நன்மையினார்க்கு இடம் ஆவது நாவலூரே!

மன்னர் மரபுக்கு உரிய மகுடம்! நெற்றியில் நிறை திருநீறு! காதுகளில் மகரக்குழை! கழுத்திலே முத்தாரத்தில் பிணைத்த நவரத்னக் கண்டிகை, பொன்னரி மாலை, இடையிட்டு உருத்திராக்கத்துடன் கூடிய கௌரி சங்கம்!
தோளில் வாகுவலயம், தோளணி! நெருக்கி வைத்த கடகம், முன்கைச் சூடகம்! விரல்களில் இரத்தின நெளி மோதிரம், மரகதப் பச்சை மோதிரம், பவள மோதிரம், கொற்கை நகரின் முத்து மோதிரம்! இடையில் நவமணிகள் பதித்த பட்டிகையில் கொசுவம் வைத்த மஞ்சள் வண்ணப் பட்டுப் பீதாம்பரம்! காலில் கழலோடு பீலியும் சங்கும் இழைத்த காலாழி! ஒரு கணமும் கலையாத மாப்பிள்ளைக் கோலம்! பொழுதெல்லாம் பூரிக்கும் இந்த அணிமணிக் கோலம்!
மன்னவர் குலமும் மறையவர் குலமும் இணைந்ததொரு இந்த மணக்கோலம் மணம் வந்த புத்தூரில் தோன்றி தடுத்தாட்கொண்ட மறையவரின் அருளிப்பாடு அல்லவா? அம்மட்டோ, அருள்?!
மறையவராய்த் தோன்றி, தம்மை வெளிப்படுத்திய ஈசனாரின் விழைவல்லவா, இந்த மானுடப் பிறப்பு! கயிலாய மலையில் நாதன் தாள் பணிந்து ஆற்றிய சிவ கைங்கர்யத்தில் கொண்டிருந்த ஈடுபாடு, அவன் அருளால் - ஒன்றி உயர்ந்த பாலது ஆணையால் காதல் உணர்வாகி நழுவியது. ஆலால விடத்தை ஐயனுக்கு அளித்த கடமை, பெண்கள் மீது மையலாகி மாறிப் புகுந்தது. ஆட்டுவித்து ஆட்கொண்டருளும் ஆண்டவனது ஆணை, திருநாவலூர்த் திருத்தலம் நோக்கித் திசை திருப்பிய விந்தையை எண்ணி வியந்தது ஆளுடைய நம்பியின் அன்புள்ளம்!
திருநாவலூர்! நாவல் மரங்கள் செறிந்த நடுநாட்டுத் தலம். சுந்தராம்பிகை உடனுறை நாவலேசுவரர் அருளாட்சி பெற்ற அத்தலம் திருமுனைப்பாடி நாட்டின் தலைநகராகச் சிறப்புற்ற பெருந்தலம்!
ஒவ்வொரு மனிதரின் ஜாதகத்திலும் சுக்கிர தசை அதிர்ஷ்டம்! கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் சுக்கிரன் இத்தலத்துப் பெருமானை வழிபட்டுச் செல்வத்துக்கு அதிபதியானமை, பழங்கதை! இப்போது சைவத்துக்குப் பெருநிதியமாய்ச் சுந்தரரை ஈந்தப் பெரும்புகழைப் பெறப்போகிறது!
திருநாவலூரில் மறையவர் குலத்தில் சிவத்தொண்டே உயிர்த் தொண்டாய்க் கொண்டு உறைந்தவர் சடையனார். கறைகண்டனது ஓராயிரம் நாமங்களில் உன்னதமான ஒரு நாமம் சடையனார் என்பதாகும்.
பெயரிலே பேறுபெற்ற சடையனாரின் வாழ்க்கைத் துணை நலமாக வாய்த்தவர் இசைஞானியார். திருவாரூர்த் திருத்தலத்தில் சிவகௌதம கோத்திரத்தில் ஞானசிவாசாரியார் திருமகளாகத் தோன்றியவர்தாம் அவர். சடையனார் இசைஞானியார் ஆகிய இருவர் தம் அன்பு வழிப்பட்ட அறவாழ்க்கையின் பயனாகத் தோன்றினார் ஆரூரர் அடிகள்! திருவாரூர்த் தியாகருக்கு வழி வழி அடிமை செய்யும் குலமாதலின் ஆரூரர் என்பது அவர்களது குலப்பெயர். பாட்டனார் பெயரை இடுவதனாலேயே அவ்வுறவுக்குப் பெயரன் எனப் பெயரிட்டனர், தொல்தமிழர்! தமிழ்க்குடியின் தனிப் பெயராகிய நம்பி என்பதனோடு இணைத்து நம்பியாரூரர் என்ற நற்பெயரிட்டனர் அருமைப் பெற்றோர்!
தென்னாட்டில் சைவமோங்கவும், திருத்தொண்டர் தம் தொண்டுநெறி விளக்கம் பெறவும் தோன்றியனார் ஆரூரர்! வேதநெறி விதித்த சடங்குகளைப் பெற்றோரும் உற்றாரும் உடனிருந்து ஆற்றினர். சங்கு, சக்கரம், வாள், தண்டு, வில் முதலிய ஐந்து ஆயுதங்களும் திருமாலுக்கு உரியன. அவற்றைப் பொன்னால் சிறிதாகச் செய்து, பிள்ளைகளின் மார்பில் காப்பிற்காக அணிவிப்பர், தமிழ்ப் பெற்றோர். உலகில் சைவ நெறி காக்க அவதரித்த ஆரூரரைக் காப்பதற்காக அருமைப் பெற்றோர் ஐம்படைத் தாலியை அணிவித்தனர்.
