கார்த்திகை தரிசனம்!

அருணாசல மகிமை!

ருணாசல மகாத்மியமும் அருணாசல புராணமும் திருவண்ணா மலையின் மகத்துவத்தைச் சொல்கின்றன. ஸ்காந்தம் எனப்படும் வடமொழி ஸ்காந்த புராணத்தின் மாஹேஸ்வர காண்டத்தில் சுமார் 37 அத்தியாயங்களில் அமைகிறது அருணாசல மகாத்மியம். அருணாசலபுரக் கதையை குத்சர், உரோமசர், குமுதர், குமுதாட்சர், சகடாயர், அகத்தியர், வத்சர், வைசம்பாயனர், கணாசி, வியாக்ரபாதர், வாமதேவர், சனகர், சனத்குமாரர், வியாசர், மதங்கர், பதஞ்சலி ஆகியோருக்கு நந்தித் தேவரும் மார்க்கண்டேயரும் கூறியுள்ளனர்.

முக்தி கொடுக்கும் ஏழு நகரங்களான காசி, காஞ்சி, மதுரா, மாயா, அவந்தி, அயோத்தியா, துவாரகை ஆகியவற்றை ஒரு தட்டிலும் அண்ணாமலையை மற்றொரு தட்டிலும் இட்டால், தராசு சமமாக நிற்கும்.

இத்தகுச் சிறப்புமிக்க திருவண்ணாமலை, `சத்ய யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் செப்பு மலையாகவும், இனிவரும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இலங்கும்’ என்பது ஞானப் பெரியவர்களின் வாக்கு.

பிற இடங்களில் மலைமீது பரமன் வீற்றிருப்பார். இங்கோ, மலையாகவே இருக்கிறார். மலையாகவே நின்றுவிட்டால், சாதாரண பக்தர்களால் உணர இயலாது, பூஜைகளும் அபிஷேகமும் கொள்ள முடியாது என்பதால் சின்னஞ்சிறு லிங்க வடிவில் சுயம்புவாகத் தோன்றி நின்ற இடமே அண்ணாமலையார் திருக்கோயில்.

தீபத் திருநாளில்...

சிவபிரான் முப்புரம் எரித்த திருநாள், திருமால் வாமனராகத் தோன்றி மகாபலியை அமிழ்த்திய நாள், அம்பிகை வாமபாகம் பெற்ற நாள், யார் பெரியவர் என்று போட்டிப் போட்டவருக்கு இடையே ஜோதி சொரூபம் தோன்றிய நாள்... இப்படி மகத்துவங்கள் பல கொண்ட கார்த்திகை தீபத் திருவிழாவே இந்தத் தலத்தின் சிறப்புமிக்க பெருவிழா. விழாவின் 10-ம் நாள் தீபத் திருவிழா. அன்று அதிகாலையில் சந்திரனும் பரணி நட்சத்திரமும் இணைந்திருக்கும் வேளையில் பரணி தீபம் ஏற்றப்படும். அண்ணாமலையார் சந்நிதியில் கற்பூர தீபம் முதலில் ஏற்றப்படும். பின்னர், அதிலிருந்து ஐந்தைந்தாக நெய் தீபம் ஏற்றப்படும். பின்னர் அவற்றிலிருந்து பல்வேறு சந்நிதிகளின் தீபங்களும் ஏற்றப்படும். இறைவன் ஒன்றாக - ஒருவனாக இருந்து, பின்னர் பஞ்சபூதங்களாகி பலவாறாகக் காட்சி கொடுப்பதை உணர்த்துவதற்காக இந்த ஏற்பாடு.

