் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி நடைபெற்றது. பாபா மஹாசமாதியடைய ஏழு தினங்களுக்கு முன் ஒரு மாட்டுவண்டி வந்து மசூதியின் வாசலில் நின்றது. அதில் பயங்கரமான தோற்றத் தோடு கழுத்தில் சங்கிலியினால் கட்டப்பட்ட ஒரு புலி காணப்பட்டது. அது நோய்வாய்ப்பட்டிருந்தது. அந்தப் புலியை ஆட்டுவித்து ஜீவனம் நடத்தி வந்த மூன்று பேர் அதற்கு எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும் ஒன்றும் பலனளிக்கவில்லை. அது படும் வேதனையை அவர்களால் தாங்க முடியவில்லை.
ஷீர்டி சாயிபாபாவின் புகழையும் மேன்மையையும் கேள்விப் பட்டு அவர்கள் தங்களது கடைசி முயற்சியாக அந்தப் புலியை பாபாவின் தரிசனத்துக்காக அவ்விடம் கொண்டு வந்தார்கள். பாபா விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் சிந்தாமணி. அஷ்ட சித்திகளும் அவர் காலடியில் விழுந்து கிடந்தன. அவர் சரணங்களின் மீது தங்கள் தலையை வைத்து புலிக்காக அவருடைய அனுக்ரஹத்தைக் கோரி வந்திருக்கிறோம் என்று பாபாவின் முன்னிலையில் பிரார்த்தித்தனர்.
பாபா புலியைத் தன் முன்னால் கொண்டு வர உத்தரவிட்டார். ஏற்கெனவே குரூரமானது. இப்பொழுது நோய்வாய்ப்பட்டிருப்பதால் இருப்புக் கொள்ளாமல் அந்தப் புலி காணப்பட்ட காட்சி அங்கே கூடியிருந்த மக்களை பயமுறுத்தியது. புலி மசூதியின் படிகளில் ஏறி பாபாவை நேருக்கு நேர் பார்த்தது. இருவரின் பார்வைகளும் கலந்தன. பாபாவின் பார்வை தீட்சண்யத்தைத் தாங்க மாட்டாமல் புலி தன் தலையைக் கீழே தாழ்த்தியது. அக்கணமே தன் வாலைத் தூக்கி மூன்று முறை தரையில் அடித்து ஒருமுறை பயங்கரமாக உறுமியது. அவ்வளவுதான்! அப்படியே உணர்ச்சியற்றுத் தரையில் சாந்தது.
புலியை வைத்து வித்தை காட்டி சம்பாதித்துக் கொண்டிருந்த அந்த மனிதர்கள் புலி மரணமடைந்தது குறித்து மிகவும் வருந்தி சோகத்தில் ஆழ்ந்தார்கள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் புலி மிகுந்த தகைமை வாந்த ஜென்மமாக இருந்ததினால்தான், ஒரு சத்புருஷர் முன்னிலையில் முக்தியடைந்தது என்று புரிந்துகொண்டு சமாதானமடைந்தார்கள். மனிதர்களின் பிறவிக் கடனைத் தீர்த்து முக்தியளிக்கும் சாதுக்கள் அநேகம் பேரை நாம் பார்த்திருப்போம். ஆனால் சாயிபாபாவின் மேன்மையை என்னவென்று சொல்வது? புலி போன்ற ஒரு கொடிய குரூரமான மிருகத்திற்கு, மசூதியில் அத்தனை பக்தர்கள் முன்னிலையில் சத்கதி கொடுத்தது ஒப்புயர்வில்லாத ஒன்றல்லவா?
மரணம் சுகமே. அது துக்கமல்ல. ஸத்புருஷர்களின் சரணங்களுக்கருகில் அவர்கள் முன்னிலையில் உயிர் துறப்பவர்கள் பெரும் பாக்யவான்கள்.

Comments