அறுகாமிர்தம்... அருந்ததி பிரசாதம்!

ஆனைமுகன் என்றதுமே ஞானக்கொழுந்தான அவரின் திருவடிவம் மனதில் எழும். வேழ முகம், பேழை வயிறு, ஐந்து கரங்கள் எனத் திகழும் அந்தப் பிரணவச் சொரூபத்தை தியானித்த மாத்திரத்தில், ‘அவர் அரிதானவர், அற்புதமானவர்...’ என்ற சிந்தை எழுவதையும் தவிர்க்க இயலாது. திருவடிவம் மட்டுமா? அவதாரம், அறுகின் அற்புதம், மோதகக் கதை,  மூஷிகத்தின் முன்வினை, சந்திரனின் சங்கடமும் சந்தோஷமும், `கா’ விரித்ததால் விரிந்த காவிரியின் வரலாறு... என நீளும் கணபதியின் பெருமையைச் சொல்லும் புராணத் தகவலும் அற்புதமானவையே. அத்தகைய அற்புதங்களில் சிலவற்றைப் படித்து மகிழ்வோமா?

விநாயகர் அகவல் பிறந்த கதை...

ஒருமுறை சிவனார் அளித்த யானையின் மீதேறி சுந்தரமூர்த்தி நாயனாரும், அவரோடு அவர் நண்பரான சேரமான்பெருமான் நாயனார் குதிரையில் அமர்ந்தும் திருக்கயிலை பயணத்தைத் தொடங்கினார்கள்.
செல்லும் வழியில் திருக்கோவலூர் என்னும் ஊரில் உள்ள விநாயகர் திருக்கோயிலில் கணபதியை உள்ளம் உருகப் பூஜித்துக் கொண்டிருந்தார் ஒளவையார். அவரிடம், தங்களது திருக்கயிலை பயணத்தைப் பற்றி விவரித்தார்கள் சுந்தரரும் அவரின் நண்பரும். ஒளவையாருக்கும் திருக்கயிலைக்குச் செல்லும் ஆவல் எழுந்தது. எனினும், ஆனைமுகனுக்கான பூஜையைப் பாதியில் நிறுத்த அவருக்கு மனமில்லை. ஆகவே, சிரத்தையுடன் பூஜையைத் தொடர்ந்து நிறைவேற்றி முடித்தார்.


அதுமட்டுமா? கயிலைக்குச் செல்ல வேண்டும் என்ற தமது விருப்பத்தை பிரார்த்தனையாக்கி, மனதார சங்கல்பித்துக் கொண்டவர், பிள்ளையாருக்குத் துதிப்பாடல் ஒன்றையும் சமர்ப்பித்தார். அதுவே விநாயகர் அகவல். ‘சீதக்களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசைப்பாட...’ எனத் தொடங்கி, அந்தப் பாடலை அவர் பாடி முடித்ததும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

ஆம்! ஒளவையின் பூஜையாலும் பாடலாலும் மிகவும் மகிழ்ந்த பிள்ளையார் பெருமான், தன் துதிக்கையால் அவரைத் தூக்கி, சடுதியில் கொண்டு போய் கயிலையில் சேர்த்தார். அதன் பிறகே சுந்தரரும் அவரின் நண்பரும் கயிலைக்கு வந்து சேர்ந்தார்கள். தங்களுக்கு முன்னதாக ஒளவையார் வந்திருப்பதைக் கண்டு திகைத்தவர்கள், ‘இது எப்படி சாத்தியம்?’ என்று பெரும் வியப்போடு வினவினார்கள். அதற்கு ஔவையார்:
‘மதுரமொழி நல்உமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை
முதிர நினைய வல்லார்க்கரிதோ முகில் போன் முழங்கி
அதிரநடந்தும் யானையும் தேரும் அதன் பின்வருங்
குதிரையுங் காதங் கிழவியும் காதங்குல மன்னரே!’


