நான் பூமிக்கடியில் உள்ளேன்’

ஸ்ரீகாஞ்சி காமகோடி ஆசார்ய பரம்பரையில் ஐம்பத்தொன்பதாவது பீடாதிபதியாக விளங்கியவர் ஸ்ரீ பகவன்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். நாம பஜனை சம்பிரதாயத்தின் ‘முதல் குரு’ என்று போற்றப்படுபவர். ஸ்ரீபோதேந்திரர் கோவிந்தபுரத்தில் தங்கி இருந்தபோது, பக்கத்து கிராமமான பெரம்பூர் எனும் கிராமத்துக்குச் சென்றார். அங்கே அவரது கனவில் பெருமாள் சீதா ராமனாகக் காட்சி கொடுத்தார். அதேநேரம், ‘நான் பூமிக்கடியில் உள்ளேன். வெளியே எடுத்து எனக்கு ஒரு கோயில் கட்டி வழிபடுவாய்’ என்ற அசரீரி வாக்கு கேட்டதாம்.
உடனே, ஸ்வாமிகள் தமது பரிவாரங்களுடன் சென்று தேடியபோது, அருகே உள்ள திருப்பூவனூரில் ‘செங்கழுநீர்’ என்ற தடாகத்தின் கரையில், புன்னை மரக்காடுகளுக்கு நடுவில் புற்று ஒன்று இருந்தது. அதனருகில் ஜடாமுனீஸ்வரர் தனது பரிவாரங்களுடன் அங்கே எழுந்தருளி இருந்தார். அவர், ஸ்வாமிகளிடம், எனது குருநாதர் ஸ்ரீசீதாராமன். அவரை எங்கு நீங்கள் பிரதிஷ்டை செய்தாலும் அவ்விடத்தில் என்னையும் பிரதிஷ்டைசெய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
அதன்படி பூமியைத் தோண்டிப் பார்த்தபோது, அங்கே ஸ்ரீ கோதண்டராமர், சீதா தேவி, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் முதலிய விக்ரஹங்கள் கிடைத்தன. அத்திருச்சிலைகளை அங்கே பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் கட்டப்பட்டது. அக்கோயில் வளாகத்திலேயே மேற்கு திசையில் ஜடாமுனீஸ்வரர்க்கும் ஒரு சன்னிதி எழுப்பப்பட்டது. மேலும், இக்கோயிலில் ஸ்ரீவரதராஜ பெருமாள், ஸ்ரீநிவாஸன், ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர், தேசிகன் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. புன்னை மரம் தல விருஷம். ஒரே சுற்றுடன் கூடிய ஸ்ரீ கோதண்ட ராமர் கோயிலில் ஸ்ரீகோதண்டராமர், சீதா தேவி, லக்ஷ்மணர் மற்றும் ஆஞ்சநேயருடன் அழகுற காட்சி தருகின்றார்.
‘விஷ்ணுபதி புண்ய காலத்தில் இந்த கோதண்ட ராமருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து அன்னதானம், வஸ்த்ர தானம் செய்தால் காசி யாத்திரை சென்ற பலன் கிடைக்கும்’ என்பது ஸ்ரீ போதேந்திரரின் அருள்வாக்கு. ஸ்ரீகோதண்ட ராமரைத் தரிசித்து, புனித தீர்த்தம், துளசி, குங்குமம் பெற்றுக் கொண்டு, பிராகாரத்திலுள்ள ஜடாமுனிவரையும் வழிபட்டு விபூதி பிரசாதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இக்கோயிலில் தீர்த்தம், துளசி, குங்குமம், விபூதி வழங்கப்படுவது சிவ - விஷ்ணு ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது!
அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் உள்ளது திருப்பூவனூர்

Comments