சோதனையை சாதனையாக்கிய பாபா!

ஷீர்டியில் மஹான் ஸ்ரீ சாயிபாபா இருந்தபோது அவரது மகிமையைக் கேள்விப்பட்டு அவரைத் தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த வண்ணம் இருந்தனர். அதேசமயம், அவரது தெய்வீகத் தன்மை மீதும், அவர் நடத்தும் அற்புதங்கள் மீதும் சந்தேகம் கொண்டு அவரைச் சோதிக்கவென்றே ஷீர்டி வந்தவர்களும் இருந்தனர்.
காகா மஹாஜனியின் நண்பரொருவர் கடவுளை உருவமற்ற நிலையில் வழிபடு வதையே விரும்புபவர். ஷீர்டி பாபாவின் லீலைகளைப் பற்றி காகா மஹாஜனி புகழ்ந்து கூறுவதைக் கேட்ட அவர், அது உண்மைதானா என்று பாபாவை சோதித்துப் பார்க்க ஒருமுறை ஷீர்டிக்குப் புறப்பட்டபோது தானும் வருவதாகக் கூறினார் காகா மஹாஜனி. ஆனால், அவரிடம் சில நிபந்தனைகளை விதித்தார் நண்பர்.
நான் ஷீர்டிக்கு வந்து, நீங்கள் புகழ்ந்து கூறும் அந்த சாதுவை தரிசனம் செய்வேன். ஆனால், அவரை வணங்கவோ, தட்சிணை கொடுக்கவோ என்னால் முடியாது!" என்றார். காகா மஹாஜனியும் ஒப்புக் கொள்ள, இருவரும் ஷீர்டிக்குக் கிளம்பினார்கள்.
சனிக்கிழமை இரவு மும்பையிலிருந்து கிளம்பி மறுநாள் ஷீர்டியை அடைந்தார்கள்.
மசூதிப் படிகளில் அவர்கள் அடியெடுத்து வைத்த உடனேயே, பாபா அந்த நண்பரை தூரத்திலிருந்தே பார்த்து, ஐயா! வந்தாயா அப்பா!" என்று மிக இனிமையாகக் கூப்பிட்டார். மசூதியில் கூடியிருந்த மற்றவர்களுக்கு பாபா உதிர்த்த இந்த வார்த்தைகளின் தொனி புதிதாக இருந்தது. ஆனால், காகா மஹாஜனியின் நண்பருக்கு, அது மறைந்த தனது தந்தையின் குரலைப் போலவே ஒலித்தது. ‘இது எனது தந்தையின் குரலேதான்! சந்தேகமேயில்லை. அவர்தான் அழைக்கிறார்’ என அவர் மனம் புல்லரித்து, தான் விதித்த நிபந்தனையை மறந்து, விரைந்து சென்று பாபாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். பாபாவின் தரிசனத்தில் மனமுருகி மெமறந்தார்.
பாபா காகாவிடம் மட்டுமே தட்சிணை கேட்டார். காகாவும் கொடுத்து விட்டுக் கிளம்பினார். நண்பருக்கு ஒரே மனத்தாங்கல்! நாம் இருவரும் சேர்ந்து வந்தும், ஏன் பாபா உங்களிடம் மட்டும் தட்சிணை வாங்கினார்? என்னிடம் கேட்கவில்லையே?" என்றார் நண்பர். அதற்கு காகா, நீங்களே பாபாவிடம் கேளுங்கள்" என்றார். அவர்கள் பேசுவதைக் கேட்ட பாபா, விஷயம் என்னவென்று கேட்டார். அதற்குள் காகாவின் நண்பர், ‘தாம் ஏதாவது தட்சிணை கொடுக்கலாமா’ என்று பாபாவிடம் கேட்டார். பாபாவும், உமக்குக் கொடுக்கப் பிரியமில்லை என் பதால்தான் உம்மைக் கேட்கவில்லை. இப்போது பிரியப்பட்டால் கொடுக்கலாம்" என்றார்.
நண்பரும் காகா மஹாஜனி அளித்தத் தொகையான பதினேழு ரூபாயைத் தானும் தட்சிணையாக பாபா விடம் சமர்ப்பித்தார். பாபா அவரிடம், உனக்கும் எனக்கும் நடுவிலிருக்கும் சுவரை இடித்தால்தான் (வேற்றுமை உணர்வை) நாம் ஒருவரை யொருவர் முகத்தில் முகம் பார்க்க முடியும்" என்றார். ‘எத்தகைய நிறைபேரறிவு உடையவர் பாபா. இவரை நாம் சந்தேகித்தோமே’ என்று வெட்கமடைந்தார் நண்பர். இவ்வாறு, பாபாவை சோதிக்கவும் விமர்சிக்கவும் மட்டுமே ஷீர்டிக்கு வந்த காகா மஹாஜனியின் நண்பர், பாபா ஓர் ஒப்புயர்வற்ற மகான் என்று உணர்ந்து மிகுந்த மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் ஷீர்டியி லிருந்து திரும்பினார்.
