சப்த மாதர் சூழ் துறையாத்தம்மன்!

சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லும் வழியில், வெள்ளவேடு என்ற ஊருக்கு அருகில் உள்ள குத்தம்பாக்கத்தில் அன்று, ‘சோ’வென மழை பெய்ந்து கொண்டிருந்தது. முதலில் அதை ஆனந்தமாக வரவேற்ற மக்கள், நேரம் செல்லச் செல்ல கவலையில் ஆழ்ந்தனர். ஆடு, மாடுகள் தங்கள் கொட்டில்களில் மழைச் சாரல் தங்கள் மேல் படாதபடி நகர்ந்து அருகருகே நின்று கொண்டன. எங்கும் மேகமூட்டம். மழை நிற்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.
ஊருக்கு வெளியே இருந்த ஏரி, சமுத்திரம் போல் காட்சியளித்தது. கொஞ்சம் கொஞ்சமாக நீர் மட்டம் ஏறி, எந்த நேரமும் ஏரியின் கரை உடைந்துவிடும் நிலை. அப்படி ஏரி உடைந்தால் ஊரில் ஒரு குடிசை கூட மிஞ்சாது என்ற திகிலில் ஊர் மக்கள் உறைந்திருந்தனர். என்ன செய்வதென்று தெரியாத நிலையில், இனி தெய்வமே துணை என்ற முடிவுக்கு வந்தனர். தலையில் கூடைகளையும் சாக்குகளையும் போர்த்திக் கொண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு ஊரின் எல்லையில் உள்ள கோயிலை நோக்கி ஓடினர்.
குடிசைகளே அதிகம் நிறைந்திருந்த ஊரின் எல்லையில் பிரம்மாண்டமாக நின்றது அந்த சிவாலயம். கோயிலின் உள்ளே சென்ற மக்கள் சப்தமாதர்களிடம், அம்மா, எங்களின் தாய்மார்களாக இருந்து நீங்கள்தான் இந்த ஊரைக் காக்க வேண்டும். உங்களைத் தவிர, எங்களுக்கு வேறு கதி இல்லை" என்று வேண்டி, சன்னிதியின் முன் அனைவரும் அமர்ந்தனர். ஓம் சக்தி... ஓம் சக்தி" என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.
மழை நின்றபாடில்லை. தாயே, இன்றிரவு பொழுதுக்குள் கரை எப்படியும் உடைந்துவிடும். அதற்குப் பிறகு நாங்கள் உயிர் பிழைத்திருக்க வழியே இல்லை. எங்கள் ஆடு, மாடுகள் மழையில் போராடிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் இங்கு மன்றாடிக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு எங்கள் மேல் கருணை இல்லை எனில், போகிற எங்கள் உயிர் உன் சன்னிதியில் போகட்டும்" என்று வேண்டியபடி கோயிலிலேயே அமர்ந்து விட்டனர்.
நள்ளிரவு ஆயிற்று. பசியிலும், பயத்திலும் மெல்ல மெல்ல அனைவரும் கண் அயர்ந்தனர். சப்தமாதர்களின் சன்னிதியில் இருந்து ஒரு ஒளி புறப்பட்டது. அது, ஏரியின் படித்துறையை அடைந்து மூன்று முறை அதைச் சுற்றி வந்தது. உடனே, ஏதோ விளக்கை அணைப்பதுபோல, மழை அப்படியே நின்றது. நீர் மெல்ல மெல்ல வடியத் துவங்கியது.
தூக்கம் கலைந்த ஒரு மூதாட்டி நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லாம் ஒரு அதிசயம் போலவே இருந்தது. மழை நின்றவுடன் அந்த ஒளி மீண்டும் கருவறைக்குள் வந்து அடங்கியது. அம்மா... தாயே... உங்கள் கருணையே கருணை" என்று பெருங்குரல் எடுத்து கத்தினாள் மூதாட்டி. அனைவரும் குரல் கேட்டு எழுந்தனர். நடந்தது அனைத்தையும் கூறிய மூதாட்டி, துறைக் காத்த அம்மன்... துறைக் காத்த அம்மன்... துறைக் காத்த அம்மன்..." என்று மூன்று முறை கூறியபடியே கீழே சாய்ந்தாள். இறை தரிசனம் பெற்ற ஆனந்தத்தில் இறைவனடி சேர்ந்தாள். துறைக் காத்த அம்மன் என்ற பெயர் இன்று, ‘துறையாத்தம்மன்’ என அழைக்கப்படுகிறது.
அன்று முதல் அவ்வாலயத்தில் சப்தமாதருக்கே முதல் படையல், வழிபாடு நடக்கத் துவங்கியது.
சிவாலயம் மெல்ல மெல்ல அம்மன் கோயிலாக மாறியது. கருவறை ஈசன் அவ்வூரின் மற்றொரு ஆலயமான திரிபுராந்தகேஸ்வரர் ஆலயத்தில் அடைக்கலமானார்.
துறையாத்தம்மன் கோயில் ஊரின் ஓரமாக அமைந்துள்ளது. மிகவும் பழைமையான ஆலயம். இருபுறமும் படிகள் அமைக்கப்பட்ட உயரமான, மிகவும் வித்தியாசமான பலி பீடம். உடைந்த பல பழைமையான சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. தனிச் சன்னிதியில் பைரவர் அமர்ந்து, ஒரு காலத்தில் இது சிவாலயமாக இருந்ததை நினைவூட்டுகிறார். கருவறையில் சப்தமாதர்கள். அருகே விநாயகர் மற்றும் சாஸ்தா. இச்சிலைகளைப் பார்க்கும்பொழுது இவ்வூரில் இருக்கும் திரிபுராந்தகேஸ்வரர் மற்றும் கலியராய பெருமாள் ஆலயங்களை விட, இது பழைமையானது என்பதை அறிய முடிகிறது.
கோயிலுக்குப் பின்புறம் மிகப் பிரம்மாண்டமான குளம் காய்ந்த நிலையில் காட்சி தருகிறது. ஒரு காலத்தில் ஏரியாக இருந்தது, தற்போது குளமாக மாறியிருக்கிறது. கோயில் சுவர்கள் எங்கும் கல்வெட்டுகள். இதில் ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டிருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டுகள் மூலம், இக்கோயிலில் இருந்த ஈசன், ‘திருவையாறுடைய நாயனார்’ எனவும், ‘திருவையாறுடையார்’ என்றும் வழங்கப்பட்டதை அறிய முடிகிறது.
இவ்வூரைச் சார்ந்தவர்கள் இன்று பல ஊர்களில் இருந்தாலும், தங்கள் குலம் காத்த தெய்வம் துறையாத்தம்மனை வழிபடுவதை மட்டும் மறப்பதில்லை. இங்கு வந்து துறையாத்தம்மனை வேண்டினால் தீராத துன்பங்கள் தீர்வது கண்கூடு.


அமைவிடம் : சென்னை - திருவள்ளூர் சாலையில் வெள்ளவேடு தாண்டி, ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது குத்தம்பாக்கம்.
தரிசன நேரம் : செல்லும் முன்னர் தகவல் தெரிவித்து விட்டுச் சென்றால் சுலபமாக வழிபட்டுத் திரும்பலாம்.
தொடர்புக்கு : 9791117476

Comments