இந்து மதம் கண்ட ஞானிகளுக்கும், மகான்களுக்கும், மஹரிஷிகளுக்கும், சமயச் சான்றோர்களுக்கும் எண்ணிக்கையே இல்லை. இந்து தர்மத்தில் பொதிந்திருக்கும் வேத, வேதாந்த ஞானக் கருத்துகளை எல்லோரும் அறியும்படி அவரவர் வழியில் எளிமைப்படுத்தி அருளி இருக்கின்றனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் மகான் அப்பைய தீட்சிதர். ஈசன் அருள் பெற்றவர். சிவபெருமானின் அம்சம் என போற்றப்படும் அவர், அத்வைத தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். பதினாறாம் நூற்றாண்டில் சைவசமயம் நலிந்து போயிருந்த நேரத்தில் இவர் தோன்றி தமது அற்புதமான வாதத்திறமையாலும், அதிசயங்களாலும் அதை மீட்டெடுத்தவர். தர்க்கம், மீமாம்சம், ஆகமம் போன்றவற்றில் சிறந்த பாண்டித்யம் கொண்ட அப்பையர் சைவசமயம் தொடர்பான அநேக தலைப்புகளில் 104 புத்தகங்களை இயற்றி உள்ளார்.
தமிழ்நாட்டின் வேலூருக்கு அருகே திருவிரிஞ்சிபுரம் எனும் ஊரில் 1520 - ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் ரங்கராஜ தீட்சிதர். அப்பைய தீட்சிதரின் இயற்பெயர் விநாயக சுப்பிரமணியன். சிறுவயதில் அவரை 'அப்பா, ஐயா' என்று கொஞ்சி அழைத்த பெயரே அப்பையர் என்று நிலைத்து விட்டது. வேலூர் அரசர் சின்ன பொம்ம நாயக்கரிடம் தலைமை பண்டிதராக இருந்த அவரது தந்தை மறைந்த பிறகு, அவரே அந்தப் பொறுப்பை ஏற்று பல வேத வேதாந்த விஷயங்களை எழுதினார். திருவான்மியூர், சிதம்பரம், காஞ்சிபுரம், வேலூர் முதலிய ஊர்களில் வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தியவர் அவர். சைவ மதத்தை எதிர்க்கும் எவரையும் வாதில் வென்று சமய தர்மத்தை நிலைநாட்டியவர். அதீத சிவபக்தியால் பல அற்புதங்களை நிகழ்த்திய மகான் அவர். மற்றவர்களுடன் வாதம் செய்யப் போகும்போது அவருக்கு அடிக்கடி வரும் வயிற்றுவலி ஏற்பட்டால், வயிற்று வலியை தமது மேல்துண்டில் ஏற்றி வைத்து விடுவார். வாதம் முடிந்தபிறகு மீண்டும் அந்த வலியை ஏற்றுக்கொள்வார் என்று சொல்லப்படுகிறது. அவர் செல்லும் தலங்கள்தோறும் பல அற்புதங்களை செய்தவர். திருவான்மியூர் தலத்து மருந்தீஸ்வரர் இவருக்கு தரிசனம் தர வேண்டியே மேற்குப் புறமாக திரும்பினார் என்று தலவரலாறு கூறுகிறது. எந்த நிலையிலும், தான் சிவசிந்தனையோடு இருக்கிறேனா என்பதைக் கண்டறிய அப்பையர் விரும்பினார். அதனால் ஊமத்தங்காய்களை உண்டுவிட்டு தான் சொல்லப்போகும் பாடல்களை எழுதி வைக்குமாறு சீடர்களிடம் சொன்னார். அப்போது எழுதிய பாடல்கள் தான் சைவ நூல்களில் சிறந்ததான 'ஆத்மார்ப்பண ஸ்துதி'.
ஒருமுறை காஞ்சிபுரத்தில் இவர் செய்த யாகத்தில் அந்நாளைய வழக்கப்படி 17 ஆடுகளை பலி கொடுத்தார். இதில் அவருக்கு விருப்பமில்லை என்றாலும் மற்றவர்கள் கேட்டுக்கொண்டதால் இந்த பலி கொடுக்கும்படி ஆனது. இதைக் கண்டித்து அங்கு வந்த சில அறிஞர்கள் இவருடன் வாதம் செய்தனர். உயிர் இழந்த ஆடுகள் புனித யாகத்தின் விளைவாக சொர்க்கத்தைத்தான் அடைந்து இருக்கின்றன என்று அப்பையர் கூறினார். கடுமையான வாதத்தில் அப்பையர் வென்றாலும், ஆடுகள் யாகத்தில் பலியானது அவருக்கு உறுத்தலை தந்தது. எனவே தனது ஆன்மபலத்தால் ஆடுகளின் நிலையை நோக்கினார். அப்போது அவை மாலைகள் அணிந்து சொர்க்கம் புகுவதைக் கண்டார். தான் மட்டும் இல்லாது, தன்னுடன் வாதம் செய்த அத்தனை பேரையும் அந்தக் காட்சியை காணும்படிச் செய்தார். அவரைத் திட்டிய அத்தனை பேரும் மனம் திருந்தி இவரை வணங்கினர்.