இதேபோன்ற நோக்கத்துடன் ஷீர்டிக்கு வந்த மற்றொருவர் டக்கர் என்பவர். இவர், காகா மஹாஜனியின் முதலாளி. காகா மஹாஜனி அடிக்கடி ஷீர்டிக்குப் போவதும், அங்கேயே சில நாட்கள் தங்குவதும் முதலாளிக்கு மிகுந்த வியப்பை அளித்தது. அப்படி, அங்கு என்னதான் அற்புதம் நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவே அவரும் ஒருமுறை காகா மஹாஜனியுடன் ஷீர்டிக்குக் கிளம்பினார். காகா மஹாஜனி பாபா விடம் சமர்ப்பிக்க இரண்டு சேர் திராட்சையை வாங்கினார்.
ஷீர்டியில் காகா, பாபாவின் முன் வீழ்ந்து பணிந்து திராட்சையை சமர்ப்பித்தார். பாபா திராட்சையை அனைவருக்கும் விநியோகிக்கக் கட்டளையிட்டார். டக்கருக்கும் சில திராட்சைகள் கிடைத்தன. அவருக்குக் கொட்டையுள்ள திராட்சை பிடிக்காது. அது மட்டுமல்ல, திராட்சை பழத்தை நன்றாகக் கழுவி விட்டுத்தான் உண்ண வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே, விருப்பமில்லாமல் திராட்சைகளை வாயில் போட்டுக் கொண்டார். கொட்டைகளை மசூதித் தரையில் துப்ப மனம் வராமல் தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டார். அவர் நினைத்தார், ‘பாபா பெரிய மகானாக இருந்தால் கொட்டையுள்ள திராட்சை மேல் தனக்குள்ள வெறுப்பை எவ்வாறு அவரால் அறியாமலிருக்க முடியும்?’என்று.
அப்போது, பாபா அவருக்கு மீண்டும் சில திராட்சை களை உண்ணக் கொடுத்தார். டக்கர் அவற்றை உண்ண விருப்பமின்றி, கையிலேயே வைத்துக் கொண்டிருந்தார். பாபா அவரைப் பார்த்து திராட்சையை உண்ணும் படி சொன்னார். வேறு வழியின்றி டக்கரும் கீழ்ப் படிந்தார். என்ன ஆச்சரியம்! அவர் இப்போது உண் டது கொட்டையில்லாத திராட்சை. அற்புதங்களை அவர் காண விரும்பினார். இதோ ஒன்றைக் கண்டாகி விட்டது. பிறர் மனதிலிருப்பதை உணரும் ஞானி பாபா என்று புரிந்துகொண்டார்.
பாபா, டக்கரின் அருகில் அமர்ந்திருந்த தர்கட்டுக்கும் சில திராட்சைகளைக் கொடுத்தார். இப்போது, டக்கர், பாபாவின் அற்புதங்களை மேலும் சோதிக்க விரும்பி, தர்கட்டிடம், ‘பாபா இப்போது அவரிடம் கொடுத்து, அவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது எப்படிப்பட்ட திராட்சை’ என்று வினவினார். ‘கொட்டையுள்ள திராட்சைதான்’ என்று பதில் வந்தது. டக்கருக்கு இதைக் கேட்டதும் இன்னும் அதிக வியப்பு உண்டாயிற்று. இப்போது டக்கருக்கு பாபாவின் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. தமது ஐயங்களெல்லாம் முற்றிலு மாக அழிந்து போக, பாபாவை பக்தியுடன் நமஸ்கரித்தார்.
