பிரளயம் காத்த சச்சீய மாதா

மழை தொடர்ந்து பல நாட்கள் பெய்தாலும் பிரளய நீரின் மட்டம் - தேவி சிலையின் பாதத்தைத் தொட்டவாறு இருந்ததே தவிர, அதற்கு மேல் உயரவில்லையாம். அந்தப் பகுதியிலுள்ள வீடுகள் பிரளயத்தில் மூழ்கி விடாமல் காத்தாள் தேவி.
ராஜஸ்தான், பாலைவனப் பிரதேசத்திலுள்ள ஜோத்பூரிலிருந்து 52 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஓசியான் என்கிற தலம். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இந்தப் பகுதி பிரதிஹார ராஜபுத்ர பரம்பரையினரின் ஆட்சிப் பீடமாக இருந்த தாம். அப்போது இங்கு சுமார் நூறு கோயில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அவற்றில் பல கோயில்கள் அழிந்து போய்விட, பன்னிரெண்டாம் நூற்றாண்டில் புதுப்பித்துக் கட்டப்பட்டவற்றில் சச்சீய மாதா கோயிலும் ஒன்று. ராஜஸ்தானைச் சேர்ந்த வர்த்தகத் துறையில் கொடிகட்டிப் பறக்கிற ஓஸ்வால்கள் உட்பட, பலருக்கும் சச்சீய மாதா குலதெய்வம்.
இதன் இதிகாசம் வித்தியாசமானது. பௌலோமா என்கிற அசுரனின் மகள் சச்சீ. அரசனின் படைத் தலைவனாக இருந்த விருட் என்பவன் அவளை மணக்க விரும்பினான். சச்சீ தன் தந்தையிடம் பணியாளாக உள்ளவனை மணக்க விரும்பவில்லை. இதனை அறிந்த விருட்தனது வேலையைத் துறந்து சிவபெருமானைக் குறித்து கடும் தவத்தில் ஈடுபட்டான். பெருமானும் மனமிரங்கி அவன் அரசனாவான் என்றும் உலோகத்தால் செய்த எந்த ஆயுதத்தாலும், அவனுக்கு மரணம் சம்பவிக்காது என்றும் அருள்பாலித்தார்.
உடனே, உற்சாகமடைந்த விருட் பெரிய ராணுவத்தைச் சேர்த்து பௌலோமிக்கு நிகரான அரசனாகத் தன்னை நிலைநாட்டிக் கொண்டான். அவனுடைய வலிமையும் பராக்கிரமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனதைப் பார்த்த தேவேந்திரன், கவலைக்குள்ளானான். அவனை அடக்க ததீசி முனிவரின் உதவியை நாடினான். அவர் தன் உயிரைத் தியாகித்து தனது முதுகெலும்பையே ஆயுதமாக்கிக் கொடுத்தாராம். வஜ்ராயுதம் வந்த கதை இது என்கிறார்கள்.
விருட், இந்திரன் இருவருடைய படைகளும் மோதிக் கொண்டால் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்படும் என்று கருதிய இந்திரன், அவனுடன் நேருக்கு நேர் தனியாகப் போரிட்டு, அதில் வெற்றி காண்பவரே சச்சீயை மணக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். சிவபெருமான் அளித்த வரத்தை நினைவில் கொண்டு விருட் சம்மதித்தான். போரில் இந்திரனுக்கே வெற்றி கிடைத்தது. எனவே, சச்சீயை மணந்தார். சச்சீ, இந்திராணி ஆனதுடன் அவள் கணவருக்கு, ‘சச்சீபதி’ என்கிற பெயரும் ஏற்பட்டது.
தற்போதுள்ள சச்சீய மாதாவின் கோயில் எப்படி வந்தது என்பதற்கும் இதிகாசம் உள்ளது. தண்ணீர் இல்லாத வறட்சி மிகுந்த ‘மரூ’ தேசத்தின் ஒரு பகுதியான ஓசியானில் ஒருமுறை தொடர்மழை காரணமாகப் பிரளயம் வந்து விட்டதாம். அதில் அடித்துக் கொண்டு வந்த தேவியின் திரு உருவச்சிலை, அங்குள்ள மரக்கிளை ஒன்றில் சிக்கிக் கொண்டது.
மழை தொடர்ந்து பல நாட்கள் பெய்தாலும் பிரளய நீரின் மட்டம் - தேவி சிலையின் பாதத்தைத் தொட்டவாறு இருந்ததே தவிர, அதற்கு மேல் உயர வில்லையாம். அந்தப் பகுதியிலுள்ள வீடுகள் பிரளயத்தில் மூழ்கிவிடாமல் காத்த தேவியின் கருணையை நினைத்து மக்கள் சிலிர்த்துப் போனார்கள். மழை நீர் வடிந்ததும் அந்த இடத்திலேயே தேவிக்குக் கோயில் எழுப்பினார்கள் என்றும் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அது புதுப்பிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
ஜெயினர் பாணியில் அமைந்துள்ள சலவைக் கல் தோரண வாயில்களுடன், சிற்பவேலைப்பாடுகள் அதி அற்புதமாக உள்ளன. உள்ளே விநாயகர், வராஹர், லக்ஷ்மி, விஷ்ணு ஆகியோர் சன்னிதிகளும் உண்டு.
மூலவராக சச்சீய மாதா, அழகிய சிறுமிக்கான தோற்றத்தில், கருணை முகத்துடன், திருக்கைகளில் வாளும், திரிசூலமும், அங்குசமும், கேடயமும் திகழ அமர்ந்த திருக்கோல தரிசனத்தைக் காண்கையில் மனம் நிறைகிறது.
அடுத்து, இரு புறங்களிலும் உள்ள சன்னிதிகளில் சண்டி தேவியும் சூரியனும் தரிசனம் தருகின்றனர். உலகம் போற்றும் சப்த மாத்ரிகளில் ஒருவளாக சச்சீய மாதாவை வழிபடுகிறார்கள். குழந்தைகளுக்கு முதல் முடி இறக்கவும், அம்மை, மணல்வாரி நோய்களிலிருந்து உடல் நலம் பெறவும் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டு நல்லபடி நடந்ததும் புதுமணத் தம்பதியரை அழைத்து வந்து அன்னையின் அருள்பெறவும் மக்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளின்போது இங்கு நடத்தப்படும், ‘மேளா’ திருவிழாக்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

Comments