- என்று பதில் சொன்னாராம். அதாவது, `மதுரமான மொழியை உடைய உமையம்மையின் புதல்வனான விநாயகரைத் துதித்து வந்ததால், அவரருளாலேயே யானைக்கும், குதிரைக்கும் முன்பாகவே என்னால் கயிலையை வந்தடைய முடிந்தது' என்று கூறினார். இதுவே விநாயகர்அகவல் மலர்ந்தவிதம்.

நான்கு காணிக்கைகள்!

வையார் தனது `நல்வழி’ எனும் பாடல் தொகுப்பில், ‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்’ என்று பாடி, கடவுள் படைத்த நானிலத்தின் பொருளை, நிலத்துக்கு ஒன்றாக காணிக்கையாகச் செலுத்துகிறார்.
முல்லை - பால், குறிஞ்சி - தேன், மருதம் - பாகு, நெய்தல் - பருப்பு (தேங்காய் ). இவை நான்கையும் படைத்தவர் பதிலுக்கு என்ன கேட்கிறார் தெரியுமா? ‘சங்கத் தமிழ் மூன்றையும் தா’ என்று கேட்கிறார்.


மோதகம் பிறந்த கதை!

ற்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, வானில் இன்றும் விண்மீனாய் வலம்வந்து அருள்பவள் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி. புண்ணிய பலன் காரணமாக ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு விஜயம் செய்தார் விநாயகர். அவர் வருவதை முன்னரே தெரிந்துகொண்ட அருந்ததி, அவருக்காக மோதகம் தயார் செய்தாளாம். பர பிரம்மன் இந்த அண்டமெங்கும் வியாபித்திருக்கிறது என்று தான் அறிந்ததை இவ்வுலகுக்கும் உணர்த்தும் வகையில்,  வெள்ளை மாவினால் செப்பு செய்து அதனுள் அமிர்தமயமான பூர்ணத்தைப் பொதிந்துவைத்து மோதகம் தயாரித்து, வசிஷ்டரிடம் கொடுத்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்யச் சொன்னாளாம்.

அப்படி அவள் அளித்த பிரசாதத்தையும், அதன் தத்துவச் சிறப்பையும் உணர்ந்த பிள்ளையார், அதன் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக, மோதகத்தை எப்போதும் தன் திருக்கரங்களில் ஏந்திக் கொண்டிருக் கிறாராம். அருந்ததி மூலம் நமக்குக் கிடைத்த அந்த அருள் பிரசாதத்தைப் போன்றே, நாம் வாழ்வும் இனிப்பும் தித்திப்புமாகப் பூரணத்துவம் பெற பிள்ளையாரை வழிபட்டு வரம் பெறுவோம்.


அறுகாமிர்தம்!

‘தூர்வா’ என்று ஞான நூல்கள் சிறப்பிக்கும் அறுகம்புல்லை, பிள்ளையாருக்குச் சாற்றி வழிபடுவதை ‘தூர்வாயுக்ம பூஜை’ என்பார்கள். இதில், விநாயகருக்கு அறுகம்புற்களால் மேடை அமைத்து, அவரது
21 திருநாமங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபடுவார்கள். அதேபோல், பிள்ளையாரை வேண்டிக்கொண்டு விரதம் இருப்பவர்களுக்கு, தீர்த்தத்தில் அறுகம்புல் இட்டு அத்துடன் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றைப் போட்டு அந்தத் தீர்த்தத்தை வழங்குவதுண்டு. இதை `கணேச அறுகாமிர்தம்' என்பார்கள்.

விநாயகர் சதுர்த்தி தொடங்கி அடுத்தடுத்த நாள்களில் முறையே பக்தி கணபதி, பால கணபதி, லட்சுமி கணபதி, தருண கணபதி, சந்தான கணபதி, ருணவிமோசன கணபதி, சங்கடஹர கணபதி, ஸ்வர்ண கணபதி என்ற வரிசையில் பிள்ளையாரைப் பக்தியோடு வழிபட்டு, அறுகாமிர்தம் அருந்திவர வேண்டும். இதனால் பிணிகள், கடன் தொல்லை முதலான சகல பிரச்னைகளும் நீங்கும்; சந்தோஷம் பெருகும்.

Comments