ஹரி கனோபா என்பவன், ‘பாபா உண்மையாகவே லீலைகள் செய்பவரா? அவர் ஒரு மகான்தானா?’ என்று சோதித்துப் பார்க்க தனது நண்பனுடன் மும்பையிலிருந்து ஷீர்டி வந்தான். ஹரி கனோபா கோபர்கானில் இறங்கி, அங்கிருந்து ஒரு டோங்கா வண்டியிலேறி கோதாவரியில் ஸ்நானம் செய்து ஷீர்டிக்குப் புறப்பட்டான். கால்களுக்குப் புது செருப்பு, தலைக்கு ஜரிகை தலைப்பாகை அணிந்து மசூதிக்கு பாபா தரிசனத்துக்குச் சென்றான். பாபாவைப் பார்த்ததுமே அவனுக்கு அவரருகில் சென்று சாஷ் டாங்கமாக நமஸ்காரம் செய்ய வேண்டும் என்கிற ஆவல் உண்டாயிற்று. ஆனால், அதற்கு அவன் அணிந்திருந்த செருப்பு இடைஞ்சலாக இருந்தது. அதை எங்கு ஜாக்கிரதையாக வைப்பது என்று புரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்து விட்டு அதை ஒரு மூலையில் அதிஜாக்கிரதையாக பத்திரமாக வைத்தான். பிறகு, மேலே போய் பாபாவை தரிசனம் செய்து நமஸ்காரம் செய்தான்.
பாபாவிடம் உதி பிரசாதம் பெற்று கீழே வந்ததும் தன் செருப்பைத் தேடி ஓடினான். எங்கு தேடியும் செருப்பு கிடைக்கவில்லை. யாரைக் கேட்பது, என்ன செய்வது என்று தெரியவில்லை. மிகுந்த வருத்தத்துடன் வெறும் காலுடன், தான் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றான். அங்கு குளித்து, பூஜை, வழிபாடு முடித்து விட்டு மதிய உணவுக்காக பந்தியில் அமர்ந்தான். ஆனால், அவன் மனம் முழுவதும் தனது விலையுயர்ந்த புதுச் செருப்பைப் பற்றியே நினைத்தது.
உண்டு முடித்து கைகழுவுவதற்காக வெளியே வந்தபோது ஒரு மராத்திய பையன் கையில் ஒரு கோலுடன் வந்தான். அதன் நுனியில் ஒரு ஜோடி புதிய செருப்பு தொங்க விடப்பட்டிருந்தது. கை கழுவ வெளியே வந்த பக்தர்களிடம், பாபா தன்னை இக்கோலுடன் அனுப்பியதாகவும், ‘ஹரி கா பேட்டா! ஜரிகா ஃபடா’ (‘க’ என்பவரின் புதல்வரான ஹரியே! ஜரிகை தலைப்பாகைக்காரரே!) என்று கூவிக் கொண்டே வீதிகளில் செல்லும்படியாகச் சொல்லி யிருப்பதாகவும், ‘இது என் செருப்பு’ என்று யார் வேகமாக முன்னே வருகிறாரோ அவரிடம் கொடுத்து விடு என்று கூறியிருப்பதாகவும், ஆனால், அவர் ‘க’வின் மகன் (கனோபாவின் மகன்) தானா என்று நிச்சயமாகத் தெரிந்து கொண்டபின் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பதாகவும் தெரிவித்தான். ஹரி கனோபா மிக்க மகிழ்ச்சியடைந்தான்.
அவன் அந்தப் பையனிடம் சென்றுதான் கனோபாவின் மகன் ஹரிதான் என்று கூறி, தன் ஜரிகை தலைப்பாகையையும் காண்பித்தான். பையன் அவனிடம் செருப்பைக் கொடுத்தான். தனது ஜரிகைத் தலைப்பாகை வெளியே தெரியும்படி இருந்ததால் பாபா அதைக் கவனித்திருக்கலாம். ஆனால், தான் இப்போதுதான் ஷீர்டிக்கு முதல் முறையாக வருவதால், தன் பெயர் ஹரி என்பதும், தனது தகப்பனார் பெயர் கனோபா என்பதும் பாபாவுக்கு எப்படித் தெரியும் என்று ஆச்சரியப்பட்டுப் போனான். வேறு எந்த நோக்கமுமின்றி பாபாவை சோதிக்கும் ஒரே குறிக்கோளுடன் ஷீர்டிக்கு வந்த அவன், பாபா ஒரு ஒப்புயர்வற்ற ஞானி என்றும், மாபெரும் சத்புருஷர் என்று அறிந்து மிகுந்த திருப்தியடைந்தான்.
இவ்வாறு பாபா மேல் அவநம்பிக்கை, சந்தேகம் கொண்டோரின் ஐயங்களெல்லாம் முற்றிலுமாகத்
தீர்க்கப்பட்டு அவர்களுக்கு பாபா மேல் நம்பிக்கையும் பக்தியும் ஏற்பட்டு பிற்காலத்தில் மிகச் சிறந்த பக்தர்களாக இவர்கள் திகழ்ந்தார்கள் என்கிறார் ஸ்ரீ ஷீர்டி சாயி சரிதத்தை எழுதிய ஸ்ரீ ஹேமத்பந்த்.

Comments