முன்னேற்றம் தரும் வரகனேரி முருகன் கோவில்

திருச்சி வரகனேரியில் உள்ளது சுமார் 500 ஆண்டுகள் பழமையான சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயம். இன்று இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
முன்னேற்றம் தரும் வரகனேரி முருகன் கோவில்
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது.

திருச்சியில் வரகனேரி பகுதியில் வசித்து வந்தார் தீவிர முருக பக்தர் ஒருவர். அவருக்கு ஒரே மகள். வயதுக்கு வர வேண்டிய வயது அவளுக்கு, தீடிரென அந்தச் சிறுமிக்கு தாய்மை பெற்ற பெண்ணைப் போல் மார்பில் பால் சுரக்கத் தொடங்கியது. பதற்றமடைந்த அந்த பெண், தன் தாயிடம் விவரம் கூறினாள். அவள் தன் கணவரிடம் விவரம் கூற அவருக்கும் ஏக அதிர்ச்சி.

என்ன செய்வது என்று புரியாத அந்த பக்தர், முருகனிடம் தன் வேதனையைக் கூறி கண்ணீர் விட்டு பிரார்த்தனை செய்து புலம்பினார். பின், உறங்கச் சென்றார். உறக்கத்தில் அவர் கனவில் முருகன் வந்தார். ‘கவலை வேண்டாம். உன் மகள் குணமாவாள். என்னை பழனியில் வந்து பார்’ என்று கூறிவிட்டு முருகன் மறைய, பக்தரின் உறக்கம் கலைந்தது. என்ன ஆச்சரியம்? மறுநாள் அந்த சிறுமி குணமானாள். எல்லாம் முருகன் அருள் என்று மகிழ்ந்த அந்த பக்தர், பழனிக்கு புறப்பட்டுப் போய் பால தண்டாயுதபாணியை தரிசித்தார்.

‘இந்த பால தண்டாயுதபாணியை தினசரி தரிசிக்க நம் ஊரில் இவருக்கு ஒரு ஆலயம் அமைத்தால் என்ன?’ என எண்ணினார். திரும்பி ஊருக்கு வந்தவர் தான் நினைத்த படியே பழனியில் உள்ளது போலவே, பால தண்டாயுதபாணியின் சிலையை வடிவமைத்தார். அந்த சிலையை பிரதிஷ்டை செய்து ஓர் ஆலயம் கட்டினார்.

இது செவி வழி வரலாறு :

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் உருவான அந்த சிறிய ஆலயம் காலப்போக்கில் பலமுறை புதுப்பிக்கப்பட்டு மூலவராய் வள்ளி- தெய்வானை சமேத முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

இந்த ஆலயமே வரகனேரியில் உள்ள சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயம்.

இங்குள்ள இறைவன், சிவசுப்ரமணிய சுவாமி என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையின் அமைப்பிலேயே இங்கு மூலவர் உருவாக்கப்பட்டுள்ளார். பக்தர் பிரதிஷ்டை செய்த பால தண்டாயுதபாணி, ஆலய மேற்கு திருச்சுற்றில் தனி சன்னிதியில் அருள்கிறார்.

ஆலய அமைப்பு :

இந்த ஆலயம் ராஜ கோபுரத்துடன் அழகுற விளங்குகிறது. கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம் உள்ளது. நடுவே மயிலும் சூலமும் இருக்க, அர்த்த மண்டப நுழைவு வாசலில் இரண்டு துவார பாலகர்கள் காவல் காக்க, உள்ளே கருவறையில் இறைவன் சிவசுப்ரமணிய சுவாமி வள்ளி, தேவசேனையுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.



இங்கு முருகனுக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் சக்தி ஆயுதத்தையும், வஜ்ராயுதத்தையும் ஏந்தி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் முருகப்பெருமான் காணப் படுகிறார்.

திருச்சுற்றுகளில் இடும்பன், அருணகிரி நாதர், மகா கணபதி, உண்ணாமலை அம்மன், அண்ணாமலையார் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் நடராஜன், சிவகாமி சன்னிதியும், வடகிழக்கு, மூலையில் நவக் கிரக நாயகர்களும் அருள் புரிகின்றனர். தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், துர்க்கை அம்மனும் அருள் பாலிக்கின்றனர்.

திருவிழாக்கள் :

இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு குறைவில்லை.

மாத கார்த்திகை நாட்களில் முருகப்பெருமான் சன்னிதியின் முன் ஹோமம் வளர்க்கப்பட்டு, இறைவன் இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. அன்று இறைவன், இறைவி வீதியுலா வருவதுண்டு.

கார்த்திகை மாதம் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இங்கு வெகு கோலாகல மாக நடைபெறுகிறது.

ஆடி மாதம் கார்த்திகை அன்று பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் முருகபிரான் தன் துணைவியருடன் வீதியுலா வருவார். பங்குனி உத்திரத்தின் போது இங்கு மூன்று நாட்கள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த மூன்று நாட்களும் சுமார் 1000 பேர் கலந்து கொள்ளும் அன்னதானமும் நடைபெறும். கந்த சஷ்டி மற்றும் வைகாசி விசாகம் போன்ற நாட்களில் இறைவன் இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன் ஏராளமான பேர் பங்கு பெறும் அன்னதானமும் நடைபெறும்.

ஆடி வெள்ளியில் இங்கு நடைபெறும் திரு விளக்குப் பூஜையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்வார்கள்.

ஐப்பசி பவுர்ணமியில் இங்குள்ள அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இங்குள்ள நடராஜர் - சிவகாசி அம்மனுக்கு திருமஞ்சன விழா சிதம்பரத்தில் நடைபெறுவது போல் நடைபெறுவதுடன் நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு மாதக் கார்த்திகையின் போதும் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் சாத்தப்படும். அந்த அழகைக்காணவே ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருவார்கள். வயலூர் முருகபெருமான் ஆலயத்தில் உள்ளது போல் இங்கும் அருணகிரி நாதருக்கு தனி சன்னிதி உள்ளது. இந்த அமைப்பு வேறு எந்த ஆலயத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை.

Comments