மாலையில், முதலில் பஞ்ச மூர்த்திகள் அலங்கார ரூபர்களாக காட்சி மண்டபத்தின் அருகில் கொடி மரத்தடியில் எழுந்தருள்வர். தீபம் ஏற்றப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் வேணுகோபாலன் சந்நிதிக்கு அருகிலிருந்து புறப்பட்டு ஆடிக்கொண்டே அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர், பஞ்ச மூர்த்திகளை நெருங்கியதும் வந்த வேகத்திலேயே உள்ளே செல்ல... அவரது தரிசனம் கிட்டிய தருணம், மலை மீதிருக்கும் பர்வத ராஜகுலப் பெருமக்கள், கார்த்திகை பெருந்தீபத்தை ஏற்றுகின்றனர். ஆறடி உயரமான கொப்பரையில், மலைமீது ஏற்றப்படும் தீபம், மகா தீபமாகத் தொடர்ந்து 11 நாள்கள் எரியும்.
இந்த வருடம் நவம்பர் 23 அன்று கொடியேற்றத்துடன் பெருந்திருவிழா தொடங்குகிறது. நவம்பர் 29 அன்று தேரோட்டமும், டிசம்பர் 2 அன்று மகா தீப வைபவமும் நடைபெறும்.

* ‘அண்ணா’ என்பதற்கு அணுக இயலாத என்று விளக்கம் தருவார்கள் பெரியோர்கள். உள்ளத்தில் அன்பும் பக்தியுமின்றி எவராலும் அணுக இயலாத மலை என்பதால் அண்ணாமலை. அங்கு அருளும் ஈசன் அண்ணாமலையார். கல்வெட்டுகளில் திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகா தேவர், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணாநாட்டு உடையார் என்று இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

* ருணாசலேஸ்வரர் சந்நிதி முன் உள்ள நந்தியெம்பெருமான் ஈஸ்வரனைப் பார்க்காமல் மலையைப் பார்த்த வண்ணம் உள்ளார். இதே போல் மலையைச் சுற்றி உள்ள அஷ்ட லிங்கங்களின் முன் உள்ள நந்திகளும் ஈஸ்வரனைப் பார்க்காமல் மலையைப் பார்த்த வண்ணமே உள்ளன.

*டலில் மறைந்து போனதாகக் கருதப் படும், லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை’ என்று ரமண மகரிஷியிடம் ஆசி பெற்ற மேனாட்டு ஆராய்ச்சியாளர் பால் பிரண்டன், Message From Arunachala என்ற நூலில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

தேடி வந்தாள் அம்பிகை!

ருமுறை பார்வதியும் பரமேஸ்வரரும் திருக் கயிலையில் விளையாட்டாக உரையாடிக் கொண் டிருந்தனர். இறைவனாரின் திருக்கண்களைப் பற்றி அம்பாள் வினவ, அவையே சூரியனும் சந்திரனும் என்று விடையளித்தார் பரமன்.

அதே விளையாட்டில் ஐயனுடைய கண்களைப் பொத்தி அம்பாள் சிரிக்க, ஐயனும் சிலிர்த்துப் போனார். இருப்பினும் அந்தச் சில கணங்கள் உலகம் இருளுக்குள் மூழ்கியதைக்கண்ட கருணை நாயகி, உயிர்களுக்கு அதனால் ஏற்பட்ட தவிப்புக்குப் பிராயச்சித்தம் தேட விழைந்தாள். ‘தவம் செய்ய வேண்டும்; தக்க இடம் எது?’ - அம்மை கேட்க, ‘காஞ்சிபுரம்’ என்றார் சிவனார்.

காஞ்சிக்கு வந்து அங்கே மணலால் லிங்கம் பிடித்து பூஜை செய்தாள் அம்மை. அம்பாளின் அன்பை உலகுக்குக் காட்டும் விதத்தில் சிவனார் திருவிளையாடல் நிகழ்த்த, கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.

ஆற்று வெள்ளத்தில் தாம் அருமைபெருமையாக அமைத்த மணல் லிங்கம் கரைந்துவிடுமோ என்று பதறிய அம்பாள், அப்படியே அதை ஆலிங்கனம் செய்து ‘விடமாட்டேன்’ என்று பற்றிக்கொண்டாள்.