சிறிய மறைப் புதல்வனாம் ஆரூரர், அணிபூண்ட சிறு தேரைத் தெருவிலே உருட்டி விளையாடினார்.
அதுபோழ்து, திருநாவலூர் நகரின் வீதியில் உலாப் போந்த அந்நாட்டரசர் நரசிங்கமுனையரையரின் பாசப் பார்வை, நாவலூர்ப் பிறந்த நம்பியின் மீது பட்டது. காணும்தொறும் இன்பம் நல்கும் அவ்விளங் குழந்தை மீது அன்பு கொண்ட அரசர் நரசிங்கமுனையரையர் அக்கணமே சுந்தரரைத் தமது காதற்பிள்ளையாக, அபிமான புத்திரனாக வரித்துக் கொண்டார்! இறை பணியே தன் பணியாகக் கொண்ட சடையனாரும், மன்னர் பணிக்கு ஒத்துழைத்துத் தன் மகனை அரசப் பிள்ளையாக்கி, அழகு பார்த்தார்.
ஒருத்தி மகனாகப் பிறந்து ஓரிரவில் மாறிப் புகுந்த கண்ணபெருமானாக, இசைஞானியார் வயிறுதித்த அந்த வன்றொண்டர் அரண்மனையின் அபிமான புத்திரராக வளர்ந்தார். மன்னர் குடிபுகுந்தாலும், மறையவர் கடனும் அவருக்கு உரிதானது. சிகை, திருநீறு, முந்நூல், மான் தோல், முஞ்சிப்புல் திரித்து முடித்த அரைஞாண், கோவணவுடை, பவித்தரம் முதலியன தரித்த சிவவேடம் மறையவர் தோற்றத்துக்குப் பொலிவூட்டியது. மறைவல்ல மாண்புடைய சுந்தரர், அரசர்க்குரிய அருங்கலைகளைக் கற்று, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகச் சிவநெறிச் செல்வராக வளர்ந்தார்; சிறந்தார்.
மன்னவர் வளர்ப்பில் மாண்புற்ற தம் மைந்தருக்குப் பதினாறு வயது அடைந்தமை கண்டு, மணம் பேச, தமது குலத்துக்கு ஏற்ப, திருநாவலூர் அருகே உள்ள மணம்வந்தபுத்தூரில் சடங்கவி சிவாச்சார்யாரின் புதல்வியைத் திருமணம் பேச முற்பட்டார், சடையனார்.
பார்வதியம்மையை மணம் பேசச் சிவனார் சப்த ரிஷிகளை அனுப்பியது போலச் சடையனாரும் மறையவர் குலத்தின் முதிர்ந்தோர் சிலரை புத்தூருக்கு அனுப்பினார். மணம் பேசச் சென்ற சான்றோர், பெண் வீட்டில் குலம், கோத்திரமும் அறிந்து தெளிய உசாவினர். பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உள்ளு ணர்வு உரு, நிறை, அருள் உணர்வு, தெய்வப் பொலிவு ஆகியவற்றில் திருநாவலூர்ச் சுந்தரரும், புத்தூர் மங்கையும் ஒத்திருத்தல் கண்டு உளம்பூரித்தனர் பெரியோரும், பெற்றோரும்! ஊருக்கெல்லாம் மணவோலை பறந்தது; உற்றவரும் ஊரவரும் ஓலை கண்டு ஒருங்கிணைந்தனர், ஓலையால் (திரு)மணம் கலையும் என்ற உண்மை தெரியாமலேயே!
(தொடரும்)
பண்ருட்டியிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் உள்ளது திருநாவலூர்! தற்போதைய பெயர் திருமாநல்லூர். கெடில நதிக்கரையில் உள்ள இத்திருத்தல இறைவன் நாவலேசுவரர். அம்பிகை சுந்தராம்பிகை. இக்கோயிலின் பெயர் திருத் தொண்டீச்சரம் என்பது கல்வெட்டுத் தரும் செய்தி!
விழுப்புரத்திலிருந்து திருச்சி செல்லும் இருப்புப் பாதையில், ‘இருந்தை’ எனும் நிலையத்துக்குக் கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது. சுக்கிரன் பூசித்த தலம்! நாமும் சென்று பூசித்தால் செல்வம் பெருகும்.
முற்பிறவி வினை நீங்க...
என்ன தவறு செய்தேன்? மனதாலும் மாசற்றது என் வாழ்க்கை! என்றெல்லாம் கவலை கொள்வார் சிலர். இப்பிறவியில் நாம் படும் துன்பம் முற்பிறவி யின் வினைப் பயன் ஆகும். இந்த முற்பிறவி வினை நீங்க,
‘நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்க
முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும் ஊர் அணிநாவலூர்
என்று
ஓதநற் றக்கவன் றொண்டனா ரூரன்
உரைத்த தமிழ்
காதலித் துங்கற்றும் கேட்டவர் தம்வினை
கட்டறுமே’

Comments