பாபா சமைத்த ‘மிட்டா சாவல்’!

நமது சாஸ்திரங்களில் ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொரு கட்டளை விதிக்கப்பட்டிருக்கிறது. கிருத யுகத்துக்கு தவமும், திரேதா யுகத்துக்கு ஞானமும், துவாபர யுகத்துக்கு யாகங்களும், கலியுகத்துக்கு தானமும் சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, அன்னதானமே பிரதானமாக சொல்லப்பட்டிருக்கிறது. அன்னதானம் இல்லாவிடில் மற்ற தானங்கள் அனைத்தும் நிலவில்லாத நட்சத்திரக் கூட்டம் போலவும், பதக்கமில்லாத அட்டிகை போலவும், முடிமணி அற்ற கிரீடம் போன்றும் சோபிக்காது போகும்.
பாபாவுக்கு சிறிது உணவே தேவைப்பட்டது என்றும், அவருக்குத் தேவையானது சில வீடுகளில் பிச்சையெடுத்துப் பெறப்பட்டது என்றும் முன்பே சாயி சரிதத்தில் சொல்லப்பட்டது. ஆனால், ஒரு காலகட்டத்தில் ஷீர்டியில் கூடும் பக்தர்கள் அனைவருக்கும் உணவு அளிக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்துதானே எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தார். அவரிடம் இரண்டு விதமான ஹண்டிகள் (சமையல் பாத்திரங்கள்) இருந்தன. ஒன்று சிறியது, ஐம்பது பேருக்கு உணவு சமைக்க ஏற்றது. மற்றொன்று சற்றே பெரியது. நூறு பேருக்கு சமைக்கும் அளவு கொண்டது. கடைத்தெருவுக்கு அவரே சென்று சோள மாவு, உப்பு, மிளகாய், ஜீரகம் போன்ற மசாலா பொருட்கள், கறிகாய்கள் முதலியவற்றை வாங்கி வருவார்.
மசூதியின் முற்றத்தில் பாபா ஒரு பெரிய அடுப்பை மூட்டி, அதன் மேல் பாத்திரம் வைத்து முதலில் சரியான அளவு தண்ணீர் ஊற்றுவார். ஒரு நாள் மிட்டா சாவல் (சர்க்கரைப் பொங்கல்) மற்றொரு நாள் மாமிசம் கலந்த புலவை சமைப்பார். சில சமயங்களில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் பருப்பு சூப்பில் கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாகவோ அல்லது தட்டையான ரொட்டிகளாகவோ செய்து மிதக்க விடுவார். வாசனைப் பொருட்களை அவரே அம்மியில் வைத்து இடித்துத் தூளை சமையல் பாத்திரத்தில் போடுவார். ஜீரகம், கொத்துமல்லி, கடுகு போட்டுத் தாளித்து சமையல், ‘கமகம’ என்று மணக்கும்படி செய்வார்.
சோள மாவை சரியான பதத்தில் நீர் கலந்து காய்ச்சி மோரில் கலந்து கஞ்சியாக்குவார். உணவுடன் இந்த கஞ்சியை (அம்பீல்) எல்லோருக்கும் ஒரே மாதிரியாக விநியோகிப்பார். உணவு ஒழுங்காக வேகிறதா என்று பார்க்க பாபா தனது கஃபினியின் கைகளை மேலே சுருட்டி விட்டுக் கொண்டு தனது வெறும் கையைக் கொதிக்கும் பாத்திரத்தில் துளியும் பயமின்றி விட்டு கொதிக்கும் கலவையை நன்றாகக் கலக்கி விடுவார். கை சூடுபட்டதற்கான எந்த அடையாளத்தையோ முகத்தில் பயம், வலி, வேதனை முதலான சாயலையோ சற்றும் காண முடியாது. பஞ்சபூதங்களும் அவர் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கும்போது அக்னி தேவனால் எப்படி அவரைத் தீண்ட முடியும்?
சமையல் முடிந்ததும் பாத்திரங்களை மசூதிக்குக் கொண்டு வந்து வைத்து, அதை மௌல்வியின் கையால் உரிய முறையில் ‘பாத்தியா’ ஓதி புனிதமாக்குவார். உணவின் முதல் பகுதியை மஹல் சாபதிக்கும், தாத்யா பாடீலுக்கும் பிரசாதமாக அனுப்பி வைப்பார். பிறகு, இரண்டு பந்திகளாக எதிரெதிரே அமர்ந்திருக்கும் எல்லா ஏழை எளியவர்களுக்கும், திக்கற்றவர்களுக்கும் அவர்கள் வயிறு நிறைந்து, மனம் குளிரும் வண்ணம் தானே தன் கையால் பரிமாறுவார்.