அம்பாளின் பிடியில் ஐயனும் இறுகிக்கொள்ள, ஐயனுக்குத் ‘தழுவக் குழைந்தநாதர்’ எனும் சிறப்புத் திருநாமமே ஏற்பட்டது.

அம்பாளுக்கு நெருடல் ஓயவில்லை. ஐயனிட மிருந்து பிரிந்து தனியாக இருப்பதால்தானே இந்த நிலைமை! அவருடைய திருமேனியுடன் ஒன்றிவிட்டால்..? 

இந்த எண்ணம் உருவானவுடன் அம்மை, ஐயனை வேண்டினாள். கயிலையை விடவும் உயர்ந்த காஞ்சி; அதை விடவும் உயர்ந்த தலத்தில் தவம் செய்யும்படி ஐயன் ஆணையிட்டார். அத்தகைய தலம்தான் திருவண்ணாமலை.

தம்மை வழிபடாமல், சிவனாரை மட்டுமே வலம் வந்து வழிபட்டுச்சென்ற பிருங்கி முனிவரின் செய்கையால் வருந்திய அம்பிகை, சிவனும் சக்தியும் வேறு வேறல்ல என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பினாள். அதன்பொருட்டு இந்தத் தலத்துக்கு வந்து விரதமிருந்து வழிபட்டு, இறைவனின் திருமேனியில் வாம பாகத்தைப் பெற்றதாகவும் ஒரு திருக்கதை உண்டு.


இடுக்குப் பிள்ளையார்!

ண்ணாமலையில் அடிக்கொரு சிவலிங்கம் என்பார்கள்; மலை வலப் பாதையில் அடிக்கொரு ஆலயம் என்றும் சொல்லலாம். குபேர லிங்கத்துக்கு அருகிலுள்ள இடுக்குப் பிள்ளையார் ஆலயம் வெகு பிரசித்தம். பிள்ளைப்பேறு வேண்டி இங்கு வருபவர்கள் ஏராளம். இந்த சந்நிதிக்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. அதென்ன... தெரிந்து கொள்ள இங்கேயுள்ள QR CODE- ஸ்கேன் செய்து தரிசியுங்களேன்!

* 1949-ம் ஆண்டு ஜனவரியில் இந்திய அறிவியல் கழகக் கூட்டம் நடந்தபோது, ‘இமயமலையைவிட திருவண்ணாமலை பழைமையானது’ என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தார் டாக்டர் பீர்பால் சகானி என்ற புவியியல் அறிஞர்.

* ங்குள்ள சாசனங்கள் தமிழ், வடமொழி, கன்னடம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. அருணாசலத்தைப் பற்றிச் சுமார் 52 புராதன நூல்கள் உள்ளன.

* திருவண்ணாமலை ஆலயக் கட்டுமானப் பணி வளர்ச்சி என்பது கி.பி 871 முதல் கி.பி 1505 வரை அடைந்துள்ளது. அதாவது, சோழர் காலம் முதல் நாயக்கர் காலம் வரை.

* கார்த்திகைத் திருநாளில் நெற்பொரியுடன் வெல்லப் பாகும், தேங்காய்த் துருவலும் சேர்த்து பொரி உருண்டை பிடித்து நிவேதனம் செய்கிறார்கள்.

* வெள்ளை நிறப் பொரி - திருநீறு பூசிய சிவனையும், தேங்காய்த் துருவல் - கொடைத் தன்மை கொண்ட மாவலியையும், வெல்லம் - பக்தர்களின் பக்தியையும் தெரிவிக்கின்றன. பக்தர்களின் ஆத்மார்த்தமான பக்தியால் மகிழ்ந்து, சிவன் நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் எனும் தத்துவத்தால் இங்கு பெரிய நெற்பொரி உருண்டைகளும் அப்பமும் நிவேதனம் செய்யப்படுகின்றன என்கிறார்கள்.

Comments