பச்சை பட்டினி விரதம் பிறந்த கதை

அனைத்து உயிரினங்களும் நன்றாக வாழ்வதற்காக இறைவியே அதாவது ஆதிபராசக்தியே விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மட்டும் தான்.
பச்சை பட்டினி விரதம் பிறந்த கதை
நோய் நொடியின்றி வாழ்வதற்கும், வேண்டும் வரம் கிடைப்பதற்காகவும் இறைவனை வேண்டி உடலையும் மனதையும் வருத்தி மக்களாகிய நாம் விரதம் இருப்பது தான் உலக நியதி. ஆனால் உலகில் உள்ள மனிதர்கள் மட்டும் இன்றி அனைத்து உயிரினங்களும் நன்றாக வாழ்வதற்காக இறைவியே அதாவது ஆதிபராசக்தியே விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மட்டும் தான். இதற்கு பச்சை பட்டினி விரதம் என்று பெயர்.

அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது எப்படி தோன்றியது என பார்ப்போமா? முன்னொரு காலத்தில் மஹிஷா சூரன் என்ற அசுரன் ஈஸ்வரனை நினைத்து கடுந்தவம் செய்து தன் தவ வலிமையால் பல வரங்களை பெற்று ஆணவத்தால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். இதனால் தேவர்களும், முனிவர்களும் அஞ்சி நடுங்கி இமயமலைக்கு சென்று ஆதி பராசக்தியான அன்னையிடம் முறையிட அன்னை மனம் இறங்கி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விரதம் இருந்து புதுபலம் பெற்று துர்க்கை சொரூபமாக அஷ்டபுஜத்துடன் கால சொரூபிணியாக சிங்கத்தின் மீதமர்ந்து வந்து சூரனை வதம் செய்து தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார்.



இப்படி அம்பாள் மஹிஷா சூரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் தணியவும் சோழ வள நாட்டின் தலைநகர் திருச்சிக்கு நேர் வடக்கே காவிரி வடகரையில் (கொள்ளிடம்) வேம்பு காட்டில் கவுமாரி என்று பெயர் பூண்டு சிவப்பு நிறம் கொண்டு மஞ்சள் ஆடை தரித்து, உடல் முழுவதும் வாசனை புஷ்பங்களால் மலை போல் குவித்து உண்ணா நோன்பிருந்து பல ஆண்டு காலம் தவம் செய்து அதன் பயனாக சாந்த சொரூபிணியாக சர்வரட்சகியாகி மாரியம்மன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

இந்த புராண வரலாற்றின் அடிப்படையில் தான் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் பச்சை பட்டினி விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வருகிறார். இந்த 28 நாட்களும் அம்பாளுக்கு நைவேத்யம் படைப்பது கிடையாது. இளநீர், பானகம், நீர் மோர், கரும்பு சாறு உள்ளிட்ட பானங்களே ஆகாரம். இதற்கு பச்சை பட்டினி விரதம் என பெயர். பச்சை பட்டினி விரதம் முடிந்ததும் அம்பாள் பூச்சொரிதல் கண்டருள்வார்.

Comments