சபரிகிரிவாசா சரணம் சரணம்

தமிழகத்தில் பழனி மலை; ஆந்திராவில் திருமலை; கேரளாவில் சபரிமலை.
மேலே சொல்லப்பட்ட மூன்று மாநிலங்களிலும் எண்ணற்ற மலைக் கோயில்கள் காணப்பட்டாலும், இந்த மூன்று மலைக் கோயில்களுக்குக் கூடுகிற கூட்டம் அளவில்லாதது. முதலில் சொல்லப்பட்ட இரண்டு மலைகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்; தரிசிக்கலாம். ஆனால், மூன்றாவதாகச் சொல்லப்பட்ட சபரிமலைக்கு, குறிப்பிட்ட காலங்களில் சென்றால் மட்டுமே ஐயப்பனை தரிசிக்க முடியும்.
உலகெங்கும் இருக்கின்ற ஆன்மிக பக்தர்களைத் தன்வசம் இழுத்துள்ள சபரிமலை, கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரி மலை திருக்கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 914 மீட்டர் இதன் உயரம். மஹிஷி என்ற அரக்கியைக் கொன்ற பின் சுவாமி ஐயப்பன் அமர்ந்து தியானம் செய்த இடமே சபரிமலை.
சங்க காலத்தில் சேர நாட்டு மன்னர்களின் வழிபாட்டுத் தலமாக சபரிமலை இருந்துள்ளது. சபரிமலை சன்னிதானம் செல்வதற்குப் பக்தர்கள் பம்பா மற்றும் எருமேலியில் இருந்து பயணப்படுகிறார்கள். பம்பாவில் இருந்து சன்னிதிதானம் வரை செல்லும் பாதையை ‘சின்ன பாதை’ (சுமார் 6 கி.மீ.) என்றும், எருமேலியில் இருந்து சன்னிதானம் வரை செல்லும் பாதையை ‘பெரிய பாதை’ (சுமார் 48 கி.மீ.) என்றும் அழைக்கின்ற வழக்கம் இருந்து வருகிறது.
ஆதி காலத்தில் பக்தர்கள் எருமேலி சென்று, அங்கு பேட்டைத்துள்ளல் முதலான வைபவங்களை முடித்து வாபரை தரிசித்து விட்டு அழுதா நதி, கரிமலை, சிறியானை வட்டம், பெரியானை வட்டம் கடந்து பம்பாவை அடைவார்கள்.
பம்பாவில் ஓடுகின்ற பம்பா நதியில் தர்ப்பணம் செய்கிறார்கள் பக்தர்கள். இதற்கென பண்டிதர்களும் இங்கே உள்ளனர். சபரி அன்னையை இங்கு பார்ப்பதற்காக வந்த ராமபிரான் தனது தந்தைக்கும், இறந்து போன மூதாதையர்களுக்கும் பம்பா நதியில் நீராடி தர்ப்பணம் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின்போதும் நான்கைந்து நாட்கள் சபரிமலை நடை திறந்திருக்கும். விசேஷ காலங்களில் நடை திறந்திருக்கும். சபரிமலை நடை திறப்புக் காலங்களை இந்த இன்டர்நெட் யுகத்தில் வெகு சுலபமாகத் தெரிந்து கொண்டு விட முடியும். திருமலை திருப்பதி போலவே இங்கும் பக்தர்கள் முன் பதிவு செய்து, குறித்த காலத்தில் தரிசிக்க முடியும்.
தமிழ் மாதப் பிறப்புக் காலங்களில் கூடுகிற கூட்டத்தை விட, ‘மண்டலம்’ என்று சொல்லப் படக்கூடிய காலத்தில் (கார்த்திகை 1ஆம் தேதி துவங்கி வருகிற 48 நாட்கள்) சபரிமலையில் கூடுகிற கூட்டம் கட்டுக்குள் அடங்காது. மலையெங்கும் ‘ஸ்வாமியே சரணம் ஐயப்பா...’ என்கிற பக்தர்களின் கோஷமே நிறைந்திருக்கும்.
பெரும்பாலான ஆலயங்களுக்கு யாத்திரை செல்லும் போது பக்தர்கள் எப் பாடுபட்டாவது பயணித்து அங்குள்ள தெய்வத்தைத் தரிசித்து விடுகிறார்கள். இந்த தரிசனம் கிடைத்தபின், சம்பந்தப்பட்ட பக்தர்கள் மனதில் கிடைக்கிற ஒரு ஆனந்தம் இருக்கிறதே... அதை விவரிக்கவே வார்த்தைகள் கிடையாது.
சில ஆலயங்களுக்கு நாம் செல்வதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. விரதம், புலனடக்கம், தெய்வ சிந்தனை... இப்படிப் பல உண்டு. இப்படி சொன்ன நடைமுறைகள் அனைத்தும் ஒரு கோயிலுக்கு இருக்கிறது என்றால், அது சபரிமலை ஐயப்பன் ஆலயம் தான்!
