அம்பிகை இயற்றிய தவம்!

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ளது அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில். ‘தபசு’ என்றால் தவம் என்று பொருள். அன்னை பார்வதி தேவி சிவபெருமானிடம், சிவன்-விஷ்ணுவை சங்கர நாராயணக் கோலத்தில் காட்சி தர வேண்டித் தவமிருந்து, தரிசித்தத் திருத்தலம் இது. நாகர் இனத்தைச் சேர்ந்த சங்கன் எனும் சிவபக்தனும், பதுமன் எனும் விஷ்ணு பக்தனும், ‘சிவபெருமான் உயர்ந்தவரா? திருமால் உயர்ந்தவரா?’ என்று அடிக்கடி தங்களுக்குள் வாதிடுவர். ஒருநாள் அவர்களின் வாதம் அம்பிகையின் திருச்செவிகளில் விழுந்தது.
அம்பிகை சிவபெருமானிடம், தாங்கள் பெரியவரா? அல்லது திருமால் பெரியவரா?" என்று கேட்டாள். பாண்டிய நாட்டு புன்னைவனத்தில் தவமியற்றினால் அதனை அறியலாம்" என்று சிவபெருமான் கூறினார். அம்பிகை பூலோகம் தோன்றி, ஆடி மாதத்தில் புன்னை வனத்தில் கடுந்தவம் இயற்றினாள். ஆடி மாதப் பௌர்ணமி தினத்தில் பெருமான், சங்கரனும், நாராயணனும் இணைந்த சங்கரநாராயண திருக்கோலத்தில் அம்பிகைக்குக் காட்சி தந்தார். அதாவது, தாம் இருவருக்குள் பேத மில்லை என்பதை, தேவியின் தவத்தைக் காரணமாக வைத்து உலகத்துக்கு உணர்த்திய பெருமை பெற்றது இத் திருத்தலம்.
பதினொன்றாம் நூற்றாண்டில் உக்கிர பாண்டிய மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அவன் யானை மீது ஏறி, தினமும் மீனாட்சி அம்மனைத் தரிசிப்பது வழக்கம். அவன் ஏறிச் சென்ற யானை, ஒரு குறிப்பிட்ட இடம் சென்றபோது, அங்கு நின்று மண்ணைக் கிளறியது. ஆரம்பத்தில் பாண்டியன் இதனைக் கவனிக்கவில்லை. நாளடைவில், யானை மண்ணைத் தோண்டிய அப்பகுதி, புன்னை மரங்கள் நிறைந்த அழகிய வனமாக மாறியது.
மணிக்ரீவன் என்பவன் அந்தப் புன்னை மர வனத்தின் இடையே ஒரு பூந்தோட்டத்தை அமைத்தான். பூந்தோட்டத்துக்கு அருகே ஒரு பாம்புப் புற்று இருந்தது. மணிக்ரீவன் அந்த இடத்தை சுத்தம் செய்ய எண்ணி, மண் வெட்டியால் வெட்டியபோது, அறியாமல் அப்புற்றுக்குள் இருந்த நாகத்தின் வாலைத் துண்டித்து விட்டான். புற்றுக்குள் சிவலிங்கத்துக்குக் குடை பிடித்தபடி ஒரு நாகம் இருப்பதையும் கண்டான். இந்தச் செய்தியை உடனே அவன் மன்னனிடம் தெரிவித்தான்.
விரைந்து வந்த உக்கிரபாண்டியன், அங்கு காட்சி தந்த சிவலிங்கத்தையும் நாகத்தையும் கண்டு வணங்கினான். அப்போது, அங்கயற்கண்ணியையும் சொக்க நாதனையும் வழிபட்ட புண்ணியத்தால் தான் புன்னைவனத்தில் தாம் தோன்றியதாக சிவபெருமான் அசரீரியாகக் உரைத்தார். பெரிதும் மகிழ்வுற்ற உக்கிரபாண்டியன் புற்றுக்குள் இருந்த சிவலிங்கத்தை வெளியே எடுத்து, முறைப்படி பிரதிஷ்டை செய்து ஒரு கோயிலையும் எழுப்பினான் என்கிறது சங்கர நாராயணர் கோயில் தல வரலாறு.
திருக்கோயில் ராஜகோபுரம் 125 அடி உயரத்துடன், ஒன்பது நிலைகளைக் கொண்டது. முதலில் நாம் காண்பது மகாமண்டபம், இதைக் கடந்து சென்றால் சங்கரலிங்கர் சன்னிதியை அடையலாம். இக்கோயிலில் மூன்று மூர்த்திகள் முக்கியமானவர்கள். அவர்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். தெற்கே சங்கரலிங்கமும், வடக்கே கோமதி அன்னையும், இவர்கள் இருவருக்கும் இடையில் சங்கர நாராயணரும் எழுந்தருளியுள்ளனர்.
ஒவ்வொரு தலத்திலும் தவமியற்றும் அம்பிகை, தவத்தின் பயனா ஈசனைத் திருமணம் செய்து கொள்வாள். ஆனால், சங்கரன்கோயிலில் ஈசனும் திருமாலும் இணைந்த திருக்கோலத்தில் தரிசனம் அளிப்பதால், அம்பிகை ஈசனைத் மணம் புரியவில்லை. ஆனால், ஐப்பசி மாதத்தில் சங்கரலிங்கரை கோமதியன்னை மணந்து கொள்ளும் வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. அம்பிகை தவமியற்றி, சங்கரநாராயண திருக்கோலத்தைக் கண்ட தினத்தைக் கொண்டாடும் விதமாக, இன்றும் இத்தலத்தில் ஆடித்தபசு விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆடித்தபசுக்கான கொடியேற்றம், ஆடி பௌர்ணமிக்கு பத்து நாட்களுக்கு முன்பு பூரம் நட்சத்திர தினத்தில் நடைபெறுகிறது. கொடியேற்றும் அதே வேளையில் ஸ்ரீ அம்பாள் தந்தப் பல்லக்கில் எழுந்தருள்கிறாள். தொடர்ந்து பத்து நாட்களும் காலை, மாலை வேளைகளில் விசேஷ அலங்காரத்தில் வெள்ளி சப்பரத்தில் அம்பாள் எழுந்தருள்கிறாள். இது அம்பாளுக்கான விழா ஆகையால், ஒன்பதாம் நாள் காலையில் அம்பாளுக்கு மட்டும் ரத உத்ஸவம் நடைபெறுகிறது. 11ம் நாள் காலை யாகசாலை மண்டபத்தில் ஸ்ரீ கோமதி அம்பாள், ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி, ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி ஆகிய உத்ஸவமூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், சோடஷ உபசாரனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஸ்ரீ கோமதி அம்பாள் தபசு கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள். ஆடி பௌர்ணமியில் மாலை உத்திராட நட்சத்திர வேளையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ சங்கரநாராயண மூர்த்தியாக, தபசு கோலத்தில் அம்பாளுக்குக் காட்சி தருகிறார்.
சங்கரலிங்கம் கோயிலுக்கு அருகிலுள்ள புற்று மண், நோய் தீர்க்கும் ஆற்றல் உடையது. இப்புற்று மண்ணைச் சிறிய வில்லைகளாகப் பிரசாதமாக வழங்குகின்றனர். பாண்டிய நாட்டு பஞ்சபூதத் திருத்தலங்களில் சங்கரனார் கோயில் பிருத்வி தலமாகும்.


 

Comments