கணேசனே என் தியானத்துக்கு உகந்தவன்!’

யிலாயமே ஆழ்ந்த அமைதியில் இருந்தது. சிவகணங்கள் எல்லோரும் ஆழ்ந்த மௌனத்தில் மூழ்கிக்கிடந்தனர். வாயு பகவான்கூட தனது சண்ட மாருத நிலையை மாற்றிக்கொண்டு மந்த மாருதமாக வீசிக்கொண்டிருந்தார். 

ஒரு பிரளயம் முடிந்து சிருஷ்டிக்கும் தருணம் அது. எனினும் கயிலை எந்தவிதச் சலனமும் இன்றி இருந்தது. ஏன்? ஆதி பரம்பொருளான ஐயன் ஈசன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அவரோடு இணைந்து சக்திதேவியும் தவத்தில் ஈடுபட்டு இருந்தார். சிவனும் சக்தியும் இயங்கவில்லை என்றால் உலகில் ஏது சலனம்?

ஈசனின் தியானத்தின் அதிர்வுகள் சேர்ந்து சிருஷ்டிக்கான ஆரம்பத்தைக் கொண்டுவரும் நேரம் அது. கயிலையில் கூடி இருந்த தேவாதி தேவர்கள் அனைவருமே ஆழ்ந்த தியானத்தில்தான் கிடந்தார்கள். சிவனாரின் மௌனத்தைக் கலைக்க யாரேனும் வேண்டும் இல்லையா? பிறகு எப்படி சிருஷ்டியைத் தொடங்குவது? இந்த முறை ஈசனின் திருமுடித்தாங்கிய கங்கா தேவியே அந்த ஆழ்ந்த தியானத்தைக் கலைக்க தயாரானாள். கங்கையின் வேகம் அதிகமாகி, ஈசனின் மார்பில் வடியத் தொடங்கியது. ஈசன் மெள்ள அசைந்தார். தியானம் கலைய வேண்டிய நேரமிது என்று உணர்ந்தார். அதற்கேற்ப கங்கையும் தனது சந்தே கத்தை அவரிடம் கேட்டுத் தீர்வு வேண்டினாள்.

“ஸ்வாமி! சகல லோகங்களிலும் உள்ள ஜீவராசி களும் மால், அயன் உள்ளிட்ட தேவாதி தேவர்களும்கூட உங்களையே எண்ணித்தான் தியானம், பூஜை போன்றவற்றைச் செய்கிறார்கள். ஆனால், தேவரீர் தாங்களோ யாரை எண்ணி தியானிக்கிறீர்கள்?'' என்று கங்கை வினவியதும் சக்தி உள்ளிட்ட சகலரும் வியந்தார்கள். ஸ்வாமி என்ன பதில் சொல்லப் போகிறார் என்று அனைவரது செவிப் புலன்களும் விழிப்படைந்தன.

 சிவபெருமானோ, கொஞ்சமும் யோசிக்காமல் நகைத்தவாறே பதிலளித்தார்.

`‘பாகீரதி, பரிசுத்தமான மங்கையே! இதென்ன கேள்வி? என் மைந்தனான விக்னேஸ்வரனே முழு முதற்கடவுள் அல்லவா? நானும் அவனையே எண்ணி தியானிக்கிறேன்''

இந்தப் பதிலைக் கேட்ட சக்திதேவி உள்ளிட்ட சகலரும் கணநாதரை பெருமையோடு நோக்கினார் கள். அற்புதமான இந்த உரையாடல் பார்க்கவ புராணத்தில் வெகு அழகாக விளக்கப்பட்டுள்ளது.
‘வத சங்கர கஸ்யத்வம்
தியானம் கரோஷி நித்யதா
இச்சாமி இதம் அகம் க்ஞாதும்
த்வத்த: சிம் ப்ரம்மதம்’


`சங்கர பிரபோ... தினமும் நீங்கள் யாருடைய தியானத்தைச் செய்கிறீர்கள்? இதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய அபிப்ராயம் என்னவோ?' என்று கங்கை கேட்பதாக மேற்கண்ட ஸ்லோகம் கூறுகிறது.
‘கணேசம் தேவ தேவேசம்
ப்ரும்ம ப்ரம்மாம்சம் ஆதராத்
த்யாயாமி ஸர்வம் பாவக்ஞ
குல தேவம் ஸனாதனம்’


`குறிப்புகளை அறிந்தவளே... தேவர்களுக்கு எல்லாம் தலைவனும், பிரம்மம், பரப்பிரம்மத்தின் அம்சமும், குலத்துக்கெல்லாம் தேவனும், அழிவில்லாதவனும், சகலமுமான கணேசனையே தியானிக்கிறேன்' என்கிறார் ஈசன்.

தந்தையான ஈஸ்வரனே வணங்கும் பெருமை கொண்ட கணேசப் பெருமானின் பெருமையைச் சொல்ல இதைவிட சான்று வேண்டுமா என்ன?

கணேச சரணம்... சரணம் கணேசா!

Comments