பிரதோஷ மகிமை!

விதர்ப்ப தேச அரசன் சத்யாதனன், எதிரிகளோடு போரிட்டு மடிந்தான். கர்ப்பவதியான அவனது மனைவி சதி, அங்கிருந்து தப்பித்து நடுக்காட்டில் பிரவேசித்தபோது அவளுக்குப் பிரசவமாகி ஆண் குழந்தை பிறந்தது. தாகம் மேலிட, தண்ணீர் தேடி தடாகம் கண்டவள், நீரருந்த இறங்கியபோது ஒரு முதலைக்கு இரையானாள். உமை என்ற அந்தணப் பெண், ஒரு வயது ஆண் குழந்தையோடு அவ்வழி வந்தாள். தடாகக் கரையில் அனாதையாகக் கிடந்த ராஜகுமாரனைக் கண்டு, தூக்கிச் சென்று வளர்த்தாள். குழந்தைகள் இருவரும் சாண்டில்ய முனிவரிடம் வேத பாடம் கற்றனர்.
ஒரு நாள் சாண்டில்யரிடம், ஸ்வாமி, இந்தப் பிள்ளை அநாதையாய் கிடந்தானே... இவன் முற்பிறப்பைத் தாங்கள் அறிந்து சொல்ல முடியுமா?" என்று கேட்டாள் உமை. சாண்டில்யர், அம்மணி, சத்யாதனன்-சதி என்போரின் மகன் இவன். சத்யாதனன் முற்பிறப்பில் மதுரை அரசனாயிருந்தான். அவன் பிரதோஷ காலத்தில் சுந்தரேசரை பூஜிப்பது வழக்கம். ஒரு பிரதோஷ பூஜையில், ‘சோழ அரசன் பலரைச் சேர்த்துக் கொண்டு படையெடுத்து வருகிறான்’ என்ற செய்தி கேட்டு சிவ பூஜையைப் பாதியிலே நிறுத்தி விட்டு அரண்மனை வந்தான். அதற்குள் அவனது மந்திரி, சோழனை வெற்றி கொண்டு சங்கிலியால் பிணைத்து சபையில் நிறுத்தினான். ஆத்திரம் கொண்ட பாண்டியன், சோழன் தலையைச் சீவி எறிந்தான்.
பிரதோஷ பூஜையை பாதியில் விட்டு வந்ததாலும், அன்றைய தினத்தில் கொலை பாதகம் புரிந்ததாலும் பாண்டிய மன்னனும் பாதி ஆயுளோடு மடிந்தான். நீ கண்டெடுத்த பிள்ளை, போன பிறவியிலும் அரசனின் புதல்வனாய் பிறந்திருந்தான். தந்தை பாதியில் விட்ட பூஜையை மகனும் பூர்த்தி செய்யத் தவறி விட்டான்" என்று கூறினார் சாண்டில்யர்.
ஸ்வாமி! என் புத்திரனின் பூர்வோத்தரத்தையும் அறிந்து சொல்லக்கூடுமோ?" என ஆவலாகக் கேட்டாள் உமை. அதையும் சாண்டில்யர் ஞானதிருஷ்டியில் கண்டு, உன் பிள்ளை அந்தண குலத்தில் பிறந்து செல்வந்தனாய் இருந்தான். ஆனால், மகா கருமி. எங்கே, எவர் அன்னதானம் கொடுத்தாலும் ஓடுவான். அதனால், இப்பிறவியில் அவன் உஞ்சவிருத்தி எடுக்கும்படி இருக்கிறது. இவர்கள் இருவரும் சனிப் பிரதோஷத்தன்று சிவபூஜையைப் பூரணமாகச் செய்வாரானால் நினைத்தது நிறைவேறப் பெறுவர்" எனக் கூறி, மூத்தவனுக்கு சுசிவரதனென்றும், ராஜகுமாரனுக்கு தருமகுத்தன் என்றும் நாமகரணமிட்டார்.
அவர்கள் தொடர்ந்து நான்கு மாதம் பிரதோஷ பூஜை செய்த பின்பு, சுசிவரதன் ஆற்றங்கரையில் ஊற்று ஒன்றைத் தோண்ட, ஒரு குடம் பொற்காசுகள் கிடைத்தன. தாய் உமை, அதை இருவரையும் பங்கிட்டுக் கொள்ளச் சொல்லியும், இது தமையன் பாக்கியம்" என்று தருமகுத்தன் பெற மறுத்து விட்டான்.
ஒரு வருடம் சென்றது. இளவேனிற் காலத்தில் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த சௌந்தர்யவதி ஒருத்தியைக் கண்டு மயங்கி நின்றான் தரும குத்தன். இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் விசாரிக்க, ராஜகுமாரன் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறினான்.
இளவரசே, என் பெயர் அஞ்சுமதி. என் பெற்றோர் திரிமிஷன் - தாரணி. நான் கந்தர்வ ராஜகுமாரி. உங்களைப் போலவே நானும் உம்மீது அன்பு கொண்டுள்ளேன்" என உரைத்து தனது கழுத்திலுள்ள முத்து மாலையை இளவரசன் கழுத்திலிட்டாள்.
உனது தந்தை சம்மதிக்காவிட்டால்...?" என்று தருமகுத்தன் சந்தேகம் எழுப்ப, நாளை இங்கு வாருங்கள். விடை தெரியும்" என்றாள் கன்னி.
மறுநாள் தமது இனத்தாரோடு அங்கு வந்த திரிமிஷன், அவர்களின் திருமணத்தை நிச்சயித்ததோடு, விதர்ப்ப தேசத்தையும் மீட்டு தருமகுத்தனை அரியணையில் அமரச் செய்தான். ‘பிரதோஷ பலன் நிதானமாக வருகிறதென்றால் அமர்க்களமாக வரும்’ என்கிறது பிரமோத்தர காண்டம்.

Comments