பெண்கள் மஞ்சள் பூச வேண்டியது அவசியமா?-
வெற்றிலை போடுவது அவசியமா?
வெற்றிலைக் காம்பின் அடிப்பாகத்தில் திருமகளும், நடுவில் மகாவிஷ்ணுவும், நுனியில் சரஸ்வதியும் இருப்பதாக ஐதீகம். ‘மகாலட்சுமி ரூபமான தாம்பூலம் தரித்து மந்திரங்களைக் கூறினால் மூன்று பங்கு பலன்’ என்று சௌந்தர்ய லஹரியிலும் தேவி பாகவதமும் சொல்கிறது. தாம்பூல தாரண பூஜை என்று தனிப்பட்ட பூஜாக்கிரமமே பெண்களுக்காக இருக்கிறது. ‘தாம்பூல பூரித முக்யா’ என்று லலிதா பரமேஸ்வரிக்கு திருநாமம் உண்டு.
கந்தகச் சத்து மிகுந்த மஞ்சளை ஒரு பெண் பூசுவதால் தன் கணவனை வசீகரம் செய்து அன்யோன்யப்படுத் திட முடியும். நெற்றிப்பொட்டில் மஞ்சள் பொடியை இடும் பெண்களுக்கு ஆக்ஞாசக்கரம் மெதுவாகத் திறக்கப்பட்டு ஆன்மிகச் சக்தி பெருக் கெடுக்கிறது. மாதவிடாய்க் காலங்களிலும் கர்ப்ப காலத்திலும் மஞ்சளைப் பெண்கள் பூசுவதாலும் அருகில் வைத்துக் கொள்வதாலும், தீயசக்திகளி லிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். மஞ்சளில் விரளி, கஸ்தூரி, காஞ்சிரை என்ற மூன்று வகை உண்டு. காஞ்சிரை மஞ்சளை மனநிலை சரியில்லாதோர் துர்சக்தி பாதிப்படைந்தோர் பயன்படுத்த, பூரண குணம் அடையலாம். லலிதா பரமேஸ்வரிக்கு ‘ஹரித்ரான்னைக ரஸிகா’ என்ற பெயர் உண்டு. மஞ்சள் சாதத்தை அதிகம் விரும்புபவள் என்று பொருள். பெண்கள் ஹரித்ரா பயன்படுத்தினால் தரித்திரம் போய்விடும்.
ஆண்கள் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ய வேண்டுமாமே... ஏன்?
ஆண்டவனால் அருளப்பட்ட இந்த அங்கம் ஆணவமின்றி நடந்து கொள்ளல் வேண்டும் என்பதற்காக சர்வாங்கமும் பூமியில் படும்படி விழுந்து வணங்குவதை சாஷ்டாங்க நமஸ்காரம் என்று சொல்வார்கள். ஆதாரமில்லாத ஒரு தண்டமாகிய கோல் கீழே விழுந்து விடுவதைப் போல ‘ஆண்டவனையே நம்பி வாழ்கிறேன்’ என்று அடைக்கலம் கோருவதன் வெளிப்பாடுதான் சாஷ்டாங்க நமஸ்காரம். இதைத் தமிழில் ‘தண்டனிடுதல்’ என்றும் கூறுவர். உடற்பாகங்களை பூமியில் தொடவைப்பதும் ஒரு மருத்துவ முறைதான். எதற்கும் வளைந்து கொடுக்க வேண்டும் என்ற தத்துவமும் இதில் அமைந்துள்ளது.
வீட்டில் தீபம் ஏற்றும் சரியான முறை என்ன? துதி என்று எதைக் கூற வேண்டும்?
தெய்வத்தை நினைத்து ஒருமுக மனதுடன் தீபம் ஏற்ற வேண்டுவது அவசியம். உங்கள் வீட்டில் ஐந்து முக குத்து விளக்கு இருந்தால் அதில் ஒரு முகத்தை மட்டுமாவது தினமும் ஏற்றி
ஓம் சுவர்ண விருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
ஓம் சுதாயை விருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
ஓம் கல்யாண விருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
என்று கூறி ஏற்ற வேண்டும்.
இந்தத் துதியால் மகாலட்சுமி தீபத்தினுள் ஈர்க்கப்படுவாள் என்பது ஐதீகம். சில குடும்பங்களில் சதா சர்வகாலமும் ஏதேனும் பிரச்னைகள் இருக்கலாம். அதற்குத் தீர்வாக ஒரு மண் அகலில் நெய்யும், எண்ணெய்யும் கலந்து பஞ்சு திரி இட்டு கிழக்கு முகமாக தீபம் ஏற்றுங்கள். குடும்பத்தில் பிரச்னைகள் குறையும். மகிழ்ச்சி வரத் தொடங்கும்.
இறைவனுக்குக் கற்பூரத்தால் ஆரத்தி செய்வது நல்லதா? நெய் தீப ஆரத்தி உகந்ததா?
கற்பூரம் எரிகிறபோது அதன் உருவத்தை இழக்கிறது. நாம் எடுத்துள்ள வடிவங்களை ஞான அக்கினியால் அழித்து நாம் பிரம்மமாகிய கடவுளோடு ஒன்றிவிட வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தைக் கற்பூர ஆரத்தி எடுத்துக்காட்டுகிறது.வெண்மையான கற்பூரத்தை ஏற்றி பகவானுக்கு ஆரத்தி காட்டுகிறபோது அது அக்னிமயமாகி விடுகிறது. வெண்மை பரிசுத்தத்தின் சின்னமாகும். தூய வெண்ணிற கற்பூரம் தூய அக்னியாவது போல, சுத்தமான மனது ஞானமாகிறது. தெளிவு அடைகிறது. நெய் தீபத்தை மங்கள ஆரத்தியாக பூஜை, உபசாரங்களில் பயன்படுத்தலாம். கோயில்களில் கலப் படமில்லாத சுத்தமான கற்பூர ஆரத்தி சிறந்தது.
Comments
Post a Comment