பாபா தானே சமைத்து, தானே பரிமாறிய உணவை உட்கொண்டவர்கள் எப்பேர்ப்பட்ட பாக்கியசாலிகள்! இத்தருணத்தில் எல்லோருக்கும் மனதில் ஒரு சந்தேகம் எழலாம். ‘பாபா காய்கறிகளையும் அசைவ உணவையும் எல்லா பக்தர்களுக்குமா வழங்கினார்?’ என்று. எப்பொழுதும் மாமிசம் சாப்பிடுபவர்களுக்கே பாபா மாமிசம் கலந்த அன்னத்தைப் பரிமாறுவார். அதில் பழக்கமில்லாதவர்களுக்கு அதைக் தொடக்கூட அனுமதியில்லை.
ஆனால், இந்த விஷயத்தில் பாபா செய்த ஒரு குறும்பை, ஒரு விளையாட்டை, ஹேமத்பந்த் என்பவர் சாயி சரிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு நாள் தாதா கேல்கரை பாபா அழைத்து, தான் செய்த மாமிச புலாவை ருசி பார்க்கச் சொன்னார். அவர் ஆசார சீலரான பிராமணர். அன்றாட அனுஷ்டானங்கள், நியம நிஷ்டைகள் என்று ஒரு பவித்ரமான வாழ்க்கையை நடத்தி வருபவர். அவர் பாபாவின் மேல் உள்ள மரியாதையில் அந்தப் பாத்திரத்தைத் தொடாமலேயே, மிக ருசியாக உள்ளது" என்று கூறினார். பாபா அவர் கையைப் பிடித்து உணவுப் பாத்திரத்தினுள் அழுத்தி, நீ சாப்பிட மாட்டாய் என்று எனக்குத் தெரியும். சும்மா தொட்டாவது பார்" என்று வேடிக்கையாக விளையாடினார் அவருடன்.
அதேபோல ஒரு ஏகாதசி தினத்தன்று கேல்கரை அழைத்து கோரலா என்ற இடத்திலிருந்து மாமிசம் வாங்கி வரச் சொன்னார். அவர் ஆடை மாற்றிக் கொண்டு கிளம்பியபோது, நீ போகாதே! வேறு யாரையாவது அனுப்பு" என்றார். தாதா கேல்கர் தனது வேலையாள் பாண்டுவை அனுப்பியபோது, பாபா அதையும் தடுத்து விட்டார். வெறும் வேடிக்கைக்காகவும் கேல்கரின் குரு பக்தியை சோதிப்பதற்காகவும் நடைபெற்ற சம்பவமே இது என்கிறார் ஹேமத்பந்த்.
இந்த ஹண்டி சமையல் 1910 வரை நடைபெற்றது. பாபாவின் புகழ் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பரவி, ஷீர்டிக்கு மக்கள் திரள் திரளாகக் கூடத் தொடங்கினர். அதன்பின் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் நைவேத்தியங்கள் வரத் தொடங்கின. விதவிதமான உணவு வகைகள், அன்னம், பருப்பு, பூரி, ஸப்ஜி, சப்பாத்தி, சட்னி, பலவித இனிப்பு வகைகள் எல்லாம் மசூதிக்கு வந்தன. இந்தக் காரணத்தால் பாபாவின் சமையல் நின்றுபோனது. பாபாவின் தரிசனத்துக்கு பக்தர்களும் ஏராளமாக வர ஆரம்பித்தார்கள். மதிய ஆரத்தி முடிவடைந்ததும் பக்தர்கள் சாப்பிட உட்காருவார்கள். பாபாவே எல்லோரையும் கவனித்து அவர்கள் வயிறும் மனமும் நிறைவடையுமாறு உணவளிப்பார்.
ஒருமுறை இந்த பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஹேமத்பந்த் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டார். அப்போது பாபா அவருக்கு ஒரு கிண்ணத்தில் மோர் அளித்துக் குடிக்கச் சொன்னார். மோரை பார்த்தவுடன் ஹேமத்பந்தின் மனதில் குடிக்க வேண்டும் என்கிற ஆசை உண்டாயிற்று. ஆனால், வயிற்றில் அதற்கு இடமில்லையே என்று அஞ்சினார். ஆனாலும் அதை வாங்கி, மெதுவாக உறிஞ்சினார். அவரது தடுமாற்றத்தைப் புரிந்து கொண்ட பாபா, முழுவதும் குடித்து விடு! இனிமேல் இம்மாதிரி ஒரு வாய்ப்பு உனக்குக் கிடைக்காது" என்று கூறினார். ஹேமத்பந்த் அதை முழுவதும் பருகினார். பாபாவின் கூற்று தீர்க்கதரிசனமானது என்று உணர்ந்து கொண்டார். ஏனெனில், பாபா இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு விரைவில் மஹா சமாதியடைந்தார்.

Comments