புற்று மண்ணே பிரசாதம்!

சிலருக்கு விஷ ஜந்துக்கள் அடிக்கடி தென்படும். சிலரது வீடு, தோட்டம், வயல்களில் அவை வாசம் செய்வதும் உண்டு. இவற்றுக்குத் தீர்வு தரும் புற்றுக் கோயில், திருப்பூர் மாவட்டம், அய்யன்பாளையத்தில் அமைந்திருக்கும் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில்.
இக்கோயிலில் புற்று மண்ணே பிரசாதம். இதை வீடு மற்றும் வயல்களில் தூவி விட்டால், விஷப் பூச்சிகள் காணாமல் போய்விடும்.
சாதாரணமாக, வீடுகள் நிரம்பியிருக்கும் ஊரின் மத்தியில்தானே ஆலயங்கள் இருக்கும்? ஆனால், இந்தக் கோயிலைச் சுற்றி வீடுகளோ, கடைகளோ கிடையாது. கோயிலே ஒரு தனி கிராமம் போல பத்து ஏக்கர் நிலப்பரப்புக்குள் அமைதியில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
இங்கு கோயில் கொண்டிருக்கும் வாழைத்தோட்டத்து அய்யன் யார்? அவருக்கு ஏன் அந்தப் பெயர் ஏற்பட்டதாம்?
சின்னையன் என்னும் சிவனடியார்தான் வாழைத் தோட்டத்து அய்யன். கொங்கு மண்டலம் அவினாசிக்கு அருகே இருக்கும் மோப்பிரிப்பாளையம்தான் இவரது பூர்வீகம். இங்கிருந்து புலம்பெயர்ந்த அவரது முன்னோர், அயம்பாளையத்தில் குடியேறினர். அங்கே, செங்காளியப்பனுக்கும், பச்சையண்ணன் என்பவரது மகளுக்கும் பிறந்தவர் சின்னையன்.
தமது பன்னிரெண்டாம் வயதில் மாடு மேய்க்கும் பணியை மேற்கொண்டார் சின்னையன். அப்போது அங்கிருக்கும் கற்களை ஒன்று கூட்டி, சிறிய மேடை போலச் செய்து மலர்கள் சூட்டி வணங்கி வந்தார். ஒரு நாள் கனவில் அழகிய உருவம் ஒன்று தோன்றி, ஆசி வழங்கியதை உணர்ந்தார்.
அடுத்த நாள், தான் அமைத்த மேடையில் நீண்ட சடை முடிகளுடன், பொன்வண்ண மேனியோடு ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு அவரை வணங்கினார் சின்னையன். அந்தத் துறவி தம்மருகே நெளிந்து விரைந்து ஓடிய நாகம் ஒன்றைக் கண்பித்தார். அந்த நாகத்தை அசையாமல் அங்கேயே நிற்கும்படிச் சொல்" என்றார் சின்னையனிடம். சின்னையன் அதே போலச் சொன்னதும் பாம்பு அசையவில்லை. அப்படியே உறைந்ததைப் போலக் கிடந்தது. துறவி சிரித்தார். இப்போது சர்ப்பத்தைப் போகச் சொல்லு" என்றார். சின்னையனும் அப்படியே சொல்ல, சர்ப்பம் நெளிந்து நகர்ந்து மறைந்தது.
இதைக் கண்ட சின்னையன், துறவியைத் தொழுது ‘விஷக்கடி முறிவு மந்திரத்தைத் தமக்குப் போதித்து அருள வேண்டும்’ என்று வேண்டினார். அந்த மகானும், சர்வ விஷ சம்ஹார மந்திரத்தை சின்னையன் காதில் ஓதினார்.
தம்முடைய ஞானாசிரியரின் அறிவுரைப்படி, விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைப் போக்கி வந்தார் சின்னையன். தமது எழுபத்திரண்டாம் வயதில், தாம் அன்பாக வளர்த்த காளை மாடு அவரது வயிற்றில் குத்தியதால் இறந்து சிவனடி சேர்ந்தார்.
சிறிது காலம் சென்றது. அவரது பண்ணையாள் ஒருவரின் கனவில் தோன்றிய சின்னையன், குறிப்பிட்ட இடத்தில் மணலுக்குள் இருக்கும் சிவலிங்கத்தையும் இன்னோரிடத்தில் இருக்கும் நந்தியுருவையும் தமது தோட்டத்தில் இருக்கும் கிளுவை மரத்தடியில் வைத்துப் பூஜித்து வருமாறு சொல்லியருளினார்.
அவ்வாறே செய்யப்பட்டது. இளமைக் காலத்தில் வாழைத் தோட்டம் ஒன்றைச் சின்னையன் குத்தகைக்கு எடுத்து, உழவு செய்து வந்ததால் அவருக்கு, ‘வாழைத் தோட்டத்து அய்யன்’ என்ற பெயர் நிலவியது. அந்தக் கோயிலுக்கு, ‘வாழைத் தோட்டத்து அய்யன் கோயில்’ என்று பெயர் சூட்டப்பட்டது. சிவலிங்கத்துக்கு அருகிலேயே கிளுவை மரத்துக்குப் பக்கத்தில் புற்று ஒன்றும் வளர்ந்தது. அந்தப் புற்று மண், அன்று முதல் இன்று வரை விஷக்கடிகளுக்கு மருந்தாக விளங்குகின்றது.
மார்கழி மாதம், வளர்பிறையில் திருவாதிரை உத்ஸவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை ஆகியவை விசேஷ பூஜை நாட்களாகும். சாரிசாரியாக மக்கள் ஆலயத்துக்கு வந்து செல்கின்றனர். நம்பிக்கைதானே வாழ்க்கை!
அமைவிடம்: கோவையில் இருந்து 24 கி.மீ. பயணம் செய்து சோமனூரை அடைந்தால், அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது அயம்பாளையம். கோவை மற்றும் திருப்பூரில் இருந்து நேரடி பேருந்து வசதிகளும் உண்டு. திருப்பூரில் இருந்து 23 கி.மீ.


பல்லடம், இந்திரா நகர் சிவகுமார் - பிரபாவதி தம்பதியிடம் பேசியபோது, பத்து வருஷமா காட்டுக்குள்ள போறப்ப பூச்சி பொட்டுங்க அடிக்கடி தென்படும். வீட்டுக்குள்ளேயும் பாம்பைப் பார்த்தோம். இங்க தொடர்ந்து வர ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் பாம்பு கண்ணுக்குத் தென்படலை. அடிக்கடி வர்றோம். மனசு நிம்மதியா இருக்கு."
கலைச்செல்வி, ஆலம்மா, துர்காதேவி மூவரும் விழுப்புரம் மாவட்டம், செம்பராம்பட்டு கிராமத்தில் இருந்து வந்து பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் பேசியபோது, எங்களது கூரை வீடு. பத்து வருஷத்துக்கு முந்தி பாம்பு தென்பட்டது. இங்க வந்து வேண்டிக்கிட்டோம். அதன் பிறகு வரவேயில்லை. சமீபத்தில் கனவிலும், நேரிலும் பாம்பு வந்தது, அதனால்தான் வந்தோம். இப்ப மனசுக்கு நிம்மதியாக இருக்கு."

 

Comments