சபரிமலை செல்ல வேண்டும் என்றால், புலனடக்கம் அவசியம் தேவை. விரதம் மேற் கொள்ள வேண்டும். ஒரு மண்டல காலம் முழுக்க விரதம் (இருவேளை மட்டுமே உண்பது), மாமிச உணவு வகைகளை அறவே தவிர்ப்பது, மது பானம் மற்றும் புகையிலை தொடர்பான வஸ்துக்களை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, செருப்பு அணியாமல் இருப்பது, முக க்ஷவரம் செய்து கொள்ளாமல் தாடி வளர்ப்பது, திருமணமானவர் எனில் தாம்பத்தி யம் தவிர்ப்பது, கோபப்படாமல் இருப்பது, பிறருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வது, தினமும் இரு வேளை நீராடி விட்டு அருகில் உள்ள ஆலயம் சென்று ‘ஸ்வாமியே
சரணம் ஐயப்பா’ என்கிற சரண கோஷங்களை முழங்குவது... இப்படி கடுமையான நெறிமுறைகளைக் கடைப்பிடிப் பார்கள்.

கார்த்திகை முதல் தேதி (நவம்பர் 17) ஆரம்பித்து, தை மாதம் முதல் தேதி (ஜனவரி 14) மகர சங்கராந்தி வரை இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கின்ற பக்தர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்களும் சபரிமலையை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி விடுவார்கள். கார்த்திகை மாதம் பிறந்து விட்டால் போதும், தாங்கள் வசிக்கும் ஊரில் இருக்கிற ஒரு ஆலயம் சென்று, சரண கோஷம் முழங்கி குரு ஸ்வாமியின் உதவியுடன் துளசி மாலை அணிந்து கொள்வார்கள். கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து, விரதம் இருந்து தைப்பொங்கல் முடிந்ததும் வருகிற மகர ஜோதி தரிசனத்துக்குப் பயணப்படுவார்கள்.
முதன் முதலாக, சபரிமலைக்கு மாலை போட்டு இருப்ப வரை ‘கன்னிசாமி’ என்று அழைக்கிறார்கள். குருவாக இருந்து பலருக்கும் மாலை அணிவித்து அழைத்துச் செல்கிற குரு ஸ்வாமிகள், பல்வேறு நடைமுறைகளை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த நடைமுறைகளை அப்படியே பின்பற்றி சபரிமலை யாத்திரை செல்கிறார்கள்.
உலகின் பல்வேறு நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும், இந்த மண்டல காலத்தில் மாலை அணிந்து, விரதம் இருந்து விமானங்களில் பயணித்து சபரிமலை வருவது, கடல் கடந்தும் அவர்களுக்கு இருக்கக்கூடிய பக்தி உணர்வைக் காட்டுகிறது.
பரிமலையில் குடிகொண்டு பல லட்சக் கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ ஐயப்பன் அங்கே பிரதிஷ்டை ஆவதற்கு முன்பாகவே திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே காரையாரில் சொரிமுத்து ஐயனா ராகக் குடிகொண்டாராம். இன்றைக்கும் சபரிமலைக்கு மாலையிடும் தமிழகத் தென் மாவட்ட பக்தர்கள் பலர், இங்கு வந்து சொரிமுத்து ஐயனாரை வேண்டிக் கொண்டுதான் மாலை அணிகிறார்கள்.
பந்தள தேசத்து அரண்மனையில் வெகு சாதாரணமாக வளர்ந்து வந்த அவதார புருஷரான ஐயப்பன், அரச குடும்பத்து வாலிபனாயிற்றே! எனவே, வாலிப வயதில் வீர தீர கலைகளைக் கற்றுக் கொள்வதற்காக ஐயப்பன் முதன் முதலில் காரையாருக்குத்தான் அழைத்து வரப்பட்டாராம். பொதிகை மலையின் இயற்கை அழகை ரசித்தவாறே வீர விளையாட்டுகளை தினமும் ஆர்வமாகக் கற்றுக்கொள்வாராம் ஐயப்பன்.
பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டு தவம் மேற்கொள்வதற்காக வந்து சேர்ந்த சபரிமலையில்தான் அடுத்துக் கோயில் எழும்பியது என்பர். இருமுடி தாங்கிச் சென்று ஐயப்பனை வணங்கினால், பரிபூரண பலனை அடையலாம். ஐயப்பனைத் தரிசிக்கச் செல்லுமுன் 18 படிகளில் ஏற வேண்டும். இந்தப் பதினெட்டு படிகளிலும் 18 தெவங்கள் குடிகொண்டிருப்பதால், தலையில் இருமுடி வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவர். மேலே சன்னிதானத்தை வலம் வந்தபின் ஐயப்பனைத் தரிசிக்க முடியும். தவிர நாகர், மஞ்சமாதா தெய்வங்களையும் தரிசிப்பர்.
இருமுடியை முதன் முதலாகத் தலையில் சுமந்தவன் சாட்சாத் ஐயப்பனே ஆவான் என்கிறது புராணம். புலிப்பால் எடுத்து வருவதற்காக கானகம் சென்ற தன் மகனுக்கு (ஐயப்பன்), வனத்தில் உண்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவுகளை ஒரு முடியில் கட்டினான் மன்னன் ராஜசேகரன். இன்னொரு முடியில் தான் வணங்கும் சிவபெருமானே தன் மகனுக்குத் துணையாக வர வேண்டும் என்பதற்காக சிவ அம்சமான தேங்காயை வைத்தானாம்.
