கல்வியில் சிறக்கச் செய்யும் சிவா - விஷ்ணு

திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப்பெற்ற தலம், நல்லாவூர். தொன்மைக் காலத்தில் இதன் பெயர் நல்லாற்றூர்.காவிரி ஆற்றின் தெற்கே அரசலாற்றின் வடக்கே, நாட்டாறு என்னும் நதியின் கரையில் அமைந்துள்ள தலம் இது.சிவா-விஷ்ணு ஆலயம் என்பது அபூர்வமாகவே காணப்படும் அமைப்பு. நல்லாவூரும் அப்படியான சிவா-விஷ்ணு ஆலயம். சந்திரனின் பாவம் போக்கிய தலம். அதனால் இங்குள்ள ஈசனுக்கு சந்திரேஸ்வரர் என்றும், நல்லாற்றீசர் எனவும் பெயர்.சாபத்தின் காரணமாக சந்திரன் நாள்தோறும் தேய்ந்து, மறைந்து, அழிந்து விடுவோமோ, என்று அஞ்சினான். அவன் இத்தலத்திற்கு வந்தான். தனது கோரிக்கையை நிறைவேற்றி அபயம் அளிக்க வேண்டிய, இங்குள்ள ஈசான்ய தீர்த்தத்தில் தினம்தோறும் நீராடி, ஈசனை வழிபட்டு வந்தான். இறுதியில் இறைவன் அவனது கோரிக்கையை ஏற்று, அவனைத் தன் சிரசில் தரித்து, அவனுக்கு ஆபத்து நேராவண்ணம் காத்திருளினார்.இறைவனின் கருணையைப் போற்றிய சந்திரன், ஈசனிடம், தாங்கள் இத்தலத்தில் என் பெயரையே ஏற்று, என்னைப் போல தங்களை நாடிவரும் பக்தர்களின் குறைபோக்கி அருளவேண்டும் என்று வேண்டினான். அவ்வாறே கோயில் கொள்ள சம்மதித்தார், ஈசன்.கூடவே இன்னொரு விண்ணப்பம்! திருமாலின் ஆலோசனைப்படிதான் நான் இத்தலத்திற்கு தங்களைத் தரிசிக்க வந்தேன். எனவே, இங்கு தங்களுடன் விஷ்ணு பிரானையும் நான் சேர்த்து சேவிக்க விரும்புகிறேன் என்றான்.சந்திரனின் வேண்டுகோளை ஏற்று, சிவனும், விஷ்ணுவும் ஒரு சேர அவனுக்கு தரிசனம் தந்தருளினர். சந்திரன் அவர்களை வணங்கி வழிபட்டுப் பேறு பெற்றான். அதன் அடையாளமாக இங்கு எழுந்ததே சிவா-விஷ்ணு ஆலயம்.மேற்கு பிராகாரத்தில் உள்ள விஷ்ணு ஆலயத்தில் ஆறு அடி உயரமுள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக எழுநதருளியுள்ளார்.கிழக்கு நோக்கிய ஆலயம் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளே நுழைநததும் விஸ்தாரமான முதல் பிராகாரம் கொடிமரம் பலிபீடத்தைக் கடந்தால், பெரிய மண்டபம், அழகிய தூண்கள், இந்த முதல் பிராகாரத்தில் மேற்கு நோக்கிய நிலையில் காலபைரவர். இவர் இங்கு மூலவருக்கு இணையாக பிரசித்தி பெற்று விளங்குகிறார். இவருக்கென பக்தர்கள் பலர் உண்டு. அஷ்டமி தினத்தில் இவருக்கு விசேஷ ஆராதனைகள்.அம்பிகை - சௌந்தரநாயகி தெற்கு நோக்கிய தனிச் சன்னதியில் நாற்கரங்களுடன் நின்ற கோலத்தில் எழில் தோற்றத்தில் அருள்பாலிக்கின்றார்.சனீஸ்வரருக்கம் இங்கு தனிச் சந்நதி உண்டு. விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, ஈசான்யத்தில் ருணவிமோட்சனர், நவகிரகங்கள் அனைவரும் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளனர்.சிவபிரானுக்கு உரிய வில்வ மரமும், விஷ்ணுவுக்க உகந்த பிலா மரமும் ஒரே இடத்தில் தல விருட்சமாக இங்குள்ளன. இக்கோயிலின் தலபுராணம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் சுவடி வடிவில் உள்ளதாம்.சிவனும் விஷ்ணுவும் சேர்ந்திருக்கும் தலமெல்லாம் வித்வத்தை (கல்வியை) அருளும் வித்யாகூடமாக விளங்குபவை. அவ்வகையில் இத்தலத்து ஈசனைம் பெருமாளையும் வணங்கி வழிபடுவோர் கல்வியிலும், வித்வத்திலும் (இசை, நாட்டியம் போன்ற இன்ன பிற கலைகளிலும்) சிறப்பு தேர்ச்சி பெற்று, அவரவர் கலையில் உன்னத நிலை பெறுவர் என்பது ஐதிகம்.எங்கே இருக்கு: கும்பகோணத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் காரைக்கால் போகும் சாலையில் உள்ளது, நல்லாவூர்.தரிசன நேரம்: காலை 9-12; மாலை 5-8

Comments