சின்ன பொம்ம நாயக்கரின் அரசவையில் அரசர் உள்ளிட்ட யார் வந்தாலும், வணங்கினாலும் தமது இடது கரத்தை தூக்கியே ஆசீர்வதிப்பார். இது அவரின் எதிரிகளுக்கு எரிச்சலை தந்தது. அரசரிடம் இது பற்றி புகார் தெரிவித்ததுடன், அப்படிச் செய்வது மற்றவர்களை அவமதிப்பதுபோல் ஆகும் என்றும் கூறினர். இது குறித்து விசாரணையும் வந்தது. சகல சாஸ்திரங்களிலும் புலமை கொண்ட அப்பையர், 'வேத வேதாந்த விஷயங்களில் புலமை கொண்ட, ஆச்சார அனுஷ்டானங்களில் சிரத்தை கொண்ட, ஒரு உண்மையான பிராமணனின் வலது கரத்தில் அக்கினி வசிப்பார் என்பது வேதம் சொல்லும் உண்மை. எனவேதான்தான் வலது கரத்தால் ஆசீர்வதிப்பதில்லை என்றும், அவ்வாறு வலக்கரத்தால் ஆசீர்வதித்தால் அவர்கள் எரிந்து போவார்கள்' என்றும் கூறினார்.
இது பொய் என்று அவரது எதிரிகளால் சொல்லப்பட்டது. இதனால் அதை மெய்ப்பிக்க வேண்டிய நிலைக்கு அப்பையர் வந்தார். அரசர் உருவம் வரையப்பட்ட துணியை தமது வலது கரம் தூக்கி அவர் ஆசீர்வதித்தார். அவ்வளவுதான் அந்த துணி திகுதிகுவென எரியத்தொடங்கியது. அரசர் உள்ளிட்ட அனைவரும் அவரிடம் மன்னிப்புக்கோரி தீயை அணைக்குமாறு கேட்டுக்கொண்டனர். இந்த சம்பவத்தில் இருந்து அவர் எத்தனை பெரிய மகான் என்றும் தெரிந்து கொண்டனர். வாழ்நாள் எல்லாம் சிவப்பணி செய்து வாழ்ந்த இந்த மகான், தில்லை சிவபெருமானோடு கலந்து மோட்சம் அடைந்தார். சைவசமயம் வளர்ச்சிக்கும் மக்களின் ஆன்மிக வழிப்பாட்டிற்கும் பாடசாலை அமைத்து ஆன்மிக நூல்களையும் வழங்கி சேவை செய்த அப்பைய தீட்சிதர் இந்து மதத்தின் மாணிக்கக் கல் என்றே போற்றப்படுகிறார்.
சின்ன பொம்ம நாயக்கரின் அரசவையில் அரசர் உள்ளிட்ட யார் வந்தாலும், வணங்கினாலும் தமது இடது கரத்தை தூக்கியே ஆசீர்வதிப்பார். இது அவரின் எதிரிகளுக்கு எரிச்சலை தந்தது. அரசரிடம் இது பற்றி புகார் தெரிவித்ததுடன், அப்படிச் செய்வது மற்றவர்களை அவமதிப்பதுபோல் ஆகும் என்றும் கூறினர். இது குறித்து விசாரணையும் வந்தது. சகல சாஸ்திரங்களிலும் புலமை கொண்ட அப்பையர், 'வேத வேதாந்த விஷயங்களில் புலமை கொண்ட, ஆச்சார அனுஷ்டானங்களில் சிரத்தை கொண்ட, ஒரு உண்மையான பிராமணனின் வலது கரத்தில் அக்கினி வசிப்பார் என்பது வேதம் சொல்லும் உண்மை. எனவேதான்தான் வலது கரத்தால் ஆசீர்வதிப்பதில்லை என்றும், அவ்வாறு வலக்கரத்தால் ஆசீர்வதித்தால் அவர்கள் எரிந்து போவார்கள்' என்றும் கூறினார்.
Comments
Post a Comment