இருமுடியில் இருக்கிற நெய்த் தேங்காயை உடைத்து, நெய்யை அபிஷேகத்துக்குக் கொண்டு
செல்கிறார்கள். நெய் எடுக்கப்பட்ட தேங்காயை ‘கற்பூர ஆழி’ எனப்படும் அக்னியில் சமர்ப்பிக்கிறார்கள். பிரசாதமாக அரவணை, அப்பம், அபிஷேக நெய், விபூதி போன்றவை விற்கப்படுகின்றன.
ஐயப்பனை வணங்குவதற்கு ஜாதி, மத, இன பேதம் இல்லாமல் பலரும் விரதம் இருந்து சபரிமலை வருகின்றனர். சீஸன் காலத்தில் அதிகாலை மூன்று மணியில் இருந்து இரவு 11 மணி வரை கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்கள் வரிசையில் பயணித்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்கிறார்கள். அதன் பின் தாங்கள் சுமந்து வந்த இருமுடியை குரு ஸ்வாமியின் முன்னிலையில் பிரித்து பொருட்களை எங்கெங்கு சமர்ப்பிக்க வேண்டுமோ, அங்கு அர்ப்பணிக்கிறார்கள்.
தினமும் இரவு சுமார் 11 மணி அளவில் ஐயப்பனின் நடை சாத்தப்படுவதற்கு முன் ‘ஹரிவராசனம்’ என்கிற பாடல் ஒலிக்கிறது. தாலாட்டுப் பாடலான இது ஒலித்தால், அதற்கு மேல் ஐயப்பனை அன்றைய இரவு தரிசிக்க முடியாது. எனவே, சன்னிதானம் நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கிற பக்தர்களும், கடைக்காரர்களும், காவலர்களும் தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்துவது போல் இந்தப் பாடலுக்கும் மரியாதை தருகிறார்கள்.
கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீநிவாச ஐயர் இயற்றி இசை அமைத்த இந்தப் பாடலை, ஆரம்பக் காலத்தில் அவரே சன்னிதானத்தில் இருந்தபடி பாடுவாராம். அதன் பின் பலரது வேண்டுகோளுக்கும் விருப்பத்துக்கும் இணங்க, பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடி ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
எப்போதும் தவம் புரிகின்ற கோலத்தில் கருவறையில் தன் பக்தர்களுக்குக் காட்சி தருகின்ற ஐயப்பன், மகர சங்கராந்தி தினத் தன்று மட்டும் திருவாபரணங்களை ஏற்றுக் கொண்டு அவற்றை அணிந்து கோலாகலமாகக் காட்சி அளிப்பார். பந்தள ராஜாவின் அரண்மனையில் இருந்து ஆபரணங்கள் மிகவும் பாதுகாப்பாகப் புறப்பட்டு வரும். யோக நிலையில் இருக்கின்ற ஸ்வாமி ஐயப்பன், பந்தள நாட்டில் தனக்குக் குருவாக இருந்தவருக்குக் கொடுத்த வாக்குப்படி இந்த ஆபரணங்களை அணிந்து காட்சி தருவதாகச் சொல்லப்படுகிறது.
மகர சங்கராந்தி தினத்தன்று மாலை ஆறு மணிக்கு மேல் சன்னிதானத்துக்கு எதிரில் உள்ள காந்தமலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன் காட்சி தருவார். ‘மகர ஜோதி’ என்று அழைக்கப்படும் இந்த ஜோதி தரிசனத்தை ஐயப்பன் சன்னிதானம், பாண்டித்தாவாளம், புல்மேடு, சரங்குத்தி, நீலிமலை, மரக்கூடம், மலையுச்சி, சாலக்காயம், அட்டத்தோடு ஆகிய ஒன்பது இடங்களில் இருந்து தரிசிக்கலாம்.
சபரிமலைக்குச் செல்வதில் முன்பிருந்த சங்கடங்கள் இப்போது இல்லை. உணவுக் கடைகள், தங்கும் வசதிகள், மருத்துவ வசதிகள், தரிசனத்துக்கான நேரத்தை இணையத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளுதல், கஷ்டப்படுத்தாத சாலை வசதி என்று எல்லா வசதிகளும் உண்டு என்றாலும், இன்றைக்கும் ஒரு மண்டல காலம் விரதம் இருந்து, கடுமையான புலனடக்கம் மேற் கொண்டு, வழிபாட்டுமுறைகளை மேற்கொள்பவர்களும் இருக்கின்றார்கள்.
எனவே, முறையான விரதத்தைப் பின்பற்றும் பக்தர்களுக்கு சபரிமலை ஐயப்பன் வேண்டுவனவற்றை அருளி வருகின்றார். மனம் நிறைய பக்தியோடு சபரிமலை செல்லுங்கள். அவன் அருள் பெற்று ஆனந்தமாகத் திரும்புங்கள்!
ஸ்வாமியே... சரணம் ஐயப்பா...

Comments